Sunday, January 31, 2016

முற்பிறப்பு.

முற்பிறப்பு.


முந்தைய பிறவியில் நாரத முனிவர்
தந்தையில்லாமல், தாய் ஒருத்தியின்,
துறவியரை அண்டிப் பிழைப்பவளின்,
வறுமையில் வாடும் மகனாக இருந்தார்.

மாரிக் காலத்தில் நான்கு மாதங்களும்
வேறிடம் செல்லார் துறவியர் எவரும்;
தாயுடன் சேர்ந்து தானும் உதவினான்
மாயையை வென்ற அம்முனிவர்களுக்கு.

அவர்கள் புசித்து எஞ்சிய உணவை
அருள்மிகு பிரசாதமாகவே உண்டும்;
அவர்கள் பேசும் மொழிகளை எல்லாம்
அமர்ந்து கேட்டும் ஞானம் பெற்றான்.

சிறுவனின் தீவிர சிரத்தையைக் கண்டு,
மறை முனிவர்களும் மனம் மிக மகிழ்ந்து
போதனை செய்தனர் இறைபக்தியையும்,
சாதனை செய்யும் சில முறைகளையும்.

பால் கறக்கச் சென்ற அன்னையை
பாம்பு ஒன்று தீண்டிக் கொல்லவே;
பாலகன் பாரினில் தனியன் ஆனான்,
கால் போன போக்கில் திரியலானான்.

ஒரு நாள் தியானம் செய்யும்போது
ஒரு திருவுருவம் மனக்கண்ணில் தோன்ற,
மீண்டும் மீண்டும் அதைத் தான் காண
வேண்டும் வேண்டும் என ஆவல் மிகுந்தது.

“பற்றை முற்றும் விடாதவர்களும், மனப்
பக்குவம் சிறிதும் அடையாதவர்களும்,
காண இயலாது என்னை அறிவாய்! நீ
காண இயலும் உன் அடுத்த பிறவியில்”

அசரீரியாக அவன் மட்டும் கேட்டான்,
அதிசயமான இனிய வார்த்தைகளை!
விசனப்பட்டான் இன்னும் எத்தனை நாள்
விரும்பாத இது போன்ற வாழ்க்கை என?

மின்னல் வெட்டியது போலச் சரிந்தது
முன்னர் பெற்ற அவனது ஸ்தூலதேகம்,
விண்ணில் பறந்தது அவன் சூக்ஷ்மதேகம்,
விஷ்ணுவின் மூச்சுடன் உள்ளே புகுந்தது.

பிரமனின் செய்த அடுத்த படைப்பினில்
பிரமனின் அற்புத மானச புத்திரனாகத்
தோன்றினார் நம் தேவமுனி நாரதர்,
மூன்று உலகமும் பக்தியுடன் சஞ்சரிக்க.

பாமரப் பணிப்பெண் ஒருவளின் மகன்
பார்புகழும் தேவமுனிவர் ஆகிவிட்டதன்
ரகசியம் எது என அறிந்திடுவோம் நாம்,
விகசித்த அவர் பக்தியினால் அன்றோ?

No comments:

Post a Comment