Sunday, August 16, 2015

முன்னோருக்கு திதி கொடுப்பது எதற்காக?

வரும் 14ம் தேதி ஆடிஅமாவாசை வருகிறது. அன்று முன்னோர்களுக்கு திதி கொடுப்பது பற்றி விளக்கம் அளிக்கிறார் சத்குரு ஜக்கிவாசுதேவ்.அவர் சொல்வதைக் கேளுங்கள்.உங்கள் தாத்தாவோ, அப்பாவோ இறந்து விட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களை நீங்கள் விரும்பலாம், விரும்பாமலும் இருக்கலாம். ஆனால், இந்த உடலைக் கொடுத்தவர்கள் அவர்கள் தானே. நாம் உலகில் வாழ்வதற்கு முக்கியமான உடலைக் கொடுத்ததற்கு இதயத்தில் நன்றியுணர்வு காட்ட வேண்ட வேண்டும். அவர்களை நீங்கள் ஆணியில் அடித்து சுவரில் தொங்க விட்டு (போட்டோ) மறந்துவிடுகிறீர்கள். குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது அவர்களின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும். அவர்களின் நினைவு நாளில் காகம், பசு போன்றவற்றிற்கு உணவிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு செய்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்நாளில் 50, 100 ஏழைகளுக்கு நீங்கள் உணவுஅளிக்கலாம். இப்படிசெய்தா, இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையுமோ, அடையாதோ தெரியாது. ஆனால், நிச்சயம் உங்களின் ஆத்மா சாந்தி பெறும். அதுதான் முக்கியமானது.வாழ்க்கை முடிந்தவர்களின் ஆத்மாவைப் பற்றிச்சிந்திப்பதை விட உங்களின் ஆத்மா நன்மை பெறவே, இதுபோன்ற சடங்குகள் உருவாக்கப்பட்டன.

வேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்!

பரிகார பூஜை செய்வதற்காக நவகிரககோயில்களுக்குச் செல்கிறோம் அங்கே கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள். எல்லா கோயில்களுக்குமே இவை  பொருந்துபவை. கோயில் நுழைவாயிலில் கை- கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

முதல்நாள் இரவே பரிகாரத் தலத்திற்குச் சென்றுவிடுவது நல்லது. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற தலங்களுக்குச்  செல்லவேண்டாம். புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும் பின்பும் அசைவ உணவு, மது இவற்றைத் தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப் பாடு தேவை.

பெண்கள் வீட்டுக்கு விலக்காகி ஏழு நாட்கள் கழித்துச் செல்வது நல்லது. யாரிடமும் கடன் வாங்கிச் செல்லவேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில்  பூஜைக்குச் கென்று சொல்லி வாங்காதீர். போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம்; தோஷமில்லை. தர்ப்பணம்  கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.  பொழுதுபோவதற்காக (சுற்றுலா) கோயில் செல்லாதீர். தங்கள் சக்திக்கேற்றபடி பூ ஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது; எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாகச் செய்ய வேண்டாம்.  பூ ஜைக்கு அமாவாசை, பவுர்ணமி, தங்கள் பிறந்தநாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.

தலங்களுக்குச் செல்வதற்குமுன் ஒரு நாளும், பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டிற்குச் செல்லாதீர். நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் அர்ச்சகர்  அல்லது ஜோதிடரைக் கேட்டு, தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும். வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம். மாலை நேர பூஜைக்கு  காலை அணிந்த உடையை அணியாதீர். பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார தலத்தில் வாங்குவது சிறந்தது. முதலில் விநாயருக்கு  அறுகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு ஒரு பிரதட்சணம் வந்து, பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட  இடத்தில் அந்த சிதறுகாயை உடையுங்கள்.

கோயிலுக்குள் யாருடனும் பேசவேண்டாம், செல்போன்களைத் தவிர்க்கவும். வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க ÷ வண்டும். சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள். மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர  விரலால் மஞ்சள், குங்குமம் வைக்கவேண்டும் இதற்கு சந்தனம் உபயோகிக்ககூடாது. பூஜைப் பொருட்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில்  கொடுக்காமல் பித்தளை எவர்சில்வர் தாம்பாளம் கூடை இவற்றில் வைத்துக்கொடுங்கள்.

பால்கோவா, இனிப்புகள் அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம். திரைபோட்டபின் பிரதட்சிணம் வர ÷ வண்டாம். விநாயகருக்கு ஒன்று, தனி அம்பாளுக்கு இரண்டு சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம்வாருங்கள். ஒரு பி ரதட்சிணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கி பின் அடுத்ததைத் துவங்கவும். கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து  வணங்கக்கூடாது.

பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம். நெய் அல்லது எண்ணெய்யை பிற விளக்குகளில் ஊற்ற வேண்டாம். அபிஷேக  ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும். பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய் துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும். பரிகாரம் செய்தபின் பூஜை ப்பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை அர்ச்சகரிடம் கொடுக்கலாம்; சிப்பந்திகளிடமும்  கொடுக்கலாம்.

பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன. வேகமாக பி ரதட்சிணம் வராமல் பொறுமையாக வருவது நல்லது. பலனை முழுமையாகப் பெற ஒரு வருட காலம் வரை ஆகலாம். நமக்கு ஒரு வருடம் என்பது  தேவர்களுக்கு ஒருநாள். ஒவ்வொரு கோயிலிலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள தனியான இடத்தில் ஏற்றவும் சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.  சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும். பூஜை செய்த பொருட்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்த்துவிடக்கூடாது.

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களுக்காக ஐந்து மூக்கு தீபம் ஏற்ற வேண்டும். திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும்  தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகர்த்துவது கூடாது. ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக் கூடாது. இடது கையை கீழே  வைத்து வலது கையை மேலே வைத்து பவ்யமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி குங்குமத்தை பேப்பரில் வாங்கக்கூடாது. பெற்ற விபூதி,  குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும். அறுகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி,  பச்சை மரிக்கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ, போன்ற பூவகைகளால் பூஜிப்பது நல்லது.

காளி, துர்க்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானவை. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது. சாதாரண மாலையை வா ங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள். சுவாமி சன்னிதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும்.  அமைதி தேவை.

கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சிணை தருவது போன்றவை பூஜையின் பலனை அதிகரிக்கும் ஜீவகாருண்யம் உயர்வு த ரும். பிரதான மூர்த்திகளை மட்டுமின்றி பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னிதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபமேற்றி உதிரி  புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம். தல வரலாறு புத்தகம் வாங்கி தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு  உதவும். விபூதி, குங்குமம் வாங்கும் முன்பே அர்ச்சகருக்கு தட்சிணை கொடுத்துவிட வேண்டும்.

சங்கல்பம் மிக முக்கியம். கோபுர தரிசனம் கோடி நன்மை. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிராகாரத்தில் தீபமேற்றி வழிபடுங்கள். சொடுக்கப் ÷ பாடாதீர். கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து சற்று நேரம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவு செய்யவும். ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதிவரை இருக்க ÷ வண்டும்; மாறக்கூடாது. பிரார்த்தனைகள் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் இருக்கக்கூடாது. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட  பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள்தானே தவிர, கர்மவினைகளை முற்றிலும் மாற்றாது.  ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும். பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை முறையே பித்ருக்கள், குலதெய்வம், விநாயகர், தசாநாதன், பி ரச்சினை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.

நவகிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமன், பசு, யானைக்கு உண்டு. தோஷ நிவர்த்திப் பூஜைகளை 30 வ யதிற்குள் செய்துவிடுங்கள். இயல்பான - முழுமையான நம்பிக்கையுடன் பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சின்னச்சின்ன பூ ஜைகளைவிட அனைத்தும் அடங்கிய முறையான பிரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூ ஜைக்குரிய அனுமதி கிடைக்கும். ஆண்டவனை நினைத்துக்கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

பூஜையில் வைக்கும் சுண்டலின் முக்கியத்துவம் தெரியுமா!

பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவாக  இறைவனை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந்நேரத்தில்  புரதச்சத்து மிகுந்த சமச்சீர் உணவான சுண்டலை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம். நீராவியில் வேக வைப்பதால் சத்து குறையாது. நோயாளிகளுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் சுண்டல் அற்புதமான உணவு. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண்டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் திருப்திபடுத்தலாம்.

ஞாயிறு (சூரியன்)- அவித்த கோதுமை கலந்த சுண்டல், திங்கள் (சந்திரன்)- பாசிப்பயிறு, அப்பளம் கலந்த புட்டு, செவ்வாய்- துவரை சுண்டல்,  புதன்- பயறு சுண்டல், வியாழன்- கொண்டைக்கடலை சுண்டல், வெள்ளி- மொச்சை சுண்டல், சனி- எள் சேர்த்த சுண்டல், ராகு- உளுந்து சுண்டல், ÷ கது- கொள்ளு சுண்டல்.

தமிழகத்தில் கோவில்கள் அதிகம் இருப்பது ஏன்?

64 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் என அருளாளர்கள் பிறந்த புண்ணிய பூமி தமிழகம். திருத்தலங்களுக்கு நேரில் சென்று பதிகம், பாசுரங்களைப்  பாடி மக்கள் மத்தியில் பக்திப்பயிர் வளர்த்தனர். தமிழ் இலக்கியத்தில் பக்தி பாடல்களே மிக அதிகம். கோவில் வழிபாடு என்பதுதமிழகத்தில்  அன்றாட வாழ்வின் அம்சமாக இருப்பதால், கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற சுலவடை உள்ளது.

ஐந்து தலை பாம்பின் ரகசியம்!

சிவன் தனது தலை, கழுத்து, கைகளில் பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். இதற்கு விசேஷ காரணம் உள்ளது. மனிதனுக்கு கண், காது, மூக்கு,  வாய், மெய் என்னும் ஐம்புலன்கள் உள்ளன. இவை தீயவழிகளில் ஈடுபடும் போது, விஷம் கக்கும் நாகம் போல துன்பத்திற்கு மனிதன் ஆளாக நேரிடும். இவற்றை அடக்கி நல்வழியில் செலுத்தி விட்டால் வாழ்விற்கு அழகூட்டும் ஆபரணமாக மாறி விடும். இதை நமக்கு உணர்த்தவே  நாதனாகிய சிவன் ஐந்துதலை நாகப்பாம்பைஆபரணமாக அணிந்துள்ளார். பாம்பின் ஐந்து தலையும் ஐம்புலனைக் குறிக்கும். இதை வெளிப்படுத்தும்  விதமாக தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை லிங்கத்தின் மீது ஆபரணமாக சாத்துவர். நாக லிங்கத்தை தரிசித்தால் தீய ஆசைகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்.

Thursday, August 6, 2015

புண்ணிய நதிகளில் நீராடினால் அறியாத வயதில் செய்த பாவம் நீங்குமா?

அறிந்தே கூட செய்து இருந்தாலும், மனம் வருந்தி கடவுளிடம் சரணடைந்தவர்கள் கடல், நதிகளில் நீராடபாவம் நீங்கும். அறியாமல் செய்த பாவம் நிச்சயம் அகலும்.

ஒன்பது வாரம் படித்தால் ஓகோவென வாழலாம்!

லோக மாதாவான அம்பிகைக்குரிய பாராயணத் துதிகளில் மங்களசண்டிகை மகிமை வாய்ந்தது. இதனை ஆடி செவ்வாய், வெள்ளியன்று படித்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும். ஏதாவது கோரிக்கை வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை தொடர்ந்து படித்தால் அது நிறைவேறி ஓகோவென வாழலாம்.

ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா
சர்வ சக்தி ஜெய துர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா
சர்வ சக்தி ஜெய துர்கா 
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
மங்கள கன்னிகை ஸ்லோகம் இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே
உமையவள் திருவருள் சேரும்
படைப்பவள் அவளே
காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி - அபயம்
என்று அவளை சரண் புகுந்தாலே
அடைக்கலம் அவளே சக்தி - 
ஜயஜயசங்கரி கவுரி மனோகரி 
அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி 
சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி 
திருவருள் தருவாள் தேவி
கருணையில் கங்கை, கண்ணனின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும்
வருவினை தீரும், பழவினை ஓடும்
அருள் மழை பொழிபவள் - நாளும்
நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்

முகூர்த்தவேளையில் அட்சதை தூவ காரணம்!

முகூர்த்தவேளையில் மஞ்சள் அரிசியான அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவர். அட்சதை என்றால் பழுது இல்லாதது என்றும், முனை முறியாத முழு அரிசி என்றும் பொருளுண்டு. அரிசியை மஞ்சளில் தோய்த்து அட்சதை செய்வது இன்றைய வழக்கம். நெல்லை உரலில் இட்டு முனை முறியாமல் லாவகமாக குத்தி அரிசியாக்குவர். இதை மஞ்சளில் தோய்த்து, அதை பூவாக எண்ணி மணமக்களுக்கும், இளையவர்களுக்கும் ஆசியளிக்க பயன்படுத்தலாம் என்கிறது சாஸ்திரம். பழுதில்லாத அந்த அரிசி போல வாழ்வில், தம்பதியரும் பழுதின்றி நிறைவாக வாழ வேண்டும் என்பதே இதன் தத்துவம். 

கோவிலில் பிறர் ஏற்றிய விளக்கு அணைந்திருந்தால் அதை நாம் ஏற்றலாமா?

மிகவும் புண்ணியம். வேதாரண்யம் மறைநாதசுவாமி கோவில் கருவறையில் ஒரு எலி திரிந்து கொண்டிருந்தது. அங்கே விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அதிலிருந்த நெய்யைக் குடிப்பதற்காக விளக்கில் எலி ஏற, அதன் மூக்கு திரியில் பட்டு அணைய இருந்த தீபம் சுடர் விட்டு பிரகாசித்தது. அந்த புண்ணியம் காரணமாக மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறப்பு எடுத்து, திருமாலின் திருவடியை அடையும் பேறு பெற்றது. இதன் அடிப்படையில், அணைந்த தீபத்தை ஏற்றி வைப்போருக்கு சக்கரவர்த்தி யோகம் உண்டாகும் என்பதை அறிய முடிகிறது.

ஆடி அமாவாசை

ஆக.14ல், ஆடி அமாவாசை வருவதை ஒட்டி, முன்னோர் வழிபாட்டு தலங்கள் இடம் பெற்றுள்ளன. ராமேஸ்வரம்: ராவணனை சம்ஹாரம் செய்த பாவம் தீர, ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு, ராமன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை ராமலிங்கம் என்றும்,  அனுமன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை விசுவலிங்கம் என்றும் அழைக்கிறார்கள். காசியாத்திரை செல்வோர் இங்கு தீர்த்தங்களில் நீராடி, ராமநாதரை கங்கை நீரால் அபிஷேகம் செய்வர். கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன.  இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. பிதுர்தர்ப்பணம் செய்வோர் ஆடி அமாவாசையன்று  ராமநாதசுவாமியை வழிபடுவர். இருப்பிடம்: மதுரையில் இருந்து 200 கி.மீ.,
தொலைபேசி: 04573- 221 223.

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. வைகை ஆற்றின் கரையிலுள்ள பிதுர்தலமான இதற்கு பிதுர் மோட்சபுரம்  என்ற  பெயருண்டு.  அஸ்தி கரைத்தாலும், தர்ப்பணம் செய்தாலும் அவர்கள் நற்கதியாகிய பிறவாநிலை பெறுவர் என்பது ஐதீகம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் இங்கு வந்த போது, வைகைக்கரையிலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கம் போல் காட்சியளித்ததாம். இதனால் ஆற்றில் இறங்க அஞ்சி மறுகரையில் நின்றே வழிபட்டனர். அவர்கள் தரிசனம் பெறும் விதத்தில் நந்தியும் விலகி நின்றது. 
இருப்பிடம்: மதுரையில் இருந்து 18 கி.மீ., 
தொலைபேசி: 94435 01761, 04575 265 082, 265 084.

கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியம்மன் அருள்புரிகிறாள். பாணாசுரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள், அன்னை பார்வதியின் உதவியை நாடினர். பிரம்மாவிடம் வரம் பெற்ற பாணாசுரனை அழிக்க அம்பிகையே கன்னியாக வடிவெடுத்து  தவத்தில் ஈடுபட்டாள். தவத்தால் பலம் பெற்ற அம்பிகை சக்ராயுதத்தை ஏவி பாணாசுரனை வதம் செய்தாள். வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்து மகாசமுத்திரம் ஆகிய மூன்றும் சங்கமிக்கு இங்கு பிதுர்தர்ப்பணம் 
செய்வோருக்கு முன்னோர் ஆசி கிடைக்கும். 
இருப்பிடம்: மதுரையில் இருந்து 235 கி.மீ.,
தொலைபேசி: 04652- 246 223.

அழகர்கோவில் நுõபுர கங்கை: திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் அருள்பாலிக்கிறார். பதினெட்டாம் படி கருப்பசாமி சக்தி மிக்கவர்.  அனுமன் தீர்த்தம், கருடதீர்த்தம், சக்கர தீர்த்தம், நுõபுர கங்கை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. திருமால் உலகை மூன்று அடிகளால் அளந்த போது, அவரது சிலம்பு அணிந்த திருவடி வானம் நோக்கி சென்றது. அது கண்ட பிரம்மா தன் கலச நீரால் திருவடிக்கு அபிஷேகம் செய்தார். அந்த நீர் கங்கை போல் ஊற்றெடுத்தது. இதனால், இந்த தீர்த்தம் நுõபுர கங்கை என பெயர் பெற்றது. நுõபுர கங்கையில் நீராடி தர்ப்பணம் செய்வது சிறப்பு. 
இருப்பிடம்: மதுரையில் இருந்து 25 கி.மீ.,
தொலைபேசி: 0452- 247 0228, 247 0229.

ஆனைமலை மாசாணி அம்மன்:  பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் மன்னன் நன்னனுக்குரிய மாமரம் இருந்தது. அந்த பழங்களை யாரும் பறிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தான். ஒருநாள் ஆற்றில் நீராடிய இளம்பெண் மிதந்து வந்த மாம்பழத்தை  சாப்பிட்டாள். அவளுக்கு நன்னன் மரண தண்டனை கொடுத்தான். அவள் மீது ஊரார் இரக்கம் கொண்டனர். அதுவே பக்தியாகி  வழிபட்டனர். மயான சயனி என்பதே மாசாணி என மருவியது. உப்பாற்றின் கரையில் அம்மன் 17 அடி நீளத்தில்  படுத்த நிலையில் காட்சி தருகிறாள்.  இவள்  நீதி தெ#வமாக விளங்குகிறாள். 
இருப்பிடம்: பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,
தொலைபேசி: 04253- 282 337, 283 173. 

திருச்செங்கோடு அர்த்தநாரி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவிலில், சிவன் அம்பிகையை இடபாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார். இங்குள்ள செங்கோட்டு வேலவன் சன்னிதி சிறப்புமிக்கது. 1200 படிகள் கொண்ட மலைக்கோவிலான இங்கு உள்ள 60வது படி சத்தியப்படி எனப்படுகிறது. அந்தக் காலத்தில் வழக்குகளை இங்கு பேசித் தீர்க்கும் வழக்கம் இருந்தது. அர்த்தநாரீஸ்வரரின் திருவடியில் சுரக்கும் தேவதீர்த்தம் மகிமை மிக்கது. அமாவாசை நாளில் இந்த தீர்த்தத்தைப் பருகினால் உடல் நோய், மன நோய் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் . 
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 18 கி.மீ.,
தொலைபேசி: 04369-250 238.

அனுமந்தபுரம் வீரபத்திரர்:  தட்சனின் யாகத்தை நிறுத்த, சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். சாகாவரம் பெற்ற தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்டினார்.  பிறகு, தன் கோபம் தணிய பூலோகத்தில் உள்ள அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கி  அமைதி பெற்றார்.  இத்தலத்தில் வீரபத்திரருக்கு கோவில் அமைக்கப்பட்டது. செவ்வாய்தோஷம், உடல்நோய் நீங்க ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பவுர்ணமி நாட்களில், இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகின்றனர். இருப்பிடம்: விழுப்புரம்- சென்னை சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 10 கி.மீ.,             
தொலைபேசி: 044- 2746 4325.

பண்ணாரி மாரியம்மன்: பண்ணாரி வனப்பகுதியில் மேய்ந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும், அங்குள்ள வேங்கை மரத்தடியில் அடிக்கடி பாலைச் சுரந்தது. இதை அறிந்த மாடு மேய்ப்பவன் அந்த இடத்திலுள்ள புற்றின் அடியில், ஒரு அம்பாள் சிலை இருப்பதைக் கண்டான். விஷயமறிந்த ஊரார் அங்கு வந்த போது, ஒருவருக்கு அருள் வந்தது. பசுமை மிக்க இந்த இடத்தில் மாரியம்மனாக வீற்றிருக்கும் என்னை வழிபட்டால் வேண்டும் வரம் அளிப்பேன், என்று அம்மன் வாக்களித்தாள். அதன்படி கோவில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர்.  ஆடி செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்கு புற்றுமண்ணே பிரசாதம்.
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் வழியாக 77 கி.மீ.,
தொலைபேசி: 04295- 243 366, 243 442, 243 289.

தேவிபட்டினம் நவபாஷாண கடல்: ராமநாதபுரம் அருகிலுள்ள தேவிபட்டினம் கடலில், ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாணம் என்னும் கற்களால் ஆன நவக்கிரகங்கள் உள்ளன. அமாவாசையன்று இந்தக் கடலில் நீராடி நவக்கிரகங்களை வழிபட்டால் கிரகதோஷம் அகலும் என்பது ஐதீகம். இங்குள்ள சக்கர தீர்த்தம் என்னும் தர்ம புஷ்கரணியில் நீராடினால் பாவநிவர்த்தி உண்டாகும். வீரசக்தி பீடமாக விளங்கும் இங்கு அம்பிகை மகிஷாசுரமர்த்தினியாக வீற்றிருக்கிறாள். புகழ் மிக்க மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தால் போற்றப்படும் அம்பிகை இவளே. ராவணனுடன் போரிடும் முன் ராமர், லட்சுமணர், அனுமன் மூவரும் வெற்றி பெற இந்த அம்பிகையை வழிபட்டனர். 
இருப்பிடம்: ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ.,

பவானி சங்கமேஸ்வரர்: ஈரோடு மாவட்டம் பவானியில், பவானி ஆறு காவிரிஆற்றுடன் கூடுகிறது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் அன்னை வேதாம்பிகை அருள்பாலிக்கிறாள். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு  திருநணா என்றும் பெயருண்டு. திருநணா என்பதற்கு  பாவம் நெருங்காது என்பது பொருள்.  அதனால்  இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவதரிசனம் செய்வோருக்கு  பாவம் நெருங்குவதில்லை என்பது ஐதீகம். காவிரி, பவானி, அமுதநதி கூடுவதால் பவானியை  முக்கூடல் என்று சொல்வர். ஆடி மாதம் முழுவதுமே இங்கு நீராடி, சுவாமியை வழிபடுவது சிறப்பு. 
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., 
அலைபேசி: 98432 48588, தொலைபேசி: 04256- 230 192. 

செதலபதி முக்தீஸ்வரர்: திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவிலை தில தர்ப்பணபுரி என்று சொல்வர். அமாவாசையன்று செய்யும் தர்ப்பணத்தின் பெயரால் அமைந்த தலம்  இது.  திலம் என்றால் எள் என்று பொருள். இத்தலத்தில் ராமர் தனது தந்தை தசரதர், ஜடாயு இருவருக்கும் எள்ளால் தர்ப்பணம் செய்ததால் இப்பெயர் ஏற்பட்டது. முக்தி தருபவராக சிவன்  இருப்பதால் முக்தீஸ்வரர் எனப்படுகிறார். அம்பிகை சுவர்ணவல்லித் தாயார் செல்வம் தருகிறாள். இங்குள்ள அரசலாற்றிலும், சந்திர தீர்த்தத்தில் நீராடி முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வர்.  
இருப்பிடம்: திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் கிராமம். இங்கிருந்து  4 கி.மீ.,
அலைபேசி: 94427 14055, தொலைபேசி: 04366- 238818, 239 700 

அய்யாவாடி பிரத்யங்கிரா: அய்யாவாடியில் காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். இலங்கை போரில் வெற்றி பெறுவதற்காக ராமர் யாகம் செய்து இந்த தேவியை வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள்  சிங்க முகம், 18 கைகள், சிரித்த முகத்துடன் கரிய நிறத்தில் காட்சி தருகிறாள். எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட, அமாவாசையன்று அம்மனுக்கு காலை முதல் மதியம் வரை நிகும்பலா யாகம்  இங்கு நடக்கிறது.   பழம், பட்டு, பூக்கள் என 108  திரவியங்களை சேர்ப்பர். யாக குண்டத்தில் மிளகாய் வத்தலை இட்டாலும் நெடி  சிறிதும் இருக்காது.யாகம் நிறைவேறியதும், சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம் நடக்கும்.  
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ.,
தொலைபேசி: 94431 24347, 0435 246 3414.

பாபநாசம் பாபநாசநாதர்: 
நவகைலாயத் தலங்களில் முதல் தலம் பாபநாசம் பாபநாசநாதர் கோவில். தாமிரபரணியின் கரையில் அமைந்த  இங்கு அகத்தியர் சிவபார்வதியின்திருமணக் கோல தரிசனம் பெற்றார். கருவறையின் பின்புறம் உள்ள பிரகாரத்தில் கல்யாண சுந்தரர் என்ற பெயரில் சிவபார்வதி திருமணக் கோலத்தில் உள்ளனர். இங்கு அம்பிகை உலகம்மையாக வீற்றிருக்கிறாள். கங்கை நதி தன்னிடம் சேரும் பாவத்தை ஆண்டுக்கு ஓருமுறை தாமிரபரணிக்கு வந்து நீராடி போக்கிக் கொள்வதாக ஐதீகம். பாபநாசநாதர் லிங்கம் ருத்திராட்சத்தால் ஆனது. ஆடி அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. 
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ.,
தொலைபேசி: 04634- 223 268

சொரிமுத்தையனார் கோவில்: சாஸ்தாவின் முதல் தலம் பொதிகை மலையில் உள்ள  சொரிமுத்தையனார் கோவில். பூர்ணா, புஷ்கலா தேவியருடன் வீற்றிருக்கிறார்.  பாணதீர்த்தம் கோவிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது. அம்பில் புறப்பட்ட பாணம் போல  நீர் கொட்டுவதால் பாண தீர்த்தம் என பெயர் வந்தது. இந்த அருவியை தூரத்தில் இருந்து தரிசனம் செய்யலாம். (குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது) ஆடி அமாவாசையன்று பக்தர்கள் தாமிரபரணியில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.  அகத்தியர் அருவியிலும் நீராடி தர்ப்பணம் செய்யலாம். 
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் சொரிமுத்தையனார் கோவில் 54 கி.மீ., 
தொலைபேசி: 04634- 250 209

சுருளிமலை தீர்த்தம்: சுருளிமலையில் முருகன் குடி கொண்டிருக்கிறார். ஆண்டிகோலத்தில் சுவாமி காட்சியளிப்பதால் சுருளியாண்டி எனப்படுகிறார். இந்த மலையிலுள்ள கைலாச புடவு குகையில் சிவன் கைலாசநாதர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். குகையின் மேல்பகுதியில் முருகன் உள்ளார். சனீஸ்வரரின் பிடியிலிருந்து விடுபட தேவர்கள் இங்கு வந்து தவமிருந்தனர். முருகன் அவர்களை சனியின் பிடியில் இருந்து காத்தார்.  ஆடி அமாவாசையன்று சுருளிதீர்த்தம் அருவியில் நீராடி பிதுர் 
தர்ப்பணம் அளிக்கின்றனர். இங்குள்ள பூதநாராயணப்பெருமாள் கோவிலில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. 
இருப்பிடம்: தேனியிலிருந்து 40 கி.மீ.,
அலைபேசி: 93452 61022.

அச்சிறுபாக்கம் ஆட்சிபுரீஸ்வரர்:  திரிபுர அ”ரர்களை அடக்க எண்ணிய சிவன் தேரில் புறப்பட்டார். அப்போது முதற்கடவுளான விநாயகரை வணங்க வேண்டும் என்ற நியதியை அவர் பின்பற்றவில்லை. எனவே,  விநாயகர் தேரின் அச்சை முறித்தார்.  தவறை உணர்ந்த சிவன் விநாயகரை மனதில் தியானிக்க தேர் சரியானது. சட்டத்தை தெய்வமும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வு அமைந்தது. தேரின் அச்சு முறிந்த இடத்தை அச்சு+இறு(முறிந்த)+பாக்கம் என்று அழைத்தனர். இதுவே அச்சிறுபாக்கம் ஆனது. இங்குள்ள சிவன் ஆட்சிபுரீஸ்வரர்  எனப்படுகிறார். இவரை அமாவாசையன்று வழிபட புதிய முயற்சி தடையின்றி நிறைவேறும்.
இருப்பிடம்: செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. 
அலைபேசி: 98423 09534, தொலைபேசி: 044 - 2752 3019.

முப்பத்து முக்கோடி என்றால் எத்தனை ஆண்டு?

நினைக்க முடியாத வாழ்நாள்புராணங்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள், நாட்கள் பற்றியெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. முப்பத்து முக்கோடி என்றால் 33 கோடி அல்ல. 33 என்ற எண்ணுக்குப் பிறகு 26 பூஜ்யங்கள் சேர்ப்பது என்ற கருத்து உண்டு. அந்த  அளவுக்கு வாழ்ந்தவன் ராவணன். சிவபக்தனான இவன், சிவதரிசனத்தை நேரில் பெற தன் ஒன்பது தலைகளை வெட்டி காணிக்கையாக்கினான். அப்படியும், சிவன் வராமல் போகவே பத்தாவது தலையையும் வெட்ட முயன்ற போது, சிவன் காட்சி தந்தார். அவரிடம் முப்பத்து முக்கோடி நாட்கள் வாழும் வரத்தைப் பெற்றான். அவன் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டான். இலங்கையில் இருந்த இந்த லிங்கங்கள் கடல் கோளினால் அழிந்திருக்க வேண்டும் என்கின்றனர்.