Sunday, March 17, 2013

காசிக்கு போகும் இளைஞர்களே இதைக்கேளுங்க!


காசிக்கு இணையான தலமில்லை. கங்கைக்கு இணையான தீர்த்தமில்லை என்பது சொல் வழக்கு. வாழ்நாளில் ஒருமுறையாவது கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரைத் தரிசிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பக்தரும் விரும்புகிறார்கள். கடந்த பிறவிகளில் என்னால் கங்கையைத் தரிசிக்க முடிய வில்லையே என்று முற்பிறவியில் வருத்தப்பட்ட ஒருவருக்கே, இப்பிறவியில் கங்கை தரிசனம் கிடைக்கும் என்கிறது கங்கா மகாத்மியம் என்ற நூல். காசி செல்லும் இளைஞர்கள் கடைபிடிக்க விதிமுறைகள் உள்ளன.
*உங்கள் பெற்றோரில் தாயோ, தந்தையோ இதுவரை காசியாத்திரை செல்லாமல், பிள்ளைகள் மட்டும் தனித்து செல்வதால் பயனில்லை.
*இளைய வயதினரான ஆண், பெண் யார் காசி சென்றாலும் அவரவர் பெற்றோரை அழைத்துச் செல்வது அவசியம். அதேநேரம், பெற்றோர் ஏற்கனவே காசியாத்திரை சென்றிருந்தால் அவர்களை உடன் அழைத்துச் செல்லத் தேவையில்லை.


*கங்கைக் கரையில் புனித நீரால் பெற்றோருக்குப் பாதபூஜை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், வாழ்நாள் முடிந்ததும், இந்திரனே நேரில் வந்து தேவலோகத்திற்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.
புண்ணிய மடுவில் நீராடுங்க! - முற்பிறவியில் செய்த தீவினை பறந்தோடும்

கோபுரம், கொடிமரம் என எல்லாமே ஐந்தாக விளங்கும் தலம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில். விருத்தாம்பிகை, பாலாம்பிகை என இரு அம்பிகை சந்நிதி இங்குண்டு. இங்குள்ள மணிமுத்தாறு தீர்த்தத்தில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பாகும். வடக்கு கோபுர வாசலுக்கு நேரே உள்ள இத்தீர்த்தம் "புண்ணியமடு எனப்படும். இங்கு நீராடி சுவாமியை தரிசிப்போருக்கு முற்பிறவியில் செய்த தீவினை பறந்தோடும். முக்தி தரும் தலம் என்பதால் "விருத்தகாசி என்றொரு பெயருண்டு.

காஞ்சி காமாட்சி விஸ்வரூப தரிசனம்: கோயிலில் நடந்த அதிசய சம்பவம்!

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்ஸவம் நடந்து வருகிறது. விழாவின் கடைசிநாளன்று, அம்பாள் விஸ்வரூப காட்சி தருவாள். இதையொட்டி, அக்கோயிலில் நடந்த அதிசய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள்.காஞ்சி மகாப்பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த போது, ஒரு பெண் பெரியவரிடம் வந்து, சுவாமி! என் மகளுக்கு திருமணம். ஆனால், திருமாங்கல்யம் வாங்கக்கூட வசதியில்லை, என்று சொல்லி அழுதார்.பெரியவர் அந்தப் பெண்ணிடம்,நீ போய் காமாட்சியம்மனை தரிசனம் செய்துவிட்டு இங்கே வா, என்றார்.அந்தப் பெண்ணும் கோயிலுக்குச் சென்று அம்பாளைத் தரிசித்து விட்டு, பிரகார வலம் வரும்போது, கீழே ஒரு திருமாங்கல்யம் கிடப்பதைக் கண்டார். மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்டு மடத்திற்கு வந்து பெரியவரிடம் காட்டி, அது தனக்கு கிடைத்த விதம் பற்றி சொன்னார்.பெரியவர், அதை என் முன்னால் வைத்துவிடு, உனக்கு வேறு மாங்கல்யம் தருகிறேன், என்றார்.

அந்த சமயத்தில் ஒரு பக்தர் வந்தார். அவர் இரண்டு திருமாங்கல்யங்களை பெரியவர் முன் வைத்தார்.பெரியவா! என் மகளுக்கு திருமணம். திருமாங்கல்யத்தை உங்களிடம் கொடுத்து ஆசி பெற வந்தேன், என்றார்.அது சரி! உன் மகளுக்கு ஒரு மாங்கல்யம் தானே தேவை. இன்னொன்று எதற்கு? என்றார்.அது இங்கு வரும் ஏழை பக்தர்களில் யாராவது ஒருவருக்கு உங்கள் மூலமாக கொடுக்க! என்றார் பக்தர்.அப்படியா! என்ற பெரியவர், கூடுதலாக இருந்த மாங்கல்யத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, உன் மகள் கல்யாணத்தை சிறப்பாக நடத்து, என்றார்.அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் இன்னொரு பெண் ஓடி வந்தார். சுவாமி! நான் காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். என் மாங்கல்யம் எங்கோ தவறி விழுந்து விட்டது. ஐயோ! கோயிலுக்கு வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டதே! தாங்கள் தான் என்னை சுமங்கலியாக இருக்க வாழ்த்த வேண்டும்! என்று அழுதார்.அழாதே! இதோ! நீ தொலைத்தது இந்த திருமாங்கல்யம் தானா சொல்! என்று ஏழைப்பெண்மணி தன்னிடம் ஒப்படைத்ததைக் காட்டினார். இதுதான்! என்று ஆனந்தமாக வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார் அந்தப் பெண்.மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் மாங்கல்ய பாக்கியம் அருளியவள் காஞ்சி காமாட்சி. குருவருளும், திருவருளும் ஒரு சேர கிடைக்கும் இடம் காஞ்சி என்றால் அது மிகையல்ல!

கண்திருஷ்டி, ஏவல் போன்ற துஷ்ட சக்திகள் இருப்பது உண்மைதானா?

உலகில் இருவேறு சக்திகள் இருக்கின்றன. நல்ல, தீயசக்திகள் அவை. தேவர்களுக்கு நேர் எதிரான அசுரர்களும் இருந்ததை புராணங்களில் படித்திருப்பீர்கள். அதுபோல, அருட்சக்திக்கு எதிரான இருட்சக்தி உலகில் இருக்கத் தான் இருக்கிறது. கண்திருஷ்டி, ஏவல், சூன்யம் போன்றவையும் அதில் அடக்கம். நோய் பரப்பும் கிருமிகள் போல அவை கெடுபலன்களை உண்டாக்குகின்றன. இதிலிருந்து தப்பிக்க தெய்வசக்தியைத் தான் பிடித்துகொள்ள வேண்டும். யோகநரசிம்மர், சக்கரத்தாழ்வார் வழிபாடு பயன்தரும். நரசிம்ம துதியான மந்திரராஜபத ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது. முடியாவிட்டால் இயன்ற போதெல்லாம் யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை ஜெபித்து வாருங்கள்.

Sunday, March 3, 2013

பணம் காசு செழிக்க 5 எளிய வழிகள்!

இறைவனை வழிபடும் ஒருமுறையை உபசாரம் என்பர். வீட்டில் இறைவனை வழிபடும் முறைகளில் பஞ்சோபசாரம் எளிமையானது.

1. இறைவனின் திருவுருவ படங்களுக்குச் சந்தனம் இடுவது
2. இறைவனின் திருப்பெயரைச் சொல்லி, மலர் தூவி அர்ச்சிப்பது.
3. சாம்பிராணி, பத்தி தூபம் இடுவது.
4. நெய்தீபம், சூடம் தீபாராதனை செய்வது.
5. நைவேத்யமாக பிரசாதம் படைப்பது.

இந்த ஐந்து முறைகளில் இறைவனை வழிபடுவதை பஞ்சோபசாரம் என்று சொல்வர். இந்த எளிய முறைகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் கடைபிடித்து, பயபக்தியோடு இறைவனை வணங்கி, நியாயமான வழியில் வாழ்பவர்கள் நிறைந்த செல்வமும், தீர்க்காயுளும், வாழ்வுக்குப் பின் பிறப்பற்ற நிலையும் அடைவர்.

பவுர்ணமியில் கிரிவலம் உடல்நலத்திற்கு சிறந்தது ஏன்?

நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். ஓஷதீநாம் பதி: என்று சந்திரனுக்குப் பெயருண்டு. இதற்கு தாவரங்களின் தலைவன் என்று பொருள். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும். பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும்.