Wednesday, October 31, 2012

சித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா?

தெய்வப்படங்களை வீட்டில் வைத்து வழிபடுகிறோம். காரணம் தெய்வத்திடம் வரம் பெற்று நலமாய் வாழவேண்டும் என்பது. மகான்களின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுகிறோம். காரணம் ஏதாவது சூழ்நிலையில் நாம் தவறு செய்ய முற்படும்போது அவர்களின் அருளுரைகள் நம்மைத் தடுத்து நிறுத்துவதற்காக. 18 சித்தர்களும் மனிதநேயமே உருவாக வாழ்ந்தவர்கள். கண்ணுக்குத் தெரியாமல் இன்னும் வாழ்வதாகக் கூறுகிறார்கள். தமக்கென எதுவுமே செய்து கொள்ளாமல் பிறருக்குத் தொண்டு செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள். அவர்களது கொள்கையைக் கடைபிடிக்க விரும்பினால் தாராளமாக சித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள். ஜோதிடம், வாஸ்து, பரிகாரம் என்று கூறி அவர்களைத் தாழ்த்தி விடாதீர்கள்.

Monday, October 29, 2012

திருமணத்தின் போது செய்யப்படும் சடங்கு முறைகளும் அவற்றின் சிறப்பும்! மாங்கல்ய தாரணம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இத்தகைய திருமணத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு அவற்றில் முக்கியமான சில...

காசி யாத்திரை: மணமகன் துறவு பூண எண்ணி எளிய ஆடை உடுத்தி, விசிறி, குடை ஏந்தி, மரப்பாதுகை அணிந்து காசியை நோக்கிச் செல்லத் துவங்குகின்றான். அப்போது மணப்பெண்ணின் தந்தை அவன் முன் வந்து இல்லறவாழ்வின் சிறப்பையும், அதன் அவசியத்தையும் விரிவாகச் சொல்லி, அவன் இல்லறத்தை மேற்கொள்ள, தன் மகளையும் துணைநலமாக, தருவதாக வாக்களித்து, மணமகனை அழைத்து வருவது காசி யாத்திரையாகும்.

மாலை மாற்றல்: மணப்பெண்ணும் மணமகனும் தம்தம் தாய்மாமன் தோள்களில் அமர்ந்து, ஒருவர் கழுத்தில் ஒருவர் மாலை மாற்றும் நிகழ்ச்சி இது. கணவன் மனைவி என்கிற உறவு, ஈருடல் ஓர் உயிர் என்று இரண்டறக் கலக்கும் நிலையில், ஒருவர் அணிந்த மாலையை மற்றவர் அணிய வைப்பது மாலை மாற்றல்.

ஊஞ்சல் அமர்த்தி லாலி பாடுதல்:  இந்நிகழ்ச்சியில் ஊஞ்சல் சங்கிலி, இல்வாழ்க்கைக்கு, இறைவனிடத்தில் ஏற்படுத்திய தொடர்பாகவும், ஆடும் ஊஞ்சல், மேடு பள்ளம், சலனம் நிறைந்த வாழ்க்கைப்பாதையை இருவரும் இணையாக அமைதியாக உறுதியாகக் கடக்க வேண்டிய முறையையும் உருவகப்படுத்துவதாகும்.

மாங்கல்ய தாரணம்: தேர்ந்து எடுக்கப்பட்ட புனித நேரத்தில், மங்கள நாதஸ்வரமும் மேளமும் முழங்க கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள மணப் பெண்ணை நேராக நோக்கி அவள் கழுத்தில் மங்கள தாலியைக் கட்டுகின்றான். முதல் முடிச்சை மணமகனும் மற்ற இரண்டை அவன் சகோதரியும் போட மாங்கல்ய தாரணம் நடைபெறுகின்றது.

கைப்பிடித்தல் (பாணிகிரஹணம்): மணமகன், விரல்கள் மேல் குவிந்த பெண்ணின் வலது கையை தனது வலது கையால் எல்லா விரல்களும் சேர்ந்திருக்கும் வண்ணம் பிடிப்பதே பாணிகிரஹணம் ஆகும் நான் முதுமையடைந்த பின்னும் உன்னை கைவிடமாட்டேன் என மணமகன் மணமகளிடம் கூறுவதாகும்.

ஸப்தபதி (ஏழடி வைத்தல்): ஏழடி எடுத்து வைக்கும் பெண்ணே, உனக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் உன் முதலடியில் அன்னமும், இரண்டாவதில் தேஹபுஷ்டியும் மூன்றாவதில்  விரத அனுஷ்டானமும், நாலாவதில் சுகமும், ஐந்தாவதில் பசுக்கள் விருத்தியும், ஆறாவதில் ருதுக்களால் அனுகூலமும், ஏழாவதடியில் ஹோமம்  செய்யும் ஆற்றலையும் அளிக்க உன்னை பின் தொடர்வாராக.

நலுங்கிடல்: திருமண தினத்தின் மாலை, மணமக்கள் மனசாந்தியும் சுகமும் பெறும் வகையில் கேளிக்கையும் குதூகலமும் பொங்கும் நிகழ்ச்சியே நலுங்கிடலாகும். மணமகள் மணமகனை, தன்இனிய பாட்டினால் நலுங்கிட அழைக்கின்றாள். சுற்றமும் நண்பரும் சூழ சிரிப்பும் கேலியும் நிறைந்து எல்லோரையும் மகிழ்விக்கும் நிகழ்ச்சி நலுங்கிடல் ஆகும்.

Saturday, October 27, 2012

இனிய இல்லறம் அமைய என்ன செய்ய வேண்டும்? நல்ல மனைவி அமைய!

இல்லறமல்லது நல்லறமன்று என்பது  அவ்வையின் வாக்கு. உலகில் எந்த நாட்டிற்கும் இல்லாத பெருமை நமக்கு உண்டு. அது தான் குடும்பம் என்ற அமைப்பு. சுனாமியின் போது உதவி செய்வதற்காக வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனுடன் மனைவி ஹிலாரியும் வந்திருந்தார். அப்போது ஹிலாரியிடம், இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்க, இந்தியா கோயில்கள் நிறைந்த நாடு என்பதை அறிவேன். ஆனால், இங்கு குடும்பங்களே கோயில்களாக உள்ளன. அதில் மனைவியே தெய்வமாகத் திகழ்கிறாள் என்பது இங்கு வந்தபின்பு தான் தெரிகிறது, என்றார். நம்நாட்டைப் பொறுத்தவரை குடும்பவாழ்வு தொடங்குவதே திருமணத்தின் மூலம் தான். பத்து பொருத்தம் பார்த்து, பஞ்சபூதங்கள் சாட்சியாக, நான்கு வேதம் முழங்க, மூன்றுமுடிச்சு போட்டு, இருமனங்கள் ஒன்றாக இணைவது தான் திருமணம். நல்ல சமையல் ஒருநாள் இன்பம், நல்ல அறுவடை ஓராண்டு இன்பம். நல்ல திருமணமோ காலமெல்லாம் இன்பம்.

தெய்வீகத்திருமணத்தைக் கூட வள்ளி திருமணம் என்று சொல்வார்களே தவிர, முருகன் திருமணம் என்று சொல்வதில்லை. இதைப்போலவே சீதாகல்யாணம், மீனாட்சி திருக்கல்யாணம் என்று சொல்வது மரபு. பெண்மையைப் போற்றுவது தான் இதன் அடிப்படை. மலரின் நறுமணம் போல, பெண்களும் அன்பு என்னும் மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். பெண்ணுக்கு கண் அவர் என்பதே கணவரானது. கண்ணை இமை காப்பது போல குடும்பத்தைக் காப்பவள் மனைவி.(கீழ் இமை அசையாது). இரண்டு கண்களும் ஒரே பொருளையே காண்பது போல, கணவனும் மனைவியும் கருத்து ஒன்றி நற்செயல்களைச் செய்யவேண்டும், என நன்னெறி வெண்பா நாற்பது என்னும் நூலில் சிவப்பிரகாசசுவாமிகள் குறிப்பிடுகிறார்.

சிவகுரு- ஆர்யாம்பாள் தெய்வீகத் தம்பதிகள் திருச்சூர் விருஷாசலம் கோயிலில் குழந்தை வரம் வேண்டி விரதமிருந்தனர். அன்றிரவு கோயிலில் உறங்கும்போது ஆர்யாம்பாளின் கனவில் தோன்றிய சிவன், அற்பாயுள் வாழும் நல்ல பிள்ளை வேண்டுமா? தீர்க்காயுள் உள்ள கெட்டபிள்ளை வேண்டுமா? என்று கேட்டார். சிவனிடம் ஆர்யாம்பாள்,என் கணவரைக் கேட்டு முடிவு சொல்கிறேன், என்றாள். கண் விழித்துப் பார்த்தால், கணவரும் ஆச்சர்யத்துடன் ஏதோ சொல்ல முயன்றார். இருந்தாலும், நீ எதையோ சொல்ல எழுந்தாய்! நீயே முதலில் சொல் என்று சிவகுரு சொல்ல அவள் தன் கனவை எடுத்துச் சொன்னாள். சிவகுரு தனக்கும் இதே அனுபவம் உண்டானதைக் கூறினார். நானும் சிவனிடம் உன்னைப் போலவே மனைவியிடம் கேட்டு முடிவு சொல்வதாகக் கூறிவிட்டேன், என்றார். இத்தம்பதிக்கு பிறந்த நல்ல பிள்ளை தான் ஆதிசங்கரர். உண்மையான மனைவி, கணவனின் இல்லத்தில் அடிமை. இதயத்தில் அரசி, என்ற ரஸ்கினின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது!  அன்பு, பொறுமை, தியாகம், அருள், சகிப்புத்தன்மை, அறம் சார்ந்த பண்புகளை குடும்பத்தில் வளர்க்க வேண்டியது பெண்ணின் கடமை. அறம் செய்தால் அன்பு விளையும் அன்பினால் அருள் தோன்றும் அருளால் தவம் விளையும் தவத்தால் சிவம் தோன்றும் சிவனும் ஜீவனும் ஒன்றாகும் பெற்ற சிற்றின்பமே பேரின்பமாகும், என்பதை உணர்ந்து இறைநம்பிக்கையோடு இல்லறத்தை தொடர்வோம். வாழ்வுக்குப் பொருள் (பணம்) தேவை. ஆனால், வாழ்வதற்கும் ஒரு பொருள் (அர்த்தம்) தேவை அல்லவா?

Wednesday, October 24, 2012

குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பவர் பைரவர்!

திங்கட்கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு மஞ்சள் நிற பூக்களாலான மலர்மாலை அணிவித்து ஜவ்வரிசி பாயசம், அன்னம் படையல் இட்டு அர்ச்சிக்க தாயாரின் உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய்க்கிழமை ராகு வேளையில் (மாலை 3-4.30) பைரவருக்குச் செவ்வரளி மாலை சாத்தி, துவரம்பருப்புப் பொடி சாதம், செம்மாதுளம்பழம் படையலிட்டால் சகோதரப் பகை நீங்கி ஒற்றுமை நிலைக்கும். புதன் கிழமை மாலை, பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை சாத்தி புனுகுபூசி பாசிப்பருப்புப் பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்புப் பாயசம் படையல் செய்ய மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவர். கிரகிப்புத் திறன் அதிகரித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவர். புதன்கிழமை காலை 10.30- 12க்குள் பைரவருக்குச் சந்தனக்காப்பு செய்து மரிக்கொழுந்து மாலை சூட்டி, பாசிப்பயறு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்புப் பொடி சாதம் படைக்க வியாபாரத்தில் அமோகவளர்ச்சி உண்டாகும். வெள்ளிக்கிழமை ராகு வேளையில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, தாமரை மலர் மாலை சூட்டி, அவல் கேசரி, பானகம், சர்க்கரைப்பொங்கல் படைத்து அர்ச்சனை செய்தால் மனதிற்குப் பிடித்த வகையிலும், தடையின்றியும் திருமணம் கைகூடும்.

படித்தவர்களுக்கும் சாஸ்திரம் தேவை!

சாஸ்திர நூல்களை ஸ்மிருதி என்பர். இதற்கு நினைவில் வைத்துக் கொள்ளுதல் எனப்பொருள். சாஸ்திரங்களை நினைவில் வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும். இதனால் காலம் காலமாக சாஸ்திர அறிவு தொடரும். மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமைகளும், பொறுப்புகளும் சாஸ்திரத்தில் அடங்கும். இன்ஜினியர், டாக்டர், கம்ப்யூட்டர் வல்லுநர் என என்ன தான் கல்விஞானம் இருந்தாலும், எல்லாருக்குமே சாஸ்திர அறிவு தேவைப்படுகிறது. இன்று என்ன கிழமை, என்ன திதி, என்ன நட்சத்திரம்...இதற்கேற்ப அன்றையக் கடமைகளை எப்படி செய்து முடிப்பது என்ற சாஸ்திர ஞானம் எல்லாருக்கும் தேவைப்படுகிறது. படித்தவர்களும் நல்லநாள் பார்த்து திருமணம் செய்வது, கிரகப்பிரவேசம் செய்வது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள். பகவத்கீதையில் நம் அன்றாடக்கடமைகள் பற்றி சிறப்பாக சொல்லியுள்ளார் கிருஷ்ணர்.

Monday, October 22, 2012

வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

சரஸ்வதி பூஜை நடத்த நல்ல நேரம்: காலை 10.45 - 11.45 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம் புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும்.  படத்தின் முன் இலைவிரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். கற்பூரம் அல்லது நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், படிப்புச் செலவிற்கு பணஉதவி ஆகியவற்றை வசதிக்கு தக்கபடி கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் படத்தை எடுத்து விட வேண்டும். முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும்.

சரஸ்வதிபூஜை - அர்த்த்ம்: பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.

சாமுண்டிதேவி: நவராத்திரியில் ஒன்பதாவது நாள் தேவியானவள் சாமுண்டி மாதா என அழைக்கப்படுகிறாள். இந்த நாள் தேவிக்கு மிகவும் சிறப்பு தரும் நாளாகும். சப்தமாதர்களுள் ஒருத்திதான் சாமுண்டி. துர்க்கா தேவி மகிஷனை வதம் செய்யப் போகும் போது அவளை எதிர்த்து சண்டையிட மகிஷனின் அமைச்சர்களாகிய சண்டன், முண்டன் வந்தனர். துர்க்காதேவி தன் அம்சமான சாமுண்டி தேவியை அனுப்பி சண்டனையும் முண்டனையும் அழிக்குமாறு பணித்தாள். அசுரனின் அமைச்சர்கள் இருவரையும் வீழ்த்தியதால் அதாவது சண்ட முண்ட வதம் செய்ததால் சாமுண்டி என அவள் அழைக்கப்பட்டாள். சாமுண்டி தேவியை வழிபடுவது பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் வழக்கம். நாகை மாவட்டத்தில் பூவனுர் என்ற ஊரில் சாமுண்டிக்கு தனிச் சன்னதி உண்டு. சில சிவாலயங்களில் சப்தமாதர்கள் வரிசையில் சாமுண்டியின் திருவுருவம் இருக்கும். நான்கு கைகளும், மூன்று கண்களும், கோரைப் பற்களும், உக்ரமான திருமுகமும் உடைய நிலையில் இவள் உருவம் இருக்கும். புலித்தோலை ஆடையாக அணிந்திருப்பாள். கத்தி, சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியிருக்கும் இவளுடைய மற்றொரு கை அபய ஹஸ்தமாக இருக்கும். சிறிய மணிகளால் ஆகிய மாலை தாங்கியிருப்பாள். சாமுண்டி தேவியை வழிபடுவதால் ஏவல், பின்னி, சூன்யம் வைப்பு முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும். பகை, அர்த்தமற்ற அச்சம் விலகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நவராத்திரி ஒன்பதாம் ஆலயங்களில் உள்ள சப்தமாதர் வரிசையில் கொலுவிருக்கும் சாமுண்டி தேவியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் தேடி வரும்.

Sunday, October 21, 2012

கர்ப்பிணிகள் கோயில் கருவறையை வலம் வந்து வணங்கலாமா?

திடீர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் கர்ப்பிணியின் மனத்தை பாதிக்கும், மனமானது குழந்தையிடமும் தன்னைக் குறித்தும் மாறி மாறிச் செயல்படும் தருணத்தில், குழந்தையின் மனத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. தேரோட்டத்தைப் பார்க்கக் கூடாது என்பார்கள். அசைந்து ஆடிவரும் தேரைப் பார்க்கும்போது... விழுந்துவிடுமோ? சாயுமோ? என்பன போன்ற எண்ணங்கள் மனத்தில் தோன்றினால், பயம் மனத்தைப் பற்றிக்கொள்ளும். அல்லது, ஆச்சரியமான காட்சியில் அளவுக்கு அதிகமாக மனம் விரிவடையும்போது, விரும்பத்தகாத பாதிப்புக்கு இடமளித்துவிடும். அளவுக்கு மீறிய துயரத்தையும் அவள் மனம் சந்திக்கக்கூடாது. இந்தக் கண்ணோட்டத்திலேயே 8 மாதம் தாண்டிய கர்ப்பிணிகள் வெளி வட்டாரங்களில் நிகழும் உத்ஸவங்களைத் தவிர்ப்பது உண்டு. ஆறு மாதம் தாண்டிய கர்ப்பிணிகள் கோயிலுக்கு வந்து வலம் வருவதைத் தவிர்க்கலாம். அவளது சுகாதாரம், குழந்தையின் சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தவிர்க்க வேண்டும். நல்ல மன உறுதியும், அதிர்ச்சி, ஆச்சரியம், துயரம் ஆகியவற்றின் தாக்கத்தால் மாறுபடாத மனம் இருந்தாலும்கூட, வயிற்றில் இருக்கும் குழந்தையை மனத்தில் கொண்டு தவிர்க்கவேண்டும். ஆரம்பத்திலேயே குழந்தையை பாதிக்கும் விளைவுகளுக்கு மருத்துவம் பயனளிக்காது.

Friday, October 19, 2012

கீழே விழுந்தால் நமஸ்காரம் செய்தால் பிறவி இல்லை!

கோயிலுக்குள் வலம் வரும்போது, ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி மட்டுமே வணங்க வேண்டும். கீழே விழுந்து வணங்குவது கூடாது. கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும். கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். சிவனுக்குரிய ஸ்லோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இருவித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது.முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தீட்டு என்றால் என்ன என்பதை விளக்குங்கள்

பிறரைத் தீண்டக்கூடாத நாட்களை சுருக்கமாகத் தீட்டு என்பர். பங்காளிகள் வீட்டில் பிறப்பு, இறப்பு நிகழ்ந்தால் பத்துநாட்கள் தீட்டு உண்டு. பெண்களின் மாதவிடாய் காலமான மூன்றுநாள் தீட்டு. இக்காலங்களில் கோயிலுக்குச் செல்வது கூடாது. பிறரைத் தீண்டக்கூடாது. இதனால் லட்சுமி கடாட்சம் குன்றி வறுமை உண்டாகும். ஆயுள் குறையும் என சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், தற்காலத்தில் பலர் இதை ஏற்றுக் கொள்வதில்லை.

Thursday, October 18, 2012

கஷ்டமே அறியாத வாழ்விற்கு எந்தக் கடவுளைக் கும்பிடவேண்டும்?

இன்பமும் துன்பமும் பிரிக்க முடியாதவை. பகலும் இரவும் போல நம்மைத் தொடர்ந்து வருகின்றன. அதனால், கஷ்டத்தைத் தாங்கும் பரிபக்குவத்தை கொடுக்கும்படி, உங்கள் இஷ்ட தெய்வத்திடம் வேண்டலாம்.

Wednesday, October 17, 2012

தாகம் தீர்க்கும் தண்ணீர் தீர்த்தமாவது எப்போது தெரியுமா?

ஜப்பானில் ஒரு விஞ்ஞானி தண்ணீரின் குணத்தினை ஆராய விரும்பினார். ஒரே நீரை பத்து பாத்திரங்களில் ஊற்றினார். கோயில், மருத்துவமனை, குப்பைகள் நிறைந்த இடம், சிறை, மக்கள் வசிக்கும் வீடு என வெவ்வேறு விதமான இடங்களில் வைத்தார். அவருக்கு மிகவும் ஆச்சர்யமான முடிவுகள் கிடைத்தன. கோயில், நன்மக்கள் இருக்கும் இடங்களில் வைக்கப்பட்ட நீர் அப்படியே இருந்தது. எதிர்மறை எண்ணங்கள் உள்ள இடங்களில் வைக்கப்பட்டிருந்த அதே நீரில் புழுக்கள் உண்டாகி நாற்றம் வரத் தொடங்கி இருந்ததாம். நீர் மிகவும் சென்சிடிவ் வான குணமுடையது. அது இருக்கும் இடத்தில் உள்ள மக்களின் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களால் பாதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நீரைக் குடிப்பவர்களுக்கும் அதே போல நல்லதோ, கெட்டதோ ஏற்படுகிறது என்று அறிவித்தார். இதன் காரணமாகத்தான் நமது நாட்டிலும் நீர் புனிதமாகப் போற்றப்படுகிறது. வேத ஆத்மானம் புனிதே என்கிறது தைத்ரிய ஆரண்யகம். கும்பமேளாக்களும் அத்தனை விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. ஒரு பத்துபேரின் காரணமாக நீரின் தன்மை மாறும்போது, பக்திப் பரவசத்தோடு தெய்வ சிந்தனையோடு வரும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு நீராடும்போது அந்த நீர் எத்தனை சக்தி வாய்ந்ததாக மாறும்?

அதிலும் ஏராளமான சந்நியாசிகள், மடாதிபதிகள், புனிதர்கள் வந்து அச்சமயம் நீராடுகிறார்கள். மடாதிபதிகள் தங்கள் தங்கள் தொன்மையான மடத்தின் விக்ரகங்களைக் கொண்டு வந்து நீரினுள் வைத்துப் பூஜிப்பதும் அச்சமயத்தில் நடைபெறுகிறது. இத்தனை மகத்துவமும் ஒரு சேர நடந்து நீரின் தன்மை மிகச் சக்தி வாய்ந்ததாக மாறுவதால்தான் கும்பமேளாக்கள் இத்தனை போற்றப்படுகின்றன. அதற்குச் சிறப்பு சேர்ப்பது போல இயற்கையும் ஒத்துழைக்கின்றது. குறிப்பிட்ட கிரகங்கள் வானில் சேரும்போது அதன் நேர்மறைத் தாக்கமும், கதிர் வீச்சுக்களும் ஓரிடத்தில் கூடுகின்றன. அப்படித்தான் கும்பகோணத்தில், புஷ்கரில், கங்கையில் அந்தந்த இடத்தின் பூகோள அமைப்பிற்கு ஏற்ப கிரகசக்தி இறங்கும்போது கும்பமேளாக்கள் அமைக்கப்பட்டன. இமயமலையில் குடி கொண்டிருக்கும் மகான்களும், பாபாஜிகளும், ரிஷிகளும் தங்களின் தவவலிமையை, சக்தியை கங்கையின் மூலமாக கீழே நிலத்திற்குக் கருணையோடு அனுப்புகின்றனர். அதனாலேயே கங்கை இத்தனை புனித நதியாகக் கருதப்படுகிறது. இப்போது  நம் உடலில் 70 சதவீதம் நீர்தான் இருக்கிறது. நம்முடைய நேர்மறை எண்ணங்களோ, எதிர்மறை எண்ணங்களோ நம்முள் இருக்கும் நீரை எப்படி மாற்றும் என யோசித்துப் பாருங்கள். நம்முள் ஓடும் நீர் கங்கையாகவோ, கழிவு நீராகவோ இருப்பது நம் சிந்தனையில் தான் இருக்கிறது. நல்ல எண்ணங்கள் நல்ல நீராக ஆக்கி, ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். நீர் மாறினால் பேரும் மாறி விடுகிறது!

இங்கேயும் ஒரு கங்கை: திரிவேணி சங்கமத்தில் பச்சையாக கங்கையும், கருமையாக யமுனையும் ஓடி வந்து இரண்டும் கலந்து பின்னர் பழுப்பு வண்ணமாக கங்கை எனும் பெயருடனே தொடர்ந்து ஓடுகிறது. அதன் பின்னர் யமுனை எனச் சொல்வதில்லை. இந்த சங்கமத்தில் கங்கை தன் நிறத்தை இழக்கிறாள். யமுனை தன் பெயரை இழக்கிறாள். இதுதான் புனிதர்கள் ஒருவருக்கொருவர் தன்னையே கொடுத்து தியாகம் செய்யும் பண்பு எனலாம். இதையே ஒரு மஹா வாக்கியமாக வடமொழியில் த்யாகே நைகேன அம்ரு தத்வாய மான ஸஹா என்று உரக்கச் சொல்லப்படுகிறது. மேலும் உயர்ந்த ப்ரம்ம தத்துவத்தை ஒரு ஜீவன் அடைய வேண்டுமென்பதைக் குறிக்கும்.

நாம ரூப குண தோஷ வர்ஜிதம்...
ப்ரம்ம தத்வமஸி பாவ ஆத்மனி

என்பதும் ஒரு வேத மஹா வாக்யமாகும். நாம் தினமும் குளிக்கும்பொழுது கூட நாம் வைத்திருக்கும் பாத்திரத்தில் உள்ள நீர் மீது நம்முடைய உள்ளங்கையை வைத்து -

கங்கேச யமுனேசைவ கோதாவரி
சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி
ஜலைஸ்மின் சந்நிதிங்குரு

என்று 11 முறை ஜெபித்து குளித்தோமானால் நம் குழாய்த் தண்ணீர் கூட கங்கையை போல் புனித நீராக மாறி நமக்கு பாஸிடிவ் எனர்ஜியைக் கொடுக்கும்.

Tuesday, October 16, 2012

கணவன் மனைவி ஒற்றுமை வளர எந்த விரதம் இருக்கவேண்டும்?

சோமவார(திங்கள்கிழமை) விரதம் இருந்து வாருங்கள். பார்வதியை சிவன் திருமணம் செய்து கொண்டது சோமவாரத்தில் தான். விரதம் இருப்பது மட்டும் முக்கியமில்லை. நீங்கள் எதற்காக விரதம் இருக்கிறீர்கள் என்று மனைவி புரிந்து கொள்ளவேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டையிடாமல் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் அன்பு அகலாமல் வாழ்வதே ஒரு விரதம் தான்.

நவராத்திரி இரண்டாம் நாள்: வழிபடும் முறை!

அம்பிகையை நாளை(அக்.17ல்) மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை "கவுமாரி என்றும், "குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள் இவள். நாளை மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள். சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். அவருடைய நெற்றிக்கண்களில் ஆறுதீப்பொறிகள் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறுகுழந்தைகளாக மாறியது. கார்த்திகைப்பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி "கந்தன் என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி வேல் ஆக்கினாள். "வேல் என்றால் "வெற்றி . அந்த சக்திவேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத் திகழும் வெற்றிவேலை, அன் னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி வந்து சேரும்.
நாளைய நைவேத்யம்: தயிர்சாதம்
தூவவேண்டிய மலர்: முல்லை
பாட வேண்டிய பாடல்:
இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

Sunday, October 14, 2012

சுவாமி எதிரே நிற்காதீர்!

கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று சிலர் வழிபடுவதுண்டு. சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி என்கிறார் காஞ்சிப்பெரியவர். கருவறையில் சுவாமியின் இருபுறமும் நின்று தான் வணங்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். அப்போது தான் கடவுளின் கடைக்கண் படும். கடைக்கண்பார்வைக்கு தான் குளிர்ச்சியும், கருணையும் உண்டு. அபிராமியன்னையின் கடைக்கண்பார்வை நம் மீது பட்டால் கல்வி, செல்வவளம், ஒருநாளும் தளராத மனம், தெய்வீக வடிவம், வஞ்சமில்லாத நண்பர்கள் ஆகிய எல்லா நன்மைகளும் உண்டாகும் என அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார்.

Friday, October 12, 2012

துளசி வழிபாடு

ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா
வெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே
செவ்வாய்க் கிழமை செழிக்க வந்த செந்திருவே
தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன்
பச்சைப் பசுமை உள்ள துளஸி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே
ஹரியுடைய தேவி அழகீ நமஸ்தே
அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே
வனமாலை என்னும் மருவே நமஸ்தே
வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே
அன்புடனே நல்ல அருந்துளசி கொண்டுவந்து
மண்ணில் மேல்நட்டு மகிழ்ந்து நல்ல நீருற்றி
முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு
செங்காவிச் சுற்றமிட்டுத் திருவிளக்கும் ஏற்றிவைத்து
பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து
புஷ்பங்களைச் சொரிந்து பூஜித்த பேர்களுக்கு
என்ன பலனென்று ஹ்ருஷீகேசர்தான் கேட்க
மங்களமான துளசி மகிழ்ந்துரைப்பாள்
மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்
தீவினையைப் போக்கிச் சிறந்தபலன் நான் அளிப்பேன்
அரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்
தரித்திரத்தை நீக்கிச் செல்வத்தை நான் கொடுப்பேன்
புத்திரன் இல்லாதவர்க்குப் புத்திரபாக்கியம் அளிப்பேன்
கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்
முழுக்ஷúக்கள் பூஜை செய்யாதல் மோக்ஷபதம் கொடுப்பேன்
கோடீ காராம்பசுவைக் கன்றுடனே கொண்டு வந்து
கொம்புக்குப் பொன்னமைத்துக்குளம்புக்கு வெள்ளிகட்டி
கங்கைக் கரைதனிலே கிரஹண புண்யகாலத்தில்
வாலுருவி அந்தணர்க்கு மகாதானம் செய்த பலன்
நான் அளிப்பேன் சத்யம் என்றுநாயகியுமே சொல்லலுமே
அப்படியேயாக என்று திருமால் அறிக்கையிட்டார்
இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள்
அற்புதமாய் வாழ்ந்திடுவார் பரதேவி தன்னருளால்.

Thursday, October 11, 2012

இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?

உணவும், உடையும், இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய். வங்கியில் உனக்குப் பணமிருந்தால் உலகின் முதல் 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன். நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இறந்த பலரைவிட நீ பாக்கியவான். போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு. கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ. உன் பெற்றோர் பிரியாமலும் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள். உன்னால் தலைநிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன். இந்தச் செய்தியைப் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 200 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். எனவே இறைவன் நமக்கு அளித்த ஆசிகளை நினைவு கூர்ந்து முன்னேற வேண்டும் சோர்வடைய கூடாது.

Saturday, October 6, 2012

திருமணத்தடை நீங்க வழி

வெள்ளிக்கிழமை சூரியோதய வேளையில் நீராடி, துளசிச் செடிக்கு தண்ணீர் விட்டு மூன்று முறை வலம் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யுங்கள். தொடர்ந்து 12 வாரம் இதனைச் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வளர்பிறையில் இவ்வழிபாட்டைத் தொடங்குங்கள்.

Thursday, October 4, 2012

கந்தர் அனுபூதி - கடவுளைக் காண,கல்வியில் மெச்ச,குடிகளை தன்வசமாக்க,பெண்ணாசை ஒழிக்க,கற்பழியாதிருக்க

காப்பு

கடவுளைக் காண,கல்வியில் மெச்ச,குடிகளை தன்வசமாக்க,பெண்ணாசை ஒழிக்க,கற்பழியாதிருக்க

விபூதி தியானம்

நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்தருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற்புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

நூல்

1.  மதயானையை வெல்ல

ஆடும் பரிவேல் அணி சேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே.

2. வணங்காரை தண்டிக்க

உல்லாச நிராகுலயோ கவிதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூபதியே.

3. கல்வியில் மெச்ச

வானோ புனல் பார்கனன் மாருதமோ
ஞானோதயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனைஆண்ட இடந்
தானோ பொருளாவது சண்முகனே.

4. துறவு பெற

வளைபட்ட கைமாதொடு மக்களெனும்
தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ
கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும்
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.

5. மாயை ஒழிக்க

மகமாயை களைந்திட வல்லபிரான்
முகம்ஆ றும் மொழிந்தும் ஒழிந்திலனே
அகம் மாடை மடந்தையர் என் று அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.

6. மாதரைத் தழுவ

திணியா னமனோ சிலைமீ துஉனதாள்
அணியார் அரவிந் தம்அரும் புமதோ
பணியா எனவள் ளிபதம் பணியும்
தணியா அதிமோ கதயா பரனே.

7. தீராப்பணி தீர

கெடுவாய் மனனே கதிகேள் கரவாது
இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
கடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே.

8. குடிகளை தன்வசமாக்க

அமரும் பதிகேள் அகம்ஆம் எனும் இப்
பிமரம் கெடமெய்ப்பொருள் பேசியஆ
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொருதான வநாசகனே.

9. பெண்ணாசை ஒழிக்க

மட்டூர் குழல் மங்கையர்மை யல்வலைப்
பட்டு ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்
தட்டூடறவேல் சைலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.

10. நமனை விலக்க

கார்மா மிசைக்கா லன்வரிற் கலபத்
தேர்மா மிசைவந் துஎதிரப் படுவாய்
தார்மார் ப வலா ரிதலா ரிஎனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.

11. தணிகை சேர்க்க

கூகா எனஎன் கிளைகூ டியழப்
போகா வகை மெய்ப்பொருள் பேசிய வா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகாசுரலோக சிகாமணியே.

12. களவு வெல்ல

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இருசொல் அறஎன்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

13. இருள் வழி நடக்க

முருகன் தனிவேல் முனிநங்குரு என்று
அருள்கொண்டு அறியார் அறியுந்தரமோ
<உருஅன்று அருஅன்று உளதுஅன்று இலதுஅன்று
இருள்அன்று ஒளிஅன்று எனநின்றதுவே.

14. பாரி தரிசனம் செய்ய

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழிநாசியொடும் செவிஆம்
ஐவாய் வழிசெல்லும் அவா வினையே.

15. அஷ்டாவதானம் செய்ய

முருகன் குமரன் குகன்என்று மொழிந்து
உருகுஞ்செய் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண் குணபஞ்சரனே.

16. பேராசை விலக்க

பேராசை எனும் பிணியிற் பிணிபட்டு
ஓரா வினையேன் <உழலத் தகுமோ
வீரா முதுசூர் படவேல் எறியும்
சூரா சுரலோக துரந்தரனே.

17. தன்னடத்தை மேன்மையாக்க

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாம் ஏன் நடவீர் நடவீர் இனியே.

18. கற்பழியாதிருக்க

உதியா மரியா வுணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதிகா வலசூர பயங்கரனே.

19. இல்வாழ்க்கை நீக்க

வடிவுந் தனமும் மனமும் குணமும்
குடியுங் குலமும் குடிபோகிய ஆ
அடிஅந்தம் இலா அயில்வேல் அரசே
மிடியென்றொரு பாவிவெளிப் படினே.

20. அனுக்கிரகம் பெற

அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியஆ
விரிதாரண விக்ரமவேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே.

21. திருவடி வணங்க

கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தரஎன்று இசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூர விபாடணனே.

22. தவம் பெற

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியஆ
பாளைக் குழல் வள்ளிபதம் பணியும்
வேளைச் சுரபூ பதிமே ருவையே.

23. சலிகை சொல்ல

அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடி விக்ரமவேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங்குண பூதரனே.

24. மாதர் வலையில் அகப்படாதிருக்க

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள்சேரவும் எண்ணுமதோ
சூர்வேரொடு குன்று தொலைத்த நெடும்
போர்வேல புரந்தர பூபதியே.

25. மகாவினை ஒழிக்க

மெய்யே எனவெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே நியசே வகனே.

26. யாருமற்ற பேருக்கு ஆதாரமாக

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒருசற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத மனோ
தீதா சுரலோக சிகாமணியே.

27. பாக்கியத்தை விதிவழி அனுபவிக்க

மின்னே நிகர்வாழ்வை விரும்பியயான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயில் ஏறியவானவனே.

28. தான் அவனாக

ஆனா அமுதே அயில்வே அரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றதுதற் பரமே.

29. கடவுள் முன் கோபம் மாற்ற

இல்லே எனும் மாயையில் இட்டனைநீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லே புரிபன்னிருவா குவில்என்
சொல்லே புனையுஞ் சுடர் வேலவனே.

30. வழக்கு பேச

செவ்வான் உருவின் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

31. கடவுள் முன்னிலையில் ஞானம் பெற

பாழ்வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னைவிதித் தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனிநீ மயில்வாகனனே.

32. கொலை மறக்க

கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ
கொலையே புரிவேடர் குலப் பிடிதோய்
மலையே மலைகூ றிடுவா கையனே.

33. வியாகூலம் ஒழிக்க

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்றுவிடப் பெறுவேன்
மந்தாகினி தந்தவரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே.

34. பெண்களைத் தாயாக நினைக்க

சிங்கார மடந்தையர் தீ நெறிபோய்
மங்காமல் எனக்குவரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்கா நதிபா லக்ருபா கரனே.

35. சரீர வாஞ்சை ஒழிக்க

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதி காணமலர்க் கழல்என்று அருள்வாய்
மதிவாள் நுதல்வள்ளியை அல்லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே,

36. கடவுளைக் காண

நாதா குமரா நமஎன்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின்பத சேகரனே.

37. தனது அகந்தையை ஒழிக்க

கிரிவாய் விடுவிக்ரமவேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம்மே வலையே
புரிவாய் மனனே பொறைஆம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.

38. பிசாசம் ஒழிக்க

ஆதாளியை ஒன்றறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாளகிரா தகுலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.

39. ஜனனம் எட்டாதிருக்க

மாவேழ் சனனம் கெட மாயை விடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங்கரதே சிகனே.

40. மாயை தெளிய

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசும்
தினையோடு இதணோடு திரிந்தவனே.

41. நித்திய தேகம் பெற

சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
சாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே.

42. நின்ற நிலை நிற்க

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த் திடலும்
செறிவற்று உலகோடு உரைசிந்தையும்அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே.

43. ஆசானாகி அனுக்கிரகிக்க

தூசாம் அணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதுஅன்பு அருளால்
ஆசா நிகளம் துகள் ஆயினபின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.

44. குரு மந்திரம் பெற

சாடுந் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர்மா முடிவே தமும்வெம்
காடும் புனமும் கமழுங் கழலே.

45. கல்வியிற் சம்பாவிக்க

கரவாகிய கல்வியுளார் கடைசென்று
இரவா வகை மெய்பொருள் ஈ குவையோ
குரவா குமரா குலிசாயுதகுஞ்
சரவா சிவயோ கதயா பரனே.

46. மனவருத்தம் தீர

எந்தாயும் எனக்கருள் தந்தையும்நீ
சிந்தாகும் ஆனவை தீர்த்தெனைஆள்
கந்தா கதிர்வே லவனே உமையாள்
மைந்தா குமரா மறைநாயகனே.

47. ஆனந்த நடனம் காண

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறும்ஆறு உளதோ
சீறா வருசூர் சிதைவித்து இமையோர்
கூறுஆ உலகம் குளிர்வித்தவனே.

48. தற்சொரூபம் காண

அறிவுஒன்று அறநின்று அறிவார் அறிவில்
பிறவுஒன்று அறநின்ற பிரான் அலையோ
செறிவுஒன்று அறவந்து இருளே சிதைய
வெறிவென்றவரோடு உறும் வேலவனே.

49. தன்னை அறிந்து கொள்ள

தன்னந்தனி நின்றது தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னம் களையும் க்ருபைசூழ் சுடரே.

50. அவா அறுக்க

மதிகெட் டுஅறவாடி மயங்கி அறக்
கதிகெட் டுஅவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞானசுகாதிப அத்
திதிபுத்திரர் வீறு அடு சேவகனே.

51. நினைத்தபடி தரிசனம் கொடுக்க

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

வேலும் மயிலும் துணை!

Wednesday, October 3, 2012

இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்?

ஒரு ஆசிரமத்தில் சீடன் ஒருவன் மரக்கன்று ஒன்றை நட்டுவிட்டு, ஆண்டவனே இம்மரக்கன்று சீக்கிரம் வளரவேண்டும்... எனவே நிறைய மழை பெய்யட்டும் என்று வேண்டினான். அவ்வாறே மழை அதிகம் பெய்தது. ஊறிப் போன மரக்கன்று அழுகிவிடுமோ என பயந்தான் சீடன். இறைவா, மழையை நிறுத்தி நல்ல வெயில் அடிக்கும்படி செய்..! என்று வேண்டினான். அப்படியே வெயில் அடித்ததில் செடி வாட ஆரம்பித்தது. பதறிப்போன சீடன், வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம், பனி பொழியட்டும்! என்று பிரார்த்தித்தான். தட்பவெப்பம் அடிக்கடி மாறியதில் தாக்குப் பிடிக்காமல் செடி பட்டுப் போனது. இறைவனுக்கு கருணையே இல்லை என குருவிடம் முறையிட்டான் சீடன். எல்லாம் கேட்டபின் குரு சொன்னார், தன் படைப்பில் எதற்கு எப்போது என்ன தேவை என்பது இறைவனுக்குத் தெரியும். சுயநலத்திற்காக அதனை மாற்ற நினைத்து வேண்டினால் இப்படித்தான் ஆகும்! உணர்ந்த சீடன், மற்றொரு மரக்கன்றை நட்டுவிட்டு, இறைவா, இதை நீயே பார்த்துக் கொள்! என வேண்ட ஆரம்பித்தான். எனவே சுயநலம் இன்றி இறைவனை வழிபடுவதே சிறப்பைத்தரும்.

Tuesday, October 2, 2012

வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை தெரியுமா?

கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி, தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம், தனித்த காளியும், கால கண்டன் படமும் ஆகாது, சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது, நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது, சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது, ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும் கோபவேசமாக தவ நிலையிலுள்ளதும், தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது.