Sunday, October 13, 2013

மது போதையா! காதல் போதையா! படியுங்க! நிம்மதி கிடைக்கும்!

என் கணவர் ஒரு குடிகாரர், சூதாடி, கெட்ட பெண்களுடன் சகவாசம், என் மகனும் குடிக்கிறான், தொழிலில், படிப்பில் கவனம் இல்லை, மனைவியை அடிக்கிறான். குழந்தைகள் மீது பாசமில்லை... இப்படி ஒரு புறம். சில வீடுகளில் பெண்கள் வழிதவறி காதல்... அது இதுவென மயக்கத்தில் அலைகிறார்கள். இப்படி இக்காலத்தில் பலரும் நிம்மதியின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு இதோ ஒரு நல்ல செய்தி. ஒரு கணவன் பிற பெண்களை விரும்புபவன், மனைவியும் அதே போல...அழகான ஆண்களை விரும்புவாள். தன் நடத்தைக்கு கணவன் தடையாக இருப்பான் எனக்கருதிய மனைவி அவனைக் கொன்று விட்டு தகாத செயல்களைத் தடையின்றி நடத்தினாள். ஒரு கட்டத்தில் அவளும் இறந்தாள். மறுபிறப்பில் கணவன் பருந்தாகவும், மனைவி கிளியாகவும் பிறந்தனர். ஒருமுறை கிளியைப் பார்த்தது பருந்து. அப்போது முற்பிறவி நினைவுக்கு வர, தன்னைக் கொன்ற கிளியைக் கடித்து குதறியது. கிளி, அங்கு தலைகீழாக கவிழ்ந்து கிடந்த ஒரு மண்டை ஓட்டில் இருந்த நீரில் போய் விழுந்து இறந்தது. அதே சமயம், ஒரு வேடன் பருந்தின் மீது அம்பு எய்ய, அதுவும் அதே மண்டை ஓட்டில் விழ, அதிலிருந்த தண்ணீர் அதன் மேல் தெறித்தது. அந்த ஜீவன்கள் எமதர்மனால் வைகுண்டம் அனுப்பப்பட்டனர். தாங்கள் தகாத செயல் செய்தும், தங்களை வைகுண்டம் அனுப்பக் காரணம் என்ன என்று எமனிடம் அந்த ஜீவன்கள் கேட்டன. குழந்தைகளே! நீங்கள் விழுந்தது சாதாரண மண்டை ஓடு அல்ல. வடர் என்ற ரிஷியினுடையது. அவர் கண்ணன் சொன்ன கீதை ஸ்லோகங்களைத் தவறாமல் படிப்பவர். அந்த ஸ்லோகங்களில் ஒன்றைச் சொன்னால் கூட, பாவச்செயல் செய்வோரும் திருந்தி விடுவார்கள். அது மட்டுமல்ல, கெட்ட வழக்கங்களும் அவர்களை அண்டாது, என்றார் எமதர்மன். அந்த ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது தான். தவறாமல் படியுங்கள். உங்கள் வீட்டிற்கும் விமோசனம் கிடைக்கும். உடம்பையே வெற்றி கொள்வோன் மனத்தாலும் துறவியாகி திடமுற எதையும் செய்யாது அமைகுவன் பிறரைச் செய்ய விட அவன் முயலான் ஒன்பான் வாசலை உடைய தேகப்  படலம் தன்னில் நல்ல சுகமுடன் வாழுவானே!

Saturday, October 12, 2013

திருமணத் தடை அகல...

தர்மபுரி காமாட்சி மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயிலிலுள்ள துர்க்கையை ராஜதுர்க்கை என்றும் அழைக்கிறார்கள். அவளுக்கு சாற்றிய மாலையை திருமணத்தடை உள்ளவர்களுக்கு அணிவிப்பார்கள். அவர்கள் அந்த மாலையுடன் மூன்று முறை கோயிலை வலம் வந்த பிறகு, வடகிழக்கு மூலையில் நாக கன்னியர் அருகே அம்மாலையை ஒன்பது துண்டுகளாக்கிப் போட்டுவிடுவார்கள். பிறகு ராஜதுர்க்கையை மீண்டும் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். இதனால் விரைவில் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்!

சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?


மற்ற தேவியர் வண்ண ஆடை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் உண்டு. சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே அடக்கம் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் சபாரி உடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைக் கண்டதும் அவையே கைகூப்புகிறது. மரியாதை செலுத்துகிறது. கற்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான அந்த தேவியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும், மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.

சரஸ்வதி அணிந்துள்ள புடவையின் நிறம் வெள்ளை. வானவில்லின் ஏழு வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது, தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்துஇருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது. வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும். இதனால் தான், சரஸ்வதிதேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள்.
லட்சுமி, பார்வதி தேவியர் பல்வேறு வண்ணங்களில் புடவை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெண்ணிற ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் ஏன் தெரியுமா?சரஸ்வதி ஞானத்தின் சொரூபம். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே பணிவும் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் படாடோபமாய் ஆடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைப் பார்த்ததும் இருப்பவர் அனைவரும் வரவேற்று மரியாதை செய்வர். கல்வி கற்றவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் என்பதை உணர்த்தவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள்.

Saturday, October 5, 2013

கொலுமேடைக்கு பூஜை செய்வது எப்படி?



நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.

எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?

கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர். ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும்
என்பதைக் குறிக்கிறது.

இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று, சிலந்தி வலை, களிமண்ணில் செய்த எறும்பு, வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பு போல் சுறுசுறுப்பு, கரையான் புற்றையும், சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.

நான்காம் படியில் நண்டு,வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.

ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு, பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.

ஆறாம் படியில்
மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.

ஏழாம் படியில்
மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது . வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.

எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள்,பெரியாழ்வார்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.

ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும். தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?

நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும் பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் இந்தப் பண்டிகை.. முழுக்க முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை. மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன், கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன் குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள். அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள் வீட்டுக்கு வருவதாக எண்ணி மகிழ்வார்கள்.

ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாட வேண்டும்!

ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரிஎன்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.

அம்மன் விரும்பும் நவராத்திரி!

நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம்  சக்தியாலும், வறுமைசெல்வத்தினாலும், அறியாமைஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.

நம் வாழ்வின் இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை சொல்லித் தருகிறது நவராத்திரி. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.

நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம
தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ.

நவராத்திரியில் எவ்வாறு அலங்காரம் செய்ய வேண்டும்?

நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள். நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். மூன்றாவது நாளுக்கு உரியவாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர்


. ஆறாவது நாளுக்குரிய தேவிவடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம்.பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது ஐதிகம்.

நவராத்திரி வரலாறு! - நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

Thursday, October 3, 2013

புரட்டாசி சனியன்று எவ்வாறு வழிபட வேண்டும்?

புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம்.இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம். ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.

பணமில்லாமல் தங்கம்: கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு. திரவுபதியின் துன்பத்தைப் போக்கியது கோவிந்தா என்னும் நாமம். முதலையிடம் சிக்கிய கஜேந்திர யானையின் துன்பம் தீர்த்தது ஆதிமூலம் என்ற திருநாமம். கலியுகத்தில், இவ்வாறான நாமஜெபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடைய முடியும். கட்டித்தங்கத்தை சுரங்கத்தில் வெட்டி எடுத்தாலும் அப்படியே பயன்படுவதில்லை. கலைநுட்பம் மிக்க கலைஞரின் கையில் பட்டு ஆபரணமாக மாறினால் தான், அதன் மதிப்பும் மெருகும் கூடுகிறது. ஊரும், பேருமில்லாமல் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவரே நமக்காக வடிவம் தாங்கி ராமர், கிருஷ்ணர் என்ற திருநாமம் கொண்டு அவதரிக்கிறார். கட்டித்தங்கம் போல கடவுள், ஆபரணத்தங்கம் போல அவரின் திருநாமம் என்று இதனைச் சொல்வதுண்டு. ஆபரணத்தங்கமான கடவுளின் திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி, யாரும் எளிதாகச் சேமிக்கலாம்.

கீழே போயிட்டு வந்தாச்சா: திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே புக்செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு வந்து விடுகிறார்கள். ஆனால், முதலில் நாம் செல்ல வேண்டியது திருச்சானூரிலுள்ள பத்மாவதி தாயார் கோயிலுக்குத் தான். இதை பெருமாளின் திருக்கரமே நமக்கு எடுத்துக்காட்டுகிறது என்கிறார்கள் மகான்கள். அவரது ஒரு கரம் கீழ்நோக்கி இருக்கிறது. என் முகத்தைப் பார்க்கும் முன் திருவடியைப் பார். திருவடியில் சரணாகதி அடை என்று சொல்வது போல் உள்ளதாக சிலர் இந்தக் கோலத்தைச் சொல்கிறார்கள். இன்னொரு சாராரோ, நீ கீழே இருக்கும் லட்சுமியாகிய பத்மாவதியை பார்த்து விட்டு வந்துவிட்டாயா? அவள் சிபாரிசு செய்தால் தான், என் அருள் உனக்கு கிடைக்கும், என்று சொல்வது போல் உள்ளதாக விளக்கம் சொல்கிறார்கள். பொதுவாக, பெருமாள் கோயில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம். பின்பே பெருமாளைச் சேவிக்க செல்ல வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அட கலிகாலமே! எப்போது விடை பெறுவாய்?
ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான். இவர் காஞ்சிபுரம் அருகிலுள்ள கூரம் என்ற இடத்தில் வசித்தவர். காஞ்சிபுரம் தேவராஜப்பெருமாள் மீது இவருக்கு பக்தி அதிகம். இரவில், அந்தக் கோயில் சாத்தப்படும் போது டமால் என சத்தம் கேட்கும். அந்த சத்தம் கேட்ட பிறகு தான், கூரத்தாழ்வார் தன் வீட்டுக்கதவைச் சாத்துவார். அதாவது, ஒரு ஊரில் குடியிருப்பவர்கள் அவ்வூர் கோயில் நடை திறந்திருக்கும் வரை, தங்கள் வீட்டுக் கதவுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆனால், இப்போது திருட்டு மற்றும் சமூக விரோதச் செயல்களின் காரணமாக, மாலை 6 மணிக்கே கூட கதவைச் சாத்தி விட்டு தான் விளக்கேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். கலியின் உச்ச ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. புரட்டாசி சனியன்று பெருமாள் கோயிலுக்குச் செல்பவர்கள், சமூக விரோதிகளின் கொட்டத்துக்கு முடிவு கட்டி தர்மத்தை நிலை நிறுத்த வேண்டுமென பெருமாளிடம் வேண்டி வருவோம்.

நாராயணன் நாரதர்: நாராயணன், நாரதர் என்ற பெயர்களில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு. பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான். நாரம் என்ற சொல்லுக்கு பிரும்ம ஞானம் என்ற பொருளும் உண்டு. இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது. நாராயணன் என்பதை நாரம்+ அயணன் என பிரிக்கலாம். நாரம் என்றால் தீர்த்தம். அயணன் என்றால் படுக்கை உடை யவன். பாற்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்குப் பொருள். நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர். நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார். இவர் தோன்றுவதற்கு முன், இந்த உலகில் தண்ணீர் என்பதே குறைவாக இருந்ததாம். அவரது பிறப்புக்கு பின்தான் தண்ணீர் அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நாரதர் என்ற பெயர் பெற்றார் என்பர்.
8+12+6=26: ஒன்றாம் வகுப்பு குழந்தைக்குரியது போல இருக்கிறதே இந்தக் கணக்கு என்று நீங்கள் நினைத்தால் அது தப்புக்கணக்கு! இது பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனுக்குரிய பெரிய கணக்கு. விஷ்ணு காயத்ரியில் நாராயண மந்திரம், வாசுதேவ மந்திரம், விஷ்ணு மந்திரம் ஆகிய மூன்று மந்திரங்கள் உள்ளன. இதில் நாராயண மந்திரம் என்பது ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரம் (ஓம் என்பது ஒரே எழுத்து). வாசுதேவ மந்திரத்தில் 12 எழுத்துக்கள் உள்ளன. ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்பது அந்த மந்திரம். விஷ்ணு மந்திரம் என்பது ஓம் விஷ்ணவே நம என்ற ஆறெழுத்து உடையது. ஆக, இவற்றின் கூட்டுத்தொகை 26.  விஷ்ணு காயத்ரியில் இவை எல்லாம் சேர்த்து 26 எழுத்துக்கள் உள்ளன.
நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் என்பது இந்த மந்திரம்.  (சமஸ்கிருதத்தில் எழுத்துக்களை தனித்தனியாக எண்ணக்கூடாது. சில சேர்ந்து வரும்). இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. புரட்டாசி சனியன்று இந்த எளிய மந்திரங்களை மனச்சுத்தத்துடன் சொன்னால் பெருமாளின் பூரண அருள் கிடைக்கும்.

ஏழுமலையான் மீது 32000 கீர்த்தனை பாடியவர்: ராமானுஜர் திருமலையின் புனிதம் கருதி காலால் நடக்க விரும்பாமல் தவழ்ந்தே மலையேறினார். வழியில் அவருடைய முழங்கால் முறிந்தது. அந்த இடமே முழங்கால் முறிச்சான் என்று அழைக்கப்படுகிறது. இதனை மோக்காலு மிட்டா என்று சொல்வர். இந்த இடத்தில் ராமானுஜர் கோயில் உள்ளது. மோக்காலு மிட்டாவைக் கடந்தால் ஏழுமலையில் ஒன்றான சேஷாத்ரியின் சிகரத்தை அடையலாம். சிறுவனாக இருந்தபோது, அன்னமய்யா என்னும் பக்தர் மலையேறி வந்த களைப்பில் மோக்காலுமிட்டாவில் மயங்கி விழுந்தார். அவரின் பசிதாகம் போக்க பத்மாவதி தாயாரே, பாமரப் பெண்ணாக வந்து மயக்கம் தெளிய நீரும், உணவும் கொடுத்ததாகச் சொல்வர். இவர் திருப்பதி ஏழுமலையான் மீது 32,000 கீர்த்தனைகளைப் பாடியிருக்கிறார்.

ஹில் வியூ தரிசனம்: திருப்பதியை அடுத்துள்ள சந்திரகிரியில் இருந்து ஒரு நடைபாதை திருமலைக்குச் செல்கிறது. திருவிழாக்காலங்களில் யானைகள் இந்த வழியாகச் செல்லும். இப்பாதை வழியாக திருமலையில் ஏறியவுடன், இடது புறத்தில் ஹில் வியூ செல்லும் பாதை மலை முகட்டிற்குச் செல்கிறது. அங்கிருந்து பார்த்தால் திருமலையின் அழகுகாட்சி நம் கண்முன் தெரியும்
.
மனைவியைப் பிரிந்தவர்களே! முதலில் இதைப் படியுங்க!

திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் மற்றும் இதர விழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் எழுந்தருளுவார். அவரை மலையப்பன் என்று அழைப்பர். துணைவியருடன் பவனி வரும் அவர்ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது தான் இல்லறம். மனைவியைப் பிரிந்து விட்டால் ஒருவனுக்கு மதிப்பு இல்லை என்று பக்தர்களுக்கு ஒரு செய்தி சொல்கிறார். திருமால் மீது சில காரணங்களால் வருத்தம் கொண்ட லட்சுமி, பூலோகம் வந்தாள். ஆகாசராஜனின் என்பவனின் மகளாகப் பிறந்தாள். பத்மாவதி என்ற பெயர் கொண்டாள். லட்சுமியை பிரிந்ததால் திருமால் செல்வமெல்லாம் இழந்தார். அவளைத் தேடி சீனிவாசன் என்ற பெயருடன் பூலோகம் வந்தார். மிகுந்த சிரமத்தின் பேரில் பத்மாவதியை மணந்தார், அதன்பின் அவருக்கு எல்லா வளங்களும் வந்து சேர்ந்தன. மனைவியால் தான், ஒரு கணவனுக்கு மதிப்பு என்பதை இந்த சம்பவத்தின் மூலம் உலகுக்கு உணர்த்தினார்

குளத்தில் தயாரான கல்யாண சமையல் சாதம்: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருமலையில் 64 புண்ணியதீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தப்பகுதிகளில் தான் சீனிவாச பத்மாவதி கல்யாணத்தில் பங்கேற்ற விருந்தினருக்குத் தேவையான உணவு வகைகள் தயாரானதாக திருமலை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோயில் அருகில்உள்ள சுவாமி புஷ்கரணி தீர்த்தத்தில் சோறும், பாபவிநாசத்தில் சாம்பாரும், ஆகாசகங்கையில் பாயாசமும், தும்புரு தீர்த்தங்களில் சித்ரா அன்னங்களும், குமார தீர்த்தத்தில் அவியல், பொரியல் வகைகளும் தயாராயின. இவை தவிர, கபில, பாண்டவ, பல்குண, சக்கர, பத்மஸரோவம் தீர்த்தங்களிலும் பல்வகை உணவுகள் தயார் செய்யப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.

பிள்ளைக்காக ஒருவேளை மட்டுமே சாப்பிடும் அம்மா!

திருப்பதி சீனிவாசனை வளர்த்தவள் வகுளாதேவி. இவள், முற்பிறவியில் யசோதையாக இருந்து கண்ணனை வளர்க்கும் பாக்கியம் பெற்றவள். துவாபரயுகத்தில் அஷ்டமகிஷிகள் என்னும் எட்டுப்பெண்களைக் கண்ணன் திருமணம் செய்தார். ஆனால், யசோதைக்கு ஒரு திருமணத்தையும் காணும் பேறு பெறவில்லை. அக்குறையைப் போக்க கலியுகத்தில் வகுளாதேவியாகப் பிறந்தாள் யசோதை. திருப்பதியில் நடந்த சீனிவாசக் கல்யாணத்தை கண்டுகளித்தாள். வகுளாதேவி சந்நிதி, திருப்பதி கோயில் மடப்பள்ளியில் உள்ளது. இவளுக்கு மடப்பள்ளி நாச்சியார் என்ற பெயரும் உண்டு. இவளது மேற்பார்வையில் ஏழுமலையானுக்கு உணவு தயாராவதாக ஐதீகம். உணவை முடித்து மகன் ஓய்வுக்குச் சென்ற பின், இரவில் மட்டும் இவளுக்கு நைவேத்யம் நடக்கும். பிள்ளை சாப்பிடுவதற்காக, சமையல் பணியை சாப்பிடாமல் கூட மேற்பார்வை செய்வதாக ஐதீகம்.

ஸ்ரீபாத மண்டபம்: திருமலைநம்பி, ஏழுமலையானுக்கு தினமும் அடிவாரத்தில் இருந்து தீர்த்த நீரை எடுத்துச் செல்வது வழக்கம். ஒருநாள், அடிவாரம் வந்த அவர் ராமானுஜருடன், ராமாயணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை. நண்பகல் வந்துவிட்டது. திருமலைநம்பி வருத்தத்துடன், உச்சிக்காலம் வந்துவிட்டதே! பெருமாளுக்கு அபிஷேக தீர்த்தம் கொண்டு செல்லாமல் அபச்சாரம் செய்து விட்டேனே!, என்று கண் கலங்கினார். அவரைக் காக்க, பெருமாளே இறங்கி வந்து  பூஜையை ஏற்றுக் கொண்டார். பெருமாள் அங்கு நின்றதன் அடிப்படையில், அவரது பாதங்கள் வடிக்கப்பட்டுள்ளன. திருப்பதி மலையடிவாரமான அலிபிரியில் இருந்து மலையேறிச் செல்லும் நடைபாதையில், இந்த பாதமண்டபம் உள்ளது.

ஏழுமலையானுக்கு 200 பாட்டு: கலியுகம் தோன்றிய நாள் முதல், பக்தர்களைக் காப்பதற்காக திருமலையில் வெங்கடேசப்பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். இதனால் இவருக்கு கலியுகவரதன் என்ற திருநாமம் உண்டு. ரிக் வேதத்தின் எட்டாவது அத்யாயத்தில் வேங்கடேசர் பற்றியும், பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியம், காப்பிய நூலான சிலப்பதிகாரம் போன்றவற்றிலும் வேங்கடமலை பற்றிய குறிப்புகள் உள்ளன. பன்னிருஆழ்வார்களில் பத்துபேர் திருப்பதி வெங்கடேசரை பாடியுள்ளனர். அவரைப்பற்றி இருநூறு பாசுரங்கள் உள்ளன.

புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம் தெரியுமா?

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.
மஹாவிஷ்ணுவுக்கு உகந்த புரட்டாசி: பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.   ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப் படும் விரதம் ஆகும். சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும்  மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித்தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறும். இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு,  சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.
சனீஸ்வரன் சிறந்த சிவபக்தன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர். அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன. இராவணனின் மகன் இந்திரஜித்து இவன் பிறப்பதற்கு முன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்து விட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர். சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபட வேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சன்னிதானாமடைந்து சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.
சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாம். இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும். ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்கவேண்டும்.

அகண்ட தீபம்: சில வீடுகளில் மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து, அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்வர். இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர். துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும். பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம்,  சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம். பூஜைக்கு வந்துதவிய அந்தணர்களுக்கும் விருந்தளிப்பது (சமாராதனை) சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அந்த குறையொன்றுமில்லாத கோவிந்தன் நிறைந்த நல்வாழ்வை அளிப்பான். வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் போற்றுவோம்!

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி  சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க ஒரு கதை சொல்வார்கள். பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம்  இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.
சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால்,  பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

மாவிளக்கு மகிமை: திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு. சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு. அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைப்பது மரபு. எல்லோரும் பக்திப் பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும். புரட்டாசி சனிக்கிழமை திருப்பதி வெங்கடேசப்பெருமாளை நினைத்து வழிபடும் விழாவானதால், அன்று வீட்டிலுள்ள பிள்ளைகளின் நெற்றியில் நாமம் இடுவர். அவர்கள் கையில் நாமமிட்ட பாத்திரம் ஒன்றை அளித்து, நாலைந்து வீடுகளுக்குச் சென்று பிûக்ஷ எடுத்து வரச் சொல்லுவர். பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர். பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர். இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.

புரட்டாசி சனிக்கிழமை வழிபடுவதால் என்ன நன்மை!


கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். கன்யா (புரட்டாசி) மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு.

ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார். சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி அமர்ந்தார். இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனியின் தலைமீது வைத்தார். பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி, தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி. அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை

Wednesday, October 2, 2013

அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

குபேர சம்பத்துக்கள் மட்டுமின்றி... தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், தைர்யம், வைராக்யம், வெற்றி, மனச்சாந்தி அனைத்தையும் வழங்குபவள் மகாலட்சுமி. பொதுவாக, மகாலட்சுமி என்று சொன்னதுமே  அவள் உலகியல் செல்வங்களை மட்டும் அருளும் தேவி என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். காலம் காலமாக இதை நம்பியே மகாலட்சுமியை வழிபடுகிறோம். வசதி படைத்து வாழ்கின்ற செல்வந்தர்களை லட்சுமி கடாட்சம் பெற்றவர்கள் என்று பாராட்டுகிறோம்.
அதனால்தான் மகாலட்சுமியை பூஜிக்கும்போது காசு, பணம், பொன் மற்றும் வெள்ளியை வைத்து வழிபடுகிறோம். அப்படிச் செய்தால் செல்வம் வளரும் என்றும் ஒரு நம்பிக்கை பலருக்கும் உள்ளது. இது சரிதானா? மகாலட்சுமிக்கு செல்வத்தை அள்ளித் தரும் சக்தி மட்டும்தான் உண்டா? இதைத் தெரிந்துகொள்ள மகாலட்சுமி அவதாரம் செய்த சம்பவத்தை இங்கே பார்ப்போம்.

தேவி பாகவதம் 9-வது காண்டத்தில், மகாலட்சுமியின் தோற்றம் பற்றிய விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிபராசக்தி தன்னிலிருந்து தன்னைப் போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். அவரது இட பாகத்திலிருந்து தோன்றியவள் ரமாதேவி; வல பாகத்திலிருந்து தோன்றியவள் ராதாதேவி.
ரமா என்றாள் மிகவும் அழகானவள் என்று பொருள். ரமாதேவியை ஆதிபராசக்தி மகாலட்சுமி என்று பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார். மகாலட்சுமி அப்போது செல்வத்தின் நாயகியாகச் செயல்படுவாள் என்று தேவி பாகவதத்தில் குறிப்பிடப்படவில்லை. அவள் அன்பின் வடிவம் என்றும், விஷ்ணு பத்னி என்றும், விஷ்ணுவுக்கு சேவை செய்யும் தேவி என்றும்தான் தேவி பாகவதம் கூறுகிறது. மகாலட்சுமியின் தோற்றம் பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான ஸ்வர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள்.

பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவமியற்றினார். தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத்தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர். காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி வரமளித்தார். நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்கு வழிகோல நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும். அதிலே தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரணமில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும். பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த சௌபாக்யங்களையும், செல்வங்களையும் பெற அருள்புரிவாள் என்று மகாவிஷ்ணு தேவர்களுக்கு வாக்களித்து ஆசி கூறினார். பாற்கடலைக் கடைவது அத்தனை எளிதா? அதற்கும் மகாவிஷ்ணுவே வழி கூறினார். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி எனும் பாம்பைக் கயிறாக்கி, தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் கயிறை இழுத்துப் பாற்கடலைக் கடைந்தால், மகாலட்சுமி தோன்றி அருள்பாலிப்பாள் என்று உறுதி கூறினார்.

பாற்கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில், ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது. பாற்கடலிலிருந்து அபூர்வமான பல வஸ்துக்களும் ஜந்துக்களும் தோன்றின. முடிவில், ஒளிமயமான ரூப லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர்களும் அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய வரும்பினார்கள். அப்போது மகாலட்சுமி, என்னை அடைய வேண்டும்  என்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. என் தோறற்த்தைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன் என்று கூறினாள்.
அதன்படி, எதனாலும் பாதிக்கப்படாமல் யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள். பிரம்ம வைவர்த்த புராணத்தில் மகாலட்சுமியின் பெருமை விளக்கப்படுகிறது. அவளைப் பற்றி பிரம்மதேவனே தேவர்களுக்கு இப்படிக் கூறுகிறார்... எந்தெந்த இடங்களில் தர்மம், நியாயம், நீதி, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவை

நிலைத்திருக்கிறதோ, அங்கேல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே, தேவர்கள் தர்மத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி வாழ உறுதி பூண்டால், மகாலட்சுமி தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் அளிப்பாள் என்பது பிரம்மதேவனின் வாக்கு. மகாலட்சுமி திருப்தியையும், மனச்சாந்தியையும் வழங்கும். கருணைமிக்க தேவியாவாள். வெறும் பொருட்செல்வங்களை மட்டும் விரும்பி அவளை வழிபடுபவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள் என்று பிரம்மதேவன் தேவர்களிடம் கூறினார்.
மகாலட்சுமியின் பெருமையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள். அப்போது, அவளிடமிருந்து வெளிப்பட்ட ஸ்வர்க்க வட்சுமி தேவலோகத்தை மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது. தேவர்கள் அவள் துதிப் பாடி மகிழ்ந்தனர். திசைக் காவல் புரியும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவர் குபேரன். அவர் வடதிசைக் காவலன். சிறந்த சிவபக்தரும்கூட! தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாத்து, தகுதியானவர்களுக்குச் சரியான தருணத்தில் அந்தச் செல்வங்களை வழங்கும் அதிகாரம் அவருக்கு தரப்பட்டது. மகாலட்சுமி கடாட்சம் பெற்றவர்களுக்கு நவநிதியையும் வழங்குகிறார் குபேரன். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் வழங்கும் செல்வங்கள் நவநிதியில் அடங்கும். மகாலட்சுமியின் அருட்பார்வை பெற்றவர்களுக்கு உலகியல் செல்வங்களோடு நிம்மதியும், சாந்தியும் கிடைக்க குபேரன் வழிசெய்கிறார். பேராசையும் அதர்மமும் மிக்க மனிதர்கள் சிலருக்கு உலகியல் செல்வங்கள் இருக்கலாம். அது, அவர்கள் பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக இருக்கலாம். ஆனால், சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. மகாலட்சுமி என்பவள் உலகியல் செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல; மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள்.
அஷ்டலட்சுமியாக அருள்பாலிக்கும் மகாலட்சுமியின் பல்வேறு பரிமாணங்களையும், அவள் வழங்கும் செல்வங்களையும் தெரிந்துகொள்வோமா?

ஆதி லட்சுமி: இவளுக்கு ரமணா என்ற பெயரும் உண்டு. மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியவள் இவள்.

தான்ய லட்சுமி: உயிர் வாழும் ஜந்துக்கள் அனைத்துக்கும் உணவு அவசியம். அந்த உணவை வழங்கும் பூமித்தாய்தான் இவள். விவசாயத்தை வளப்படுத்தும் இவளே, பசித்தவனுக்கு உணவு கிடைக்கச் செய்யும் கருணைத் தாயாகவும் திகழ்கிறாள்.

தனலட்சுமி: உணவுக்கு அடுத்தபடியாக மனித வாழ்க்கைக்குத் தேவையானது உடை, இருப்பிடம். இவற்றை அடைய வழி செய்வது தனம் எனப்படுகிறது. அந்த தனத்தைத் தந்தருளுபவள் இவள்.

சந்தான லட்சுமி: நல்ல குடும்பமும் நல்ல குழந்தைகளும் ஒருவனது வாழ்க்கையை வளமாக்கும் செல்வங்கள். எத்தனை பொருட்செல்வம் இருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையே என்று ஏங்கித் தவிப்பவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அந்த ஏக்கத்தைத் தீர்த்து, குழந்தைச் செல்வத்தை அருளுபவள்  இவள்.

கஜ லட்சுமி: லட்சுமிக்கு க்ஷீராப்தி தனயை என்ற பெயருண்டு. பாற்கடலில் தோன்றியவள் என்பது இதன் பொருள். பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியபோது இரண்டு யானைகள் தோன்றி, தங்கள் தும்பிக்கையில் தாங்கிய பொற்குடத்தால் தேவிக்குப் பாலாபிஷேகம் செய்தன. இருபுறங்களிலும் யானைகள் நின்றதால், அவள் கஜலட்சுமி எனப்பட்டாள். இன்றும் ஆலயங்களில் கர்ப்பக்கிரஹ வாயிலிலும், வீடுகளின் வாசற்படி நிலையிலும் கஜலட்சுமி சிற்பம் வைக்கப்படுவதைக் காணலாம். மனத் தூய்மையையும், மன அமைதியையும் தருபவள் இவள்.

வித்யாலட்சுமி: அறிவாற்றல் இல்லையென்றால், எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனிருக்காது. அறிவாற்றல் வளர ஆதாரமாக விளங்குபவள் வித்யாலட்சுமி. உயரிய ஞானத்தை அடைய வழி செய்பவளும் இவளே! இவள் சரஸ்வதியின் அம்சம்.

விஜய  லட்சுமி: கடுமையான முயற்சியும் உழைப்பும் நிச்சயமாக வெற்றி தரும். அந்த உழைப்புக்குரிய சக்தியைத் தந்து வெற்றியோடு வாழ அருள்புரிபவள் விஜயலட்சுமி.

தைரிய லட்சுமி: கல்வியும் செல்வமும் இருந்துவிட்டால் போதுமா? தர்மநெறியில் நினைத்ததைச் செய்து முடிக்க மனோபலமும், உடல் பலமும், வைராக்யமும், தைரியமும் அவசியம் அல்லவா? அதைத் தருள்கின்றவள் தைரியலட்சுமி.

அஷ்ட லட்சுமிகளில் யாருடைய அனுக்ரஹம் மிகவும் முக்கியமானது என்பதை விளக்க ஒரு கதை உண்டு.
பணக்காரனான ஒருவனது வாழ்வில் திடீரெனத் துன்பங்கள் சூழ ஆரம்பித்தன. கிரகங்கள் பலமின்றி, அவன் கெட்ட காலம் நடந்துக்கொண்டிருந்தது. பணம், வீடு, வாசல், குடும்பம் ஆகியவற்றை அவன் ஒவ்வொன்றாய் இழக்க நேரிட்டது. நொந்துபோன அவன், தனது பிரமாண்டமான வீட்டின் வெளிவாசல் அருகே சிறிது நேரம் உட்கார்ந்தான். ஒவ்வொரு லட்சுமியாக அவன் வீட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். தான்ய தான்ய வட்சுமி வெளியேறினாள். வீட்டில் சாப்பிட ஏதுமில்லாமல் ஆயிற்று. அதன்பின், தனலட்சுமி வெளியேறினாள். வீட்டில் உள்ள பணமும், பொன்னும், பொருளும் போயின. சந்தானலட்சுமி வெளியேறியயதும் அவன் மனைவி மக்கள் அவனைத் தனியே விட்டுச் சென்றனர். தொடர்ந்து கஜலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகியோரும் வெளியேறினர். அவர்கள் தன்னை விட்டுப் போவதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் அந்தப் பணக்காரன். கடைசியாக தைரியலட்சுமி அவனை விட்டுக் கிளம்ப முற்பட்டாள். அவள் வெளியேறும்போது அவன் ஓடிச்சென்று அவள் பாதங்களில் விழுந்து, தாயே! தயவுசெய்து நீங்கள் மட்டும் என்னை விட்டுப் போய்விடாதீர்கள்! என்று கதறினான்.
அவனது வேண்டுகோளுக்கு இணங்க தைரியலட்சுமி வெளியேறாமல் மீண்டும் அவன் வீட்டுக்குள் சென்றாள். அதன்பின், வெளியே சென்ற மற்ற லட்சுமிகளும் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வந்தனர். இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற்றான் பணக்காரன். தர்மத்தைக் கடைபிடித்து ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வீற்றிருந்து அருள்புரிபவார்கள் என்பது சாஸ்திரம் கூறும் உண்மை!