Wednesday, January 29, 2014

தை அமாவாசையில் அன்னாபிஷேகம் நடக்கும் பதஞ்சலி மனோகரர் கோயில்!

திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயிலில், தை அமாவாசையன்று அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு பதஞ்சலி மனோகரர், கிழக்கு நோக்கியும், அம்மன் மதுரபாஷினி தெற்கு நோக்கியும், அருள்பாலிக்கின்றனர். இக்கோயில்திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தஞ்சாவூர் ரோட்டில் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை காணலாம். பொதுவாக சிவன் கோயில்களில் ஐ ப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வர். இங்கு எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. பித் ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் தை அமாவாசை யன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், இங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர். விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். தொடர்புக்கு: 94894 79896

வழிபாட்டில் காகத்திற்கு சாதம் வைப்பது ஏன்?

காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்குச் சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பர் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்துபோன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாகக் கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்தப் பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடம் உள்ள பொருளை பிறருக்குப் பகுத்துண்டு வாழவேண்டும் என்று வள்ளுவர் நமக்கு போதித்திருக்கிறார். அப்பாடத்தை தவறாமல் பின்பற்றும் குணம் காகத்திற்கு இருக்கிறது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்தபின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப் பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுவது சரிதானே!

பிதுர் வழிபாட்டிற்கு உகந்த தை அமாவாசையின் சிறப்பு தெரியுமா?

ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. இருந்தாலும், தை அமாவாசை தினத்தில் பிதுர் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு. எனவேதான் உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது. அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ஆகியவை பிதுர் பூஜைக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவையன்றியும் பல தலங்கள் உள்ளன.

தமிழகத்தில் பிதுர் பூஜைக்குரிய இடங்கள் பல இருப்பதுபோல், வட நாட்டில் காசி, பத்ரிநாத், கயா போன்ற இடங்களில் எப்பொழுதும் எந்நாளிலும் பிதுர் பூஜை செய்யலாம். அந்த வகையில் காசியில் மணிகர்ணிகா கட்டம் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதேபோல் கேரளாவில் ஐவர் மடம் என்னும் தலம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள மயானத்தில் தினமும் அறுபதிலிருந்து எழுபத்தைந்து சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன. இந்த இடம் காசி கங்கைக்கரையோரம் உள்ள மணிகர்ணிகா காட் என்ற இடத்தை நினைவூட்டுகிறது. ஐவர் மடத்தின் அருகில் பாரதப் புழா என்னும் நதி ஓடுகிறது. இந்த நதியில் ஐந்து நதிகள் கலந்து வருவதால் மேன்மேலும் சிறப்புப் பெறுகிறது. இந்த நதிக்கரை அருகில்தான் மயானம் உள்ளது. காசி மணிகர்ணிகா காட் என்னுமிடத்தில் உள்ள மயானத்தில் சடலங்கள் தகனமாகிக் கொண்டேயிருக்கும். வெகுதூரத்திலிருந்து சடலங்களைக் கொண்டு வந்து தகனம் செய்வார்கள். இங்கு சிவன் ஏற்றி வைத்த நெருப்பு இன்றும் கனன்று கொண்டிருக்கிறது. அதிலிருந்து நெருப்பு எடுத்துதான் தகனத்திற்குத் தீமூட்டுவர்.

அதேபோல, ஐவர் மடம் மயானம் பஞ்சபாண்டவர்கள் மோட்சமடைந்த இடம் என்று கருதப்படுவதால், அவர்களது சடலங்கள் இங்கு எரியூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. (இது குறித்து வேறு கருத்துகளும் உள்ளன) விடியற்காலையிலேயே இந்த மயானம் சுறுசுறுப்படைகிறது. இங்கு காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை மட்டுமே சடலங்கள் எரியூட்டப்பட வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளதால், வெகுதூரத்திலிருந்தும் வாகனங்களில் குறித்த நேரத்திற்குள் வந்து, சடலத்திற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படி செய்து எரியூட்டுகிறார்கள். இங்கு மின்சார தகனம் என்பது கிடையாது. (காசியில் மின்சாரத் தகனம் செய்ய வசதி உள்ளது. தொடர்மழையால் விறகுக் கட்டைகளைப் பயன்படுத்த முடியாதபோது மின்சாரத் தகனத்தை மேற்கொள்கிறார்கள்.)

ஒவ்வொரு அமாவாசையிலும் ஐவர் மடத்தில் தர்ப்பணம், நீத்தார் வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக தை, ஆடி, ஐப்பசி, புரட்டாசி அமாவாசை நாட்களில் இங்கு முன்னோர்களுக்கான வழிபாடுகள் செய்ய கூட்டம் நிரம்பி வழியும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு இங்கு சிறப்புப்பூஜை, சடங்குகள் செய்தால், அவர்கள் ஆவியாக அலையாமல் சொர்க்கம் செல்லுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த மயானத்தின் அருகேயுள்ள ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் அதற்குரிய பூஜைகள், ஹோமங்கள் செய்து, அந்த ஆத்மாவைச் சாந்தப்படுத்தி மேலுலகத்திற்குச் செல்ல வழிசெய்கிறார்கள். பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கான வழிபாட்டினைச் செய்வதுடன், அன்னதானமும் செய்தால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும். அதில் தை அமாவாசை மேலும் சிறப்புமிக்கது!

Friday, January 10, 2014

சனியின் பாதிப்பிலிருந்து விடுபட என்ன பரிகாரம்?

சனி என்ற சொல்லுக்கு குளிர்ச்சி என்று தான் பொருள். இன்றைய விஞ்ஞானிகள் கூட, சனி கிரகத்தை ஆராய்ந்து அது பனிமயமாக இருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள்.  நல்லதைச் செய்ய  வேண்டிய காலங்களில் வாரி வழங்குவதில் வள்ளல். கெடுதலைச் செய்ய வேண்டிய  சூழலில், சற்று பாதிப்பையும் தரும் குணம் படைத்தவர். எல்லாரும் பயப்படும் அளவிற்கு கெட்டவர் கிடையாது. இவரது பாதிப்பிலிருந்து விடுபட,  பிரதோஷ விரதம் இருப்பது மிகவும் உயர்ந்தது. மேலும், அன்றைய தினம் காளை மாட்டிற்கு அரிசி, வெல்லம், எள் கலந்து கொடுப்பது சிறந்த பரிகாரம்.

பெற்றோர் செய்த பாவம் சந்ததியைத் தொடருமா?

பிள்ளைக்கு தெய்வபலம் அதிகமிருந்தால் பெற்றோர் செய்த பாவம் அவர்களைத் தாக்காது. இருந்தாலும், பாவம் சந்ததியைத் தொடரும் என்பது உண்மையே. தெய்வ வழிபாடு, தானதர்மம் மூலம், இதை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

ஏகாதசி விரதம் யார் இருக்க வேண்டும்?

ஏகாதசிக்கு விரதத்திற்கு வயது வரம்பு ஏகாதசி விரதத்திற்கு எல்லாரும் இருக்கவேண்டிய விரதம் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. எட்டு முதல் எண்பது வயதுக்குள் உள்ளவர்களே மேற்கொள்ள வேண்டும். இதனை, அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர:! ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி!! என்னும் ஸ்லோகம் குறிப்பிடுகிறது.

ஏகாதசி வளர்ந்த கதை: மார்கழி வளர்பிறை ஏகாதசியிலிருந்து பத்து நாட்கள் வேதங்களை ஜெபித்து, ஸ்ரீரங்கத்திலுள்ள நம்பெருமாளை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், வேதத்தோடு நம்மாழ்வாரின் பாசுரங்களையும் பாடும் நடைமுறையை திருமங்கையாழ்வார் ஏற்படுத்தினார். நாதமுனிகள், மற்ற ஆழ்வார்களின் பாடல்களையும் சேர்த்துப் பாடும் வழக்கத்தை உண்டாக்கினார். அதற்காக, ஏகாதசிக்கு 10நாட்களுக்கு முன்பே இவ்விழா தொடங்கப்பட்டது. பாட்டு பாடுவதோடு, அபிநயமாக நடித்துக் காட்டி வியாக்யானம் (பாடலுக்கான விளக்கம்) சொல்லும் முறையை பிற்காலத்தில் மணவாள மாமுனிகள் ஏற்படுத்தினார். ஆடியபடியே பாடுவதற்கு அரையர் சேவை என்று பெயர். இந்த நடைமுறையே ஸ்ரீரங்கத்தில் பின்பற்றப்படுகிறது. 

வைகுண்ட ஏகாதசி தோன்றியது எப்படி?

நார, அயந என்னும் இரு சொற்கள் கூடி நாராயண என்னும் ஒரு சொல்லாயிற்று நாரம் என்பது உயிர்த்தொகுதி, அயனம்-இடம் உயிரிங்களுக்கு இடமானவன் நாராயணன். உயிரினங்களைக் காப்பதற்கு இறைவன் சில தலங்களைத் தேர்ந்தெடுப்பது போல சில காலங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவை புண்ணிய காலங்கள் எனப்படும். தலங்களில் திருவரங்கம் போல புண்ணிய காலங்களில் ஏகாதசி உயர்ந்தது; ஏகாதசிக்கு ஹரிதனம் (நாராயணனுடைய நாள்) என்னும் பெயர் உண்டு. ஏகாதசி நோன்பினைக் கைக்கொண்டு ஒழுகுவதே வைணவம். எட்டு வயதுக்கு மேல் எண்பது வயது வரை மானிடர் யாவராயினும் இரு பட்சங்களிலும் ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

முரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட இந்திராதியர், சிவனை அணுகி அபயம் கேட்டனர். நாரணனைச் சரணடையுமாறு வழிகாட்டினார் சிவன். சரணடைந்த தேவர்களுக்காக முன்னின்று யுத்தம் புரிந்தான் நாரணன். முரன் கிளர்ந்தெழுந்தான், அமரர் சிதறினர், இறைவனும்  ஆற்றலிற் குறையுடையவன் போல் பயந்தோடி வதரி மலையிலுள்ள சிம்ஹவதி என்னும் குகையில் போய் களைப்புதீர கண்ணுறங்கினான். முரன் பின் தொடர்ந்து வாள் கொண்டு வதம் செய்ய முற்பட்டான். அவ்வமயம் இறைவன் திருமேனியினின்று கன்னி ஒருத்தி வெளிப்பட்டுப் போரிட முரனுக்கு முன்னின்றாள். முரன் முடிந்தான். கன்னி வடிவத்தில் தன்னிடமிருந்து வெளிப்பட்ட சக்தி அவ் இறைவனுக்கே வியப்பளிக்கிறது.

என் பகைவனை முடித்தது யார்? என்று பரமன் கேட்கிறான். அக்கன்னி உலகை அச்சுறுத்தும் அசுரனைத் தானே கொன்றதாக கூறினாள். பேருதவி புரிந்த அக்கன்னியிடம் நன்றி கூற வரம் வேண்டுமாறு கேட்டான் மாயன். ஏகாதசி என்று பெயர் கொண்ட அவ்வனிதை நின் அன்புக்கு உரியவளாக நான் ஆகவேண்டும் , திதிகளுள் முக்கியமானவளாக நான் விளங்க வேண்டும். நான் பிறந்த இந்நாளில் உபவாசம் இருப்போர் சித்திகள் அனைத்தும் பெற வேண்டும் என்னும் வரங்களை வேண்டிக்கொண்டாள். இப்படிதான் ஏகாதசி தோன்றியது, மார்கழி மாதம் கிருஷ்ணபட்சத்தில் ! ஆகையால், மார்கழி மாதத்து கிருஷ்ணபட்ச ஏகாதசி உத்பத்தி ஏகாதசி என்று வழங்கப்பட்டது. மார்கழி மாதத்து சுக்லபட்ச ஏகாதசி மோட்ச ஏகாதசி என்று வழங்கப் பெறும். இதுவே விமோசனம் தரவல்லது இந்த ஏகாதசி விரதத்தைக் கைக்கொண்ட அளவிலே ஒருவன் இன்னல்களிலிருந்து விடுதலை பெறுவதோடு தன் தொடர்புடையவர்களையும் இன்னல்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் பெறுகிறான் என்கிறது சாஸ்திரம்

வைகுண்ட ஏகாதசியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்?

ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று  பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.  ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும். அன்று துளசிஇலை பறிக்கக்கூடாது. பூஜைக்குரிய துளசியை முதல்நாளே பறித்துவிட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உணவில் இடம்பெறுதல் அவசியம். அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். சுவாமிக்கு நைவேத்யம் செய்து, ஒரு ஏழைக்கு தானம் செய்த பிறகு. சாப்பாட்டை முடித்து விட வேண்டும். சூரிய உதயத்திற்குள் சாப்பிடுவது மிகவும் உசிதம். அன்று பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க  வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் செல்லும் பாக்கியம் பெறுவர்.

ஏகாதசிக்குரிய தலம்: நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் ஏகாதசி விரதத்திற்கு பெயர் பெற்றது.  இத்தலம் ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால் ஏகாதசி விரதம் இருக்க நினைப்பவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு சென்று விரதத்தை ஆரம்பிப்பது நல்லது. பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் இதுவும் ஒன்று.

Monday, January 6, 2014

மூன்று வேளை வணங்க வேண்டிய தேவியர் !

காயத்ரி காலை வணக்கத்துக்குரியவள். இவள் ரிக் வேதத்தின் தலைவியாவாள். வீட்டில் வளர்க்கும் ஹோமத் தீக்கு இவளே அதிபதி. நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடன் அன்ன வாகனத்தில் காட்சி தருபவள்.

நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யஜுர் வேதம் இவளுக்குரியது, இவள் நான்கு முகங்களையும் அதில் பன்னிரு விழிகளையும், நான்கு கரங்களையும் கொண்டவள். இவளது வாகனம் எருது.

அந்தி வேளை வணக்கத்துக்குரியவள் சரஸ்வதி. சாமவேதம் இவளுக்குரியது. ஆஹ்வனீய தீயின் ஒளி இவள். ஒற்றை முகமும் நான்கு கரங்களும் கொண்டு அருள்பாலிப்பவள். இவளது வாகனம் கருடன்.

Sunday, January 5, 2014

ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபடுவது ஏன்?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது.