Thursday, May 26, 2011

கோயிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரஸாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது. ரூபாய் நோட்டுக்கும் வெறும்தாளுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா. ரூபாய் நோட்டுக்களிலும் கூட அதனில் பதிக்கப்பட்ட எண்களைப் பொறுத்து மதிப்பு மாறுகிறது. இதுபோன்று ஒவ்வொரு கடவுளர்களின் பிரஸாதமும் ஒவ்வொரு சக்தி உடையது. அவற்றை நாம் பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு, நமது நெற்றியிலும், இருதயத்திலும் வைத்து அந்த இறை அருள் நம்முள் உட்புகுவதாக எண்ணுதல் வேண்டும். பிறகு வீட்டில் பூஜை அறை இருப்பின் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தின் மீது வைத்துவிடல் வேண்டும். வீட்டில் பெண்கள் அவற்றிலிருந்து சிறிது எடுத்து பக்தியுடன் தலையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர்நிலைகளிலோ, மரங்களின் கீழோ வைத்திட வேண்டும். நமது வீட்டில் உள்ள இறை உருவங்களுக்குவேறு மலர்களை சார்த்துவது சிறந்தது

கோடி முறை சொன்ன பலன்

முருகப்பெருமானின் மூலமந்திரமான சரவணபவ என்பதை சடாக்ஷரம் (ஆறெழுத்து மந்திரம்) என்று கூறுவர். தமிழில் இம்மந்திரம் சடக்கர மந்திரம் எனப்படும். திருமுருகாற்றுப்படை என்னும் பழந்தமிழ் இலக்கியத்தில் முருகனுக்குரிய தமிழ் மந்திரங்களான முருகா, குமரா போன்றவை குறிக்கப் பெற்றுள்ளன. இம்மந்திரங்களை அருணகிரிநாதர் தன் பாடல்களில் பயந்த தனி வழிக்குத் துணை, முன் செய்த பழிக்குத் துணை என்று குறிப்பிடுகிறார். தெய்வ உபாசனையில் மந்திரஜபங்களுக்கு விசேஷத்தன்மை உண்டு. இம்முருக மந்திரத்தின் பெருமையினை வாரியார் சுவாமி முருகா என்று ஒரு தரம் சொன்னால் கோடிமுறை தெய்வநாமாவை சொன்ன பலன் கிடைக்கும்

ஞாபக மறதிக்கு மருந்து

சில குழந்தைகள் எவ்வளவு படித்தாலும், மறதி காரணமாக, தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறுவர். இந்த பிரச்னையை தீர்த்து வைத்து, ஞாபக மறதியை நீக்குபவராக திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் அருளுகிறார். நடராஜருக்குரிய பஞ்ச சபைகளில் முதலாவதான ரத்தினசபை இது. கயிலாயத்தில் சிவபெருமானைத் தரிசித்த காரைக்காலம்மையார், எப்போதும் அவரது திருவடியில் அமர்ந்து அவரது நாட்டியத்தைத் தரிசிக்க அருளும்படி வரம் கேட்டார். அவருக்கு அருளிய சிவன், அம்மையாரை இத்தலத்திற்கு அனுப்பி வைத்தார். இங்கு வந்த காரைக்காலம்மையார் காலை தரையில் ஊன்றாமல், தலைகீழாக நடந்து வந்தார். பிற்காலத்தில் இங்கு வந்த திருஞானசம்பந்தர், இத்தலத்தின் மகிமையை அறிந்து தரையில் நடக்க அஞ்சினார். இதற்காக இக்கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பழையனூர் என்னும் தலத்தில் தங்கினார். அன்றிரவில் சம்பந்தர் முன் தோன்றிய சிவன், என்னை பாட மறந்து விட்டாயா? எனக்கேட்டார். உடன் சம்பந்தர் அங்கிருந்தபடியே, பாடும்படி ஞாபகப்படுத்திக் கேட்ட பெருமானே! எனக் குறிப்பிட்டு சுவாமியைப் போற்றி பதிகம் பாடினார். இவ்வாறு, சம்பந்தருக்கு பதிகம் பாட ஞாபகப்படுத்தியவர் என்பதால், மறதி பிரச்னை நீங்க இத்தலத்தில் வேண்டிக்கொள்கிறார்கள். ஞாபக மறதி உள்ள குழந்தைகளை அழைத்து வந்து, சிவன், நடராஜர் சன்னதியில் வழிபடுகின்றனர்.

எலுமிச்சை மாலையின் மகத்துவம்


தெய்வ வழிபாட்டில் கனிமாலை சாத்தும் வழக்கம் உள்ளது. கனிமாலை என்றால் அது எலுமிச்சம் பழ மாலையையே குறிக்கும். துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாத்துவார்கள். இம்மாலையை தயாரிப்பவர்கள் ஒரே அளவிலான நல்ல நிறமுள்ள பழங்களை மாலையாக கோர்க்க வேண்டும். எலுமிச்சம்பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பழங்கள் காயாகவோ அல்லது மிகவும் பழுத்த நிலையிலோ இருந்தால் அவற்றை தவிர்ப்பது நல்லது. உக்ரமான தெய்வங்களுக்கு கனிமாலை சாத்தும் போது, அத்தெய்வங்களை குளிர்விக்க தயிர்சாதம், பானகம் நிவேதனம் செய்ய வேண்டும். கூழ் வார்த்தும் பக்தர்களுக்கு கொடுக்கலாம்.  நீண்ட நாள் தடைபட்ட செயல்கள் கனிமாலை சாத்தி வழிபாடு செய்தால் கைகூடும் என்பது நம்பிக்கை.

Sunday, May 15, 2011

உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா?


ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம்  என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும்.  அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்

ராகு-கேது பெயர்ச்சியால் யாருக்கு நன்மை?
16.5.11 முதல் 15.11.12 வரை: ராகு பகவான், மே16 காலை 9.55 மணிக்கு தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்திற்கும், கேது பகவான் மிதுனத்தில் இருந்து ரிஷபத்திற்கும் பெயர்ச்சியாகின்றனர். இவர்கள் இந்த ராசிகளில் ஒன்றரை ஆண்டு சஞ்சரிப்பர். இதையொட்டி, 12 ராசிகளுக்கும் நடக்கும் பலன்களைக் கணித்துள்ளார் ஜோதிடமாமணி மதுரை சங்கர்ஜி.

மேஷம் 55/100

சமயோசிதமாக செயல்பட்டு வாழ்வில் முன்னேறும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு எட்டில் ராகுவும், இரண்டில் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு ஆறாம் இடமான எதிரி, பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திலும் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு நான்காம் இடமான வீடு, வாகனம், 12ம் இடமான விரய ஸ்தானத்தில் பதிகிறது. எனவே, இந்தப்பெயர்ச்சி சுமாரான பலன்களைத் தந்தாலும், கிரகப் பார்வையின் பயனால் சில நன்மைகள் வந்து சேரும்.பேச்சால் பிரச்னை வரலாம் என்பதால், சாந்தத்தை வார்த்தைகளில் குழைத்துக் கொள்ள வேண்டும். வாகன பராமரிப்பு, பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றி அன்பு, ஆசி பெறுவீர்கள். புத்திரர்கள் உங்களின் பொருளாதார சூழ்நிலையை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்வர். பூர்வசொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி மனம் @பால் நிறை @வறும். எதிரியால் இருந்த தொல்லை ராகுவின் பார்வையால் குறையும். கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. இருவரும் பொறுமையுடன் நடப்பதால் மட்டுமே குடும்பத்தில் சந்தோஷ சூழ்நிலை வளரும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதம், தகுதிக்கு மீறிய பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் வாக்குறுதி தருவது கூடாது. பாதுகாப்பு குறைவான இடங்களில் நுழைவதை தவிர்ப்பது நல்லது. பணவசதி அவ்வளவு சிறப்பாக இருக்காது. சில முக்கியத் தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படும்.


தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் குறுக்கீடு உருவாகலாம். ஆர்வமுடன் பணிபுரிவதாலும் சிரமங்களை சரிசெய்வதாலும் சராசரி வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு பெறுவதில் புதிய வாய்ப்பு உருவாகும். சுபநிகழ்ச்சிகள் இனிதாக நிறைவேறும். உற்பத்தியை உயர்த்தும் நோக்கில் செயல்படுவர். குறுக்கீடுகளை கண்டறிந்து சரிசெய்வதால் உற்பத்தி திறனும், பொருள் தரமும் சிறப்பு பெறும். கூடுதல் ஒப்பந்தம் கிடைக்க புதிய நண்பர்கள் உதவுவர். கூட்டுத்தொழில் செய்பவர்கள் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். அனுபவம் இல்லாத புதிய தொழில்துறையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சுபநிகழ்வு இனிதாக நடக்கும்.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் செயல் திறமைகளை வளர்த்துக்கொள்வதால் பணியில் குளறுபடி ஏற்படாது. பணி இலக்கு திறம்பட நிறைவேற தியானம், சீரான ஓய்வு பின்பற்றுவது அவசியமாகும். சக பணியாளர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடப்பது நல்லது. இயந்திரம், நெருப்பு சார்ந்த இடங்களில் பணிபுரிபவர்கள் பாதுகாப்பு நடைமுறையை தகுந்த முறையில் கடைபிடிக்க வேண்டும். பணவரவு சுமார் என்பதால், குடும்பத் தேவைகளை சிக்கன செலவில் நிறைவேற்றுவீர்கள்.


வியாபாரிகள்: சந்தையில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். அலட்சியம் தவிர்த்து அக்கறையுடன் செயல்படுவதால் புதிய வாடிக்கையாளர்களை பெறுவீர்கள். பணவரவு பெறுவதில் இருந்த தாமதம் விலகும். பங்குதாரருடன் சேர்ந்து வியாபாரம் நடத்துபவர்கள் கருத்து வேறுபாடு வளராத அளவிற்கு பெருந் தன்மையுடன் செயல்பட வேண்டும். அளவான சரக்கு கொள்முதல் அதிக முதலீட்டுத் தேவை உருவாகாத அளவில் பாதுகாத்திடும். நிலுவைப்பணம் வசூலிப்பதும், நிர்ப்பந்த பணக்கடன் சரிசெய்வதுமான நன்னிலை உண்டு.


பெண்கள்: பணிபுரியும் பெண்கள் முன்யோசனையுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராத தன்மை இருக்கும். சலுகைப்பயன் பெற கூடுதல் காலம் தேவைப்படும். குடும்பப் பெண்கள் கணவரிடம் அதிக வாக்குவாதம் செய்யாத அளவில் நடந்துகொள்வதால் சந்தோஷ வாழ்வுநிலை வளர்ச்சி பெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை சிக்கனச்செலவில் நடத்துவீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் அதிக உழைப்பால் தொழில் அனுகூலத்தை தக்கவைத்துக் கொள்வர். கூடுதல் தொழில் துவங்குவதில் தகுந்த பரிசீலனை அவசியம்.


மாணவர்கள்: படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். படிப்பு சார்ந்த குறிப்புகளை எழுதி வைப்பதால் சிந்தனைத்திறன் வளரும். மதிப்பெண் சதவீதம் கூடும். விளையாட்டுகளில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். படிப்புக்கான பணவசதி தாமதமாக கிடைத்தாலும் படிப்பதில் தடையேதும் வராது. சக மாணவர்களுடன் சுமூக நட்பு கொள்வதால் அன்பும் மகிழ்ச்சியும் வளரும்.


அரசியல்வாதிகள்: ஆர்வமுடன் நிறைவேற்றிய சமூகப் பணிக்கு தகுந்த அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் இருக்கும். இதனால் வரும் மனக்குறையை சரிசெய்து கூடுதல் எதிர்பார்ப்புடன் பணிபுரிவீர்கள். அரசு தொடர்பான காரியங்கள் ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் நிறைவேறும். ஆதரவாளர்களின் நம்பிக்கை தொடரும். எதிரியின் கெடுசெயலில் இருந்து சமயோசிதமாக விலகுவீர்கள். தொழில் நடத்துபவர்களுக்கு உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். கடன் பெறுகிற முயற்சி பலன் தரும்.


விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனுகூல நடைமுறைகள் சிறப்பாக கிடைக்கும். சராசரி மகசூல் உண்டு. கால்நடை வளர்ப்பில் எதிர்பார்ப்பைவிட அதிக லாபம் வரும். நிலம் தொடர்பான ஆவணங்களை தகுந்த கவனத்துடன் பாதுகாத்திடுவீர்கள். குடும்பத்தில்குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி நல்லவிதமாக நிறைவேறும்.

பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு கூடும்.


ரிஷபம் 50/100


அத்தியாவசிய பணிகளை உடனுக்குடன் நிறைவேற்றும் குணம் கொண்ட ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் மூன்றாம் பார்வை பாக்ய ஸ்தானத்திலும் 11ம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதிகிறது. கேதுவின் மூன்றாம் பார்வை புகழ் ஸ்தானத்திலும் 11ம் பார்வை ஆதாய ஸ்தானத்திலும் பதிகிறது. ராகு கேது பெயர்ச்சி உங்கள் நடைமுறையை புதிய கோணத்தில் செயல்படுத்த உதவும். துவங்கும் செயல்களில் சீரான வெற்றிபெற நல்லோர், ஆன்மிக சிந்தனை கொண்டவர்களின் ஆலோசனை பெருமளவில் துணை நிற்கும். பணவரவு அதிகம் பெறுவதில் கூடுதல் முயற்சியுடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் பெற்ற நற்பெயரை கவனமுடன் பாதுகாப்பது அவசியம். இளைய சகோதரரிடம் சிறு அளவில் பிரச்னை ஏற்படலாம். பொறுமை தேவை. வீடு, வாகனத்தில் பெறுகிற பயன் சராசரி அளவில் கிடைக்கும். தாயின் அன்பு, ஆசி கிடைத்து மனதில் மகிழ்ச்சி பெறுவீர்கள். பூர்வ சொத்துக்களை பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் கூடுதல் செலவு ஏற்படும். புத்திரரின் சகவாசங்களை அறிந்து வழிநடத்துவதால் படிப்பு, சுயதிறமையில் நல்ல முன்னேற்றம் காண்பர். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்றுவதில் தாமதம் வந்து பின்னர் சரியாகும். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். எதிரியால் இருந்த தொல்லை குறையும். தம்பதியர் கருத்து ஒற்றுமையுடன் நடப்பதால் மட்டுமே குடும்பவாழ்வு சீராக அமையும். நண்பர்களிடம் எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்வதால் கருத்துவேறுபாடு வராமல் தவிர்க்கலாம். அறிமுகம் இல்லாத பெண்களுக்கு உதவுவதில் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைப்பதால் பணக்கடன் வராமல் தவிர்க்கலாம். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிபெற தகுந்த வாய்ப்பு உருவாகும். முறையாகப் பயன்படுத்துவதால் முன்னேற்றம் பெறலாம். ஆதாய பணவரவு பெறுவதில் தாமத நிலை இருக்கும். நீண்டதூர பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வதால் மட்டுமே எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.


தொழிலதிபர்கள்: தொழிலில் வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதில் நிதானம் பின்பற்ற வேண்டும். கிடைக்க இருக்கிற அனுகூலங்களை முறையாக அறிந்துகொள்வதால் தொழில் நடைமுறையில் திருப்தி காணலாம். உற்பத்தி தரம் உயர்த்த அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு வரும். லாபவிகிதம் குறைத்து தரத்தை பேணிக்காப்பதால் நிறுவன வளர்ச்சிக்கும் புகழ் பெறுவதற்கும் உகந்த சூழ்நிலை ஏற்படும். பணவரவு சராசரி அளவில் கிடைக்கும். நிர்வாக நடைமுறை செலவு சிறிதளவு உயரும்.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவது கூடுதல் நன்மைபெற உதவும். நிர்வாகத்தின் வழிகாட்டுதல் பணி சிறக்க கூடுதல் உதவியாக அமையும். சக பணியாளர்களிடம் பணி தவிர்த்த விஷயங்களில் விவாதம் கூடாது. சலுகை பெறுவதில் ஓரளவு அனுகூலம் உண்டு.


வியாபாரிகள்: வியாபாரிகளுக்கு சந்தையில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். விற்பனையில் ஆர்வமுடன் செயல்படுவதால் இலக்கு நிறைவேறும். பணவரவு அதிகம்பெற வாய்ப்பு அதிகரிக்கும். சரக்குகளை அதிகம் தந்து உதவ புதிய நிறுவனங்கள் முன்வரும். வியாபாரம் சார்ந்த வகையில் புத்திரரின் பங்களிப்பு குறைந்தஅளவில் கிடைக்கும். பாக்கி பணத்தைக் கேட்டுப் பெறுவதில் நிதான அணுகுமுறை கூடுதல் நற்பலன் தரும். உபதொழில் துவங்கும் முயற்சி எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றலாம்.


பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் தொந்தரவு அணுகாத அனுகூல நிலை பெறுவர். லட்சியத்துடன் பணிபுரிவதால் பணி இலக்கு எளிதில் நிறைவேறும். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் பணச் சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவது அவசியம். குடும்ப பணச்செலவில் சிக்கனம் அதிகரிக்கும். உடல்நலம் ஆரோக்கிய பலம்பெறும். தாய்வழி சீர்முறை பெறுவீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்றஅளவில் தொழில் நடத்துவர். அபிவிருத்திப்பணி தற்போது வேண்டாம்.


மாணவர்கள்: நன்றாக படித்து படிப்பில் கூடுதல் முன்னேற்றம் பெற அனுகூல சூழ்நிலை அமைந்து துணை நிற்கும். உரிய கவனத்துடன் படிப்பதால் தரதேர்ச்சி உயரும். படிப்புக்கான பணவசதி சராசரி அளவில் கிடைக்கும். விளையாட்டு, தனித்திறன் வளர்ப்பில் முன்னேற்றம் காண்பர்கள். பாராட்டு, பரிசு கிடைக்கும். நண்பர்களிடம் இருந்த மனக்கிலேசம் சரியாகும். எதிர் பார்ப்புகளை குறைத்துக்கொள்வதால் சீரான நட்பு வளரும். பொது விஷயங்களை நன்கு அறிந்து கொள்வீர்கள்.


அரசியல்வாதிகள்: அரசியல்பணி சிறக்க ஆன்மிக நம்பிக்கை உள்ள உங்கள் நண்பர்களின் உதவி கிடைக்கும். தகுந்தபடி பயன்படுத்துவதால் சமூகத்தில் நற்பெயர் கூடும். எதிரியால் இருந்த துன்பம் குறையும். குடும்ப உறுப்பினர்கள் இயன்ற அளவில் உங்கள் பணி சிறக்க உதவுவர். பிரச்னை தொடர்பான சமரச பேச்சுக்களில் ஓரளவு அனுகூலம் கிடைக்கும். பதவி, பொறுப்பை தக்கவைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் அவசியம்.
விவசாயம்: பயிர் மகசூல் அளவான முறையில் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் வருகிற லாப விகிதம் குடும்பத்தின் முக்கிய செலவுகளுக்கு உதவும். நில விவகாரங்களில் இருந்த சிரமம் குறையும். எதிர்பார்த்த பணக்கடன் பெற அனுகூலம் உண்டு.


பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் துன்பம் விலகி வாழ்வில் நன்மை சேரும்.


மிதுனம் 85/100


மற்றவர்களின் குறை பொறுக்காமல் அவர்களுக்கு உதவும் மிதுனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் ராகுவும், 12ம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். ராகு அனுகூலத்துடனும் கேது மாறுபட்ட குணத்துடனும் சஞ்சரிக்கின்றனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ஆயுள், வீடு, வாகன ஸ்தானத்திலும் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே தன, குடும்ப ஆதாய ஸ்தானங்களில் பதிகிறது. பேச்சில் சாந்தம் இருக்கும். மனம் உற்சாகத்துடன் செயல்படும். குடும்ப முக்கிய தேவைகளை நிறைவேற்ற தாராள செலவு செய்வீர்கள். இளைய சகோதரர்கள் அன்பு, பாசத்துடன் நடந்து முக்கிய தருணங்களில் உதவிபுரிவர். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற முயற்சி திட்டமிட்டபடி நிறைவேறும். தாய்வழி உறவினர் மதிப்புடன் நடத்துவர். புத்திரர் நற்குண, நற்செயல்களை பின்பற்றி படிப்பிலும் சுயதிறமையிலும் வளர்ச்சி காண்பர். பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். இஷ்ட, குலதெய்வ வழிபாடு நிறைவேற்றி பரிபூரண அருட்கடாட்சம் பெறுவீர்கள். பிணி, தொந்தரவு குறைந்து உடல்நல ஆரோக்கியம் படிப்படியாக முன்னேற்றம் பெறும். எதிரித்தனமாக நடந்தவர் இடம்மாறிப் போகிற நன்னிலை உருவாகும். வழக்கு, விவகாரத்தில் வெற்றி உண்டு. நிலுவை பணக்கடன் வசூலாவதும், கடன்பாக்கி சரிசெய்வதுமான அனுகூல பலன் பெறுவீர்கள். தம்பதியர் கடந்த நாட்களில் இருந்த கருத்துவேறுபாட்டை மறந்து பொறுப்புணர்வுடன் செயல்படுவர். மகிழ்ச்சியும் வளமான வாழ்க்கை முறையும் ஏற்படும். நண்பர் அன்பு பாராட்டி உயர்வான குணநலத்துடன் செயல்படுவர். ஆபத்து எதுவும் அணுகாத பாதுகாப்பு கிடைக்கிற வாழ்க்கை முறை பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிபெற புதிய யுக்தி பயன்படுத்தி முன்னேற்றமும் தாராள பணவரவும் அடைவீர்கள். வெளியூர் சுற்றுலா பயணம் திட்டமிட்டபடி நிறைவேறும்.

தொழிலதிபர்கள்: உற்பத்தியை பெருக்குவதில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். முயற்சி வெற்றி அடைந்து புதிய ஒப்பந்தங்களை பெற்றுத்தரும். பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைத்து உற்பத்தி தரம் உயரும். புதிய வீடு, வாகனம் திட்டமிட்டபடி வாங்குவீர்கள். எதிரி செய்த கெடுதல் முயற்சி பலமிழந்துபோகும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கி உறவினர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் இலகுவான மனதுடன் செயல்படுவர். பணிஇலக்கு சிறப்பாகவும் எளிதாகவும் நிறைவேறும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெறுவீர்கள். வீடு, வாகன கடனுதவி பெறுவதில் இருந்த தாமதம் விலகும். சக பணியாளர்கள் உரிய மதிப்பு, மரியாதையுடன் நடத்துவர். குடும்பத்தேவை பெருமளவில் பூர்த்தியாகும். இளம் பணியாளர்களுக்கு திருமண முயற்சி இனிதாக நிறைவேறும்.

வியாபாரிகள்: கூடுதல் மூலதனத்துடன் வியாபார அபிவிருத்தி பணியை திறம்பட நிறைவேற்றுவர். சந்தையில் இருந்த போட்டி குறையும். புதிய வாடிக்கையாளர் கிடைத்து விற்பனை உயரும். லாபவிகிதம் அதிகரிக்கும். புதிய கிளை துவங்கவும் கூட்டு சேர்ந்து வியாபார நிறுவனம் துவங்கவும் நல்யோகம் உண்டு. வியாபார கூட்டமைப்பில் சிலருக்கு பதவி, பொறுப்பு கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகைப்பயன், சம்பள உயர்வு கிடைக்கும். குடும்ப பெண்கள் குடும்ப நலன் சிறக்க தேவையான மாற்றங்களை பின்பற்றவர். கணவருக்கு சமூகத்தில் நற்பெயர் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் வளர்ச்சிப்பணி மேற்கொள்வர். கூடுதல் ஆர்டர் கிடைத்து விற்பனை உயரும். உபரி பணவரவு உண்டு.

மாணவர்கள்: படிப்பதில் இருந்த சிரமம் விலகி பாடங்களை எளிதாக புரிந்துகொள்வர். தரதேர்ச்சி அதிகரிக்கும். படிப்புக்கான பணவசதி பெறுவதில் முன்னேற்றம் உண்டு. சக மாணவர்களிடம் நற்பெயர் பெற நல்ல சூழ்நிலை உருவாகி உதவும். வேலைவாய்ப்பு பெறுவதிலும் நல்ல அனுபவம் ஏற்படும். சுற்றுலா பயணம் இனிய அனுபவத்தை பெற்றுத்தரும். உங்களின் நடைமுறை மாற்றத்தை பெற்றோர் மகிழ்ந்து போற்றுவர்.

அரசியல்வாதிகள்: சமூகப்பணி புரிவதில் புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுவீர்கள். ஆதரவாளர்களின் நம்பிக்கை பலம் கூடுதலாக துணை நிற்கும். அரசு தொடர்பான செயல்கள் பெருமளவில் திருப்திகரமாக நிறைவேறும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். எதிரித்தனம் செய்தவர், விலகிப் போகிற நன்னிலை உண்டு. புத்திரர்கள் இயன்ற அளவில் உதவுவர். தொழில் நடத்துபவர்கள் திறமைமிகு பணியாளர் கிடைத்து வளர்ச்சியும் உபரி வருமானமும் காண்பர். விவசாயிகள்: விவசாயப்பணிகளை மேற்கொள்ள தாராள பணவசதியும் அனுகூல சூழ்நிலையும் துணைநிற்கும். பயிர் மகசூல் அபரிமிதமான அளவில் கிடைக்கும். தானியங்களுக்கு சந்தையில் கூடுதல் விலை கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி இனிதே நிறைவேறும்.

பரிகாரம்: மீனாட்சி அம்மனை  வழிபடுவதால் தொழில் சிறந்து குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நிறைவேறும்.

கடகம் 70/100
சுறுசுறுப்புடன் செயல்பட்டு அனைவரிடமும் பாராட்டு பெறும் கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் ராகுவும், பதினொன்றாம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். கேதுவின் அமர்வு ஆதாய பலன்களை வளமாக பெற்றுத்தரும். ராகுவின் 3, 11ம் பார்வை களத்திர, தைரிய, புகழ் ஸ்தானத்தில் பதிகிறது. கேதுவின் மூன்றாம் பார்வை ராசியிலும், பதினொன்றாம் பார்வை பாக்ய ஸ்தானத்திலும் பதிகிறது. ஆன்மிக கருத்துக்களை அறிந்துகொள்ள கூடுதல் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். மனதிலும் உடலிலும் புத்துணர்வு ஏற்படும். பணவரவு அதிகம்பெற கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் பெறுவீர்கள். சமூகப்பணியிலும் ஆர்வம் வளரும். இளைய சகோதரர் சராசரி அன்புடன் நடந்துகொள்வர். வீடு, வானகத்தில் மராமத்துப் பணிகளைச் செய்வீர்கள். சிலர் வீடு, வாகனவகையில் புதிய மாற்றத்தையும் காண்பர். தாய்வழி உறவினர்களிடம் கருத்துவேறுபாடு உண்டாக வாய்ப்புண்டு. பேச்சில் முடிந்தளவு நிதானத்தைப் பின்பற்றுவது அவசியம். புத்திரரின் தேவையை நிறைவேற்றுவதில் தாமதம் உண்டாகும். அவர்களின் மனம் சங்கடப்படாத அளவிற்கு நீங்கள் செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்தின் வழியாக பெறுகிற வருமானத்திற்கேற்ப புதிய செலவினங்களும் ஏற்படலாம். இஷ்டதெய்வ வழிபாட்டினை நிறைவேற்றுவதற்கு சில தடங்கல் உண்டாகி விலகும். கடன், பிணி தொந்தரவுகள் இருந்து மீள்வதற்கான சூழல் உருவாகும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது நல்லது. சிறுவிஷயத்தில் கூட கருத்துவேறுபாடு கொள்வர். மனைவிவழி உறவினர்களிடத்தில் குடும்பத்தின் பழைய விஷயங்களைப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருந்து உபசரிப்புகளிலும் அதிகளவில் கலந்துகொள்ள வாய்ப்பு உருவாகும். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிபெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சீரான முன்னேற்றம் காண்பீர்கள். நிலுவைப்பணம் எளிதில் வசூலாகும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த நன்மையும், அதிர்ஷ்டகரமான வாய்ப்பும் உருவாகும்.

தொழிலதிபர்கள்: தொழில் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தி வெற்றி காண்பர். தொழில் உற்பத்தியும், தரமும் உயரும். பங்குதாரர்களின் ஒத்து ழைப்பும், ஆலோசனையும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைபப்தன் மூலம் உபரி பணவருமானம் பெறுவர். தான, தர்மம் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு நிறைந்த பதவி கிடைக்கும். உற்றார், உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். புதிய தொழில் துவங்குகிற முயற்சி சிறப்பாக நிறைவேறும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியிடத்தில் உள்ள சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவர். பணி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். பதவி உயர்வுபெறுவதில் இருந்த தாமதம் விலகி திருப்திகரமான பலன் கிடைக்கும். தாராள பணவரவில் குடும்பத் தேவை அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். வீடு, வானகத்தில் அபிவிருத்தி செய்து மகிழ்வீர்கள். வெகுநாளாக எதிர்பார்த்து வந்த கடனுதவி கிடைக்கப்பெறுவர். சக பணியாளர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் மங்கலநிகழ்ச்சி நடந்தேறும்.

வியாபாரிகள்: கூடுதல் மூலதனத்துடன் வியாபார வளர்ச்சிக் கான மாற்றங்களை திறம்பட மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். விற்பனை சிறப்பாக இருக்கும். உபரி பணவருமானம் உண்டு. வியாபாரத்திற்கான புதிய வாகனம் வாங்குகிற திட்டம் நிறைவேறும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் அபரிமிதமான நன்மை காண்பர். சரக்கு கிட்டங்கிகளில் கூடுதல் பாதுகாப்புநடைமுறையை பின்பற்ற நேரிடும். வியாபார வளர்ச்சி திருப்தி தரும் வகையில் அமையும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை சரியாக பின்பற்றி பணி இலக்கை நிறைவேற்றுவர். சலுகை பயன் பெறுவதில் இருந்த தாமதம் விலகி பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எளிதாக கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரிடம் தேவையற்ற விவாதம் தவிர்ப்பதால் வாழ்வியல் நடைமுறை சந்தோஷம் தரும். தங்க நகைகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து அதிக பணவரவு காண்பர். மாணவர்கள்: படிப்பில் சிறப்பான முன்னேற்றம் பெற லட்சியத்துடன் செயல்படுவீர்கள். ஆசிரியர், பெற்றோரின் அரவணைப்பால் மனதில் நம்பிக்கை பிறக்கும். சிறந்த தரதேர்ச்சி கிடைக்கும் விதத்தில் திட்டமிட்டு படிப்பர். வேலைவாய்ப்புதேடுகிறவர்களுக்கு பணியில் முன்னுரிமை கிடைக்கும். சக மாணவர்களுடன் படிப்பு சம்பந்தமாக பேசுவது மட்டுமே நல்லது. படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் கடந்தகாலத்தில் பெற்ற நற்பெயரை துணையாக கொண்டு செயல்படுவீர்கள். அரசு தொடர்பான விஷயத்தில் ஓரளவு அனுகூலம் உண்டு. ஆதர வாளர்களின் நம்பிக்கை தொடர்ந்து கிடைக்கும். அரசியல்பணிக்கு உதவுவதில் புத்திரரின் ஒத்துழைப்பை ஓரளவே எதிர்பார்க்கலாம். புதிய சொத்து சேர்க்கை அதிர்ஷ்டவசமாக பெறுவீர்கள்.

விவசாயிகள்: விவசாய பணிகளை மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் சிறப் பாக கிடைக்கும். இயற்கை உரத்தைப் பயன்படுத்தி விளைச்சலை மேம்படுத்துவர். எதிர்பார்த்தபடி மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் பெறும் ஆதாயம் சேமிப்பிற்குவழிவகுக்கும். கூடுதல் நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால் மனதில் மகிழ்ச்சியும் குடும்பத்தில் செல்வ செழிப்பும் ஏற்படும்.

சிம்மம் 60/100
உற்சாகத்தை உறுதுணையாகக் கொண்ட சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் ராகுவும், பத்தாம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். இரு கிரகங்களின் அமர்வு மாறுபட்ட வகையில் இருந்தாலும் பார்வை பலன்சில நன்மையை  பெற்றுத்தரும். ராகுவின் 3, 11ம் பார்வை எதிரி, வாக்கு ஸ்தானத்தில் பதிகிறது. கேதுவின் மூன்றாம் பார்வை விரயத்திலும் பதினொன்றாம் பார்வை அஷ்டம ஸ்தானத்திலும் பதி கிறது. இதனால் குடும்ப தேவைக்கான செலவு அதிகரிக்கும். பேச்சில் வருகிற கடினத்தன்மையை குறைத்துக் கொள்வதால் வாழ்வில் பல நலமும் பெறலாம். இளைய சகோதரர்கள் ஓரளவு அனுசரணையாக நடந்து கொள்வர். சமூகப்பணியிலும் ஈடுபாடு வளரும். வீடு, வாகனத்தில் இப்போது இருக்கிற வசதியை சரிவர பயன்படுத்துவது போதுமானதாகும். தாயின் மனதிற்கு குறைவு வராத அளவில் செயல்படுவதால் மட்டுமே குடும்ப ஒற்றுமை சீராகும். புத்திரர்கள்திறமைகளை வளர்த்து படிப்பு, வேலைவாய்ப்பில்நல்லமுன் னேற்றம் காண்பர். பூர்வ சொத்தின் மூலம் பெறுகிற வருமானத்தின் அளவு உயரும். குலதெய்வ வழிபாடு நிறைவேற்றி மகிழ்ச்சி பெறுவீர்கள். எதிரியின் கெடுசெயல்களை அறிந்து தேவையான பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவீர்கள். உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவிகரமாக இருக்கும். நிர்ப்பந்த கடன் ஓரளவு சரிசெய்வீர்கள். தம்பதியர் மனதில் ஒற்றுமை வளர்த்து சந்தோஷம் தருகிற வாழ்வுமுறையைபெறுவர். நண்பர்கள் உதவுவதும், உதவி பெறுவதுமான நிலை உண்டு. கூர்மையான பொருட்கள் மற்றும் இயந்திரங்களை கையாள்பவர்கள் நிதானமுடன் செயல்படுவது அவசியம். சுக சவுகர்யங்கள் திருப்திகரமான வகையில் இருக்கும். பாக்கிப்பண வசூலில் கூடுதல் முயற்சி நற்பலன் பெற உதவும். வெளியூர் பயணங்களில் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி திட்டமிட்டபடி நிறைவேறும்.

தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் எதிர்வரும் புதிய குறுக்கீடுகளை சரிசெய்வதால் மட்டுமே வளர்ச்சியும் வருமானமும் கூடும். உற்பத்தியை பெருக்குவதிலும் பொருள்களை தரம் உயர்த்துவதிலும் குறுக்கீடுகள் வரலாம். புதிய மாற்றங்களை பின்பற்றி தொழில் அனுகூலம் பாதுகாப்பீர்கள். ஒப்பந்தங்களை பெற லாப
விகிதத்தை குறைத்துக் கொள்வீர்கள்.  நிர்வாக நடைமுறை செலவு அதிகரிக்கும். திறமை நிறைந்த பணியாளர்களை தக்கவைப்பதில் கூடுதல் கவனம் கொள்வது நல்லது. அதிக முதலீடு உடனடி பயன்பாடு தராத சொத்து வாங்குவதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஒருமுகத்தன்மையுடன் பணிபுரிவதால் மட்டுமே இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். குளறுபடி ஓரளவு குறையும். சலுகை பயன் பெறுவதில் தாமதம் இருக்கும். குடும்பத்திற்கான பணத்தேவை அதிகரிப்பதால் சிறு அளவில் பணக்கடன் பெறுவீர்கள். சொந்த தொழிலில், துவங்கும் முயற்சிகளில் கூடுதல் பரிசீலனை உதவும். சக பணியாளர்கள் நல்ல மனதுடன் உதவிகரமாக செயல்படுவர். ஆபத்தான தருணங்களில் பூர்வ புண்ணிய பலன் துணைநின்று பாதுகாக்கும்.

வியாபாரிகள்: அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் வியாபார நடைமுறையை பாதுகாப்பது நல்லது. சந்தையில் போட்டி அதிகரிக்கும். லாபவிகிதம் குறைத்து புதிய நடைமுறையை பின்பற்றுவதால் தொழில் சீராகும். குடும்ப செலவுகளை நிர்வகிக்க கடன் பெறுவதும் சேமிப்பு பணம் செலவு ஆவதுமான தன்மை உண்டு. கூட்டு வியாபாரம் செய்பவர்கள் ஒருவருக்கொருவர் நம்பகத்தன்மையுடன் நடந்துகொள்வர்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் அதிக முயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்ற இயலும். சலுகைப்பயன் பெறுவதில் தாமதம் உண்டு. தகுதிக்கு மீறிய அளவில் பணம் கொடுக்கல், வாங்கல் கூடாது. குடும்ப பெண்கள் கணவரின் சொல்லை மதித்து நடப்பர். குடும்ப வாழ்வுமுறை சிறப்பாகும். செலவில் சிக்கனம் பின்பற்ற வேண்டியிருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் ஒத்துழைப்பினால் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

மாணவர்கள்: படிப்பில் நல்ல முன்னேற்றம் பெற ஞாபகத்திறன் நன்கு வளரும். ஆர்வமுடன் படிப்பதால் தரதேர்ச்சி அதிகரிக்கும். படிப்புக்கான செலவில் சிக்கனம் நல்லது. சக மாணவர்களுடன் நட்பு பலம்பெறும். பெற்றோரின் நம்பிக்கையை எளிதாக பெறுவீர்கள். வேலைவாய்ப்பு பெறுவதில் விபரீத ராஜயோக பலன் உதவியாக இருந்து சிறந்த வேலையை பெற்றுத்தரும்.

அரசியல்வாதிகள்: சமூகப்பணி புரிவதில் ஓரளவு ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் நடந்துகொள்வர். எதிரிகளின் கெடுசெயல் உணர்ந்து தகுந்த எதிர்நடவடிக்கை மேற்கொள்வீர்கள். வழக்கு விவகாரத்தில் ஓரளவு அனுகூலத் தீர்வு கிடைக்கும். பதவி, பொறுப்புக்களை பெறுவதில் வரும் குறுக்கீடுகளை மாற்று உபாயம் பின்பற்றி சரிசெய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்.

விவசாயிகள்: விவசாயப்பணி திட்டமிட்டபடி நிறைவேறும். சராசரி மகசூல், அள வான பணவரவு உண்டு. கால்நடை வளர்ப்பில் பராமரிப்பு செலவு கூடும். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தரக்கூடாது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை எளிமையான வகையில் நடத்துவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபடுவதால் உடல்நல ஆரோக்கியமும் தொழில் அபிவிருத்தியும் ஏற்படும்.

கன்னி 80/100

நல்லவர்களின் ஆலோசனையின்படி செயல்பட விரும்பும் கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் மிகுந்த அனுகூலத்துடன் ராகுவும், ஒன்பதாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் கேதுவும் பெயர்ச்சி யாகி உள்ளனர். ராகுவின் 3ம் பார்வை ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், பதினொன்றாம் பார்வை ராசியிலும் பதிகிறது. கேதுவின் 3ம் பார்வை ஆதாய ஸ்தானத்திலும் 11ம் பார்வை ஏழாம் இடத்திலும் பதிகிறது. ஒருவர் ஜாதகத்தில் கன்னிராசியில் ராகு அமர்ந்தாலும் கன்னிராசியை பார்த்தாலும் ராகுபகவான் நன்மைகளை அள்ளிவழங்கும் ஆற்றலும் மனப்பான்மையும் பெறுகிறார். இதனால் உங்கள் வாழ்வில் மிகுதியான ஆதாய நற்பலன் கிடைக்கும். பேச்சிலும் பிறருக்கு உதவுவதிலும் வள்ளல் தன்மை நிறைந்திருக்கும். பணவரவிற்கான வாய்ப்பை நழுவ விடாமல் முழுமையாகப் பயன்படுத்துவீர்கள். சமூகநலனில் அக்கறையுடன் செயல்படுவதால் புகழும் அந்தஸ்தும் பெறுவீர்கள். இளைய சகோதரருக்கு இயன்ற உதவிகளைச் செய்து மனமகிழ்ச்சி காண்பீர்கள். வீடு, வாகனத்தில் திருப்திகரமான வளர்ச்சியும், புதிய மாற்றங்களும் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் அன்பும், ஆதரவும் வாழ்வின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும். புத்திரர் படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் நல்ல வளர்ச்சி பெறுவதைக் கண்டு மனமகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். இஷ்ட, குலதெய்வ அருள் பரிபூரண துணைநிற்கும். பூர்வசொத்தில் வளர்ச்சியும், அதிர்ஷ்டவசமாக சிலருக்கு சொத்து சேர்க்கையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் பேணுவதில் தகுந்த அக்கறை வேண்டும். ஒவ்வாத உணவுவகை உண்ணக்கூடாது. இல்லாவிட்டால் மருத்துவச் செலவு செய்ய நேரிடும். மனைவி, அவர்வழி சார்ந்த உறவினர்களிடம் வீண்வாக்குவாதம் செய்து பகைமை பாராட்டுவீர்கள். முடிந்த அளவு விட்டுக்கொடுத்துச் செல்வது உறவுமுறையைப் பாதுகாக்க உதவும். இல்லாவிட்டால் தம்பதியர் இடையே சச்சரவு ஏற்பட வாய்ப்புண்டு. புதிய திட்டங்களை தீட்டுவதோடு, தகுந்த முன்னேற்பாடுகளையும் செயல்படுத்துவதால் நன்மை அதிகரிக்கும். தந்தையுடன் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம். கடின உழைப்பும், புதிய உத்தியையும் பின்பற்றி தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். பசு, பால் பாக்ய யோகம் உண்டு. குடும்பத்தில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சி
களைக் கண்டு சந்தோஷம் கொள்வீர்கள்.

தொழிலதிபர்கள்: தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்வீர்கள். தரம் சிறந்து கூடுதல் ஒப்பந்தம் கிடைக்கும். நிறுவனத்தின் புகழ் சமூகத்தில் மேலும் உயரும். பணியாளர் ஒத்துழைப்பும் முழுமையாக கிடைக்கும். உபரி பணவருமானம் கிடைக்கும். புதிய தொழில் துவங்க சிலருக்கு வாய்ப்பு அமையும். தொழில் கூட்டமைப்பில் சிலருக்கு பதவி, பொறுப்பு கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலபலன் உண்டு.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பான முறையில் தமது பணியை நிறைவேற்றுவர். கூடுதல் வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு திருப்திகரமாக கிடைக்கும். சக பணியாளர்களின்ஒத்துழைப்பு ஓரளவு கைகொடுக்கும். குடும்பத்தேவைகளை நிறைவேற்ற தாராள பணவசதி துணைநிற்கும். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை பயன் கிடைக்கப்பெறுவர்.

வியாபாரிகள்: சந்தையில் உருவாகும் மறைமுகப் போட்டியை சமயோசிதமாக எதிர்கொள்வீர்கள். விற்பனை சிறப்பதால் வியாபாரத்தில் சாதனை படைப்பீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். நிறுவன எதிர்கால வளர்ச்சிக்கு தேவையானவற்றை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் மத்தியில் பெருமையுடன் வலம் வருவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் திட்டம் இனிதாக நிறைவேறும். உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை, சீரான ஓய்வு பின்பற்றுவது அவசியமாகும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை திறம்பட நிறைவேற்றுவர். தாமதமான பதவி உயர்வு, பிற சலுகை எளிதாக வந்து சேரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. குடும்ப பெண்கள் கணவரின் மனமறிந்து செயல்பட்டு நடைமுறை வாழ்வை சிறப்புடையதாக்குவர். தாய்வழி சீர்முறை கிடைக்கப்பெற்று புகுந்த வீட்டில் பெருமை பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை அதிகப்படுத்தி லாபம் குவிப்பர். உபதொழில் துவங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

மாணவர்கள்: தகுதி, திறமையில் சிறந்து விளங்கி படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர். தரதேர்ச்சி அதிகரிக்கும். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக வந்துசேரும். நண்பர்கள் உங்கள் நலனில் அக்கறையும் ஆர்வம் கொண்டு செயல்படுவர்.  சுற்றுலா பயண வாய்ப்பு அமைந்து இனிய அனுபவம் பெற்றுத்தரும். வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு கவுரவம் பெறுகிற வகையில் நல்ல பணி காத்திருக்கிறது.

அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் முன்பைவிட ஆர்வமுடன் செயல்படுவீர்கள். மனதில் தைரியமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். ஆதரவாளர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுவீர்கள். அரசு தொடர்பான விஷயங்கள் நிறைவேறும். விரும்பிய பதவி,பொறுப்பு, சிறப்பான முறையில் வந்துசேரும். எதிரித்தனமாக நடந்தவர் கூட தங்கள் எண்ணத்தைக் கைவிட்டு ஓடிவிடுவர். தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை உயர்ந்து பணவரவு பெற்று மகிழ்வர்.

விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான சகல வசதியும் எளிதாக கிடைக்கும். மகசூல் சிறந்து சந்தையில் கூடுதல் விலை பெறுவர்.  சேமிக்கும் வகையில் பொருள் வரவு வந்து சேரும். நிலம் தொடர்பான விவகாரம் இருந்தால் சமரச தீர்வு நிச்சயம் ஏற்படும்.

பரிகாரம்: லட்சுமி குபேரரை வழிபடுவதால் தொழில் சிறந்து விளங்குவதோடு குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும்.

துலாம் 60/100

நேர்மையை பின்பற்றுவதில் அதிக ஆர்வமுள்ள துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகுவும், எட்டாம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். இரு கிரகங்களின் பெயர்ச்சியால் உங்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். எதிர்கால வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். ராகுவின் மூன்றாம் பார்வை வீடு, வாகன ஸ்தானத்திலும், பதினொன்றாம் பார்வை பயண ஸ்தானத்திலும் பதிகிறது. இதனால் வீடு, வாகனத்தில் தேவையான மாற்றங்களைச்செய்து முடிப்பீர்கள். புதிய வாகனவசதி பெறவும், அதிக அளவில் பிரயாணம் மேற் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. கேதுவின் மூன்றாம் பார்வை ஜீவன ஸ்தானத்திலும், 11ம் பார்வை பிணி ஸ்தானத்திலும் பதிவதால் பணிபுரியும் இடங்களில் நிதான போக்குடன் செயல்படுவது அவசியம். பணவரவு அதிகம் பெற கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுப்பீர்கள். இளைய சகோதரர் வகையில் திட்டமிட்ட படி சுப நிகழ்ச்சியைச் சிறப்பாக நிறைவேறும். சமூகப்பணியில் ஆர்வம் உண்டாகும். தாயின் அன்பு பரிபூரணமாக கிடைக்கும். விலை மதிப்புள்ள பொருட்கள், சொத்து ஆவணம் கவனத்துடன் பாதுகாப்பது நல்லது. புத்திரர், குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து பெற்றோர் சொல்படி நடந்து கொள்வர். இஷ்ட,குல தெய்வ வழிபாடு நிறைவேற்றுவதன் மூலம் மனநிம்மதி காண்பீர்கள். பித்தம், கபம் சார்ந்த பிணிகளில் அடிக்கடி அவதிப்பட நேரிடும். உணவு பழக்கத்தை முறையாகப் பின்பற்றுவது உடல் நலனை மேம் படுத்தும். தம்பதியர் குடும்பத்தில் சிறு பிரச்னைக்குக் கூட வாக்குவாதத்தில் ஈடுபடுவர். விட்டுக்கொடுத்து நடப்பதன்மூலம் குடும்பம் சீராகும். நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறையை பின்பற்றுவது அவசியம். பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிப்பதை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளைச் செய்து அவ்வப்போது குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்துவீர்கள். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிபெற புதிய நடைமுறைகளைக் கையாண்டு தகுந்த வெற்றியும் திட்டமிட்ட பணவரவும் காண்பீர்கள். மூத்த சகோதரரின் வழிகாட்டுதல் உங்களை வாழ்வில் உயர்த்தும்.

தொழிலதிபர்கள்: தொழிலில் உற்பத்தியை உயர்த்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நிலுவை பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். உங்கள் நலனில் ஆர்வம் கொண்ட நல்லவர்களின் ஆலோசனை கிடைக்கும். தொழில் மூலதனத்தை அதிகரிக்கும் நோக்குடன் சிலர் கடன் பெறுவர். உற்பத்தி தரம் சிறப்பதோடு, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். பணியாளர்களின் ஒத்துழைப்பு சீராகக் கிடைக்கும். அனுபவம் இல்லாத மாற்றுத் தொழில் துவங்க முயற்சிக்க வேண்டாம்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணி சிறக்க தேவையான புதிய நடைமுறையை பின்பற்றுவது அவசியம். கவனக்குறைவால் நிர்வாகத்தின் கண்டிப்பை சிலர் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். சலுகைப்பயன் கேட்பதில் நிதான அணுகுமுறையும், பொறுமையும் தேவைப்படும். சக பணியாளர்களுடன் விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். செலவிற்கு தேவையான பணம் சீராகக் கிடைக்கும்.

வியாபாரிகள்: சந்தையில் போட்டி அதிகரிக்கும். விற்பனையில் புதிய மாறுதல்களை ஏற்படுத்தி போட்டியைச் சமாளிப்பர். லாபவிகிதத்தை குறைத்துக்கொள்வதன் மூலம் விற்பனை இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். சரக்கு வாகன வகையில் அனுகூல பலன் தொடர்ந்து கிடைக்கும்.வியாபார நிறுவனத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் குடும்பத்தினரின் உதவி சீராகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வதால் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகக் கூடும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கவனத்துடன் பணிபுரிவதால் மட்டுமே குளறுபடி வராத தன்மை இருக்கும். நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுவதால் தொழில் இலக்கு சீராக நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதில் தாமதம் உண்டாகும். குடும்ப பெண்கள் குடும்ப நலன் கருதி விட்டுக்கொடுக்கும் மனதுடன் செயல்பட்டால் மட்டுமே வாழ்வு சந்தோஷமாக அமையும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்தில் கடின உழைப்பின் மூலம் உற்பத்தி, விற்பனையை சீராக நடத்துவர். இரவல் நகை கொடுக்க, வாங்க கூடாது.

மாணவர்கள்: வெளிவட்டார பழக்கவழக்கங்களை குறைத்துக் கொள்வதால் மட்டுமே படிப்பதில் மன ஈடுபாடு அதிகரிக்கும். படிப்பில் எதிர்பார்த்த தரதேர்ச்சிபெற கூடுதல் முயற்சியும் பயிற்சியும் தேவை. வீண் பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள் கவனம். சக மாணவர்களுடன் சுமூக நட்புறவு இருக்கும். பெற்றோ ரின் அறிவுரையை ஏற்று செயல்படுவர். உறவினர் பாராட்டும் விதத்தில் நடப்பர். வேலைவாய்ப்பு பெற சமூகத்தில் அந்தஸ்து மிக்கவர்களின் உதவி கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: எவரையும் அன்பு நிறைந்த மனதுடன் அணுகி செயல்படுவீர்கள். ஆதரவாளர்களின் மனதில் உங்கள் மீதான செல்வாக்கும், நல்ல எண்ணமும் அதிகரிக்கும். இருக்கிற பதவி, பொறுப்பின் பணி சிறப்புபெற ஆர்வத்துடன் உழைப்பீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்று செயல்பட நல்வாய்ப்பு வரும். எதிரித்தனமாக செயல்பட்டவர்கள் இடம்மாறிப் போகிற நன்னிலை ஏற்படும். புத்திரர் இயன்ற அளவில் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவர். தொழில் நடத்துபவர்கள் அளவான உற்பத்தி, சராசரி பணவரவு காண்பர்.

விவசாயிகள்: பயிர் மகசூல் சராசரி அளவில் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் பெறும் வருமானம் குடும்பத்தின் அத்தியாவசிய செலவுகளுக்கு உதவிகரமாக இருக்கும். நிலத்தின் பேரில் கடன் பெறுபவர்கள் நம்பகமான இடங்களைத் தேர்வு செய்வது நல்லது.

பரிகாரம்:  துர்க்கையம்மனை வழிபடுவதால் தொழில் ஏற்படும் சிரமங்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.


விருச்சிகம் 55/100

செயலில் திறமையை வெளிப்படுத்த துடித்திடும் விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் ராகுவும், ஏழாம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி அமர்ந்துள்ளனர். இரு கிரகங்களின் அமர்வும் உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள விஷயங்களை அறிந்துகொள்ள உதவும். ராகுவின் மூன்றாம் பார்வை புகழ், தைரிய ஸ்தானத்திலும் பதினொன்றாம் பர்வை ஆதாய வரவு ஸ்தானத்திலும் பதிகிறது. இதனால் நற்செயல்கள் பல புரிந்து புகழ் பெறுவீர்கள். புதியவர்களின் நட்பும் உங்கள் நலனுக்கு துணை நிற்கும். கேதுவின் மூன்றாம் பார்வை பாக்ய ஸ்தானத்திலும், பதினொன் றாம் பார்வை புத்திர, பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதிகிறது. இதனால் பூர்வ புண்ணிய நற்பலன் துணைநின்று உதவும். பேசுவதில் இருந்த தயக்கம் விலகும். புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். இளைய சகோதரர் நம்பகத்துடன் உங்களிடம் நடந்து கொள்வர். வீடு, வாகனத்தில் இருக்கிற வசதியைப் பயன்படுத்துக் கொள்வீர்கள். தாய்வழி உறவினர்கள் பாசத்துடன் நடந்து கொள்வர். புத்திரர் விவேக சிந்தனையுடன் செயல்படுவதால் நன்மை, தீமைகளை உணர்ந்து செய்யும் செயல்களில் ஈடுபடுவர். அவர்களின் திறமை மற்றும் வளர்ச்சி கண்டு மனம் மகிழ்வீர்கள். பூர்வசொத்தில் கிடைக்கிற வருமானத்தில் இருந்து ஓரளவு தான, தர்ம பணிகளை செய்வீர்கள். எதிரியின் கெடுசெயலை தகுந்த வகையில் முறியடிப்பீர்கள். உடல்நலஆரோக்கியம் பேணுவதில் கவனம் வேண்டும். உஷ்ண சம்பந்தமான வியாதிகள் தலைதூக்கும். மருத்துவ உதவியும் அவ்வப்போது தேவைப்படும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற அவ்வப்போது கடன் பெறுவதும் உண்டு. அதே சமயத்தில் சிலருக்கு எதிர்பாராத பணவருமானம் கிடைக்கும் மாறுபட்ட நிலையும் உண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் கருத்துபேதம் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவர். மனைவியின் உடல்நலத்தில் அக்கறை தேவைப்படும். தகுந்த மருத்துவ சிகிச்சையினால் சரி செய்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களில் ஆதாயத்தை எதிர்பார்க்க இயலாது. அதன் முக்கியத்துவம் கருதி மேற்கொள்வது நல்லது. ஆடம்பர வாழ்வுமுறை கிடைத்தாலும் உங்கள் மனம் அதில் ஈடுபடாமல் விலகி நிற்பதை உணர்வீர்கள். தொழில் வளர்ச்சி பெற கிடைக்கிற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவது அவசியம். சீரான வளர்ச்சி பெறுவதோடு, நிலுவைப்பணத்தையும் முயற்சி செய்து வசூல் செய்வர். திட்டமிட்டபடி சுபவிஷயங்களை நிறைவேற்ற செலவு அதிகாகும். வீட்டில் அடிக்கடி உறவினர்களின் வருகையால் செலவு கட்டுக்கடங்காமல் செல்லும்.

தொழிலதிபர்கள்: தொழிலில் வளர்ச்சி பெற தேவையான நடைமுறைகளைச் செயல்படுத்துவதில் அக்கறை கொள்வீர்கள். நல்லவர், அனுபவசாலியின்ஆலோசனை களை ஏற்று நடப்பீர்கள். சீரான உற்பத்தியும், ஓரளவு பணவரவு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். நிர்வாக நடைமுறைச்செலவு கட்டுக்கடங்காமல் செல்லும். தொழில் கூட்டமைப்பில் கவுரவம் தருகிற பதவி, பொறுப்பு கிடைக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் சில குளறுபடிகளை எதிர்கொள்வர். புதிய உத்திகளைப் பின்பற்றி பணி இலக்கினை நிறைவேற்றுவது நன்மை தரும். சக பணியாளர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற சில சந்தர்ப்பங்களில் கடன் பெறுவீர்கள். வெளியூர் பயணத்தைப் பயன் அறிந்து மேற்கொள்வதால் நன்மை உண்டாகும்.

வியாபாரிகள்: வியாபார வளர்ச்சிக்கான உத்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் பிறக்கும். சந்தைப் போட்டியில் இருந்து வந்த பரபரப்பு குறையும்.சராசரி விற்பனையும், அதற்கேற்ற பணவரவும் கிடைக்கும். பணத்திற்காகவோ, வேறு விஷயங்களுக்காகவோ யாருக்கும் ஜாமீன் கொடுப்பது நல்லதல்ல. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு வரவு செலவு இனங்களில் கருத்துபேதம் ஏற்பட வாய்ப்புண்டு. அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் விற்பனை இலக்கினை எட்டிப் பிடிப்பர்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே நிர்வாகத்திடம் நற்பெயர் பெற முடியும். பதவி உயர்வு பெறுவதில் பொறுமை காக்க நேரிடும். குடும்ப பெண்கள் குடும்பத்தின் வருமானத்தைக் கவனத்தில் கொண்டு செலவைக் குறைத்துக் கொள்வது நன்மை தரும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, தரம் சிறக்க தீவிரமாகப் பாடுபடுவர். அளவான விற்பனை, சுமாரான பணவரவு என்ற நிலை தொடரும்.

மாணவர்கள்: கடந்த காலங்களில் இருந்து வந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள போராடுவீர்கள். வளர்ச்சி பெறுவதற்கான முயற்சி பேச்சளவில் மட்டும் இல்லாமல் செயல்பாட்டில் கொண்டுவர முயல்வது அவசியம். சக மாணவர்களிடம் கருத்து வேறுபாட்டால் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். எதிர்கால நலனுக்காக பெற்றோர், ஆசிரியர் சொல்லும்ஆலோசனையை கேட்டு செயல்படுவது நல்லது. கடின முயற்சியின் மூலம் கல்வியில் வளர்ச்சி சீராகும். வேலைவாய்ப்பு பெறுவதில் ஓரளவு அனுகூலம் உண்டு.

அரசியல்வாதிகள்: உங்களுக்கு வரவேற்பு கிடைக்கிற சூழ்நிலைகளை உணர்ந்து பேசுவது நன்மைபெற உதவும். பதவி, பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கவனக்குறைவும் அதனால் ஒழுங்கு நடவடிக்கையும் வரலாம். சமூகப்பணியில் அக்கறையுடன் செயல்பட்டால் மட்டுமே ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பெறமுடியும். எதிரியிடம் விலகி செயல்படுவதால் சிரமம் அணுகாமல் உங்களைக் காத்திடலாம். முக்கிய செல வுகளை நிறைவேற்ற சிலர் பணக்கடன் பெறுவர். தொழில் நடத்துபவர்களுக்கு மிதமான விற்பனையும், ஓரளவு லாபமும்கிடைக்கும்.

விவசாயிகள்: பயிர் விளைவிக்க தேவையான வசதிகளை பெறுவதில் தாமதம் ஏற்படும். கூடுதல் உழைப்பினால் மகசூல் சராசரி அளவில் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவே லாபம் உண்டு. நிலம் தொடர்பான ஆவணம் பிறர் பொறுப்பில் தரக்கூடாது. சிலருக்கு நிலத்தொடர்பான பிரச்னை உண்டாகக் கூடும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வாழ்வில் உண்டாகும் சிரமம் அனைத்தும் விலகி நற்பலன் உண்டாகும்.

தனுசு 75/100

வருமானத்திற்கு ஏற்ப குடும்பச் செலவை திட்டமிடும் தனுசுராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் ராகுவும், ஆறாம் இடத்தில் அனுகூலத் தன்மையுடன் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் மூன்றாம் பார்வை தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும், பதினொன்றாம் பார்வை தொழில் ஸ்தானத்திலும் பதிகிறது. தொழில் வளர்ச்சிக்கான நல்ல அனுகூலபலன் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சி பேசி முடிப்பதற்கான நல்ல சூழல் உருவாகும். பேசுவதில் சற்று கடுமை உண்டாக இடமுண்டு. முடிந்த அளவுக்கு பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும்.உறவினர் சமூகத்தில் கூடுதல் மதிப்பு, மரியாதை பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் வளர்ச்சி மாற்றமும் புதிதாகச் சொத்து வாங்குவதற்கான நல்ல யோகமும் உண்டாகும். புத்திரர் நற்குணடத்துடன் நடந்து படிப்பில் முன்னேற்றம் காண்பர். பெற்றோரிடம் பாச பந்தம் உண்டாகும். அவர்களின் தேவைகளை நிறைவேற்றி ஆசியைப் பெறுவீர்கள். பூர்வசொத்தில் எதிர்பார்த்த பண வருமானம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும்.
இஷ்ட, குலதெய்வ அருள் பரிபூரணமாக துணை நிற்கும். ஆன்மிகப் பணிகளை முன்னின்று சிறப்பாக நடத்துவீர்கள். எதிரியால் இருந்த தொல்லை பெருமளவில் குறையும். நிம்மதி நிறைந்த வாழ்வு முறை அமையும். நீண்டகால கடன்பாக்கியை ஓரளவு அடைப்பதோடு, சேமிப்பதற்கும் வழிவகை காண்பீர்கள். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு உண்டாகும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்பத்திற்குப் பெருமை சேர்ப்பர். குடும்பத்தில் திட்டமிட்ட மங்கல நிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். நண்பர்கள் உங்களின் தகுதி, திறமையை வளர்த்துக்கொள்ள உதவிகரமாக செயல்படுவர். ஆயுள்பலம் கேதுவின் அனுகூல பார்வையால் அதிகரிக்கும். உடல்நலம் ஆரோக்கியத்துடன் திகழ்வதால் கடமையில் ஆர்வம் கொள்வீர்கள். விருந்து, உபசரிப்பு உறவினர்கள் வகையில் அதிகம் உண்டு. தந்தையின் ஆலோசனையைச் செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொள்வீர்கள். தொழில் வளர்ச்சி பெற புதிய திட்டங்களை செயல்படுத்தி நற்பலன் காண்பீர்கள். வெளியூர் பயணம் சில நேரங்களில் மனச்சோர்வையும், உடல் அசதியையும் தரக்கூடும். பயன் அறிந்து செயல்படுவதால் நன்மை உண்டு.
தொழிலதிபர்கள்: தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருந்த முட்டுக்கட்டை விலகும். உற்பத்தியில் வளர்ச்சியும், தரமும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழிலில் கூடுதல் மூலதனம் செய்து லாபத்தை உயர்த்துவர். விலகிச் சென்ற வாடிக்கையாளர் திரும்பவும் உங்களை நாடி வருவர். உபதொழில் துவங்கவும் புதிய சொத்து வாங்கவும் யோகம் உண்டு. நிறுவனம் சார்ந்த வழக்குகளில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் திட்டமிட்டபடி சுபகாரியம் சிறப்பாக நிறைவேறும்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவர். பணி இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை பயன் சுணக்கமின்றி கிடைக்கும். சக பணியாளர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு கொள்வர். குடும்பத்தினரின் தேவையை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கூடுதலாக சொத்து சேர்க்கை உருவாகும். சக பணியாளர்களும், உறவினர்களும் மதிப்புடன் நடத்துவர். விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டு மனநிறைவைக் காண்பர்.

வியாபாரிகள்: சந்தையில் இருந்த போட்டி பொறாமை நீங்கி அனுகூலமான நிலை உண்டாகும். புதிய வாடிக்கையாளர் அதிகம் கிடைப்பதால் மனதில் தன்னம்பிக்கை வளரும். புதுமையான பொருட்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளரை கவர்ந்து விடுவர். மூலதனத்தை அதிகரித்து விற்பனையை உயர்த்துவீர்கள். லாபவிகிதமும் கணிசமாகக் கூடும். புதிய கிளை துவங்குகிற முயற்சி இனிதாக நிறைவேறும். சரக்கு வாகனம் கூடுதலாக வாங்க தாராள பணவசதி கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் தகுதி, திறமையை வெளிப்படுத்தி நற்பலன் பெறுவர். பணி சிறந்து நிர்வாகத்தின் நன்மதிப்பு உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகை பெறுவீர்கள். குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பு, பாசம், சீராக கிடைக்கப் பெறுவர். குடும்ப செலவுகளுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். அவரவர் தகுதிக்கேற்ப ஆபரண சேர்க்கை பெற்று மகிழ்வர். சயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி, விற்பனை வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். தொழிலுக்காக வாங்கிய கடனை அடைப்பதோடு, எதிர்கால நலன் கருதி சேமிக்கவும் செய்வர்.

மாணவர்கள்: ஒருமுகத் தன்மையுடன் படித்து உயர்ந்த தரதேர்ச்சி அடைவர். அன்றாடம் நடத்தும் பாடங்களை அன்றன்று திட்டமிட்டு முடித்து நிறைவு காண்பர். சக நண்பர்களின் கல்விக்கு தங்களால் முடிந்த உதவிகளையும் செய்வர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். வேலைவாய்ப்பு பெறுவதிலும் முன்னுரிமை உண்டு. விளையாட்டு,  கலை துறையில் சிலருக்கு பாராட்டு, பதக்கம் கிடைக்கும். உங்கள் திறமை, சாதனையை பெற்றோரும், ஆசிரியரும் வியந்து போற்றுவர்.

அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் நட்புடன் பழகி சூழ்நிலை காரணமாக விலகிச் சென்றவர் கூட விரும்பி வந்து நட்பு கொள்வர். சமூகப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த பதவி, பொறுப்புகிடைக்கும்.ஆதரவாளர் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ள உங்களை நம்பிக்கையுடன் அணுகுவர். அரசு தொடர்பான அதிகாரிகளிடம் செல்வாக்கு உயரும். புத்திரரின் உதவியும் அரசியல் பணிக்கு கைகொடுக்கும். தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி பணவருமானம் காண்பர்.

விவசாயிகள்: பயிர் வளர்க்க அனைத்து வசதிகளும் திருப்திகரமாக கிடைக்கும். மகசூல் சிறந்து சந்தையில் நல்ல விலை கிடைக்கப் பெறுவீர்கள். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டு. நிலப்பிரச்னையில் இருந்து முழுமையாகவிடுபட்டு மனநிம்மதி காண்பர்.

பரிகாரம்: திருக்கடையூர்அபிராமி அன்னையை வழிபடுவதால் தொழில் சிறந்து குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நிறைவேறும்.

மகரம் 80/100

உழைப்பும் பணிவும் கொண்டு வாழ்வில் உயர்வு பெறும் மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் மிகுந்த அனுகூலத்துடன் ராகுவும் ஐந்தாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் மூன்றாம் பார்வை ராசியிலும் பதினொன்றாம் பார்வை பிதா, பாக்ய ஸ்தானத்திலும் பதிகிறது. இதனால் மனதில் புத்துணர்வு, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வாழ்வியலின் நடைமுறை தேவைகள் அனைத்தும் எளிதில் நிறைவேறும். கேதுவின் மூன்றாம் பார்வை களத்திர ஸ்தானத்திலும், பதினொன்றாம் பார்வை புகழ், தைரிய ஸ்தானத்திலும் பதிகிறது. எந்த செயலிலும் புதுமையைப் புகுத்தி தகுந்த வெற்றி காண்பீர்கள். இளைய சகோதரருக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தின் வழியாக பெறுகிற பலன் தொடர்ந்து சீராக கிடைத்திடும். புத்திரர் சேர்க்கை சகவாசம் காரணமாக சில விஷயங்களில் மன குழப்பத்துடன் நடந்துகொள்ள கிரக சூழ்நிலை உள்ளது. அவர்களின் செயல்பாடுகளைக் கவனித்து வழி நடத்துவதும், தகுந்த அறிவுரை கூறுவதும் மிகவும்அவசியம். உடல்நலம் ஆரோக்கியத்துடன் திகழும். நிலுவை கடன்பாக்கியை ஓரளவு சரிசெய்வீர்கள். கணவன், மனைவி ஒற்றுமையை பொறுத்து குடும்பத்தின் மீதான அபிப்ராயம் சமூகத்தில் உண்டாகும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு கொள்வதற்கு இடமுண்டு. குடும்ப நலன் கருதி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது அவசியமாகும். நண்பர்களின் கருத்துக்களை விமர்சிப்பதில் நிதான நடைமுறை பின் பற்றவது நல்லது. புதியவர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களுடன் பேசிப்பழகுவதால் மனதில் உற்சாகம் பிறக்கும். சிரமம் உருவாகிற இடங்களில் இருந்து விலகிச் செயல்பட சமயோசித புத்தியும் தெய்வ அனுகூலமும் துணைநின்று உதவும். உறவினர்கள் வகையில் திருமணம், வரவேற்பு, விருந்து உபசரிப்புகளில் கலந்து கொள்வீர்கள். தொழில் சார்ந்த வகையில் குறுக்கீடுகளைப் போக்கி, சுயதிறமையை வெளிப்படுத்துவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் பேச்சுவார்த்தை முடிந்து உங்களுக்கான பங்கைப் பெற்றுக் கொள்வீர்கள். வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் தரும் இனிய அனுபவத்தைப் பெறுவீர்கள்.

தொழிலதிபர்கள்: தொழிலில் இருந்த மாறுபட்ட சூழ்நிலை மறைந்துஅனுகூலத் தன்மை உருவாகும். உங்களின் வெகுநாள் எண்ணத்தை தகுந்த திட்டமிதலுடன் செயல்படுத்துவீர்கள். உற்பத்தியும் தரமும் சிறந்து விளங்குவதால், ஆதாய பணவரவு அதிகரிக்கும். நிலுவை பணக்கடனைப் பெருமளவில் அடைப்பீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு தொழில் வளர்ச்சிக்கு கைகொடுக்கும். தொழில் கூட்டமைப்பில் நிறுவனத்திற்கு விருது, பாராட்டு வந்து சேரும் காலகட்டம் இது.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணிபுரிவதில் இருந்த குளறுபடி சரியாவதோடு, செயலில் உற்சாகமும் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு பணி இலக்கை பூர்த்தி செய்வீர்கள். தாமதமான சலுகைப்பயன்கள் தானாக உங்களைத் தேடிவரும். சக பணியாளர்கள் மத்தியில் செல்வாக்கும்,சொல்வாக்கும் கிடைக்கும். குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை தாராளமாகச் செய்து மனநிறைவு காண்பீர்கள். மகிழ்ச்சியும் குதூகலமும் வாழ்க்கை நடைமுறையில் பெற்று சிறப்பீர்கள்.
வியாபாரிகள்: வியாபார வளர்ச்சிக்கு உதவும் வகையில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். அதிக உழைப்பின் பயனாய் விற்பனை விகிதம் உயரும். சந்தையில் இருந்து வந்த மறைமுகப் போட்டி குறையும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிறுவனத்தின் நன்மதிப்பு உயரும். புதியகிளை துவங்குவதற்கான அனுகூலம் உண்டு. அடிக்கடி வியாபார விஷயமாக வெளியூர் சென்றுவரவேண்டி வரும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் திறம்படச் செயல்பட்டு பணியை நிறைவேற்றுவர். இலக்கு நிறைவேறி நிர்வாகத்தினரிடம் நன்மதிப்பு உருவாகும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எளிதில் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பு, பாசம் கிடைத்து சந்தோஷ மனதுடன் செயல்படுவர். குடும்ப செலவுக்கு பணவசதி திருப்திகரமாக இருக்கும். கர்ப்பிணி பெண்கள் உடல் நல பாதுகாப்பில் தகுந்த கவனம் கொள்வது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் தாராள உற்பத்தி, அதிக விற்பனை என்கிற இலக்கை எட்டுவர். உபரி பணவரவு சேமிப்புக்கு வழிவகுக்கும்.
மாணவர்கள்: படிப்பதற்கு முக்கிய தேவையான ஞாபகத்திறன் அதிகரிக்கும். ஆர்வமுடன் படித்து உயர்ந்த தரதேர்ச்சி பெறுவீர்கள். படிப்புக்கான அனைத்து வசதிகளும் திருப்திகரமாக கிடைக்கும். சக மாணவர்கள் நட்பு பாராட்டுவர். நல்ல வேலைவாய்ப்பை பெறும் நோக்கில் உள்ளவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. பொழுதுப் போக்குச் சுற்றுலா செல்லும் எண்ணம் இனிதாக நிறைவேறும். பெற்றோர் உங்களிடம் பாசத்துடன் நடந்துகொள்வர்.

அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் திட்டமிட்ட இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். அரசு விஷயங்களில் அதிகாரிகளின் உதவி பலமாக கிடைக்கும். ஆதரவாளர்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வீர்கள். எதிரியால் இருந்து வந்த தொந்தரவு மறையும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான சூழல்நிலை உருவாகும். சொத்து வாங்கும் முயற்சியில் ஓரளவு அனுகூலம் உண்டு. புத்திரர் உங்கள் அரசியல் பணிக்கு அவ்வப்போது உதவுவர். தொழில் நடத்துபவர்களுக்கு பணியாளர்களின் உதவியால் உற்பத்தி பெருகும். உபரி பணவரவு உண்டு.

விவசாயிகள்: ஆர்வமுடன் பணிபுரிந்து நல்ல விளைச்சலைப் பெற்று மகிழ்வீர்கள். தானியங்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் திருப்திகரமான லாபம் அடைவர். நிலம் தொடர்பான விவகாரம் இருப்பவர்களுக்கு சுமூகத்தீர்வு காண்பர். குடும்பத்தில் திட்டமிட்டபடிசுபநிகழ்ச்சி நிறைவேறும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் தடைகள் அனைத்தும் நீங்கி, தொழில் நல்ல வளர்ச்சியும், அதிக லாபமும் கிடைக்கும்.

கும்பம் 55/100
சொல்லிலும் செயலிலும் நேர்மையைப் பின்பற்றும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் ராகுவும் நான்காம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். இரு கிரகங்களின் அமர்வும் உங்களின் செயல்களை சோதித்து பார்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இதனால் முன்யோசனை, தற்காப்புடன் நடந்து கொள்வது அவசியமாகும். ஆன்மிக கருத்துக்களை பேசுவதில் ஆர்வம் கொள்வீர்கள். சமூகத்தில் நற்பெயர் பெறும் விதத்தில் உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் அமையும். வீடு, வாகனத்தில் தகுந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது அவசியம். வாகனத்தில் நம்பகத்தன்மை இல்லாதவர்களுக்கு இடம் தருவது கூடாது. தாய்வழி உறவினரின் எதிர்பார்ப்பை இயன்ற அளவில் நிறைவேற்றுவீர்கள். புத்திரர் உங்களிடம் அன்பு, பாசத்துடன் நடந்துகொள்வர். இஷ்ட தெய்வ வழிபாட்டினை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வாதம், பித்தம் தொடர்பான பிணி தொந்தரவால் அவதிப்பட நேரிடும். உரிய மருத்துவ சிகிச்சை, தகுந்த உணவுப்பழக்கம் மேற்கொள்வது நல்லது. எதிரிகள் உங்கள் பாதையில் இருந்து விலகிச் செல்வர். பணக்கடனை ஓரளவு சரிசெய்வீர்கள். தம்பதியர் குடும்பநலன் சிறக்க விட்டுக்கொடுக்கும்மனப்பான் மையை வளர்த்துக் கொள்வது அவசியம்.
நண்பர்களிடம் மிதமான நட்பும் அளவான உதவியும் கிடைக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிப்பது நல்லதல்ல. தந்தைவழி உறவினர்களிடம் குடும்பத்தின் பழைய விவகாரம் பேசுவதால் மனக்கசப்பு, நிம்மதி குறைவு ஏற்படலாம். கவனம் தேவை. தொழில் சார்ந்த வகையில் சந்திக்கும் குறுக்கீடுகளைச் சரிசெய்ய கடின முயற்சி தேவைப்படும். புதிய திட்டங்களை செயல்படுத்தி வளர்ச்சி காண்பீர்கள். சராசரி பணவரவு வந்து சேரும். நிலுவைப்பணம் எளிதில் வசூல் செய்ய நல்ல சூழ்நிலை வாய்க்கும். ஆடம்பரச் செலவைக் குறைத்துக் கொள்வது சிக்கனத்திற்கு வழிவகுக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை எளிய முறையில் நடத்துவதால் கடன் பெறுவதை தவிர்க்கலாம். அடிக்கடி ஏற்படும் பயண அலைச்சலால் மனச்சோர்வுக்கு ஆளாவீர்கள். வெளியூர் பயணங்களின்போது பொருட்களை கவனத்துடன் பாதுகாப்பது நல்லது.

தொழிலதிபர்கள்:  தொழில் வளர்ச்சிபெற தேவையான புதிய மாற்றங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். மிதமான உற்பத்தி வளர்ச்சியும், அதற்கேற்ப ஓரளவு லாபமும் கிடைக்கும். எதிர்கால வளர்ச்சிக்கான விஷயங்களில் அக்கறை கொள்வீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாரான அளவில் கிடைக்கும். நிர்வாக நடைமுறைச் செலவு அதிகரிப்பதை சிக்கனநடவடிக்கையின் மூலம் கட்டுப்படுத்துவது நன்மை தரும். ஒப்பந்தங்களைப் பெறுவதிலும் நிதானமான அணுகுமுறையும், இனிமையான பேச்சும் பின்பற்றுவது நல்லது. மூலதனம் உயர்த்தும் நோக்கில் கடன் பெறுவது கூடாது.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் சில குளறுபடிகளை எதிர்கொள்வர். நல்லவர், அனுபவசாலியின் ஆலோசனையும், வழிகாட்டுதலையும் பெற்று நிலைமையை சரிசெய்வீர்கள். பதவி உயர்வு, பிற சலுகைகளைக் கேட்டுப்பெறுவதில் சிலகாலம் பொறுமை காப்பது அவசியம். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்ற சேமிப்பு பணத்தை செலவழிக்க நேரிடும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கைகொடுக்கும்.

வியாபாரிகள்: அளவான மூலதனத்தில் கடின உழைப்பின் மூலம் வியாபார நடைமுறையை சமாளித்து வருவர். சந்தை போட்டியால் உருவாகும் சிரமங்களை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு சரிசெய்வீர்கள். குடும்ப அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற ஓரளவு பணக்கடன் பெறுவீர்கள். சரக்கு கொள்முதல் தேவைக்கேற்ப பெறுவது நல்லது. சரக்கு கிட்டங்கிகளில் கூடுதல் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கடுமையான பணிச்சுமைக்கு உட்படுவர். புதிய உத்தியை பின்பற்றுவதால் பணி இலக்கு படிப்படியாக நிறைவேறும். சலுகை பயன் பெறுவதில் பொறுமை தேவைப்படும். குடும்ப பெண்கள் பணவரவுக்கேற்ப குடும்பச் செலவுகளை திட்டமிடுவது நல்லது. கணவரிடம் தேவையற்ற விவாதம் பேசுவது கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான உற்பத்தி, அளவான விற்பனை என்கிற நிலையை காண்பர். பணவரவு மிதமான அளவில் கிடைக்கும்.
மாணவர்கள்: படிக்கும் தருணத்தில் பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஒருமுகத்தன்மை, அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே தரதேர்ச்சி பெறமுடியும். சகநண்பர்களின் உதவி கல்வி வளர்ச்சிக்கு கைகொடுக்கும். பெற்றோர், ஆசிரியர் ஒத்துழைப்பு நல்லமுறையில் கிடைக்கும். வேலை வாய்ப்பு பெற விரும்புபவர்களுக்கு குறைந்த அளவிலான அனுகூலம் உண்டாகும். விளையாட்டில் ஈடுபடும் போதும், சுற்றுலா செல்லும் போதும் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயரை தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில் செயல்படுவீர்கள். ஆதரவாளர்கள் ஓரளவு நம்பிக்கையுடன் நடந்துகொள்வர். எதிரி தலையீடுகளால் சில சிரமங்களை அனுபவிக்க நேரிடும். அரசியல் விவகாரங்களில் சமரச முயற்சியின் மூலம் தீர்வு காண்பர். புத்திரர் அரசியல் பணிக்கு வருவதில் தயக்கம் கொள்வர். அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பீர்கள். தொழில் நடத்துபவர்கள் மிதமான அளவில் உற்பத்தி, விற்பனை என்ற நிலையை பெறுவர்.சுமாரான அளவில் பணவரவு இருக்கும்.

விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான நடைமுறை பணச்செலவு அதிகரிக்கும். அளவான மகசூல் கிடைக்கும். தானியங்களுக்கு சந்தையில் எதிர்பார்த்த விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் சுமாரான லாபம் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரங்களில் தீர்வு பெற சிலகாலம் பொறுமையோடு இருக்க நேரிடும்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதால் பணவரவில் இருந்து வரும் தடை நீங்குவதோடு, தொழிலில் நல்ல வளர்ச்சியும் ஏற்படும்.

மீனம் 85/100

சுறுசுறுப்பான பணியாற்றி பிறரின் மனம் கவரும் மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் கேதுவும், ஒன்பதாம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். இரு கிரகங்களில் கேதுவின் அமர்வு மிகுந்த அனுகூலத்துடன் உள்ளது. ராகுவின் மூன்றாம் பார்வை ஆதாய ஸ்தானத்தில் பதிவதால் பெரு முயற்சியின் பேரில் மட்டுமே ஆதாய பணவரவு கிடைக்கும். கேதுவின் மூன்றாம் பார்வை புத்திர ஸ்தானத்தில் பதிவதால் உங்களின் சிந்தனையை பிள்ளைகள் ஏற்று சமூகம் பாராட்டும் விதத்தில் நடந்துகொள்வர். கேதுவின் பதினொன்றாம் பார்வை ராசியில் பதிவதால் உங்களின் எண்ணமும் செயலும் ஆன்மிகத்தை மையமிட்டே சுற்றிக் கொண்டிருக்கும். முருகப்பெருமானின் பரிபூரண அருள் கடாட்சத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் சொல்லுக்கு சமூகத்தில் வரவேற்பு உண்டாகும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பும், உதவியும் தக்க சமயத்தில் கிடைக்கும். வீடு, வாகனம் தொடர்பான கடன்பாக்கியை அடைத்து மனநிம்மதி காண்பீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான நல்யோகம் உண்டு. புத்திரர் மனதில் ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். இதனால், குடும்பத்தோடு திருத்தலங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். படிப்பில் நல்ல தரதேர்ச்சி கிடைக்கும். தடைபட்ட குலதெய்வ வழிபாடு சிறப்பான முறையில் நிறைவேறும். எதிரியின் மறைமுகச் செயல்பாடுகளை மாற்று நடவடிக்கைகயால் திறமையுடன் முறியடிப்பீர்கள். உடல்நிலை ஆரோக்கியம் திகழும். யோகா, உடற்பயிற்சி போன்ற விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பிறருக்காக பணம் கொடுக்கல், வாங்கல் உட்பட எவ்வித பொறுப்பும் ஏற்கக்கூடாது. தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பெருந்தன்மையுடன் நடந்து கொள்வர். நண்பர்களிடம் கருத்துபேதம் உருவானாலும் மனக்குறையை வெளிக்காட்டுவதில் தயக்கம் கொள்வீர்கள். இதனால் நட்புக்கு களங்கம் வராத நன்னிலை தொடரும். தந்தையின் சொல்லுக்கு முக்கியத்துவம் தந்து அவர்களின் அன்பு, ஆசியைப் பெறுவீர்கள். குடும்பத்தேவையை பெருமளவில் நிறைவேற்றி வைப்பீர்கள். தொழில் சார்ந்த வகையில் இருந்த குறுக்கீடு விலகும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வளர்ச்சிப்பாதையை எட்டிப் பிடிப்பீர்கள். பணவரவு சிறப்பாக அமைவதால் சேமிப்பதற்கும் வாய்ப்பு உண்டு.  குடும்பத்தில் சுபமங்கல நிகழ்ச்சி நடத்தவும் நல்ல அனுகூலம் உள்ளது.

தொழிலதிபர்கள்: தொழிலில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். புதிய திட்டங்களை தைரியத்துடன் செயல்படுத்தி வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவீர்கள். பொருள் உற்பத்தியில் தரத்தை உயர்த்தி முன்னேற்றம் காண்பீர்கள். முயற்சியால் புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். நிறுவனத்தின் பெயரும் புகழும் அதிகரிக்கும். தொழில் கூட்டமைப்பில் கவுரவம் தருகிற பதவி, பொறுப்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய கிளை துவங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு திறமை காட்டுவர். பணியிலக்கு சிறப்பான வகையில் நிறைவேறும். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை பயன்கள் எளிதாக கிடைக்கும். கூடுதல் வேலைவாய்ப்பு, அதிக சம்பளம் பெறவும் அனுகூலம் உண்டு. வீடு, வாகனம் வாங்குகிற முயற்சி நிறைவேறும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.

வியாபாரிகள்: வியாபார நடைமுறையில் தேவையான மாற்றங்களை நம்பிக்கையுடன் செயல்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து விற்பனை அதிகரிக்கும். லாபவிகிதம் கூடும். நிலுவை பணக்கடன் அடைப்பீர்கள். சக தொழில்சார்ந்தவர் வியப்புடன் பார்க்கிற வகையில் வாழ்க்கைத்தரம் உயரும். வீடு, வாகனம் வாங்க தாராள பணவசதி துணைநிற்கும். இயன்ற அளவில் தானதர்மங்களும் செய்வீர்கள்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் உத்வேகமுடன் செயல்புரிந்து பணியில் சிறப்பான தன்மை அடைவர். நிர்வாகத்தின் பாராட்டு, சலுகை பயன் எளிதாக கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரிடம் விட்டுக்கொடுத்து செயல்பட்டு குடும்பத்தில் அமைதியை நிலைநாட்டுவளரும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக எதையும் தியாகம் செய்ய தயங்க மாட்டீர்கள். பணவசதி சீராக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். உபரி வருமானம் கிடைக்கும். புதிய தொழில் துவங்கும் முயற்சி நிறைவேறும்.
மாணவர்கள்: உற்சாகமான மனநிலையுடன் படிப்பில் ஈடுபடுவீர்கள். தரதேர்ச்சி சிறந்து விளங்குவதால் பெற்றோரும், ஆசிரியரும் பாராட்டி மகிழ்வர். சக மாணவர்களின் நட்பு கல்விக்கு துணைநிற்கும். நண்பர்களுடன் பயனுள்ள பொழுதுபோக்கிலும் ஈடுபட்டு மனமகிழ்ச்சி காண்பர். வேலைவாய்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு கவுரவமான பணியும், திருப்திகரமான சம்பளமும் கிடைக்கும். பெற்றோரின் அன்பினால் மனம் நெகிழ்ந்து விடுவீர்கள்.

அரசியல்வாதிகள்: உங்களின் அரசியல் பணியை நம்பிக்கையுடன் செயல்படுத்துவீர்கள். ஆதரவாளர்களின் செல்வாக்கைப் பெறுவதோடு மக்கள் மத்தியிலும் செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவு செய்து மகிழ்வீர்கள். பதவி, பொறுப்பு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். எதிரி செய்த கெடு செயல் பலமிழந்து போகும். புத்திரர்களை அரசியலில் ஈடுபடுத்தும் எண்ணத்தில் வெற்றி காண்பீர்கள். தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி பணவருமானம் அடைவர். சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
விவசாயிகள்: விவசாயப்பணிகள் நிறைவேற்றுவதற்கான வசதியனைத்தும் திருப்திகரமாக கிடைக்கும். பயிர் விளைச்சல் அதிகரிக்கும். தானியங்களுக்கு சந்தையில் நல்ல விலை பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பிலும் லாபம் உண்டு. கூடுதல் நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமையும், தொழிலில் லாபமும் பெருகும்.

ராகுகேது பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசியினர்
மிதுனம், கடகம், கன்னி, தனுசு, மகரம், மீனம்

பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர்
மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், கும்பம்

ராகுவால் அதிக நன்மை பெறும் ராசியினர்
மிதுனம், கன்னி, மகரம்

கேதுவால் அதிக நன்மை பெறும் ராசியினர்
கடகம், தனுசு, மீனம்

ராகு ஸ்தோத்திரம்
அர்த்த காயம் மகா வீர்யம்
சந்திர ஆதித்ய விமர்தநம்
சிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஹும் ப்ரணமாம்யஹம்

கேது ஸ்தோத்திரம்
பலாஸ புஷ்ப சங்காஸம்
தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்

ராகு துதி
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போகும் அக்காலை உன்றன் புனற்பினால் சிரமே ஏற்று
பாகுசேர் மொழியான் பங்கன் பரன்கையில் மீண்டும்
பெற்ற ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே.
அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கு
ஆகவருள் புரி அனைத்திலும்
வெற்றி ராகுக் கனியே ரம்மியா போற்றி

கேது துதி
மாதுரு நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போதுநீ நடுவிருக்கப் புகழ்சிரம் அற்றுப் பின்னர்
ஓதுறும் அரச நாகப் துயர்சிரம் ஐந்து பெற்ற
கேதுவே போற்றி போற்றி கீர்த்தியாய் ரட்சிப்பாயே.
கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகள் இன்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி

ராகு பயோடேட்டா
அதிதேவதை : பத்ரகாளியம்மன்
தானியம் : உளுந்து
நவரத்தினம் : கோமேதகம்
வஸ்திரம் : நீலம்
புஷ்பம் : மந்தாரை
சமித்து : அருகு
கிழமை : ஞாயிறு
ராசியில் தங்கும் காலம் : 18 மாதம்
திசை : தென்மேற்கு
தலம் : திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, இரட்டைத்திருப்பதி

கேது பயோடேட்டா
அதிதேவதை : சித்ரகுப்தர்
தானியம் : கொள்ளு
நவரத்தினம் : வைடூர்யம்
வஸ்திரம் : பலவண்ணம்
புஷ்பம் : செவ்வல்லி
சமித்து : தர்ப்பை
கிழமை : ஞாயிறு
தங்கும் காலம் : 18மாதம்
திசை : வடமேற்கு
தலம் : கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, இரட்டைத்திருப்பதி

குரு மங்களயோகம் வந்தாச்சு!

குரு செவ்வாயின் சொந்தவீடான மேஷராசிக்கு இடம் பெயர்கிறார். செவ்வாய் குருவிற்கு நட்புகிரகம். குருவும் செவ்வாயும் சம்பந்தப்படுவதால் குருமங்களயோகம் உண்டாகும். இதனால், செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குரு மேஷராசியில் இருக்கும் ஒருவருட காலமும் சுபபலன் உண்டாகும். குறிப்பாக வீட்டில் மேளச்சத்தம் விரைவில் ஒலிக்கும். புதுமனை புகுதல் ஆகிய நன்மைகள் ஏற்படும்.

ராகு தரும் திடீர் அதிர்ஷ்டம்

தனுசுவீட்டில் இருக்கும் ராகு விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பெயர்ச்சியின்போது ராகுவின் நட்சத்திரமான சுவாதியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். அதனால் திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய ராகுவிற்குரிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு சுபபலன்களை அள்ளித் தருவார். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பணவரவு, வேலைவாய்ப்பு, அபரிமிதமான லாபம் கிடைக்கும். அதே போல, கேதுவின் நட்சத்திரங்களான அசுபதி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ராகு கேது பெயர்ச்சியால் நன்மைகள் அபரிமிதமாக உண்டாகும்.

கஜகேசரி யோகம் யாருக்கு?

குருபெயர்ச்சி நாளில் சந்திரன் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். புனர்பூசம் குருவிற்குரிய சொந்த நட்சத்திரம். குருவும் சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திர அமைப்பில் சஞ்சரிப்பதால் கஜகேசரியோகம் உண்டாகிறது. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியமூன்றும் குருவிற்கு உரியவை. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் குரு பெயர்ச்சியால் நன்மைகளைச் சிறப்பாகப் பெறுவர். குருவருளால் தனம், தானிய லாபம் பெருகும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். நல்லவர்களின் நட்பால் எதிர்காலம் ஒளிமயமாகும்.  அதேபோல, இந்நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு தன் சொந்த வீடான கடகத்தில் இருக்கிறார். இதனால், சந்திரனுக்குரிய ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குரு சுப ஸ்தானத்தில் இல்லாவிட்டாலும் அனுகூலபலன்களே

Wednesday, May 4, 2011

சிவ விரதங்கள்


சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரணஅருளைப்பெறலாம்.
1. சோமவார விரதம்  - திங்கள் கிழமைகளில் இருப்பது
2. உமா மகேஸ்வர விரதம்  - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது
4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது
7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.


Tuesday, May 3, 2011

நந்தி ஏன் இறைவனை தாங்குகிறதுஇளமை, செல்வம், சுகபோகங்கள் யாவும் நிலையற்றவை. நாம் செய்த நற்செயல்களின் பலன் மட்டுமே என்றும் நம்முடன் வரும். ஒருவனுக்கு தர்மமே உற்ற துணை என்பதை மணிமேகலை காப்பியம் அறமே மிக்க விழுத்துணையாவது என சிறப்பித்துக் கூறுகிறது. திருவள்ளுவரும் அறத்தால் வருவதே இன்பம் என்று உண்மையான இன்பம் தர்மத்தாலேயே உண்டாகும் என்று குறிப்பிடுகிறார். ஆகவே, வாழ்நாளை வீணாக கழிக்காமல், தர்மம் செய்து பயனுள்ளதாக கழிக்க வேண்டும். சிவபெருமானை தாங்கும் நந்திதேவர், தர்மத்தின் அம்சம் என்பதால் அதற்கு அறவிடை என்றும் பெயருண்டு. விடை என்றால் காளை. ஆக கடவுளையே தாங்கும் பேறு தர்மத்திற்கு மட்டுமே உண்டு. ஒருவன் தர்மத்தை காப்பானேயானால் தர்மம் அவனைக் காக்கும். இதனை தர்மோ ரக்ஷதி: தர்மம் ரக்ஷித: என்பார்கள். இதிலிருந்து தர்மத்தை பாதுகாப்பவர்கள் தன்னையே காத்தவர்களாகிறார்கள்.

நந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பது ஏன்? சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியிவன் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக்கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவாத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் (இறைவன்) பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். சன்னதியை மறைத்து நிற்காதீர்கள் என சொல்வதும் இதனால் தான். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். மீறிச் செல்பவர்கள் ஏதோ கோயிலுக்குள் போய் வந்ததாக கணக்கில் கொள்ளப்படுமே தவிர, இறைவனின் அருள் அவர்களுக்கு கிட்டாது. அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.