Saturday, February 7, 2015

ஆரோக்கிய மந்திரம்!

நவக்கிரகங்களில் தலைமை வகிப்பவர் சூரியன். இவருக்குரிய ஞாயிறு, சப்தமி திதியில் சூரியமந்திரம் சொல்லி வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும். வியாசரால் இயற்றப்பட்ட இந்த மந்திரம் பாவத்தைப் போக்கும் சக்தி மிக்கது. தினமும் நீராடியபின், கிழக்கு நோக்கி நின்று இதை 12 முறை ஜெபித்து வர எல்லா நன்மையும் உண்டாகும். 

ஜபாகு சும சங்காஸம்
காஸ்ய பேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம்
ப்ரண தோஸ்மி திவாகரம்

பொருள்: காஸ்யப முனிவரின் மகனாக அவதரித்தவரே! செம்பருத்தி மலர் போல சிவந்த மேனி கொண்டவரே! பேரொளி உடையவரே! தரிசிப்பவரின் பாவச்சுமையை ”ட்டெரிப்பவரே! இருளின் பகைவரே! சூரியதேவரே! உம்மைப் போற்றுகிறேன். 

சுவாமி தரிசனம் செய்ய வெறுங்கையுடன் செல்வது சரியா?

குழந்தை, குருநாதர், தெய்வம் இந்த மூன்றையும் வெறும்கையுடன் செல்வது, தரிசிப்பது கூடாது. இயன்ற வரையில்பழங்களையாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். எனவே, சுவாமி தரிசனத்திற்குச் செல்லும் போது குறைந்த பட்சம் விளக்கேற்ற கொஞ்சம் எண்ணெய், கதம்பம், உதிரிப்பூ,  ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்லவேண்டும்.

மனவலிமை பெற!

ஸிம்ஹீம் ஸிம் ஹமுகீம் பகவத;
ஸ்ரீபைரவஸ்யோல்லஸத்
சூல ஸ்தூல கபால பாச டமரு
வ்யக்ரோக்ர ஹஸ்தாம்புஜாம்
தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்ய
குஹராம்
ஆரக்த நேத்ரத்ரயீம்
பாலேந்து த்யுதிமௌளிகாம் பகவதீம்
ப்ரத்யங்கிராம் பாவயே

அன்பரிடம் பேரன்பு கொண்டவள் பிரத்யங்கிரா. இவளைத் துதிப்பவர்க்கு பகை, எதிர்ப்பு, போன்றவை தாமாகவே விலகும். மனோபலம் மிகும். தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் ஸ்ரீப்ரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை (குறைந்தது 12 முறை) இந்தத் துதியைச் சொல்லவும். அஷ்டமி, அமாவாசை தினங்களில் அம்பிகைக்கு செவ்வரளி அல்லது சிவப்பு மலர்களால் மாலை சூட்டி அர்ச்சிப்பது சிறப்பு.

கல்வியில் சிறந்து விளங்க!

உத்கீத ப்ரணவோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வவேத மயோசிந்த்ய
ஸர்வம் போதய போதய

கலைமகளுக்கு குரு ஹயக்ரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரம் சிங்கப்பெருமாள் கோயில் அருகிலுள்ள செட்டிபுண்யம்; சென்னை நங்கநல்லூர் ஆகிய இடங்களில் இவருக்கு கோயில்கள் உண்டு. கல்வியில் சிறப்படைய தினமும் காலை, மாலை இம்மந்திரத்தைக் கூறி வந்தால் கல்வியில் உயர்வடையலாம். வியாழக்கிழமை தினங்களில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சமர்ப்பிப்பது விளக்குக்கு நெய் சேர்ப்பது. 12 முறை வலம் வந்து வழிபடுவது போன்றவை நற்பலனை அதிகரிக்கும்.

நோய்கள் விலக!

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய வினாசாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமஹாவிஷ்ணவே நம;

தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். சங்கு, சக்கரம், அமிர்த கலசம், அட்டைப் பூச்சி இவற்றை தம் கரங்களில் கொண்டு துலங்குபவர் தன்வந்திரி. இவருக்குரிய இந்த மந்திரத்தை தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் குறைந்தது 12 முறை சொல்லி வருவது சிறந்த பலனளிக்கும். அருகில் இவருடைய சன்னிதி இருந்தால் நெய் தீபம் ஏற்றி, 12 முறை வலம் வருவது கூடுதல் பலன்.

விபத்தைத் தவிர்க்க!

நமஸ்தே அஸ்து பகவன்
விச்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய

காலாக்னி ருத்ராய நீலகண்டாய
ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
ஸதாசிவாய ஸ்ரீமன்
மஹாதேவாய நம:


வசதிகள், அதிகாரம், அழகு, புகழ் என் எவ்வளவு இருந்தாலும் அதை அனுபவிக்க இரண்டு வேண்டும். ஒன்று: ஆரோக்கியம், இரண்டு: ஆயுள், அவற்றை வழங்குபவர் சிவன். அவரை துதிக்க வேண்டிய மந்திரம் இது. ஜாதக ரீதியாக விபத்து, கண்டம் முதலிய சூழல்களில், இந்த மந்திரத்தை எப்போதும் சொல்லிவருவது, மிகப்பெரும் பலன் தரும். மருத்துவமனையில் ஆபத்தான தருணங்களில் அனமதிக்கப்பட்டவர்களுக்காக அருகில் அமர்ந்து மானசீகமாக 108 முறை ஜபித்தால், நிச்சயம் ஆரோக்கியம் மேம்படும்.

முழுமை ஏற்பட!

இதுவும் சாந்தி மந்திரத்தில் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும். எல்லாவற்றிலும் முழுமை உண்டாகட்டும் என்பது இதன் பொருள். முழுமை எப்போது வாய்க்கும்? தேடல்கள் அனைத்தும் கைகூடிய நிலையில்தான் முழுமை ஏற்படும். அதாவது, யாருக்கும் எந்தவிதக் குறையும் இல்லாத நிலை. அப்படி எல்லாவிதமான தேடல்களும் விருப்பங்களும் எல்லாருக்கும் கைகூடி விடுமா? முடியாது.

அப்படியானால், இது எப்படி சாத்தியம்?  எப்போது அது ஏற்படும்? எவை அத்தியாவசியமோ அவற்றைத் தவிர, மற்றவற்றில் ஆசையோ, கவனமோ கொள்ளாமல் இருக்கும் போதுதான் இது சாத்தியமாகும். அதன் விளைவாக நம் தேவைகள் போதும் என்கிற நிறைவு மனத்தில் உண்டாவது தான் முழுமையை ஏற்படுத்தும். அந்த மனநிறைவு எல்லா உயிர்களுக்கும் ஏற்படட்டும் என்பதுதான் இந்தப் பிரார்த்தனையின் நோக்கம்.

சகல மங்களமும் உண்டாக!

சர்வேஷாம் மங்களம் பவது

வேத பாராயணத்தை முடிக்கும் போது சொல்லப்படுகின்ற சாந்தி மந்திரங்களில் இதுவும் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும், எல்லாவற்றிலும் வளம் உண்டாகட்டும் என்பதன் இதன் பொருள்.

வேதம் என்பது தனி மனிதனுக்கு மட்டுமல்ல; சகல உலகங்களுக்கும் - நாடு, மதம், இனம், மொழி என்று பேசப்படுகின்ற எந்த பேதங்களையும் கருத்தில் கொள்ளாமல், அனைத்து உயிர்களுக்கும் நன்மையைக் கோருவதே வேதத்தின் உன்னதம். இந்த மந்திரத்தில், வளம் என்று சொன்னதாலேயே பயிர்கள், அதற்குத் தேவையான நீர், காற்று, சூரிய ஒளி, விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என்று எல்லா ஜீவன்களும் அவரவர்களின் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கப்பெற்று இனிது வாழட்டும் என்பது இந்தப் பிரார்த்தனையின் பொருள் என்பது புலனாகிறது. தினசரி நாம் செய்கின்ற பல்வேறு பிரார்த்தனைகளுடன் இந்தத் துதியையும் சேர்த்துக் கொள்வோம். நமக்காகவும், நாம் வாழும் இந்த உலகின் நன்மைக்காகவும்!

உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?

நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.

கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அத்துடன்

கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்

என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.