Tuesday, July 23, 2013

உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!

கடவுளின் திருவடி என்னும் தோணியில் ஏறிக்கொண்டால் பிறவிக்கடலை நம்மால் எளிதாகக் கடக்க முடியும். மழை பெய்யாவிட்டால் உலக வாழ்வு நடைபெறாது. இன்னும் சொல்லப்போனால், மக்களிடம் ஒழுக்கமும் இல்லாமல் போய்விடும்.  நாளை பார்க்கலாம், நல்ல நாள் பார்த்து தர்மம் செய்யலாம் என்று இல்லாமல், இன்றே தர்மம் செய்து விடுங்கள். (ஏனெனில், நாளை என்பது நிச்சயமில்லை) செய்த தர்மம் இப்பிறவியில் மட்டுமல்லாமல் எப்போதும் துணைநிற்கும். உள்ளத்தில் பொய் இல்லாமல் இருக்கும் ஒருவன், உலகத்தாரின் உள்ளத்தில் நிரந்தரமாக குடியிருக்கலாம். தன் மனம் பொருந்த உண்மை பேசுவான் என்றால், அவன் தவமும் தானமும் செய்தவர்களை விட தலைசிறந்தவன் ஆவான்.

கற்பு என்னும் மனவலிமை பெண்ணிடம் இருக்க வேண்டும். அதைவிடச் சிறந்த விஷயம் உலகில் வேறு இல்லை. சிறையில் பூட்டி வைத்து பெண்ணைக் காப்பாற்ற முடியாது. பெண் என்பவள், தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே சிறந்த பாதுகாப்பாகும். பழிச்சொல்லுக்கு ஆளாகாத நல்ல பிள்ளைகளைப்பெற்றவனிடம் ஏழேழு பிறவியிலும் துன்பம் நெருங்குவதில்லை.  பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்ப்பதால் எந்த பலனுமில்லை. அதுபோல் மனிதனாய்ப் பிறந்தும் மனதில் அன்பு இல்லாவிட்டால் அவனால் சமூகத்துக்குப் பயனில்லை.
வீட்டில் விருந்தினர் அமர்ந்திருக்க, சாகாவரம் தரும் அமிர்தமாகவே இருந்தாலும் தான் மட்டும் தனித்து உண்பது கூடாது. இனிய சொற்களைப்பேசுவதால் இன்பம் உண்டாகும் என்பதை அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருந்தும் பிறர் மனம் நோகும்படி கொடிய சொற்களைப் பேசுவானேன்! சரியான நேரத்தில் செய்யும் உதவி சிறிதாக இருந்தாலும், அதன் மதிப்பு பரந்த உலகத்தை விடப் பெரியது.  பழிச்செயலைச் செய்தாலும் கூட மீள்வதற்கு வழியுண்டு. ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்த பாவத்தில் இருந்து மீள வழியில்லை.

ஒருவனால் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாக்கைக் காத்துக் கொள்வது அவசியம். ஒழுக்கமாக வாழ்வதே மனிதன் உயர்வதற்கு வழி. உயிருக்கும் மேலாக ஒழுக்கத்தை மதித்துப் போற்றுங்கள்.  உண்ணாமல் விரதம் மேற்கொள்வதை விட, பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்வது மேலான விரதம். பிறரது வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவனிடம், செல்வத்திற்கு அதிபதியான திருமகள் தன் மூத்த சகோதரியை இருக்கும்படி செய்து விடுவாள். பேசுவதாக இருந்தால் பயனுடைய நல்ல சொற்களைப் பேசுங்கள். பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் பேசுவது கூடாது.

மறந்தும் பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது. அவ்வாறு நினைத்தவனுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று அறக்கடவுள் எண்ணி விடுவார். மாமிச உணவு வேண்டாம் என்று உயிர்களைக் கொல்லாமல் வாழ்பவனை, உலக உயிர்கள் இருகரம் கூப்பி வணங்கும். தன்னைக் காத்துக் கொள்ள நினைப்பவன் கோபத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கோபமே அவனைக் கொன்றுவிடும். ஒருவர் செய்த நன்றியை மறப்பது கூடாது. நன்றி மறந்த பாவம் மிகவும் கொடியதாகும். -திருத்தமாய் சொல்கிறார் திருவள்ளுவர்

அத்தனைக்கும் ஆசைப்படாதே!

ஆசை தான் நம்மை பலவித பொய்களைப் பேசவைக்கிறது. பொய்க்கு வித்தாக இருப்பது ஆசை தான். மநு முதலான மகாபெரியவர்கள் அகிம்சை, சத்யம், திருடாமை, தூய்மை, புலனடக்கம் முதலிய உயர்ந்த பண்புகள் மக்களுக்கு வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த ஐந்தையும் செய்ய விடாமல் தடுப்பதாக ஆசை இருக்கிறது.  இம்சை ஏன் செய்கிறோம்? மாம்ஸத்திலுள்ள ஆசையினால். இன்னொருத்தனிடமுள்ள ஒரு பொருளில் நமக்கு ஏற்படும் ஆசையால் அவனை இம்சித்தாவது அதைப் பெற முயல்கிறோம். சத்தியத்தை ஏன் விடுகிறோம்? ஆசை வைத்த எதையும் சத்தியவழியில் அடைய முடியாது என்பதால் தான். நம்முடைய சொத்து, அந்தஸ்து, மானம் போன்ற எதுவோ ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசைக்காகத் தான். பொருளிடத்தில் உள்ள ஆசையால் தான் திருடுகிறார்கள் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆசார சுத்தியை விட்டு விடுவது, மனசு போனபடி சுகசவுகர்யங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையால் தான். புலனடக்கம் இல்லாமல் போவதும் ஆசையால் தான் என்பதை சொல்லவும் வேண்டாம். அதாவது மநு சொன்ன ஐந்து தர்மங்களையும் மீறப் பண்ணுவதாக ஆசை இருக்கிறது. ஆசையினால் இழைக்கும் துன்பங்கள் ஒருவனைச் சும்மாவிடுவதில்லை. அவை எல்லாம் பாபக்கணக்கில் ஏறி ஒட்டிக்கு இரட்டியாக அவனை நரகலோகத்திலும் மறு ஜன்மாக்களிலும் பழி வாங்கத் தான் செய்யும். -காஞ்சி பெரியவர்

ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவதும் வழக்கம், இது ஏன் தெரியுமா? ..  ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்-இவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிடவேண்டும். அதன்பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற வேண்டும். இந்த முறையை எல்லாரும் பின்பற்றுவது நல்லது.

ஆடி- பெயர் வந்தது எப்படி?

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள், பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து. தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது. அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச் சுடையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.

அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார். ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது.

தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டது; குளிர்ச்சியானது. அதன் காற்று உடல்நலத்தினைக் காக்கும். அதன் கசப்புத்தன்மை நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து வளமான உடல் ஆரோக்கியம் தரும். வேப்ப இலையின் கொழுந்தில் நம் உடலுக்குத் தேவையான சக்தி(புரோட்டின்) இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தினமும் காலை வேளையில் மூன்று, நான்கு வேப்பங் கொழுந்துகளை வெறும் வயிற்றில் மென்று சுவைத்தால் மருத்தவரிடம் செல்லு<ம் நிலை ஏற்படாது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. அதேசமயம், கசப்புச் சுவையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் ரத்தத்தின் வீரியம் குறைந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சித்த மருத்துவர் ஆலோசனைப்படி வேப்பங் கொழுந்தினைப் பயன்படுத்த வேண்டும்.

அம்மை நோய்க்கு அருமருந்தாக வேம்பு திகழ்கிறது. காய்ச்சலை குணப்படுத்தும் வேம்பு கஷாயம் இன்றும் மருத்துவ உலகில் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதனால்தான் கிராமப்புறங்களில் வீட்டின் வாசல் முன்பு வேப்ப மரங்களை வளர்க்கிறார்கள். நகர்ப்புறங்களிலும் வேப்ப மரங்கள் வளக்கப்பட்டால் தூய்மையான காற்று கிடைக்கும்.

சாஸ்திரங்கள் மற்றும் அறிவியல் கூறும் ஆடியின் சிறப்பு!

நம் முன்னோர்கள் ஒரு வருடத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். தை மாதம் முதல் தேதியிலிருந்து ஆனி மாதம் வரை உத்தரானப் புண்ணிய காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் கூறுவர். தட்சிணாயனம் மழைக்காலத்தின் தொடக்கத்தையும் உத்தராயனம் கோடைக்காலத்தின் ஆரம்பத்தையும் குறிக்கிறது. உத்தாரயனக் காலத்தில் சூரியன் வடக்கிலிருந்து தெற்காகவும். ஆடி முதல் மார்கழி வரை தெற்கிலிருந்து வடக்காகவும் பயணிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால்  உண்மையில் சூரியன் அவ்வாறு பயணிப்பதில்லை. நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவரும் பூமியால் ஏற்படுவதே அது. பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு சூரியன் நகர்வதாகத் தோற்றமளிக்கிறது. இது காட்சிப்பிழை அல்லது பூமியின் இடமாறு தோற்றப்பிழை. பூமி தெற்கு-வடக்காகச் செல்வதே உண்மை. டிசம்பர் 21-ல் நீள்வட்டப் பாதையில் ஆறுமாதப் பெயர்ச்சியை முடித்து. சூரியனுக்கு மறுபுறம் திரும்பி சுழன்று பெயர்ச்சி அடையும். அப்போது பூமி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும். ஆனால் நமக்கு சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லுவதைப்போல் தெரியும்.

மாயன் காலண்டரில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 ஆம் தேதி சூரியன் வடக்கில் திரும்புவதையும், ஜுன் 21 ஆம் தேதி தெற்கில் திரும்புவதையும் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக மார்ச் 21 செப்டம்பர் 20 ஆகிய தேதிகளில் இரவும் பகலும் சமமாக இருக்கும், ஜுன் 21, டிசம்பர் 21 ஆகியவை, பூமி நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றித் திரும்பும் நாட்கள். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வு என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சாஸ்திரங்கள் கூறுவதை அறிவியல் மிகத் தெளிவாக விளக்குவதை நாம் அறிந்துகொள்ளலாம்.

தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனிடமிருந்து ஒருவிதமான சூட்கம சக்திகள் வெளிப்படுவதாகவும், பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும் என்றும், உயிர்களுக்குத் தேவையான ஆதாரசக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவென்றும் வேதங்கள் கூறுகின்றன. ஆடி மாதம் பிறந்ததும் நீர் நிலைகளில் நீராடுவது போற்றப்படுகிறது. ஆனால் முதல் மூன்று நாட்கள் ஆறுகளுக்கு தோஷமான நாளாகக் கருதப்படுவதால், அதன்பிறகு நீராடுவது நல்லதென்பர். ஆறுகளில் நீராடும்போது, ஆறு எந்த திசையிலிருந்து ஓடி வருகிறதோ அந்த திசையைப் பார்த்து நீராட வேண்டும். கோவிலில் உள்ள குளத்தில் நீராடும்போது வடக்கு திசை நோக்கி நீராட வேண்டும்.

இறைவனின் படைப்பில் மனிதனின் ஆயுளும் படும் அவஸ்தையும்!

கடவுள் படைப்புத் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரம், கழுதையைப் படைத்து விட்டு, கடவுள் சொன்னார். நீதான் கழுதை! நீ சூரியன் உதித்தது முதல் அது அஸ்தமனம் ஆகும் வரை உழைக்க வேண்டும்... மூட்டை சுமப்பதுதான் உன் வேலை... உனக்குப் புல்தான் உணவு! உனக்கு அறிவு எல்லாம் கிடையாது. நீ ஐம்பது ஆண்டுகள் வரை வாழலாம், என்று கூறினார். கழுதை உடனே கடவுளிடம், இறைவா! ஐம்பது ஆண்டுகள் நான் வாழ்வதா? வேண்டவே வேண்டாம்! நீங்கள் கூறிய கடின உழைப்போடு இருபது வருடங்கள் உழைத்தாலே போதும்... ஆயுளை இருபது ஆண்டுகளாகக் குறைத்தருள வேண்டும், என்று கேட்டது. கடவுளும், சரி அப்படியே செய்கிறேன். என்று கூறினார்.

பின்னர் கடவுள் நாயைப் படைத்தார். நீதான் நாய். மனிதர்களுடைய வீட்டைக் காவல் காப்பதுதான் உன் வேலை... நீ அவனுக்கு நன்றி உள்ளவனாய் இருப்பாய்...! அவன் உனக்குப் போடுகிற சோற்றுப் பருக்கைகளை உண்டு கொள்ளலாம். நீ நாயாக முப்பது வருடங்கள் வாழ அருள் புரிகிறேன், என்று கூறினார். கடவுள் கூறியதைக் கேட்ட நாய் அதிர்ந்து போனது. இறைவா! உன் சொற்படி விசுவாசத்தோடு வேலை செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால், என் ஆயுட்காலத்தைப் பதினைந்து வருடங்களாகக் குறைத்துவிடுங்கள், என்று கேட்டுக் கொண்டது நாய். ஏன்! என்று கேட்டார் கடவுள். மனிதர்கள் பதினைந்து ஆண்டுகளிலேயே முப்பது வருட வேலையை என்னிடம் வாங்கிவிடுவார்கள்... அதுவே எனக்குப் போதும், என்று கூறியது நாய்! கடவுள் அவ்வாறே அருளினார்.

பின்னர் கடவுள் ஒரு குரங்கைப் படைத்துவிட்டு அதனிடம் சொன்னார். உன் பெயர் குரங்கு! நீ மரத்துக்கு மரம் தாவித் திரிவாய்! நீ மக்களை மகிழ்விக்கப் பல குறும்புகள் செய்வாய்! நீ இருபது வருடங்கள் வரை வாழலாம், என்றார். குரங்கு பயம் கொண்டு, இறைவா நீ சொன்னபடி எல்லாம் வேலை செய்கிறேன். எனக்குப் பத்து ஆண்டுகள் வாழ்ந்தாலே போதும், என்று கூறியது. ஏன் அப்படிச் சொல்கிறாய்? என்று கடவுள் கேட்டார். இறைவா! மனிதர்கள் செய்யும் மிருக வதையைத் தாங்கிக் கொள்ள நீண்ட காலம் வேண்டாம். குறுகிய காலமே போதும். இருபது ஆண்டுகளில் சாக வேண்டியதை பத்து ஆண்டுகளிலேயே சாகடித்து முடித்துவிடுவர், என்று கூறியது குரங்கு. கடவுளும் அவ்வாறே அருளினார்.

கடைசியில் கடவுள் மனிதனைப் படைத்துவிட்டு, அவனிடம் இவ்வாறு கூறினார். நீதான் மனிதன்! ஆறறிவு படைத்தவன்! நீ உன் புத்தியைப் பயன்படுத்தி வாழ்வாய்! உனக்குச் சேவகம் செய்ய சில விலங்குகளை யும் படைத்துள்ளேன். இந்த உலகத்தையே ஆட்டிப் படைக்க உன்னால் முடியும். இப்படிப் பட்ட அதிசய, அற்புதப் பிறவியான நீ இருபது ஆண்டுகளே வாழ்வாய்! என்றார். கடவுள் கூறியதில் திருப்தி அடையாத மனிதன் கடவுளிடம் வேண்டினான். இறைவா! மனிதனாக இருக்கும் எனக்கு இருபது ஆண்டுகள்தானா ஆயுள்? நான் நல்ல முறையில் வாழ்ந்து காட்ட விரும்புகிறேன். எனவே, கழுதை வேண்டாமென்று ஒதுக்கி விட்ட முப்பது ஆண்டுகளையும், நாய் விரும்பாத பதினைந்து ஆண்டுகளையும், குரங்கு மறுத்துவிட்ட பத்து ஆண்டுகளையும் எனக்குத் தாருங்கள், என்று பேராசையோடு கூறினான் மனிதன். மனிதனின் வேண்டுகோளைக் கடவுள் ஏற்றுக் கொண்டார். கடவுளின் படைப்புத் தொழில் முடிந்துவிட்டது. மனிதனின் வாழ்க்கை தொடங்கியது.

மனிதன், மனிதனாக இருபது ஆண்டுகள் வாழ்ந்தான்! திருமணத்துக்குப் பின்னர் கழுதை மாதிரி எல்லாப் பொறுப்புக்களையும் சுமந்து முப்பது வருடங்கள் வாழ்ந்தான். நாய் மாதிரி வீட்டுக் காவலாளனாக இருந்து தனக்குக் கொடுத்த உணவை ஏற்றுக் கொண்டு பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். அவனுக்கு வயதானதும், கிளை விட்டுக் கிளை தாவும் குரங்கு மாதிரி, மகன் வீட்டுக்கும், மகள் வீட்டுக்கும் லோ லோ வென்று அலைந்து, பேரக் குழந்தைகளிடம் பல குறும்புகள் செய்து, அவர்களை மகிழ்விக்கிறவனுமாக பத்தாண்டுகள் வாழ்ந்து முடித்தான். இப்படியொரு வாழ்வை மனிதன் பெற்றுக்கொண்டான். பேராசையால், அவன்படும் அவஸ்தையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் கடவுள்.

தினசரி வாழ்வில் பக்தியை இணைப்பது எப்படி?

ஒரு வரலாற்று உண்மை நிகழ்ச்சியை நினைவுபடுத்திக் கொண்டால் உள்ளே இருக்கும் இறை பற்றிய நினைவு எப்போதும் இருக்கும். கிம்பர்லி வைரச் சுரங்கம் பற்றிய உண்மை நிகழ்ச்சி ஹெர்மன் கான்வல் என்பவர் அமெரிக்காவில் உள்ள பிலெடெல்பியா என்ற மாகாணத்தில் கோயில் கட்டியவர் இவர் கூறிய உண்மை நிகழ்ச்சி. ஆப்பிரிக்காவில் ஒரு விவசாயி வைரக்கற்களைப் பெற விரும்பி ஆப்பிரிக்கா முழுவதும் சுற்றினார். தனக்குச் சொந்தமாக இருந்த நிலங்களையும் விற்றி வைரத்தைத் தேடித் தோற்று நொடிந்துபோன நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டார். அந்த விவசாயியின் நிலத்தை வாங்கியவர் ஒருநாள் நிலத்தைத் தோண்டும்போது பளபளப்பாக மின்னும் ஒரு பெரிய கல்லைக் கண்டார். இன்னும் சில இடங்களில் தோண்டியபோது, பளிச்சிடும் கற்கள் பல கிடைத்தன. அந்த இடம் தான் இன்றைய வைரச்சுரங்கம் உள்ள கிம்பர்லி என்ற இடம். என்ன ஆச்சரியம் பாருங்கள். தன் நிலத்தில் புதைந்து கிடைக்கும் வைரக்கற்கள் பற்றி அறிய இயலாமல் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார் அந்த விவசாயி! இதேபோல் தான் நாமும் உள்ளிருக்கும் இறையை கண்டுகொள்ள முயலாமல், புறத்தில் தேடித்தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
ஆலயத்தில் இறைவனுக்கு அபிஷேகம் அலங்காரம் முடிந்தவுடன் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள் அவற்றில் நாம் தூபத்தில்-அக்னி தேவனையும்
மகாதீபத்தில்-சிவனையும்
நாக தீபத்தில்-கேதுவையும்
விருஷப தீபத்தில்-தர்ம தேவதையையும்
புருஷாமிருக தீபத்தில்-விஷ்ணுவையும்
பூரணகும்பத்தில்-ருத்ரனையும்
பஞ்சதட்டுகளில்-பஞ்சபிரும்ம தேவதைகளையும்
நட்சத்திர தீபத்தில்-27 நட்சத்திரங்களையும்
மேரு தீபத்தில்-12 சூரியர்களையும்
விபூதியில்-பரமேஸ்வரனையும்
கண்ணாடியில்-சூரியனையும்
குடையில்-சந்திரனையும்
சாமரத்தில்-மகாலக்ஷ்மியையும்
விசிறியில்-வாயு தேவதைகளையும்
ஆலவட்டத்தில்-பிரம்மாவையும்
கற்பூரத்தில்-அக்னியையும்
அதிதேவதைகளாக பாவித்து வணங்க வேண்டும் பொருளுணர்ந்து பூஜையை ரசிக்கும் போது தன்னால் இறையுணர்வு வரும்.

பூரண கும்பம்: உலகில் உள்ள தாவர சங்கமங்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன. பிரளய காலத்தில் நீரிலேயே லயம் ஆகிவிடுகின்றன. ஆதலால் இறைவனை நீரின்மூலம் உருவ வழிபாட்டிற்கு கொண்டுவருவதே பூரண கும்பத்தின் தத்துவம்.
கும்பம்(குடம்)-உடல்
குடத்தில் உள்ள நீர்-ரத்தம்
உள்ளே போடப்படும் ரத்தினங்கள்-சுக்கிலம்.
கூர்ச்சம்-நாடி.
குடத்தின் மேலே சுற்றப்பட்ட நூல்-நரம்புகள் குடத்தின் மேலே போடப்பட்ட துணி(வஸ்திரம்-தோல்)
மந்திரங்கள்-உயிர்
குடத்தின் மேலுள்ள தேங்காய் சிரக, முகம், லம்பகூர்ச்சம்-சிகை(முடி)
மாவிலைகள்-ஜடாபாரங்கள்.
இப்படி மந்திரங்களின் உதவியுடன் அலங்கரிக்கப்பட்ட குடத்தில், சிவனை எழுந்தருளச் செய்கிறோம். என்று சிவ ஆகமத்தில் சொல்லப்படுகிறது. எனவே பூரண கும்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் இறைவனாக பாவித்து வணங்க வேண்டும் பொருளறிந்து செய்யப்படும் பூசைகள் மூலம் நாள் முழுவதும் இறை உணர்வில் இருக்கமுடியும்.

கோலங்கள் காட்டு தெய்வீகம்: கோலங்களின் இரண்டு பக்கங்களிலுமுள்ள கோடுகள் சம அளவில் பொருத்தமாக அமைந்திருப்பதுதான் கோலத்தின் அழகுக்கும், மங்கள தோற்றத்திற்கும் காரணம். தர்மவழியில் சமத்துவமனப்பான்மையுடன் (சமத்துவ மனப்பான்மையே கிருஷ்ணனுக்குச் செய்யும் ஆராதனை என்னு விஷ்ணு புராணம் கூறுவதுபோல நடக்கும் மனிதர்கள் தெய்வீகம் அடைவார்கள் என்பதையே கோலங்கள் காட்டுகின்றன.
ஆலயங்களிலும் வீடுகளிலும் விளக்கேற்றுகிறோம். இதன் உள்ளார்ந்த தத்துவம் என்ன? விளக்கில் உள்ள எண்ணெய் எண்ணப்பதிவுகள்.
திரி-ஆணவம், ஏற்றும் ஒளி-ஞானம். ஆசைகளால் வருவது எண்ணப்பதிவுகள். எண்ணப் பதிவுகளால் வருவது துன்பமும் பிறப்பும், திரியைத்தூண்டி விளக்கை ஏற்றுவதுபோல, ஞானத்தால் வாசனைகளையும் ஆணவத்தையும் அழிக்கவேண்டும். சென்ற பிறப்பின் நல்ல மற்றும் தீய எண்ணங்களால் வாசனைகள் அல்லது பதிவுகள் ஏற்படுகின்றன. அவற்றால் துன்பம் நேர்வது உண்மை. ஞானத்தால் மட்டுமே வாசனைகளை அழிக்க முடியுமென்று காட்டுவதே விளக்கேற்றுவதில் உள்ள தத்துவம்.

உள்ளே தேடிக் கண்டுகொள்ளாலாமே..
இறை உள்ளிருக்கிறான் என்ற நம்பிக்கை ஆழமாகப் பதிந்துவிட்டால் இறையுணர்வு உண்டாகும். உலகை வென்ற அலெக்ஸாண்டர் போரினால் கிடைத்த வெற்றிகளில் அமைதி பெறமுடியாமல் ஒரு சந்நியாசியிடம் சென்று, நான் அமைதி பெற என்ன வழி என்று கேட்டார்.
கடவுளால்தான் உனக்கு அமைதியைத் தரமுடியும் என்றார் அவர். கடவுள்தான் எனக்கு அமைதியைத் தரமுடியும் என்கிறீர்களே! கடவுள் இருப்பதை நான் எப்படி நம்பமுடியும்? என்றார் அலெக்ஸாண்டர்.
காற்றால் இழுக்கப்பட்டு பட்டம் உயரே உயரே பறக்கும்போது நம் கையிலுள்ள நூலில் ஏற்படும் விசையைக்கொண்டு காற்றின் சக்தியை உணர முடியுமே தவிர மற்றவர்களுக்குக் காண்பிக்க முடியுமா? அதுபோலத்தான் கடவுளும் என்றார்.

அட்டாங்க யோகம்: இறைவன் உள்ளிருக்கிறான் என்ற உண்மையை கல்வி கேள்விகளால் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்(தெளிவுறுதல்) பின் அதைப்பற்றி நமக்கு நாமே ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொள்கிறோம் (உறுதி கொள்ளல்)  இந்த உறுதியானது நமது ஒவ்வொரு உணர்விலும் நிலைபெற்று விடுகிறது. (உணர்வில் நிலைபெறுதல்)
இந்த ஒளியைக் காணவேண்டும் என்ற தீவிர விருப்பம் ஏற்படுகிறது. இந்த நிலையை அடைந்தபின் அட்டாங்க யோகம் மூலம் இறைவனை அடையமுடியும் இதற்கு எட்டுவிதமான படிகள் உள்ளன எனவே அட்டாங்க யோகம் எனப்படுகிறது.
1. இயமம்; மனமாக இல்லாமை, கொல்லாமை, களவு குணம் இல்லாமை, ஆகியவற்றைப் பழக்கப்படுத்திக் கொண்டால் நல்லவை செய்யும் நெறி ஏற்பட்டுவிடும்.
2. நியமம்: தூய எண்ணங்களை வளர்த்தல். கருணை பொறுமை ஆகியவற்றால் மனதைச் செம்மைப்படுத்துதல்.
ஆசனம்: பத்மாசனம், ககாசனம் போல ஏழு ஆசனங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றில் நமக்கு வசதியாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
4. பிராணாயாமம்: மூச்சை நிதானமாக இழுத்து, அடக்கி, வெளிவிட்டுச் செய்கின்ற செயலில் உடலுக்கும் மனதுக்கும் வலிமையும் ஆக்கமும் கிடைக்கும். இதை முறையாக யாரிடமாவது கற்றுக்கொண்டால் நல்லது மூச்சுப்பயிற்சியின் மூலம் எண்ணங்களை ஒடுக்க முடியும்.
5. பிரத்தியாகாரம்: மூச்சுப் பயிற்சியால் மனதில் எண்ணங்கள் அடங்கி மனம் ஒரு நிலைக்கு வந்தபின், மனதை வெளிச் செய்திகளில் போகவிடாமல் உள்நோக்கித் திருப்புதல்.
6. தாரணை: வெளியே செல்ல விடாமல் தடுத்த எண்ணங்களை, மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களில் நிறுத்தி ஒரே கவனத்துடன் இருத்தல்
7. தியானம்: தாரணை சித்திக்கப் பெற்றவுடன், தியானம் செய்வது சுலபம். முதலில் 15 நிமிடங்கள். பிறகு 30 நிமிடங்கள் என்று நேரத்தைக் கூட்டிக் கொள்ளலாம். 30 நிமிடங்கள் உட்கார்ந்தாலும் 5 முதல் 7 நிமிடங்கள் வரைதான் மனது தியானத்தில் வசப்படும். 30 நிமிடங்கள் அமர்ந்தால்தான் 5 நிமிட தியான அனுபவமாவது கிடைக்கும். எப்பொழுதும் குளத்தை தோண்டிக் கொண்டே இருக்கும் ஒருவன், எப்பொழுது அந்தக் குளத்திலிருந்து நீர் குடிப்பான்? தனது உடலில் சேற்றைக் கழுவுவான்? என்கிறார் துளசிதாசர் நூல்களைப் படித்துக்கொண்டே இருப்பதால் பேருண்மையை அனுபவிக்க முடியாது. மனதார நினைத்து தியானியுங்கள் என்பதுதான் இதன் பொருள்.
8. சமாதி: தினமும் இரண்டு அல்லது மூன்று முறை தியானம் செய்து பழகும்போது அதற்குண்டான அமைதி, மகிழ்ச்சி கிடைக்கும். அருளாளர்களுக்கும் சித்தர்களுக்குமே நிலைத்த சமாதிநிலை கிடைக்கும்.
எல்லாம் தானாகி இருந்திடினும் இஃதறிய
வல்லார் சிலர் என்பர் வாய்மை எல்லாம் கண்டவரே என்பது பாரதியின் கூற்று

சரணாகதி தத்துவம்: யோகம், தியானம் சிலருக்கு சாத்தியமில்லை என்றால், சரணாகதி தத்துவம் மூலம் இறைவனை அடைவதென்பது எளிமையான வழி பக்தி, வைராக்கியம், மன உறுதி இருந்தால் இந்த முறை சுலபம். இறைவனை சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற உணர்வு உறுதியாக நெஞ்சில் பதிந்தால் இறையுணர்வு எப்போதும் இருக்கும்.
மகாபாரதத்தில் திரவுபதியின் அனுபவம் இந்த உண்மையை எடுத்துக்கூறும் பலரும் நிறைந்த சபையில் துச்சாதனன் துகிலுரிந்தபோது அவளது செல்வாக்கோ படைபலமோ உதவவில்லை பலமும் வீரமும் புத்திக் கூர்மையும் மிக்க ஐந்து கணவர்களும் உதவ இயலவில்லை.
செயலற்ற நிலையில் கண்களை மூடி கிருஷ்ணா கிருஷ்ணா என்று உள்ளமும் உணர்வுகளும் நெகிழ தியானித்து, முழுமையாக கண்ணனிடம் சரணடைந்தபோது திரவுபதிக்கு கண்ணன் உதவினான் என்று பாரதத்தில் படிக்கிறோம். முழுமையாக சரணடையும் உணர்வு ஏற்பட்டுவிட்டால், நாள் முழுவதும் அருள் ஓட்டம் இருக்கும்.
தொட்டில் குழந்தைக்கு பாடும் தாலாட்டு ஆராரோ ஆரிரரோ
யார் யாரோ யார் இவரோ? என்ற வார்த்தைகள், சற்று மாறிய நிலைதான் ஆராரோ ஆரிரரோ.
நீ யாரோ நான் யாரோ என்று ஆராய வேண்டும் என்பதுதான் இதன் உட்கருத்து. நான், எனது என்ற வார்த்தைகளை ஆராய்ச்சி செய்தால் நிஜமான நான் என்பது எது என்ற உன்னத தத்துவம் புரியும். இதைத்தான் ரமணர், நான் யார் என்று ஆராய்ச்சி செய்தால் தெளிவு வரும், நான் என்பது சிவனைத் தவிர வேறில்லை என்கிறார். மிகவும் சிரமமான பயிற்சிதான் இது. இதை ஆராரோ என்ற எளிமையான வார்த்தைகளில் நமக்குப் புரிய வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

பிணத்துக்குமுன் ஆடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது?
பலசமயம் பிணத்திற்குமுன் தப்பட்டை அடித்துக்கொண்டு ஆடி வருவதைப் பார்க்கும்போது சற்று அருவருப்பாகக்கூட உள்ளது. துக்கமான சமயத்தில் ஏன் இப்படி ஒரு ஆட்டத்தை வைத்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுகிறது.
ஆடி ஆட்டம் என்ன
பேசி பேச்சு என்ன
கூடுவிட்டு ஆவி போனால்
கூடவே வருவதென்ன
என்னும் தத்துவத்தை நமக்குப் புரியவைப்பதற்காகவே பிணத்துக்குமுன் ஆடும் கலாச்சாரம் உள்ளது. ஆடி அடங்கும் வாழ்க்கையைப் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதற்காகவே இப்படி ஒரு பழக்கத்தை வைத்துள்ளனர், கலபமாகச் சொன்னால் உனக்கும் இந்த நிலைதான் ஒருநாள் என்று தம் ஆட்டத்தின் மூலம் உணர்த்துகிறார்கள். இவற்றை எல்லாம் உள்ளவாறு உணர்ந்தால் எப்போதும் நிலையாக உள்ள சத்திய வடிவத்தைப் பற்றிக்கொள்ளும் மனது.
தர்மரிடம், உலகத்தில் மிகவும் அதிசயமான செய்தி எது? என்று கேட்டபோது தினம் தினம் மனிதர்கள் இறப்பதைப் பார்க்கும்போதும், இறப்பைப் பற்றிய ஒரு தெளிவை உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்கும் மனிதர்கள்தான் உலகில் அதிசயமான செய்தி என்கிறார் தர்மர்.
தொட்டில் முதல் சுடுகாடு வரை வாழ்வின் தத்துவத்தை நமக்கு அறிவுறுத்தியுள்ளனர் முன்னோர். அவற்றை உணர்ந்துகொள்வதில்தான் நம் ஆன்ம முன்னேற்றம் இருக்கிறது

Thursday, July 11, 2013

ராமகிருஷ்ண உபநிஷதம்!

மாடுகள் அசை போடுவதுபோல்: பசுவானது பால் தருகிறது. இந்தப் பால் பசுவின் உடலில் ஓடும் ரத்தத்தில் கலந்து, அதன் உடல் முழுவதுமே இருக்கிறது, ஆயினும் பசுவின் காதைப் பிழிந்தால் பால் வருமா? வராது. பசுவின் மடியில்தான் பால் சுரக்கும். உலகமெல்லாம் கடவுள் மயம் என்பது உண்மை. ஆயினும் பசுவின் உடலில் பால் சுரக்கும் மடியைப் போன்றது, புண்ணிய ÷க்ஷத்திரங்களில் மகிமை. அங்கே பக்தர்கள் சென்று, அந்த ஸ்தலங்களில் சுரக்கும் பக்தியைப் பெற்று, பகவானை அடைகிறார்கள். தலைமுறை தலைமுறையாகப் பல பக்தர்கள் தவமும் தியானமும் செய்த அந்த ஸ்தலங்களில் ஆண்டவன் தன் தரிசனத்தை எளிதில் தருகிறான். எண்ணற்ற பக்தர்களுடைய தவம், ஜபம், தியானம், பூஜை, பிரார்த்தனை இவற்றின் புகை அங்கே படிந்து நிற்கிறது. அது அவ்விடம் பக்தியுடன் செல்லும் மக்களின் உணர்ச்சியைத் தன் மயமாக்கும். பக்தர்களின் கால் தூசி பட்டாலுமே போதும் என்று சொல்வது இதுதான். கோடிக்கணக்கான பக்தர்கள்-படித்தவர்கள், படிப்பில்லாத பாமரர்கள்-விழுந்து புரண்டு வழிபட்ட இடங்களுக்குத் தனியொரு சக்தி உண்டு. உலக வாழ்க்கையையும், ஆசைகளையும் நீக்கி உள்ளம் உருகி ஆடியும் பாடியும் புனிதமாக்கிய ஸ்தலங்களுக்கு நாமும் சென்று நம் உள்ளத்தை ஆண்டவன் பாதங்களில் சமர்ப்பித்தால் நம்முடைய கல் மனமும் உருகும். ஆனபடியால் அத்தகைய இடங்களில் எங்கும் பரவி நிற்கும் ஈசனை எளிதில் காணலாம்.
பூமியை எங்கேயும் தோண்டி ஜலம் எடுக்கலாம். ஆனால் சில இடங்களில் ஏற்கனவே கிணறும் குளமும் ஏரியும் தயாராக இருக்கிறது. அவற்றை நாம் அடைந்து சுலபமாகத் தாகம் தணித்துக் கொள்ளலாம் அல்லவா? அப்படியே கோயில்களும் ÷க்ஷத்திரங்களும், தீர்த்தங்களும், பக்தி தாகத்தை அவ்விடங்களில் சிரமமில்லாமல் தீர்த்துக் கொள்ளலாம்

Sunday, July 7, 2013

வீட்டில் பீரோவை எந்தத் திசையில் வைப்பது நல்லது?

பூஜையறை பக்கத்தில், தனியாக லாக்கர் ரூம் அமைத்து அதில் வடக்குநோக்கி பீரோவை வைப்பது நல்லது. இப்படி செய்ய  வசதியில்லாதவர்கள் தங்கள் அறையிலேயே வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி வைத்துக் கொள்ளலாம்.

பெற்றோரை மோசமாக நடத்தும் பிள்ளைகளுக்கு தண்டனை உண்டா?

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத் தான் ஆகவேண்டும். தவறுக்கு தண்டனை என்னும் நியதி அனைவருக்கும் பொருந்தும். இளையவர்களும் ஒருநாள் பெற்றோராகத் தான் போகிறார்கள். அப்போது தண்டனையிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது.

கஷ்டமான சூழ்நிலையில் கடவுளைத் திட்டினால் பாதிப்பு ஏற்படுமா?

ஒருபோதும் தெய்வத்தை நிந்திக்கக் கூடாது. அவரவர் செய்த முன்வினைப்பயனால் துன்பம் உண்டாகிறது என்ற உண்மையை உணராமல் கடவுள் மீது கோபம் கொள்கிறோம். கடவுள் தரும் துன்பமும் நன்மைக்கே என்று நினைப்பவருக்கு, அவரைப் பழிக்கும் எண்ணம் தோன்றாது.

வீட்டில் ஐந்துமுக விளக்கேற்றுவதன் சிறப்பு என்ன

ஐந்து முகங்களில் விளக்கேற்றி வழிபட்டால் வீட்டில் சந்தோஷம் குடியிருக்கும். லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். செல்வ வளம் பெருகும். திருமணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேறும்.

மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி

புறப்பொருள்கள் இடைவிடாது மூளையைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. புலன்களில் ஏற்படும் பதிவுகள் பொறிவாயில்கள் மூலமாக மூளையை அடைந்து மன எழுச்சியை ஏற்படுத்துகிறது. இப்பொழுது உங்களுக்குப் புறப்பொருள்கள் புலப்படுகின்றன. புலன்களின் மேல் ஏற்படும் பதிவுகளாலுண்டான வெளிப்புறத் தூண்டுகோலாலோ உணர்வு அல்லது நினைவின் மூலம் ஏற்படும் உட்புறத் தூண்டுகோலினாலோ உண்டாகலாம். ஒவ்வொரு தனித்த புலன் மேல் பதிவும் சிக்கலான உணர்ச்சி மூட்டையேயாகும். வெளிப்பாகத்திலிருந்து மூளையை நோக்கிச் செலுத்தப்படுகின்றன உணர்ச்சிகள். மனதின் அடித்தட்டில் ஏற்படும் ஒரு விழிப்புத்தன்மையே உணர்ச்சி. தனித்த புலன்மேல் பதிவிலிருந்து ஏற்படும் விழிப்புகளின் சேர்க்கைகள் மிகவும் சிக்கலானவை. புலன்களின் வழியாக ஏற்படும் மனஎழுச்சிகளை தியான சமயத்தில் வெறுத்தொதுக்குங்கள். எந்தவித கருத்துக்களையும் நினைவுக்குக் கொண்டுவருவதை விட்டொழியுங்கள். வேறு எண்ணமின்றி கடவுளது ஒரே எண்ணத்திலேயே மனோசக்தி முழுவதையும் ஒன்றச் செய்யுங்கள்.

மற்றெல்லா புலன்வழிப் பதிவுகளையும் எண்ணங்களையும் தவிருங்கள். மனத்தின் அடிப்படையில் எழும் எதிர்ச் செயல்களினின்று தோன்றும் சிக்கல்களை அகற்றுங்கள். மனதிலிருந்து ஒரே எண்ணத்தை மாத்திரமே பிரித்தெடுங்கள். மனதில் மற்றெல்லா தொழில்களையும் மூடிவிடுங்கள். இப்பொழுது மனம் ஒரே ஒரு எண்ணத்தினால் மாத்திரம் நிரப்பப்படும். நிஷ்டையும் பின்தொடரும். ஒரு எண்ணம் அல்லது ஒரு செயலைப் பன்முறை செய்தலானது அவ்வெண்ணம் அல்லது செயலின் பூரணத்தன்மைக்கு வழிகோலுவதைப் போல், ஒரே எண்ணத்தின் முறையொன்றைப் பல தடவை செய்தலானது ஒன்றித்தல், தியானம் இவற்றின் பூரணத்வத்திற்கு வழிகாட்டுகின்றன.
கீழ்க்காணும் பிரயோகங்களை கீதையில் பின்வரும் அநேகவிடங்களில் காணலம்.

அனன்ய சேதா; மச்சித்த; நித்யயுக்த; மன்மன; ஏகாக்ரம் மன; ஸர்வ பாவ். இப்பிரயோகங்கள் எல்லாம் நீங்கள் உங்கள் முழு மனதையும் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டியதிருக்கும் என்பதையே குறிக்கின்றன. அப்பொழுது தான் நீங்கள் ஆத்மானுபூதியை அடைவீர்கள். மனதின் ஒரு கதிர் கூட வெளியே செல்லுமேயாகில் தெய்வீக உணர்வைப் பெறுதல் அசாத்தியம். உங்கள் மனதில் வி÷க்ஷபம் நிலவிநிற்குமேயாகில் தியானத்தில் நிலைத்து நிற்கவும் மனச்சாந்தியைப் பெறவும் உங்களால் இயலாது. மனசஞ்சலமே வி÷க்ஷபமாகும். ரஜஸே வி÷க்ஷபமாகும். மனதில் வி÷க்ஷபமும் ரஜஸும் சேர்ந்தே இருக்கின்றன. நீங்கள் வி÷க்ஷபத்தை ஒழிக்க விரும்பினால் இச்சையடக்கம், இறைவனிடத்தில் ஆத்ம சரணாகதி மூலமாக இவ்வநித்ய ஆசைகளை அறவே ஒழித்துக்கட்ட வேண்டும்.

மனத்தூய்மை: நீங்கள் ஆத்மானுபூதியை அடைய விரும்பினால் பரிசுத்தமான மனதைப் பெற்றிருக்க வேண்டும். ஆசைகள் அவாக்கள், கவலைகள், மயக்கம், கர்வம், காம உணர்ச்சி, பற்றுதல், விருப்பு வெறுப்புகள் முதலியவற்றிலிருந்து மனம் விடுபட்டாலொழிய பரமசாந்தி, மாசற்ற இன்பம், நித்திய வாழ்வு முதலியவற்றின் சாம்ராஜ்யத்தினுள் புக அதனால் இயலாது. மனம் ஒரு பூங்காவனத்துடன் ஒப்பிடப்படுகிறது. உழுதல், உரமிடுதல், களை அறுத்தல், முட்களை நீக்குதல், மரம் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் முதலியவற்றின் மூலமாக நீங்கள் ஒரு தோட்டத்தில் பூ, பழம் முதலியவற்றை அபிவிருத்தி செய்ய முடிவதைப்போல் பேராசை, சினம், கஞ்சத்தனம், மருட்சி, கர்வம் முதலிய அசுத்தங்களை அகற்றி தெய்வீக எண்ணங்களாகிய தண்ணீரைப் பாய்ச்சி உங்கள் மனமாகிய பூங்காவில் பக்தியென்னும் மலரை நீங்கள் உற்பத்தி செய்யலாம். முட்களும் களைகளும் மழை காலத்தில் தோன்றி கோடைக்காலத்தில் மறைகின்றன. ஆனால் அவைகளின் விதைகள் பூமிக்கடியில் மறைந்திருக்கின்றன. ஒரே ஒருதரம் மழை பெய்தவுடன் விதைகள் மறுபடியும் முளைத்துக் குருத்து விடுகின்றன. இதுபோலவே, மனதின் விருத்திகளும் மேல்தளத்தில் தோன்றுகின்றன. பிறகு மறைந்து, சமஸ்காரங்களின் ரூபத்தில் நுண்ணிய விதை நிலையை மேற்கொள்கின்றன. அக அல்லது புறத் தூண்டுகோலினால் இந்த சமஸ்காரங்கள் மறுபடியும் விருத்திகளாகின்றன. களைகள், முட்களின்றி பூங்காவனம் சுத்தமாக இருக்கையில் இனிய பழங்களை நீங்கள் பெறலாம். இதுபோலவே, மனம் சுத்தமாக இருக்கையில் பேராசை, கோபம் முதலியவற்றிலிருந்து விலகி மனம் தனித்திருக்குங்கால், நல்ல ஆழ்ந்த தியானமாகிய பழத்தை நீங்கள் பெறலாம். ஆகவே முதலில் மனதை அதன் அசுத்தங்களிலிருந்து சுத்தப்படுத்துங்கள். பிறகு தானாகவே தியான ஊற்று பெருக்கெடுத்தோடும்.

நீங்கள் ஒரு தோட்டத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க விரும்பினால், களைகள் முட்கள் பிற செடிகள் முதலியவற்றை நீக்குவதோடல்லாமல் மழைக்காலத்தில் மறுபடியும் மறுபடியும் துளிர்விடும் ஏனைய விதைகளையும் நீங்கள் நீக்கவேண்டியிருக்கும். இதேபோல் நீங்கள் சமாதி அவஸ்தையையும், பரிபூரண சுதந்திரத்தையும் பெற விரும்பினால் மனதின் விருத்திகளாகிய பெரிய அலைகளை மட்டும் அகற்றுவதோடல்லாமல், மறுபடியும் மறுபடியும் விருத்திகளை முளைக்கச் செய்யும் பிறப்பிற்குரிய விதைகளான சகாரங்களையும் இல்லாதாக்க வேண்டியதிருக்கும். ஈரமுள்ள பச்சை மரமொன்றிற்கு நீங்கள் தீயிட்டால் அது தீப்பற்றிக் கொள்ளாது. ஆனால் காய்ந்த மரம் ஒன்றிற்கு நீங்கள் தீயிட்டால் அது உடனே தீப்பற்றி எரியும். அதுபோல், தங்கள் மனதைப் பரிசுத்தப் படுத்தாதவர்களால் தியானமாகிய தீயை எழுப்ப முடியாது. அவர்கள் தியானத்திற்கு உட்காருகையில் தூங்கிக் கொண்டோ, உடையை சரிபடுத்திக் கொண்டோ, அல்லது மனக்கோட்டைகள் கட்டிக் கொண்டோ இருப்பர். ஆனால் தங்கள் மனதிலிருக்கும் அசுத்தங்களை ஜபம், சேவை, ஈகை, பிராணாயாமம் முதலியவற்றால் நீக்கியவர்கள் ஆசனத்தில் அமர்ந்த மாத்திரத்திலேயே, தியானத்திலாழ்ந்து விடுவர். நன்கு உலர்ந்தமனம் தியானத்தீயுடன் உடனே தீப்பற்றிக் கொள்ளும். தினந்தோறும் ஒரு தட்டை நீங்கள் கழுவாவிடில் அது ஒளி மழுங்கிவிடும். மனதிற்கும் இதேநிலை தான். ஒழுங்காகத் தியானப் பயிற்சியுடன் மனம் சுத்தமாக வைத்திருக்கப்படாவிட்டால் அது அசுத்தமடைகிறது. தியானம் வியக்கத்தகும் வகையில் மன அழுக்கை நீக்குகிறது. ஆகையினால் ஒழுங்காக விடியற்காலையில் தியானப் பயிற்சியில் ஈடுபடுங்கள்.

எந்த ஒரு ஜீவப்பிராணிக்கும் பேராசை, சுயநலம், வெடுவெடுப்பு, தொந்தரவு முதலியவற்றால் துன்பம் கொடுக்காதீர்கள். சமர்செய்யும் உணர்ச்சியையும் காரசாரமான விவாதங்களையும் விட்டொழியுங்கள். விவாதம் செய்யாதீர்கள். எவருடனும் சண்டை செய்தாலோ அல்லது எவருடனாவது ஒரு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டாலோ நீங்கள் 3 அல்லது 4 நாட்களுக்கு தியானம் செய்ய முடியாது. உங்கள் மன சமத்வநிலை தடுமாற்றமடைகிறது. உபயோகமில்லாத கால்வாய்கள் மூலம் அதிகமான சக்தி வீணாக்கப்படுகிறது. இரத்தம் கொதிக்கும். நரம்புகள் முறுக்கை இழந்துவிடும். எனவே, எப்பொழுதும் பிரசாந்தமானதோர் மனதைக் கொண்டு விளங்க நீங்கள் உங்கள் முழு முயற்சியையும் செய்ய வேண்டும். அமைதியானதோர் மனத்திலிருந்தே தியானம் தோன்றமுடியம். தூய மனம் தான் உங்களது விலையுயர்ந்த ஆன்மீகப் பொக்கிஷமாகும். உண்மையாகவே தியானத்தில் விரைந்து முன்னேற நீங்கள் விரும்பினால், நீங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். எச்சமயத்திலும் உண்மையையே நீங்கள் மொழிய வேண்டும். பிறர் மனதைப் புண்படுத்தத் தக்க வகையில் எந்த ஒரு சுடு சொல்லையும், அநாகரீக வார்த்தையையும் நீங்கள் மொழிதல் கூடாது. சிறுகவே நீங்கள் பேச வேண்டும். இதுவே உங்களுக்குச் சக்தியளித்து, மனசாந்தியையும் ஆத்மீக பலத்தையும் அளிக்கக் கூடிய வாக்தபஸாகும்.

உங்கள் ஒழுக்கத்தை ஆராயுங்கள். அதில் புலப்படும் தவறொன்றைப் பொறுக்கி எடுங்கள். அதன் எதிரிடையை கண்டுபிடியுங்கள். நீங்கள் கோப குணம் பொருந்தியவர்களாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். கோபத்திற்கு எதிர் குணம் பொறுமை. பொறுமையின் தனித்த குணத்தில் தியானித்து, இவ்வரிய குணத்தை விருத்தி செய்ய முனையுங்கள். ஒவ்வொரு நாள் விடியற்காலையிலும் நான்கு மணிக்குப் பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அரைமணி நேரம் உட்கார்ந்து மனம் சுற்றித்திரியுங்கால் அதைப் பிடித்திழுக்கும் வகையில் தீவிரமாக சிந்தித்து, பொறுமை அதன் மதிப்பு, உத்வேகத்தின் போது அதை எங்ஙனம் பயிலுதல் முதலியவற்றை ஒவ்வொறு நாளும் ஒவ்வொரு குணத்தின்மீது சிந்தனை செய்ய முனையுங்கள். மனம் ஓடத்தொடங்கும் போதெல்லாம் அதைப் பிடித்திழுத்து நிறுத்துங்கள். உங்களை முற்றிலும் பொறுமையுடையவர்களாகவும், சாந்தஸ்வரூபிகளாகவும் நினைத்து, எனது உண்மை ஆத்மாவான இந்தப் பொறுமையை இன்றிலிருந்து நான் கொண்டு நிற்பேன் என்ற சபதத்துடன் முடியுங்கள். சிறிது நாட்களுக்குக் காணக்கூடிய அளவுக்குள்ள மாற்றங்கள் தோன்றாமலிருக்கலாம். நீங்கள் பழைய முரட்டுக் குணத்திலேயே நின்று வாழலாம். ஒவ்வொரு நாளும் காலையில் நன்கு அப்பியசித்து வாருங்கள். நான் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் அடிக்கடி உருவாகி நிற்கும். தொடர்ந்து அப்பியசித்து வாருங்கள்.

பொறுமையின்மையுடன் பொறுமையுணர்ச்சியும் சேர்ந்து தோன்றி வருவதுடன் பொறுமையின்øயின் வெளிப்படுகை ஒடுங்கி வரும். இன்னும் தொடர்ந்து அப்பியசியுங்கள். உத்வேக உணர்ச்சிகளெல்லாம் அடங்கி ஒடுங்கி நிற்பதுடன், நெருக்கடி நேரங்களில் பொறுமையானது உங்களது இயற்குணமாகவே அமைந்து விடும். இந்த மாதிரி, இரக்கம், தன்னடக்கம், தூய்மை, பணிவு, பெருந்தன்மை, தாராள மனப்பான்மை முதலிய உயர் பண்புகளை வளர்க்க முற்படுங்கள். மனதின் செயல்களே உண்மையில் கர்மங்கள் எனப்படும். செயலற்ற மனதின் மூலமே உண்மை விடுதலை உருவாகிறது. மனதின் ஆட்டத்திலிருந்து விடுபட்டவர்களிடம் சீரிய நிஷ்டை வந்தடைகிறது. மனம் மாசகன்ற தன்மையை அடைந்ததும், சாந்தியை அடைவதுடன் பிறப்பிறப்பைத் தரும் சம்சார மயக்கங்கள் விரைவிலேயே ஒழிக்கப்படுகின்றன. தூய்மையைப் பெற்ற பின் ஏற்படும் மனஒருமைப்பாடு உங்களுக்கு உண்மை இன்பத்தையும், அறிவையும் அளிக்க வல்லது. இந்த விஷயத்திற்காகவே நீங்கள் பிறந்துள்ளீர்கள். பற்றுதலினாலும், மோகத்தினாலும் நீங்கள் புறப்பொருள்களால் இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். கடவுளை இதயத்தில் தியானித்து நில்லுங்கள். ஆழ்ந்து தியானியுங்கள். உள்ளந்தரங்கத்தில் இரண்டறக் கலந்து ஒன்றாகுங்கள்.

தியானம் தியானத்திற்குரிய - காலம்,இடம்,ஆசனம்

ஒரு பொருள், இறைவன் அல்லது ஆத்மனின் தொடர்ந்த சிந்தனைப் பெருக்கே தியானம். தைலதாரை போன்று கடவுளின், ஒரே எண்ணத்தைச் சதா மனதில் கொள்வதே தியானம். யோகிகள் அதைத் தியானம் எனத் தெரிவிக்கின்றனர். பக்தர்கள் பஜன் என்கின்றனர். ஒரு புள்ளி அல்லது பொருளின் மீது மனதை ஒன்றச் செய்வதே ஒன்றித்தல். இதைத் தொடர்ந்து தோன்றி நிற்கிறது தியானம்.

தியானத்திற்குரிய தேவைகள்:

காலம்: அதிகாலையில் 4லிருந்து 6வரை தியானத்தை அப்பியசியுங்கள். இதுவே தியானத்தைப் பயிலுவதற்கான சிறந்த காலம். சிறிதும் தொந்தரவின்றி உங்கள் மனம் பரிசுத்தமாக இருக்கும் பகல் அல்லது இரவின் அப்பகுதியையே தேர்ந்தெடுங்கள். படுக்கைக்குச் செல்லும் முன் நீங்கள் தியானத்தில் அமரலாம். இந்நேரத்தில் மனம் அமைதியுடன் இருக்கும். ஞாயிறு நாட்கள் விடுமுறை நாட்களாதலால் மனம் சுதந்திரமாக இருக்கும். அன்று நீங்கள் நன்கு தியானத்தில் ஈடுபடமுடியும். ஞாயிறு நாட்களில் தீவிர தியானத்தில் ஈடுபடுங்கள். பால் பழங்களை மட்டும் உணவாகக் கொள்வதாலோ, உபவாசத்தை மேற்கொள்வதாலோ நல்ல தியானம் ஏற்படும். சதா உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி தியானத்தினால் பெரும் பயனை அடையுங்கள்.

இடம்: உத்தரகாசி, ரிஷீகேசம், பத்திரிநாராயணன் முதலிய ஆத்மீகச் சூழ்நிலைகள் ஓங்கி நிற்கும் ஏகாந்தமானதும் குளுமையானதுமானதோர் இடம் மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்த இன்றியமையாதது. எங்ஙனம் நீரில் உப்பு கரைந்து ஒன்றாகிறதோ, அதே போல் தன் அதிர்ஷ்டானமான பிரம்மத்தில், தியானாவஸ்தையிலுள்ள மௌன நிலையில், சாத்துவிக மனம் கரைந்து ஒன்றாகிறது. தனிமையும் தீவிர தியானமும் ஆத்மானுபூதிக்கான இரு முக்கிய தேவைகள், கங்கை அல்லது நர்மதையின் தீரம், இமாலயத் தோற்றம், அழகிய பூந்தோட்டம், புனிதக் கோவில்கள்-இவையே ஒன்றித்தல், தியானத்தில் மனதை உயர்த்தும் இடங்கள். இவ்வரிய இடத்தையே உங்கள் இருப்பிடமாக்கிக் கொள்ளுங்கள்.

ஆசனம்: சித்தாசனம் அல்லது பத்மாசனம் சரீரத்தை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. பந்தனங்களும் முத்திரைகளும் உடலை உரப்படுத்துகின்றன. பிராணாயாமம் காயத்தை லேசாக்குகிறது. நாடிசுத்தி மனஒருமைப்பாட்டை ஏற்படுத்துகிறது. இவ்வரிய தகுதிகளைப் பெற்றதும், பிரம்மனிடம் மனதைப் பதியவையுங்கள். அப்பொழுதுதான் தியானம் இலகுவாகவும் சந்தோஷமாகவும் தொடர்ந்து நிற்கும்.

திதிகள் தெரியும் அவற்றிற்குரிய தெய்வம் தெரியுமா?

ஸ்ரீசக்ர நாயகியான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் முறையே ஸ்ரீவித்யை அந்த ஸ்ரீவித்யையில் அம்பிகையை ஆராதிக்கும்போது, அவள் பிந்து மத்ய வாசினி என்பதற்கிணங்க, ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றி ஒரு முக்கோணம் இருக்கிறது. அந்த முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே திதி நித்யா தேவிகள். நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த்தம். இவர்கள் மொத்தம் பதினைந்து பேர். தேவியின் அம்ருத கலைகள் பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று, பதினைந்து நித்யா தேவிகளாக த்ரிகோணத்தைச் சுற்றி, பக்கத்துக்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.

யார் இந்த தேவிகள்? அன்னையின் கால வடிவே இந்த நித்யா தேவிகள். ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15 நாட்களுக்கும், சந்திர கலை வளர்கிறது அல்லவா? அந்த ஒவ்வொரு சந்திர கலைக்கும் திதிகளுக்கும் அதிஷ்டான தேவதைகளாக பதினைந்து நித்யா தேவிகள் விளங்குகிறார்கள். காமேச்வரி முதல் சித்ரா வரையிலான பதினைந்து நித்யா தேவிகளும் அன்னையைச் சுற்றியே எப்போதும் காணப்படுபவர்கள். இவர்களே ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான சந்திரகலையின் வடிவம். மகா நித்யாவாக, பதினாறாவது நித்யையாக அம்பிகையே வீற்றிருக்கிறாள்.

மாதர் மஹேச தயிதே லலிதே ஹயாஸ்ய
கும்போத்பவாதி முனி ஸன்னுத திவ்ய கீர்த்தே
காமேச்வரி ப்ரப்ருதிஸ் திதி தேவதாபி
ஸம்ஸேவிதாங்க்ரீயுகலே

பரமசிவனுடன் பிரியாதிருக்கும் ச்ருங்கார வடிவினன். ஹயக்ரீவர், அகத்தியர் முதலியவர்களால் துதிக்கப்பட்டவள்; காமேச்வரி முதலான பதினைந்து நித்யா தேவிகளால் சேவிக்கப்படுபவள்; இவளுக்கு நமஸ்காரம் என்கிறது சவுந்தர்யலஹரி. ஒருமுறை பண்டாசுர யுத்தத்தில் தமனன், சந்த்ரகுப்தன் முதலான அசுர சேனாதிபதிகள் இரவு நேரத்தில் அம்பிகையைச் சூழ்ந்துகொண்டு தாக்க முற்பட்டார்கள். அன்னை இதனால் சற்று கோபம் கொண்டு புருவத்தை நெறித்தாள். அன்னையின் கோபம் கண்ட நித்யா தேவிகள் பதினைந்து பேரும் ஆவேசமுற்றார்கள். அவர்களில் ஜ்வாலா மாலினி தேவியும் வஹ்நி வாஸினி தேவியும் ஜகவலிக்கும் தன்மை கொண்டவர்கள். அவர்கள் அன்னையின் உத்தரவு பெற்று, எங்கும் பேரொளியைப் பரப்பினார்கள்.  இருளில் வந்த அரக்கர்கள் நன்றாகவே தெரியலானார்கள். சக்தி சேனை திருப்பித் தாக்கத் துவங்கிவிட்டது! பதினைந்து நித்யைகளும், விஷங்கனுக்குத் துணைவந்த பதினைந்து அக்ரோணி சேனைகளையும் அவற்றின் தலைவர்களையும் கணப்போதில் கபளீகரம் செய்து எமலோகம் சேர்ப்பித்தார்கள்.  காமேசி தமனையும், பகமாலினி தீர்க்கஜிஹ்வனையும், நித்யக்லின்னா ஹும்பேகனையும், பேருண்டா ஹுடுல்லகனையும், வஹ்நிவாஸினி கல்கஸனையும், மகாவ்ஜ்ரேச்வரி கல்கிவாஹனனையும், சிவதூதி புல்கஸனையும், த்வரிதா புண்ட்ரகேதுவையும், குலஸுத்ந்தரி சண்டபாகுவையும், நித்யா குக்குரனையும், நீலபதாகா ஜம்புகாட்சனையும், விஜயா ஜம்பனையும், ஸர்வமங்களா திக்ஷ்ணச்ருங்கனையும், ஜ்வாலாமாலினி த்ரிகண்டகளையும், சித்ரா சந்த்ரகுப்தனையும் கொன்றழித்தார்கள்.

அவர்களின் செயல் வீரத்தைக் கண்டு அன்னை அவர்களைப் பாராட்டினாள். உங்கள் பதினைந்து பேரையும் வணங்குபவர்கள், வாழ்வில் அவர்கள் என்னவெல்லாம் கோருகிறார்களோ அவை அனைத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டும். உங்களை வணங்குபவர்களுக்கே என் அருள்கிட்டும் என்றும் அம்பிகை அருளினாள்.

ஒரு மாதம் கிருஷ்ண பட்சம் (பவுர்ணமியுடன் 15 நாட்கள்), சுக்ல பட்சம்(அமாவாசையுடன் 15 நாட்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பட்சமும் பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது. மகா நித்யாவின் கலைகளில் தோன்றி பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பட்சத்துக்கும் ஒருநாள் ஆக, மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.
இவர்கள் மிகுந்த வல்லமை கொண்டவர்கள். தேவியின் கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் கருணை கொண்டவர்கள். கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால், மிகச்சிறந்த நலன்களைப் பெறமுடியும்.

15 திதிகளும் அவற்றிற்குரிய தெய்வம்:

சுக்லபட்ச ப்ரதமை திதிக்கும் கிருஷ்ணபட்ச அமாவாசை திதிக்கும் அதிதேவதை காமேச்வரி
சுக்லபட்ச த்விதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதிக்கும் அதிதேவதை பசுமாலினி
சுக்லபட்ச த்ருதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ரயோதசி திதிக்கும் அதிதேவதை நித்யக்லின்னா
சுக்லபட்ச சதுர்த்தி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்வாதசி திதிக்கும் அதிதேவதை பேருண்டா
சுக்லபட்ச பஞ்சமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ஏகாதசி திதிக்கும் அதிதேவதை வஹ்நி வாஸினி
சுக்லபட்ச சஷ்டி திதிக்கும் கிருஷ்ணபட்ச தசமி திதிக்கும் அதிதேவதை மகா வஜ்ரேச்வரி
சுக்லபட்ச சப்தமி திதிக்கும் கிருஷ்ணபட்ச நவமி திதிக்கும் அதிதேவதை சிவதூதி
சுக்லபட்ச அஷ்டமி திதிக்கும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதிக்கும் அதிதேவதை த்வரிதா
சுக்லபட்ச நவமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சப்தமி திதிக்கும் அதிதேவதை குலஸுந்தரி
சுக்லபட்ச தசமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சஷ்டி திதிக்கும் அதிதேவதை நித்யா
சுக்லபட்ச ஏகாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச பஞ்சமி திதிக்கும் அதிதேவதை நீலபதாகா
சுக்லபட்ச த்வாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதிக்கும் அதிதேவதை விஜயா
சுக்லபட்ச த்ரயோதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ருதியை திதிக்கும் அதிதேவதை ஸர்வமங்களா
சுக்லபட்ச சதுர்த்தசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்விதியை திதிக்கும் அதிதேவதை ஜ்வாலாமாலினி
சுக்லபட்ச பவுர்ணமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ப்ரதமை திதிக்கும் அதிதேவதை சித்ரா

செவ்வாயின் பிறவி ரகசியம்!

நவக்கிரகங்களில் செவ்வாயை அங்காரகன் என்பர். இவரது அதிதேவதை முருகன். முருகனைப் போல செவ்வாயும், சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்தே அவதரித்தார். ஒருசமயம், பார்வதியை விட்டுப்பிரிந்த சிவன் யோகநிஷ்டையில் ஆழ்ந்தார். அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து வியர்வை அரும்பி பூமியில் விழுந்தது. அது ஒரு குழந்தையாக மாறியது. பூமாதேவி அக்குழந்தையை வளர்த்து ஆளாக்கினாள். சிவந்த அந்தக் குழந்தையை செவ்வாய் என்றனர். சிவனை நோக்கி தவம் செய்த செவ்வாய் கிரகபதவி பெற்றார். மச்சபுராணத்தில் செவ்வாயின் வரலாறு வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது. தட்சன் நடத்திய யாகத்தை அழிக்க சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பினார். யாகத்தை அழித்த வீரபத்திரர் ஆவேசம் தணியாமல் இங்கும் அங்கும் அலைந்தார். அவரைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சாந்தமாகும்படி வேண்டினர். வீரபத்திரரும் தன் வடிவை மாற்றிக் கொண்டு சாந்தமானார். அவரே செவ்வாய் என்று கூறப்பட்டுள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வீரபத்திரரை வணங்கி அருள் பெறலாம்.