Tuesday, July 23, 2013

உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!

கடவுளின் திருவடி என்னும் தோணியில் ஏறிக்கொண்டால் பிறவிக்கடலை நம்மால் எளிதாகக் கடக்க முடியும். மழை பெய்யாவிட்டால் உலக வாழ்வு நடைபெறாது. இன்னும் சொல்லப்போனால், மக்களிடம் ஒழுக்கமும் இல்லாமல் போய்விடும்.  நாளை பார்க்கலாம், நல்ல நாள் பார்த்து தர்மம் செய்யலாம் என்று இல்லாமல், இன்றே தர்மம் செய்து விடுங்கள். (ஏனெனில், நாளை என்பது நிச்சயமில்லை) செய்த தர்மம் இப்பிறவியில் மட்டுமல்லாமல் எப்போதும் துணைநிற்கும். உள்ளத்தில் பொய் இல்லாமல் இருக்கும் ஒருவன், உலகத்தாரின் உள்ளத்தில் நிரந்தரமாக குடியிருக்கலாம். தன் மனம் பொருந்த உண்மை பேசுவான் என்றால், அவன் தவமும் தானமும் செய்தவர்களை விட தலைசிறந்தவன் ஆவான்.

கற்பு என்னும் மனவலிமை பெண்ணிடம் இருக்க வேண்டும். அதைவிடச் சிறந்த விஷயம் உலகில் வேறு இல்லை. சிறையில் பூட்டி வைத்து பெண்ணைக் காப்பாற்ற முடியாது. பெண் என்பவள், தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே சிறந்த பாதுகாப்பாகும். பழிச்சொல்லுக்கு ஆளாகாத நல்ல பிள்ளைகளைப்பெற்றவனிடம் ஏழேழு பிறவியிலும் துன்பம் நெருங்குவதில்லை.  பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்ப்பதால் எந்த பலனுமில்லை. அதுபோல் மனிதனாய்ப் பிறந்தும் மனதில் அன்பு இல்லாவிட்டால் அவனால் சமூகத்துக்குப் பயனில்லை.
வீட்டில் விருந்தினர் அமர்ந்திருக்க, சாகாவரம் தரும் அமிர்தமாகவே இருந்தாலும் தான் மட்டும் தனித்து உண்பது கூடாது. இனிய சொற்களைப்பேசுவதால் இன்பம் உண்டாகும் என்பதை அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருந்தும் பிறர் மனம் நோகும்படி கொடிய சொற்களைப் பேசுவானேன்! சரியான நேரத்தில் செய்யும் உதவி சிறிதாக இருந்தாலும், அதன் மதிப்பு பரந்த உலகத்தை விடப் பெரியது.  பழிச்செயலைச் செய்தாலும் கூட மீள்வதற்கு வழியுண்டு. ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்த பாவத்தில் இருந்து மீள வழியில்லை.

ஒருவனால் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாக்கைக் காத்துக் கொள்வது அவசியம். ஒழுக்கமாக வாழ்வதே மனிதன் உயர்வதற்கு வழி. உயிருக்கும் மேலாக ஒழுக்கத்தை மதித்துப் போற்றுங்கள்.  உண்ணாமல் விரதம் மேற்கொள்வதை விட, பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்வது மேலான விரதம். பிறரது வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவனிடம், செல்வத்திற்கு அதிபதியான திருமகள் தன் மூத்த சகோதரியை இருக்கும்படி செய்து விடுவாள். பேசுவதாக இருந்தால் பயனுடைய நல்ல சொற்களைப் பேசுங்கள். பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் பேசுவது கூடாது.

மறந்தும் பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது. அவ்வாறு நினைத்தவனுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று அறக்கடவுள் எண்ணி விடுவார். மாமிச உணவு வேண்டாம் என்று உயிர்களைக் கொல்லாமல் வாழ்பவனை, உலக உயிர்கள் இருகரம் கூப்பி வணங்கும். தன்னைக் காத்துக் கொள்ள நினைப்பவன் கோபத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கோபமே அவனைக் கொன்றுவிடும். ஒருவர் செய்த நன்றியை மறப்பது கூடாது. நன்றி மறந்த பாவம் மிகவும் கொடியதாகும். -திருத்தமாய் சொல்கிறார் திருவள்ளுவர்

No comments:

Post a Comment