Tuesday, July 23, 2013

தினசரி வாழ்வில் பக்தியை இணைப்பது எப்படி?

ஒரு வரலாற்று உண்மை நிகழ்ச்சியை நினைவுபடுத்திக் கொண்டால் உள்ளே இருக்கும் இறை பற்றிய நினைவு எப்போதும் இருக்கும். கிம்பர்லி வைரச் சுரங்கம் பற்றிய உண்மை நிகழ்ச்சி ஹெர்மன் கான்வல் என்பவர் அமெரிக்காவில் உள்ள பிலெடெல்பியா என்ற மாகாணத்தில் கோயில் கட்டியவர் இவர் கூறிய உண்மை நிகழ்ச்சி. ஆப்பிரிக்காவில் ஒரு விவசாயி வைரக்கற்களைப் பெற விரும்பி ஆப்பிரிக்கா முழுவதும் சுற்றினார். தனக்குச் சொந்தமாக இருந்த நிலங்களையும் விற்றி வைரத்தைத் தேடித் தோற்று நொடிந்துபோன நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டார். அந்த விவசாயியின் நிலத்தை வாங்கியவர் ஒருநாள் நிலத்தைத் தோண்டும்போது பளபளப்பாக மின்னும் ஒரு பெரிய கல்லைக் கண்டார். இன்னும் சில இடங்களில் தோண்டியபோது, பளிச்சிடும் கற்கள் பல கிடைத்தன. அந்த இடம் தான் இன்றைய வைரச்சுரங்கம் உள்ள கிம்பர்லி என்ற இடம். என்ன ஆச்சரியம் பாருங்கள். தன் நிலத்தில் புதைந்து கிடைக்கும் வைரக்கற்கள் பற்றி அறிய இயலாமல் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார் அந்த விவசாயி! இதேபோல் தான் நாமும் உள்ளிருக்கும் இறையை கண்டுகொள்ள முயலாமல், புறத்தில் தேடித்தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
ஆலயத்தில் இறைவனுக்கு அபிஷேகம் அலங்காரம் முடிந்தவுடன் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள் அவற்றில் நாம் தூபத்தில்-அக்னி தேவனையும்
மகாதீபத்தில்-சிவனையும்
நாக தீபத்தில்-கேதுவையும்
விருஷப தீபத்தில்-தர்ம தேவதையையும்
புருஷாமிருக தீபத்தில்-விஷ்ணுவையும்
பூரணகும்பத்தில்-ருத்ரனையும்
பஞ்சதட்டுகளில்-பஞ்சபிரும்ம தேவதைகளையும்
நட்சத்திர தீபத்தில்-27 நட்சத்திரங்களையும்
மேரு தீபத்தில்-12 சூரியர்களையும்
விபூதியில்-பரமேஸ்வரனையும்
கண்ணாடியில்-சூரியனையும்
குடையில்-சந்திரனையும்
சாமரத்தில்-மகாலக்ஷ்மியையும்
விசிறியில்-வாயு தேவதைகளையும்
ஆலவட்டத்தில்-பிரம்மாவையும்
கற்பூரத்தில்-அக்னியையும்
அதிதேவதைகளாக பாவித்து வணங்க வேண்டும் பொருளுணர்ந்து பூஜையை ரசிக்கும் போது தன்னால் இறையுணர்வு வரும்.

பூரண கும்பம்: உலகில் உள்ள தாவர சங்கமங்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன. பிரளய காலத்தில் நீரிலேயே லயம் ஆகிவிடுகின்றன. ஆதலால் இறைவனை நீரின்மூலம் உருவ வழிபாட்டிற்கு கொண்டுவருவதே பூரண கும்பத்தின் தத்துவம்.
கும்பம்(குடம்)-உடல்
குடத்தில் உள்ள நீர்-ரத்தம்
உள்ளே போடப்படும் ரத்தினங்கள்-சுக்கிலம்.
கூர்ச்சம்-நாடி.
குடத்தின் மேலே சுற்றப்பட்ட நூல்-நரம்புகள் குடத்தின் மேலே போடப்பட்ட துணி(வஸ்திரம்-தோல்)
மந்திரங்கள்-உயிர்
குடத்தின் மேலுள்ள தேங்காய் சிரக, முகம், லம்பகூர்ச்சம்-சிகை(முடி)
மாவிலைகள்-ஜடாபாரங்கள்.
இப்படி மந்திரங்களின் உதவியுடன் அலங்கரிக்கப்பட்ட குடத்தில், சிவனை எழுந்தருளச் செய்கிறோம். என்று சிவ ஆகமத்தில் சொல்லப்படுகிறது. எனவே பூரண கும்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் இறைவனாக பாவித்து வணங்க வேண்டும் பொருளறிந்து செய்யப்படும் பூசைகள் மூலம் நாள் முழுவதும் இறை உணர்வில் இருக்கமுடியும்.

கோலங்கள் காட்டு தெய்வீகம்: கோலங்களின் இரண்டு பக்கங்களிலுமுள்ள கோடுகள் சம அளவில் பொருத்தமாக அமைந்திருப்பதுதான் கோலத்தின் அழகுக்கும், மங்கள தோற்றத்திற்கும் காரணம். தர்மவழியில் சமத்துவமனப்பான்மையுடன் (சமத்துவ மனப்பான்மையே கிருஷ்ணனுக்குச் செய்யும் ஆராதனை என்னு விஷ்ணு புராணம் கூறுவதுபோல நடக்கும் மனிதர்கள் தெய்வீகம் அடைவார்கள் என்பதையே கோலங்கள் காட்டுகின்றன.
ஆலயங்களிலும் வீடுகளிலும் விளக்கேற்றுகிறோம். இதன் உள்ளார்ந்த தத்துவம் என்ன? விளக்கில் உள்ள எண்ணெய் எண்ணப்பதிவுகள்.
திரி-ஆணவம், ஏற்றும் ஒளி-ஞானம். ஆசைகளால் வருவது எண்ணப்பதிவுகள். எண்ணப் பதிவுகளால் வருவது துன்பமும் பிறப்பும், திரியைத்தூண்டி விளக்கை ஏற்றுவதுபோல, ஞானத்தால் வாசனைகளையும் ஆணவத்தையும் அழிக்கவேண்டும். சென்ற பிறப்பின் நல்ல மற்றும் தீய எண்ணங்களால் வாசனைகள் அல்லது பதிவுகள் ஏற்படுகின்றன. அவற்றால் துன்பம் நேர்வது உண்மை. ஞானத்தால் மட்டுமே வாசனைகளை அழிக்க முடியுமென்று காட்டுவதே விளக்கேற்றுவதில் உள்ள தத்துவம்.

உள்ளே தேடிக் கண்டுகொள்ளாலாமே..
இறை உள்ளிருக்கிறான் என்ற நம்பிக்கை ஆழமாகப் பதிந்துவிட்டால் இறையுணர்வு உண்டாகும். உலகை வென்ற அலெக்ஸாண்டர் போரினால் கிடைத்த வெற்றிகளில் அமைதி பெறமுடியாமல் ஒரு சந்நியாசியிடம் சென்று, நான் அமைதி பெற என்ன வழி என்று கேட்டார்.
கடவுளால்தான் உனக்கு அமைதியைத் தரமுடியும் என்றார் அவர். கடவுள்தான் எனக்கு அமைதியைத் தரமுடியும் என்கிறீர்களே! கடவுள் இருப்பதை நான் எப்படி நம்பமுடியும்? என்றார் அலெக்ஸாண்டர்.
காற்றால் இழுக்கப்பட்டு பட்டம் உயரே உயரே பறக்கும்போது நம் கையிலுள்ள நூலில் ஏற்படும் விசையைக்கொண்டு காற்றின் சக்தியை உணர முடியுமே தவிர மற்றவர்களுக்குக் காண்பிக்க முடியுமா? அதுபோலத்தான் கடவுளும் என்றார்.

அட்டாங்க யோகம்: இறைவன் உள்ளிருக்கிறான் என்ற உண்மையை கல்வி கேள்விகளால் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்(தெளிவுறுதல்) பின் அதைப்பற்றி நமக்கு நாமே ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொள்கிறோம் (உறுதி கொள்ளல்)  இந்த உறுதியானது நமது ஒவ்வொரு உணர்விலும் நிலைபெற்று விடுகிறது. (உணர்வில் நிலைபெறுதல்)
இந்த ஒளியைக் காணவேண்டும் என்ற தீவிர விருப்பம் ஏற்படுகிறது. இந்த நிலையை அடைந்தபின் அட்டாங்க யோகம் மூலம் இறைவனை அடையமுடியும் இதற்கு எட்டுவிதமான படிகள் உள்ளன எனவே அட்டாங்க யோகம் எனப்படுகிறது.
1. இயமம்; மனமாக இல்லாமை, கொல்லாமை, களவு குணம் இல்லாமை, ஆகியவற்றைப் பழக்கப்படுத்திக் கொண்டால் நல்லவை செய்யும் நெறி ஏற்பட்டுவிடும்.
2. நியமம்: தூய எண்ணங்களை வளர்த்தல். கருணை பொறுமை ஆகியவற்றால் மனதைச் செம்மைப்படுத்துதல்.
ஆசனம்: பத்மாசனம், ககாசனம் போல ஏழு ஆசனங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றில் நமக்கு வசதியாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
4. பிராணாயாமம்: மூச்சை நிதானமாக இழுத்து, அடக்கி, வெளிவிட்டுச் செய்கின்ற செயலில் உடலுக்கும் மனதுக்கும் வலிமையும் ஆக்கமும் கிடைக்கும். இதை முறையாக யாரிடமாவது கற்றுக்கொண்டால் நல்லது மூச்சுப்பயிற்சியின் மூலம் எண்ணங்களை ஒடுக்க முடியும்.
5. பிரத்தியாகாரம்: மூச்சுப் பயிற்சியால் மனதில் எண்ணங்கள் அடங்கி மனம் ஒரு நிலைக்கு வந்தபின், மனதை வெளிச் செய்திகளில் போகவிடாமல் உள்நோக்கித் திருப்புதல்.
6. தாரணை: வெளியே செல்ல விடாமல் தடுத்த எண்ணங்களை, மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களில் நிறுத்தி ஒரே கவனத்துடன் இருத்தல்
7. தியானம்: தாரணை சித்திக்கப் பெற்றவுடன், தியானம் செய்வது சுலபம். முதலில் 15 நிமிடங்கள். பிறகு 30 நிமிடங்கள் என்று நேரத்தைக் கூட்டிக் கொள்ளலாம். 30 நிமிடங்கள் உட்கார்ந்தாலும் 5 முதல் 7 நிமிடங்கள் வரைதான் மனது தியானத்தில் வசப்படும். 30 நிமிடங்கள் அமர்ந்தால்தான் 5 நிமிட தியான அனுபவமாவது கிடைக்கும். எப்பொழுதும் குளத்தை தோண்டிக் கொண்டே இருக்கும் ஒருவன், எப்பொழுது அந்தக் குளத்திலிருந்து நீர் குடிப்பான்? தனது உடலில் சேற்றைக் கழுவுவான்? என்கிறார் துளசிதாசர் நூல்களைப் படித்துக்கொண்டே இருப்பதால் பேருண்மையை அனுபவிக்க முடியாது. மனதார நினைத்து தியானியுங்கள் என்பதுதான் இதன் பொருள்.
8. சமாதி: தினமும் இரண்டு அல்லது மூன்று முறை தியானம் செய்து பழகும்போது அதற்குண்டான அமைதி, மகிழ்ச்சி கிடைக்கும். அருளாளர்களுக்கும் சித்தர்களுக்குமே நிலைத்த சமாதிநிலை கிடைக்கும்.
எல்லாம் தானாகி இருந்திடினும் இஃதறிய
வல்லார் சிலர் என்பர் வாய்மை எல்லாம் கண்டவரே என்பது பாரதியின் கூற்று

சரணாகதி தத்துவம்: யோகம், தியானம் சிலருக்கு சாத்தியமில்லை என்றால், சரணாகதி தத்துவம் மூலம் இறைவனை அடைவதென்பது எளிமையான வழி பக்தி, வைராக்கியம், மன உறுதி இருந்தால் இந்த முறை சுலபம். இறைவனை சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற உணர்வு உறுதியாக நெஞ்சில் பதிந்தால் இறையுணர்வு எப்போதும் இருக்கும்.
மகாபாரதத்தில் திரவுபதியின் அனுபவம் இந்த உண்மையை எடுத்துக்கூறும் பலரும் நிறைந்த சபையில் துச்சாதனன் துகிலுரிந்தபோது அவளது செல்வாக்கோ படைபலமோ உதவவில்லை பலமும் வீரமும் புத்திக் கூர்மையும் மிக்க ஐந்து கணவர்களும் உதவ இயலவில்லை.
செயலற்ற நிலையில் கண்களை மூடி கிருஷ்ணா கிருஷ்ணா என்று உள்ளமும் உணர்வுகளும் நெகிழ தியானித்து, முழுமையாக கண்ணனிடம் சரணடைந்தபோது திரவுபதிக்கு கண்ணன் உதவினான் என்று பாரதத்தில் படிக்கிறோம். முழுமையாக சரணடையும் உணர்வு ஏற்பட்டுவிட்டால், நாள் முழுவதும் அருள் ஓட்டம் இருக்கும்.
தொட்டில் குழந்தைக்கு பாடும் தாலாட்டு ஆராரோ ஆரிரரோ
யார் யாரோ யார் இவரோ? என்ற வார்த்தைகள், சற்று மாறிய நிலைதான் ஆராரோ ஆரிரரோ.
நீ யாரோ நான் யாரோ என்று ஆராய வேண்டும் என்பதுதான் இதன் உட்கருத்து. நான், எனது என்ற வார்த்தைகளை ஆராய்ச்சி செய்தால் நிஜமான நான் என்பது எது என்ற உன்னத தத்துவம் புரியும். இதைத்தான் ரமணர், நான் யார் என்று ஆராய்ச்சி செய்தால் தெளிவு வரும், நான் என்பது சிவனைத் தவிர வேறில்லை என்கிறார். மிகவும் சிரமமான பயிற்சிதான் இது. இதை ஆராரோ என்ற எளிமையான வார்த்தைகளில் நமக்குப் புரிய வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

பிணத்துக்குமுன் ஆடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது?
பலசமயம் பிணத்திற்குமுன் தப்பட்டை அடித்துக்கொண்டு ஆடி வருவதைப் பார்க்கும்போது சற்று அருவருப்பாகக்கூட உள்ளது. துக்கமான சமயத்தில் ஏன் இப்படி ஒரு ஆட்டத்தை வைத்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுகிறது.
ஆடி ஆட்டம் என்ன
பேசி பேச்சு என்ன
கூடுவிட்டு ஆவி போனால்
கூடவே வருவதென்ன
என்னும் தத்துவத்தை நமக்குப் புரியவைப்பதற்காகவே பிணத்துக்குமுன் ஆடும் கலாச்சாரம் உள்ளது. ஆடி அடங்கும் வாழ்க்கையைப் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதற்காகவே இப்படி ஒரு பழக்கத்தை வைத்துள்ளனர், கலபமாகச் சொன்னால் உனக்கும் இந்த நிலைதான் ஒருநாள் என்று தம் ஆட்டத்தின் மூலம் உணர்த்துகிறார்கள். இவற்றை எல்லாம் உள்ளவாறு உணர்ந்தால் எப்போதும் நிலையாக உள்ள சத்திய வடிவத்தைப் பற்றிக்கொள்ளும் மனது.
தர்மரிடம், உலகத்தில் மிகவும் அதிசயமான செய்தி எது? என்று கேட்டபோது தினம் தினம் மனிதர்கள் இறப்பதைப் பார்க்கும்போதும், இறப்பைப் பற்றிய ஒரு தெளிவை உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்கும் மனிதர்கள்தான் உலகில் அதிசயமான செய்தி என்கிறார் தர்மர்.
தொட்டில் முதல் சுடுகாடு வரை வாழ்வின் தத்துவத்தை நமக்கு அறிவுறுத்தியுள்ளனர் முன்னோர். அவற்றை உணர்ந்துகொள்வதில்தான் நம் ஆன்ம முன்னேற்றம் இருக்கிறது