Sunday, July 7, 2013

திதிகள் தெரியும் அவற்றிற்குரிய தெய்வம் தெரியுமா?

ஸ்ரீசக்ர நாயகியான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் முறையே ஸ்ரீவித்யை அந்த ஸ்ரீவித்யையில் அம்பிகையை ஆராதிக்கும்போது, அவள் பிந்து மத்ய வாசினி என்பதற்கிணங்க, ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றி ஒரு முக்கோணம் இருக்கிறது. அந்த முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே திதி நித்யா தேவிகள். நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த்தம். இவர்கள் மொத்தம் பதினைந்து பேர். தேவியின் அம்ருத கலைகள் பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று, பதினைந்து நித்யா தேவிகளாக த்ரிகோணத்தைச் சுற்றி, பக்கத்துக்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.

யார் இந்த தேவிகள்? அன்னையின் கால வடிவே இந்த நித்யா தேவிகள். ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15 நாட்களுக்கும், சந்திர கலை வளர்கிறது அல்லவா? அந்த ஒவ்வொரு சந்திர கலைக்கும் திதிகளுக்கும் அதிஷ்டான தேவதைகளாக பதினைந்து நித்யா தேவிகள் விளங்குகிறார்கள். காமேச்வரி முதல் சித்ரா வரையிலான பதினைந்து நித்யா தேவிகளும் அன்னையைச் சுற்றியே எப்போதும் காணப்படுபவர்கள். இவர்களே ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான சந்திரகலையின் வடிவம். மகா நித்யாவாக, பதினாறாவது நித்யையாக அம்பிகையே வீற்றிருக்கிறாள்.

மாதர் மஹேச தயிதே லலிதே ஹயாஸ்ய
கும்போத்பவாதி முனி ஸன்னுத திவ்ய கீர்த்தே
காமேச்வரி ப்ரப்ருதிஸ் திதி தேவதாபி
ஸம்ஸேவிதாங்க்ரீயுகலே

பரமசிவனுடன் பிரியாதிருக்கும் ச்ருங்கார வடிவினன். ஹயக்ரீவர், அகத்தியர் முதலியவர்களால் துதிக்கப்பட்டவள்; காமேச்வரி முதலான பதினைந்து நித்யா தேவிகளால் சேவிக்கப்படுபவள்; இவளுக்கு நமஸ்காரம் என்கிறது சவுந்தர்யலஹரி. ஒருமுறை பண்டாசுர யுத்தத்தில் தமனன், சந்த்ரகுப்தன் முதலான அசுர சேனாதிபதிகள் இரவு நேரத்தில் அம்பிகையைச் சூழ்ந்துகொண்டு தாக்க முற்பட்டார்கள். அன்னை இதனால் சற்று கோபம் கொண்டு புருவத்தை நெறித்தாள். அன்னையின் கோபம் கண்ட நித்யா தேவிகள் பதினைந்து பேரும் ஆவேசமுற்றார்கள். அவர்களில் ஜ்வாலா மாலினி தேவியும் வஹ்நி வாஸினி தேவியும் ஜகவலிக்கும் தன்மை கொண்டவர்கள். அவர்கள் அன்னையின் உத்தரவு பெற்று, எங்கும் பேரொளியைப் பரப்பினார்கள்.  இருளில் வந்த அரக்கர்கள் நன்றாகவே தெரியலானார்கள். சக்தி சேனை திருப்பித் தாக்கத் துவங்கிவிட்டது! பதினைந்து நித்யைகளும், விஷங்கனுக்குத் துணைவந்த பதினைந்து அக்ரோணி சேனைகளையும் அவற்றின் தலைவர்களையும் கணப்போதில் கபளீகரம் செய்து எமலோகம் சேர்ப்பித்தார்கள்.  காமேசி தமனையும், பகமாலினி தீர்க்கஜிஹ்வனையும், நித்யக்லின்னா ஹும்பேகனையும், பேருண்டா ஹுடுல்லகனையும், வஹ்நிவாஸினி கல்கஸனையும், மகாவ்ஜ்ரேச்வரி கல்கிவாஹனனையும், சிவதூதி புல்கஸனையும், த்வரிதா புண்ட்ரகேதுவையும், குலஸுத்ந்தரி சண்டபாகுவையும், நித்யா குக்குரனையும், நீலபதாகா ஜம்புகாட்சனையும், விஜயா ஜம்பனையும், ஸர்வமங்களா திக்ஷ்ணச்ருங்கனையும், ஜ்வாலாமாலினி த்ரிகண்டகளையும், சித்ரா சந்த்ரகுப்தனையும் கொன்றழித்தார்கள்.

அவர்களின் செயல் வீரத்தைக் கண்டு அன்னை அவர்களைப் பாராட்டினாள். உங்கள் பதினைந்து பேரையும் வணங்குபவர்கள், வாழ்வில் அவர்கள் என்னவெல்லாம் கோருகிறார்களோ அவை அனைத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டும். உங்களை வணங்குபவர்களுக்கே என் அருள்கிட்டும் என்றும் அம்பிகை அருளினாள்.

ஒரு மாதம் கிருஷ்ண பட்சம் (பவுர்ணமியுடன் 15 நாட்கள்), சுக்ல பட்சம்(அமாவாசையுடன் 15 நாட்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பட்சமும் பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது. மகா நித்யாவின் கலைகளில் தோன்றி பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பட்சத்துக்கும் ஒருநாள் ஆக, மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.
இவர்கள் மிகுந்த வல்லமை கொண்டவர்கள். தேவியின் கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் கருணை கொண்டவர்கள். கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால், மிகச்சிறந்த நலன்களைப் பெறமுடியும்.

15 திதிகளும் அவற்றிற்குரிய தெய்வம்:

சுக்லபட்ச ப்ரதமை திதிக்கும் கிருஷ்ணபட்ச அமாவாசை திதிக்கும் அதிதேவதை காமேச்வரி
சுக்லபட்ச த்விதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதிக்கும் அதிதேவதை பசுமாலினி
சுக்லபட்ச த்ருதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ரயோதசி திதிக்கும் அதிதேவதை நித்யக்லின்னா
சுக்லபட்ச சதுர்த்தி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்வாதசி திதிக்கும் அதிதேவதை பேருண்டா
சுக்லபட்ச பஞ்சமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ஏகாதசி திதிக்கும் அதிதேவதை வஹ்நி வாஸினி
சுக்லபட்ச சஷ்டி திதிக்கும் கிருஷ்ணபட்ச தசமி திதிக்கும் அதிதேவதை மகா வஜ்ரேச்வரி
சுக்லபட்ச சப்தமி திதிக்கும் கிருஷ்ணபட்ச நவமி திதிக்கும் அதிதேவதை சிவதூதி
சுக்லபட்ச அஷ்டமி திதிக்கும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதிக்கும் அதிதேவதை த்வரிதா
சுக்லபட்ச நவமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சப்தமி திதிக்கும் அதிதேவதை குலஸுந்தரி
சுக்லபட்ச தசமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சஷ்டி திதிக்கும் அதிதேவதை நித்யா
சுக்லபட்ச ஏகாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச பஞ்சமி திதிக்கும் அதிதேவதை நீலபதாகா
சுக்லபட்ச த்வாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதிக்கும் அதிதேவதை விஜயா
சுக்லபட்ச த்ரயோதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ருதியை திதிக்கும் அதிதேவதை ஸர்வமங்களா
சுக்லபட்ச சதுர்த்தசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்விதியை திதிக்கும் அதிதேவதை ஜ்வாலாமாலினி
சுக்லபட்ச பவுர்ணமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ப்ரதமை திதிக்கும் அதிதேவதை சித்ரா