Tuesday, July 23, 2013

அத்தனைக்கும் ஆசைப்படாதே!

ஆசை தான் நம்மை பலவித பொய்களைப் பேசவைக்கிறது. பொய்க்கு வித்தாக இருப்பது ஆசை தான். மநு முதலான மகாபெரியவர்கள் அகிம்சை, சத்யம், திருடாமை, தூய்மை, புலனடக்கம் முதலிய உயர்ந்த பண்புகள் மக்களுக்கு வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த ஐந்தையும் செய்ய விடாமல் தடுப்பதாக ஆசை இருக்கிறது.  இம்சை ஏன் செய்கிறோம்? மாம்ஸத்திலுள்ள ஆசையினால். இன்னொருத்தனிடமுள்ள ஒரு பொருளில் நமக்கு ஏற்படும் ஆசையால் அவனை இம்சித்தாவது அதைப் பெற முயல்கிறோம். சத்தியத்தை ஏன் விடுகிறோம்? ஆசை வைத்த எதையும் சத்தியவழியில் அடைய முடியாது என்பதால் தான். நம்முடைய சொத்து, அந்தஸ்து, மானம் போன்ற எதுவோ ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசைக்காகத் தான். பொருளிடத்தில் உள்ள ஆசையால் தான் திருடுகிறார்கள் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆசார சுத்தியை விட்டு விடுவது, மனசு போனபடி சுகசவுகர்யங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையால் தான். புலனடக்கம் இல்லாமல் போவதும் ஆசையால் தான் என்பதை சொல்லவும் வேண்டாம். அதாவது மநு சொன்ன ஐந்து தர்மங்களையும் மீறப் பண்ணுவதாக ஆசை இருக்கிறது. ஆசையினால் இழைக்கும் துன்பங்கள் ஒருவனைச் சும்மாவிடுவதில்லை. அவை எல்லாம் பாபக்கணக்கில் ஏறி ஒட்டிக்கு இரட்டியாக அவனை நரகலோகத்திலும் மறு ஜன்மாக்களிலும் பழி வாங்கத் தான் செய்யும். -காஞ்சி பெரியவர்

No comments:

Post a Comment