Monday, April 15, 2013

அரசமரத்தை சுற்றுவது எப்படிகுழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

1. அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும்.

2. கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்.

3. சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. இதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும்.

4. குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றிவரலாம்.

5. சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. மலட்டுத்தனத்திற்கு காரணமான பீடைகள் நீங்கிவிடும்.

6. அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம்வரக்கூடாது.

7. ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால் கடன் தொல்லை நீங்கும். பயஉணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீர்ந்துவிடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.

இறை வழிபாட்டு முறை

கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமான மூன்று வழிமுறைகள் உள்ளதாக ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன
.
1. உத்தம நமஸ்காரம்: லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து, இதயத்திற்கு
அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து, மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒருநொடியேனும் மனதார வணங்க வேண்டும்.
மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்குவதை இறைவன் செவிசாய்த்து கேட்பான் என்பது ஐதீகம்.

2. அஷ்டாங்க நமஸ்காரம்: இவ்வகையான நமஸ்காரமுறை ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இம்முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம்  எட்டு;
அங்கம்  உடற்பாகம்) தரையில் படும்படியாக வீழ்ந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு
தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி ஆகிய உடற்பாகங்களை தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு இறைவனின்
திருப்பாதத்தை சரணடைந்தால் வாழ்வில் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும்.

3. பஞ்சாங்க நமஸ்காரம்: இந்த நமஸ்காரமுறை பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகையான வணங்கல் முறையில் பெண்கள் தங்களது பஞ்சாங்கத்தையும் (பஞ்சம்  ஐந்து; அங்கம்  உடற்பாகம்) இறைவனிடம் முழுமையாக சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கிட நற்பலன்கள் கிட்டும்.

நால்வகை தீப பலன்கள்

கிழக்கு முகத் தீபம் - துன்பம் நீங்கும்
மேற்கு முகத் தீபம் - பகை விலகும்
வடக்கு முகத்தீபம் - மங்களம் பெருகும்
தெற்கு முகத்தீபம் - பாவம் பெருகும்.

பஞ்சாங்கம் படிப்பது ஏன்?

பஞ்சாங்கம் படிக்கும் போது வாரத்தைப் பற்றிச் சொல்வதால் ஆயுள் அதிகரிக்கும். திதியைப் பற்றிச் சொல்வதால் ஐஸ்வர்யம் கிடைக்கும். நட்சத்திரம் பற்றிச் சொல்வதால் பாவங்கள் நீங்கும். யோகத்தைப் பற்றிச் சொல்வதால் நோய்கள் குணமாகும். கரணத்தைப் பற்றிச் சொல்வதால் காரியம் பலிதமாகும்.

தெய்வ முத்திரைகள் உணர்த்தும் தத்துவம்!


பாதுகாப்பு அறிக்கிறேன், விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்பது அபய வரத முத்திரையின் விளக்கம், நம் எண்ணத்துக்கு உகந்தவாறு பரம்பொருளின் பல வடிவங்களான இறையுருவங்களுக்கு முத்திரைகள் அமைந்திருக்கும். ஆன்ம ஞானத்துக்கு சின்முத்திரை ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும். இடையூறு வருமோ என்ற எண்ணம் மேலோங்கும்போது, ஸ்ரீவிக்னேஸ்வரரை அணுகுவோம். குழந்தைச் செல்வம் வேண்டும் என்றால், ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணனை அணுகுவோம். குடும்ப ÷க்ஷமத்தை நிறைவு செய்ய ஸ்ரீசோமாஸ்கந்த பரமேஸ்வரரை ஏற்போம். அரக்கர் பயம் அகல மகிஷாசுரமர்த்தினியை வழிபடுவோம். அதேபோன்று கலையில் தேர்ச்சி பெற கலைமகளையும், வீரம் பெற்று விளங்க மலைமகளையும் வழிபடுவோம். இப்படி, நம் எண்ணத்துக்கு உகந்த முத்திரை அல்லது வடிவம் பெற்ற இறையுருவங்களை அணுகும்போது, மனம் அதில் எளிதில் லயித்துவிடும்.
பரம்பொருள் பல இறையுருவங்களாகக் காட்சியளிக்க நமது எண்ணம்தான் காரணம். உலகமே நான்தான் என்று காட்ட விஸ்வரூபம் எடுத்தார் ஸ்ரீகிருஷ்ணர். நீரில் மூழ்கித் தேடுவதற்காக மத்ஸ்யாவதாரம், மந்திர பர்வதத்தைத் தாங்க ஆமை வடிவம், பூமியைத் துறைபோட்டு இறங்க வராஹம்... இப்படிச் செயலுக்கு உகந்த வடிவங்களை எடுத்தார் ஸ்ரீமந் நாராயணன், பக்தனைக் காக்க நரசிம்மம், பலியை ஒடுக்க வாமனன், அரசர்களை அடக்க பரசுராமர், அரக்கனை அழிக்க ஸ்ரீராமன், எதிரிகளை வெல்ல பலராமன், அறிவைப் புகட்ட ஸ்ரீகிருஷ்ணன்....... இப்படி, அவரது செயல்பாடுகள் அத்தனையும் செயலை ஒட்டிய வடிவமைப்பில் நிறைவேறின அலை அலையாக வெளிவரும் ஆசைகளின் ஊற்று மனம் நிலைக்கும் திறன் மனம் (மனனாத்மன) ஆசைகளை நிறைவேற்ற ஆண்டவனை அணுகுவோம். ஆசைக்கு உகந்த இறையுருவத்தை ஆராதிப்போம். மாறுபட்ட ஆசைகள் தோன்றும்போது, மாறுபட்ட இறையுருத்தை அணுகத் தோன்றும். எல்லாப் பொருட்களிலும் தெய்வத்தன்மையைப் பார்க்கச் சொல்கிறது ஸனாதனம்.
நாக ப்ரதிஷ்டை, அச்வத்த ப்ரதிஷ்டை, கூப ப்ரதிஷ்டை, தடாக ப்ரதிஷ்டை, ஆராம ப்ரதிஷ்டை, இப்படிப் பாம்பிலும், மரத்திலும், குளத்திலும், குட்டையிலும், கிணற்றிலும் தெய்வாம்சத்தைப் பார்ப்பது உண்டு. பிரபஞ்சம் முழுவதையும் பரம்பொருளின் வடிவமாகப் பார்க்கும் பக்குவம் வரும்போது, நாமே எல்லாமும் என்று தெரிய வரும்(ஆத்மவத் ஸர்வ பூதானி ய பச்யதி ஸபச்யதி) ஆரம்ப காலத்தில் முத்திரையிலும் வடிவத்திலும் தெய்வாம்சத்தைப் பார்த்து, படிப்படியாக எல்லாவற்றிலும் காணும் பக்குவம் வந்துவிட்டால், துயர் தொடாத ஆனந்தத்தை உணரலாம்.

குறிப்பிட்ட தத்துவ முத்திரையாகச் சுட்டிக் காட்டப்படும் சின்முத்திரை- ஜீவ ப்ரம்ம ஐக்கியத்தைச் சொல்லும் (அங்குஷ்ட தர்ஜனி யோக முத்ரா வ்யோஜேன தேஹினாம். க்ருத்யுக்தம ப்ரம்ம ஜீவைக்யம் தர்சயன் னோவதாத் சிவ) கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம் ஆகியவற்றை முத்திரை வழி செயல்படுத்தும்போது, ஆன்மாவை அமுதமாக நிவேதனம் செய்ய காமதேனு முத்திரை பயன்படும். மானசீக பூஜையில் முத்திரை பயன்படும். புராண விளக்கங்களில் உருப்பெற்றவை மூர்த்தங்களின் உருவங்கள். மகாபாரதம் எழுதுவதற்கு ஒரு தந்தம் பயன்பட்டதால், ஏகதந்தன் ஒரு தந்தம் பயன்பட்டதால் ஏகதந்தன் ஆனார் விக்னேஸ்வரர். மேலும் பஞ்சமுக கணபதி, ஸித்தி-புத்தி கணபதி போன்ற பல உருவங்களும் பக்தர்கள் மனதில் உருப்பெற்று உருவமாக வடிக்கப்பட்டன. நிர்குண தெய்வத்தை ஸகுணமாக்கும் முறை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், மனதின் கற்பனைக்கு உகந்தவாறு பலப்பல திருவுருவங்கள் தென்பட ஆரம்பித்தன.
பூஜை முறையிலும் முத்திரை உண்டு. சொல்லுக்குப் பதிலாக முத்திரை பயன்பட்டது. நாட்டிய சாஸ்திரத்தில் அபிநயங்களிலும் முத்திரை அரங்கேறியிருக்கும். இரண்டு கரங்களையும் சேர்ப்பதை நமஸ்கார முத்திரை என்றும் சொல்லலாம். மொழி வருவதற்கு முன்னால் கை, கால், கண், உடம்பு ஆகியவற்றின் அசைவுகளும் முகபாவங்களுமே எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளப் பயன்பட்டதாக மொழி ஆராய்ச்சியாளர்கள் சொல்வார்கள். அவையும் ஒரு தகவலை விளக்கும் முத்திரைதான். பேச இயலாதவர்கள் கண், கைகள் மற்றும் கால்களின் குறிப்பால் கருத்தை வெளியிடுவர். ஆக, முத்திரைகள் என்பவை தகவல்களை உள்ளது உள்ளபடி விளக்குவதற்குப் பயன்படுகின்றன. வார்த்தைகள் மூலம் வெளிவரும் தகவல்கள் கேட்பவரின் சிந்தனைக்கு உகந்தவாறு மாறுபட வாய்ப்பு உண்டு. ஆனால், முத்திரைக்கு அது இல்லை.

புத்தரின் விளக்கவுரையை நான்கு சீடர்கள் நான்கு விதமாக எடுத்துக்கொண்டதாகச் சரித்தரம் கூறும். ஹீனயானம், மஹாயானம் யோகாசாரம், மாத்யமிகம் எனும் பிரிவுகள் அப்படி வந்ததாகச் சொல்லலாம். பிரம்ம சூத்திரத்துக்கு, படிப்பவரின் சிந்தனை மாற்றத்தால் பல விளக்கங்கள் உண்டு. பகவத் கீதையின் விளக்கவுரைகள் ஏராளம். பார்த்த காட்சியை சொல்லால் விளக்கும்போது காட்சியின் தரத்தை மாற்றிச் சொல்ல இயலும், கண்ணால் பார்த்த காட்சியை கண் மாற்றிக் கூறாது. வேதம், கண்ணால் பார்த்தது உண்மை என்று சொல்லும் (சக்ஷüர்வை ஸத்யம்) உண்மையை விளக்கும் தகுதி முத்திரைக்கும் உண்டு.

பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்!

நாம் பிறக்கும் போது என்ன கொண்டு வருகிறோம்? என்ற கேள்விக்கு ஒன்றும் கொண்டு வருவதில்லை; ஒன்றையும் எடுத்துப் போவதில்லை... என்று ஒரு வேதாந்தமான பதிலை சொல்லி வருகிறோம். இதில் சொல்லப்பட்டது, உடமைகளைப் பற்றிய விஷயம். ஆனால், நாம் பிறக்கும் போது பாவ, புண்ணியம் என்ற ஒரு மூட்டையை கொண்டு வருகிறோம். அது, பலனை கொடுக்க ஆரம்பிக்கிறது. இதை, "சஞ்சித கர்மா என்றனர். இது, பல ஜென்மாக்களில் செய்த பாவ, புண்ணியங்களின் மூட்டை. மற்றவர் கண்களுக்கு தெரியாது; பிறரால் அபகரிக்கவும் முடியாது. இது நமக்கே நமக்கு உரிமையானது.இந்த மூட்டையிலுள்ள கர்ம பலனை, ஒரே ஜென்மாவில் அனுபவித்து விடவும் முடியாது. மூட்டையிலிருந்து ஒவ்வொரு ஜென்மாவிலும், கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து, பல ஜென்மாக்களுக்குப் பின் காலியாகும்.இந்த ஜென்மாவில் அந்த சஞ்சித கர்மாவின் ஒரு பாகம், பலனை கொடுக்கிறது. இதை, பிரார்த்த கர்மா என்றனர். "என்ன சார்... உங்க பையன் இப்படி இருக்கிறானே? என்று கேட்டால், "என்ன சார் செய்றது? ஏதோ பிரார்த்தம்! இப்படி வந்திருக்கு... என்று தலையிலடித்துக் கொள்கிறார்.

இதில் சுகம், துக்கம் எல்லாம் கலந்திருக்கும். எது வேண்டும் என்று பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியாது; அனுபவிக்க வேண்டும்.இந்த ஜென்மத்தில் நாம் சும்மாவா இருக்கிறோம். எத்தனையோ பாவ, புண்ணியங்களைச் செய்கிறோம். இதற்கு, "ஆகாமி கர்மா என்று பெயர். இதனுடைய பலன்கள் கொஞ்சம் காலியாக இருக்கும் சஞ்சித கர்மா என்ற சஞ்சியில் (மூட்டையில்) போய் சேர்ந்து விடுகிறது. இதனாலேயே தான், நாம் இப்போது செய்யும் காரியத்தின் பலனை, உடனே அனுபவிக்க முடிவதில்லை.நாம் இப்போது அனுபவிப்பது, பிரார்த்த கர்மாவின் பலன். நாம் செய்யும் நல்ல காரியத்தின் பலன் சஞ்சித கர்மாவோடு சேர்ந்திருக்கிறது. அந்த பலனை, வரும் ஜென்மங்களில் அடையலாம். நாம் செய்யும் காரியத்துக்கும், அனுபவத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் தோன்றலாம். அப்படியல்ல... சஞ்சித கர்மா, பிரார்த்த கர்மா இரண்டும் வேலை செய்யும்போது, இன்று நாம் செய்யும் கர்மாக்கள் ஒன்றும் செய்ய முடியாது.இன்று கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்யலாம். அபிஷேக ஆராதனை செய்யலாம். இதெல்லாம் இப்போது அனுபவிக்க வேண்டியவைகளை ஒன்றும் செய்யாது. நல்லது, கெட்டது எது செய்தாலும், அதன் பலன், "ஸ்டாக் செய்யப்பட்டு விடுகிறது. காலம் வரும் போது பலன் தரும்.பூர்வ ஜென்ம கர்மாவின் பலனாக, நம் சித்தம் அழுக்கடைந்து விடுகிறது. கர்மத்தளைகளால் கட்டுப்பட்டிருக்கிறோம். இதை எப்படி அறுத்து தள்ளுவது? ஞானத்தால் தான் முடியும். சித்த சுத்தி ஏற்பட்டு ஞானத்தை அடைந்தவுடன் அந்த ஞானக் கனியானது, கர்மத்தளைகளை அறுத்து விடுகிறது. கர்மத் தளைகள் நீங்கி, ஞானம் பிரகாசிக்க ஆரம்பித்தால், பிரம்மத்தைக் காணலாம். அதிலேயே லயித்து விட்டால், பிரம்மத்தை அடையலாம். அதை அடைந்து விட்டால் மீண்டும் பிறவியே இராது. முடியுமா என்று பாருங்கள்.

கோயில் வழிபாட்டுக்கு சமமானது எது

சித்தர்கள் முற்போக்கு சிந்தனையாளர்களாக இருந்தனர். வெறும் பூஜை, சடங்கு, சம்பிரதாயத்தை விட, யதார்த்தத்தையே அவர்கள் விரும்பினர். நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்  சுற்றி வந்து மொணமொண என சொல்லும் மந்திரம் ஏதடா? என்கிறார் சிவவாக்கியர்.  உள்ளத்தில் இருக்கும் கடவுளை கல்லிலும் மண்ணிலும் தேடுகிறீர்களே! என கேள்வி கேட்கிறார். நடமாடும் கோயிலாக இருக்கும் உயிர்களுக்கு நன்மை செய்வது, கோயில் வழிபாட்டுக்குச் சமம்.  ஆனால், கோயிலில் நடத்தும் அபிஷேக ஆராதனையால் என்ன பயன் என்னும் நோக்கத்தில் படமாடுங்கோயில் பகவற்கு ஒன்றீயில் நடமாடுங்கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா என்று திருமந்திரத்தில் திருமூலர் பாடுகிறார்.

சித்ரா பவுர்ணமி

சித்ரா பவுர்ணமி: (சித்திரை) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள். அவரை நினைவதன் மூலம் நம் கடந்த வருட செயல்பாட்டை நாமே மதிப்பிடும் தினம். மதுரையில் மிகு சிறப்பு.

வைகாசி பவுர்ணமி: (விசாகம்) நல்லோரையும், நலிந்தோரையும் துன்புறுத்திய சூரனை அடக்கிட முருகன் அவதரித்த நாள். தீது அழிந்து, நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினம். திருச்செந்தூரின் தென்மேற்கே 30 கி.மீ. கடற்கரைத்தலமான உவரியில் மிகு சிறப்பு.

ஆனிப் பவுர்ணமி : (மூலம்) தாயினும் மேலான இறைவனுக்கு தித்திக்கும் நல்கனிகளையெல்லாம் (குறிப்பாக மா, பலா, வாழை) படைக்கும் நாள். திருவையாற்றில் மிகு சிறப்பு.

ஆடிப் பவுர்ணமி: (பூராடம்/உத்ராடம்) விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில் மிகு சிறப்பு.

ஆவணிப் பவுர்ணமி: (அவிட்டம்) வட பாரதத்தில் ரக்ஷõபந்தனம் என்று மிகக் கோலாகலமாக அனைவரிடையிலும் நல்லுறவை வளர்க்கும் திருநாள். கேரளத்தின் மிக மிக முக்கிய ஓணவிழா நாள்.
புரட்டாசி பவுர்ணமி: (பூரட்டாதி/உத்ரட்டாதி) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வர பூஜை நாள். வட நாட்டில் பிரபலம்.
ஐப்பசி பவுர்ணமி: (அசுவதி) வடநாட்டில் லக்ஷ்மி விரதமும், தென்னாட்டில் சிவனுக்கு அன்னாபி÷க்ஷகமும் வி÷க்ஷம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகு சிறப்பு.

கார்த்திகைப் பவுர்ணமி: (கார்த்திகை) பரம்பொருள் அளத்தற்கரியது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள். நம்முடைய நிலை கருதி பெருஞ்சோதி அண்ணாமலையில் மலையாகி அருளுகிறது. திருவண்ணாமலையில் மிகு சிறப்பு.

மார்கழிப் பவுர்ணமி: (திருவாதிரை) இக்காலம் பலரும் பணிப்பித்தராய் இருப்பது போல, முன்பும் சில முனிவர்கள் கர்மாவே பெரிது என்ற எண்ணியபோது, எல்லாவற்றையும் ஆட்டுவிப்பவராக இறைவன் நடராஜனாய் காட்சியளித்த திருநாள். சிதம்பரத்திலும், திரு உத்தர கோசமங்கையிலும் மிகு சிறப்பு.

தைப் பவுர்ணமி: (பூசம்) மிகு சிறப்புடைய பூச நக்ஷத்ரத்தன்று பரம்பொருளுக்கு பெருவிழா நடத்தும் நாள். மதுரையிலும், பழனியிலும் மிகு சிறப்பு.

மாசிப் பவுர்ணமி: (மகம்) ஒரு முறை படைப்பு துவங்கிய நாளில், அனைவரும் புனித நீராடி பரமனை வழிபடும் நாள். தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிகு சிறப்பு.

பங்குனிப் பவுர்ணமி: (உத்திரம்) இல்லறமே நல்லறம் என்று உணர்த்துவதற்காக, சிவன் உமையை மணக்கும் திருவிளையாடல் நிகழ்ந்த நாள். பழனியோடு, பல்லாயிரம் தலங்களிலும் சிறப்பு.

மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அணிய வேண்டும் என்பது ஏன்?

திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது மாங்கல்ய தந்துனானேன என்று மந்திரம் சொல்லுவார்கள். தந்து என்றால் கயிறு. மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது.  மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம்.  வறுமையில் வாடும் பெண்கள் கூட தங்கத்தாலியை அடகு வைத்து விட்டு, மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கை கட்டி தாலியாக அணிந்து கொள்வார்கள். ஆக தாலி என்பது மஞ்சள் சரடில் தான் இணைந்து இருக்க வேண்டும்.  கன்னா பின்னாவென்று அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் இந்தக் காலத்தில் மஞ்சள் கயிறு அணிவதால் அலர்ஜி ஏற்படுகிறது என்று கூட சில பெண்கள் கூறுவது இதென்ன கலாச்சார சீரழிவு என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தரமான மஞ்சள் சரடில் தாலியை அணிந்தால் அலர்ஜி எல்லாம் வராது. இன்றும் கூட மிகப்பெரும் பணக்காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் சரடில் தான் தாலியை அணிகிறார்கள். கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினால் ஆன தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான். இதைத்தான் இறைவனும் விரும்புவான். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள்.