Saturday, October 5, 2013

ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாட வேண்டும்!

ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரிஎன்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.

அம்மன் விரும்பும் நவராத்திரி!

நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம்  சக்தியாலும், வறுமைசெல்வத்தினாலும், அறியாமைஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.

நம் வாழ்வின் இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை சொல்லித் தருகிறது நவராத்திரி. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.

நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம
தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ.

No comments:

Post a Comment