Sunday, March 17, 2013

காஞ்சி காமாட்சி விஸ்வரூப தரிசனம்: கோயிலில் நடந்த அதிசய சம்பவம்!

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்ஸவம் நடந்து வருகிறது. விழாவின் கடைசிநாளன்று, அம்பாள் விஸ்வரூப காட்சி தருவாள். இதையொட்டி, அக்கோயிலில் நடந்த அதிசய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள்.காஞ்சி மகாப்பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த போது, ஒரு பெண் பெரியவரிடம் வந்து, சுவாமி! என் மகளுக்கு திருமணம். ஆனால், திருமாங்கல்யம் வாங்கக்கூட வசதியில்லை, என்று சொல்லி அழுதார்.பெரியவர் அந்தப் பெண்ணிடம்,நீ போய் காமாட்சியம்மனை தரிசனம் செய்துவிட்டு இங்கே வா, என்றார்.அந்தப் பெண்ணும் கோயிலுக்குச் சென்று அம்பாளைத் தரிசித்து விட்டு, பிரகார வலம் வரும்போது, கீழே ஒரு திருமாங்கல்யம் கிடப்பதைக் கண்டார். மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்டு மடத்திற்கு வந்து பெரியவரிடம் காட்டி, அது தனக்கு கிடைத்த விதம் பற்றி சொன்னார்.பெரியவர், அதை என் முன்னால் வைத்துவிடு, உனக்கு வேறு மாங்கல்யம் தருகிறேன், என்றார்.

அந்த சமயத்தில் ஒரு பக்தர் வந்தார். அவர் இரண்டு திருமாங்கல்யங்களை பெரியவர் முன் வைத்தார்.பெரியவா! என் மகளுக்கு திருமணம். திருமாங்கல்யத்தை உங்களிடம் கொடுத்து ஆசி பெற வந்தேன், என்றார்.அது சரி! உன் மகளுக்கு ஒரு மாங்கல்யம் தானே தேவை. இன்னொன்று எதற்கு? என்றார்.அது இங்கு வரும் ஏழை பக்தர்களில் யாராவது ஒருவருக்கு உங்கள் மூலமாக கொடுக்க! என்றார் பக்தர்.அப்படியா! என்ற பெரியவர், கூடுதலாக இருந்த மாங்கல்யத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, உன் மகள் கல்யாணத்தை சிறப்பாக நடத்து, என்றார்.அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் இன்னொரு பெண் ஓடி வந்தார். சுவாமி! நான் காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். என் மாங்கல்யம் எங்கோ தவறி விழுந்து விட்டது. ஐயோ! கோயிலுக்கு வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டதே! தாங்கள் தான் என்னை சுமங்கலியாக இருக்க வாழ்த்த வேண்டும்! என்று அழுதார்.அழாதே! இதோ! நீ தொலைத்தது இந்த திருமாங்கல்யம் தானா சொல்! என்று ஏழைப்பெண்மணி தன்னிடம் ஒப்படைத்ததைக் காட்டினார். இதுதான்! என்று ஆனந்தமாக வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார் அந்தப் பெண்.மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் மாங்கல்ய பாக்கியம் அருளியவள் காஞ்சி காமாட்சி. குருவருளும், திருவருளும் ஒரு சேர கிடைக்கும் இடம் காஞ்சி என்றால் அது மிகையல்ல!

No comments:

Post a Comment