Thursday, August 6, 2015

ஆடி அமாவாசை

ஆக.14ல், ஆடி அமாவாசை வருவதை ஒட்டி, முன்னோர் வழிபாட்டு தலங்கள் இடம் பெற்றுள்ளன. ராமேஸ்வரம்: ராவணனை சம்ஹாரம் செய்த பாவம் தீர, ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு, ராமன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை ராமலிங்கம் என்றும்,  அனுமன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை விசுவலிங்கம் என்றும் அழைக்கிறார்கள். காசியாத்திரை செல்வோர் இங்கு தீர்த்தங்களில் நீராடி, ராமநாதரை கங்கை நீரால் அபிஷேகம் செய்வர். கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன.  இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. பிதுர்தர்ப்பணம் செய்வோர் ஆடி அமாவாசையன்று  ராமநாதசுவாமியை வழிபடுவர். இருப்பிடம்: மதுரையில் இருந்து 200 கி.மீ.,
தொலைபேசி: 04573- 221 223.

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. வைகை ஆற்றின் கரையிலுள்ள பிதுர்தலமான இதற்கு பிதுர் மோட்சபுரம்  என்ற  பெயருண்டு.  அஸ்தி கரைத்தாலும், தர்ப்பணம் செய்தாலும் அவர்கள் நற்கதியாகிய பிறவாநிலை பெறுவர் என்பது ஐதீகம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் இங்கு வந்த போது, வைகைக்கரையிலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கம் போல் காட்சியளித்ததாம். இதனால் ஆற்றில் இறங்க அஞ்சி மறுகரையில் நின்றே வழிபட்டனர். அவர்கள் தரிசனம் பெறும் விதத்தில் நந்தியும் விலகி நின்றது. 
இருப்பிடம்: மதுரையில் இருந்து 18 கி.மீ., 
தொலைபேசி: 94435 01761, 04575 265 082, 265 084.

கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியம்மன் அருள்புரிகிறாள். பாணாசுரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள், அன்னை பார்வதியின் உதவியை நாடினர். பிரம்மாவிடம் வரம் பெற்ற பாணாசுரனை அழிக்க அம்பிகையே கன்னியாக வடிவெடுத்து  தவத்தில் ஈடுபட்டாள். தவத்தால் பலம் பெற்ற அம்பிகை சக்ராயுதத்தை ஏவி பாணாசுரனை வதம் செய்தாள். வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்து மகாசமுத்திரம் ஆகிய மூன்றும் சங்கமிக்கு இங்கு பிதுர்தர்ப்பணம் 
செய்வோருக்கு முன்னோர் ஆசி கிடைக்கும். 
இருப்பிடம்: மதுரையில் இருந்து 235 கி.மீ.,
தொலைபேசி: 04652- 246 223.

அழகர்கோவில் நுõபுர கங்கை: திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் அருள்பாலிக்கிறார். பதினெட்டாம் படி கருப்பசாமி சக்தி மிக்கவர்.  அனுமன் தீர்த்தம், கருடதீர்த்தம், சக்கர தீர்த்தம், நுõபுர கங்கை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. திருமால் உலகை மூன்று அடிகளால் அளந்த போது, அவரது சிலம்பு அணிந்த திருவடி வானம் நோக்கி சென்றது. அது கண்ட பிரம்மா தன் கலச நீரால் திருவடிக்கு அபிஷேகம் செய்தார். அந்த நீர் கங்கை போல் ஊற்றெடுத்தது. இதனால், இந்த தீர்த்தம் நுõபுர கங்கை என பெயர் பெற்றது. நுõபுர கங்கையில் நீராடி தர்ப்பணம் செய்வது சிறப்பு. 
இருப்பிடம்: மதுரையில் இருந்து 25 கி.மீ.,
தொலைபேசி: 0452- 247 0228, 247 0229.

ஆனைமலை மாசாணி அம்மன்:  பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் மன்னன் நன்னனுக்குரிய மாமரம் இருந்தது. அந்த பழங்களை யாரும் பறிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தான். ஒருநாள் ஆற்றில் நீராடிய இளம்பெண் மிதந்து வந்த மாம்பழத்தை  சாப்பிட்டாள். அவளுக்கு நன்னன் மரண தண்டனை கொடுத்தான். அவள் மீது ஊரார் இரக்கம் கொண்டனர். அதுவே பக்தியாகி  வழிபட்டனர். மயான சயனி என்பதே மாசாணி என மருவியது. உப்பாற்றின் கரையில் அம்மன் 17 அடி நீளத்தில்  படுத்த நிலையில் காட்சி தருகிறாள்.  இவள்  நீதி தெ#வமாக விளங்குகிறாள். 
இருப்பிடம்: பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,
தொலைபேசி: 04253- 282 337, 283 173. 

திருச்செங்கோடு அர்த்தநாரி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவிலில், சிவன் அம்பிகையை இடபாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார். இங்குள்ள செங்கோட்டு வேலவன் சன்னிதி சிறப்புமிக்கது. 1200 படிகள் கொண்ட மலைக்கோவிலான இங்கு உள்ள 60வது படி சத்தியப்படி எனப்படுகிறது. அந்தக் காலத்தில் வழக்குகளை இங்கு பேசித் தீர்க்கும் வழக்கம் இருந்தது. அர்த்தநாரீஸ்வரரின் திருவடியில் சுரக்கும் தேவதீர்த்தம் மகிமை மிக்கது. அமாவாசை நாளில் இந்த தீர்த்தத்தைப் பருகினால் உடல் நோய், மன நோய் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் . 
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 18 கி.மீ.,
தொலைபேசி: 04369-250 238.

அனுமந்தபுரம் வீரபத்திரர்:  தட்சனின் யாகத்தை நிறுத்த, சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். சாகாவரம் பெற்ற தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்டினார்.  பிறகு, தன் கோபம் தணிய பூலோகத்தில் உள்ள அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கி  அமைதி பெற்றார்.  இத்தலத்தில் வீரபத்திரருக்கு கோவில் அமைக்கப்பட்டது. செவ்வாய்தோஷம், உடல்நோய் நீங்க ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பவுர்ணமி நாட்களில், இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகின்றனர். இருப்பிடம்: விழுப்புரம்- சென்னை சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 10 கி.மீ.,             
தொலைபேசி: 044- 2746 4325.

பண்ணாரி மாரியம்மன்: பண்ணாரி வனப்பகுதியில் மேய்ந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும், அங்குள்ள வேங்கை மரத்தடியில் அடிக்கடி பாலைச் சுரந்தது. இதை அறிந்த மாடு மேய்ப்பவன் அந்த இடத்திலுள்ள புற்றின் அடியில், ஒரு அம்பாள் சிலை இருப்பதைக் கண்டான். விஷயமறிந்த ஊரார் அங்கு வந்த போது, ஒருவருக்கு அருள் வந்தது. பசுமை மிக்க இந்த இடத்தில் மாரியம்மனாக வீற்றிருக்கும் என்னை வழிபட்டால் வேண்டும் வரம் அளிப்பேன், என்று அம்மன் வாக்களித்தாள். அதன்படி கோவில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர்.  ஆடி செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்கு புற்றுமண்ணே பிரசாதம்.
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் வழியாக 77 கி.மீ.,
தொலைபேசி: 04295- 243 366, 243 442, 243 289.

தேவிபட்டினம் நவபாஷாண கடல்: ராமநாதபுரம் அருகிலுள்ள தேவிபட்டினம் கடலில், ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாணம் என்னும் கற்களால் ஆன நவக்கிரகங்கள் உள்ளன. அமாவாசையன்று இந்தக் கடலில் நீராடி நவக்கிரகங்களை வழிபட்டால் கிரகதோஷம் அகலும் என்பது ஐதீகம். இங்குள்ள சக்கர தீர்த்தம் என்னும் தர்ம புஷ்கரணியில் நீராடினால் பாவநிவர்த்தி உண்டாகும். வீரசக்தி பீடமாக விளங்கும் இங்கு அம்பிகை மகிஷாசுரமர்த்தினியாக வீற்றிருக்கிறாள். புகழ் மிக்க மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தால் போற்றப்படும் அம்பிகை இவளே. ராவணனுடன் போரிடும் முன் ராமர், லட்சுமணர், அனுமன் மூவரும் வெற்றி பெற இந்த அம்பிகையை வழிபட்டனர். 
இருப்பிடம்: ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ.,

பவானி சங்கமேஸ்வரர்: ஈரோடு மாவட்டம் பவானியில், பவானி ஆறு காவிரிஆற்றுடன் கூடுகிறது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் அன்னை வேதாம்பிகை அருள்பாலிக்கிறாள். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு  திருநணா என்றும் பெயருண்டு. திருநணா என்பதற்கு  பாவம் நெருங்காது என்பது பொருள்.  அதனால்  இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவதரிசனம் செய்வோருக்கு  பாவம் நெருங்குவதில்லை என்பது ஐதீகம். காவிரி, பவானி, அமுதநதி கூடுவதால் பவானியை  முக்கூடல் என்று சொல்வர். ஆடி மாதம் முழுவதுமே இங்கு நீராடி, சுவாமியை வழிபடுவது சிறப்பு. 
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., 
அலைபேசி: 98432 48588, தொலைபேசி: 04256- 230 192. 

செதலபதி முக்தீஸ்வரர்: திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவிலை தில தர்ப்பணபுரி என்று சொல்வர். அமாவாசையன்று செய்யும் தர்ப்பணத்தின் பெயரால் அமைந்த தலம்  இது.  திலம் என்றால் எள் என்று பொருள். இத்தலத்தில் ராமர் தனது தந்தை தசரதர், ஜடாயு இருவருக்கும் எள்ளால் தர்ப்பணம் செய்ததால் இப்பெயர் ஏற்பட்டது. முக்தி தருபவராக சிவன்  இருப்பதால் முக்தீஸ்வரர் எனப்படுகிறார். அம்பிகை சுவர்ணவல்லித் தாயார் செல்வம் தருகிறாள். இங்குள்ள அரசலாற்றிலும், சந்திர தீர்த்தத்தில் நீராடி முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வர்.  
இருப்பிடம்: திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் கிராமம். இங்கிருந்து  4 கி.மீ.,
அலைபேசி: 94427 14055, தொலைபேசி: 04366- 238818, 239 700 

அய்யாவாடி பிரத்யங்கிரா: அய்யாவாடியில் காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். இலங்கை போரில் வெற்றி பெறுவதற்காக ராமர் யாகம் செய்து இந்த தேவியை வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள்  சிங்க முகம், 18 கைகள், சிரித்த முகத்துடன் கரிய நிறத்தில் காட்சி தருகிறாள். எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட, அமாவாசையன்று அம்மனுக்கு காலை முதல் மதியம் வரை நிகும்பலா யாகம்  இங்கு நடக்கிறது.   பழம், பட்டு, பூக்கள் என 108  திரவியங்களை சேர்ப்பர். யாக குண்டத்தில் மிளகாய் வத்தலை இட்டாலும் நெடி  சிறிதும் இருக்காது.யாகம் நிறைவேறியதும், சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம் நடக்கும்.  
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ.,
தொலைபேசி: 94431 24347, 0435 246 3414.

பாபநாசம் பாபநாசநாதர்: 
நவகைலாயத் தலங்களில் முதல் தலம் பாபநாசம் பாபநாசநாதர் கோவில். தாமிரபரணியின் கரையில் அமைந்த  இங்கு அகத்தியர் சிவபார்வதியின்திருமணக் கோல தரிசனம் பெற்றார். கருவறையின் பின்புறம் உள்ள பிரகாரத்தில் கல்யாண சுந்தரர் என்ற பெயரில் சிவபார்வதி திருமணக் கோலத்தில் உள்ளனர். இங்கு அம்பிகை உலகம்மையாக வீற்றிருக்கிறாள். கங்கை நதி தன்னிடம் சேரும் பாவத்தை ஆண்டுக்கு ஓருமுறை தாமிரபரணிக்கு வந்து நீராடி போக்கிக் கொள்வதாக ஐதீகம். பாபநாசநாதர் லிங்கம் ருத்திராட்சத்தால் ஆனது. ஆடி அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. 
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ.,
தொலைபேசி: 04634- 223 268

சொரிமுத்தையனார் கோவில்: சாஸ்தாவின் முதல் தலம் பொதிகை மலையில் உள்ள  சொரிமுத்தையனார் கோவில். பூர்ணா, புஷ்கலா தேவியருடன் வீற்றிருக்கிறார்.  பாணதீர்த்தம் கோவிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது. அம்பில் புறப்பட்ட பாணம் போல  நீர் கொட்டுவதால் பாண தீர்த்தம் என பெயர் வந்தது. இந்த அருவியை தூரத்தில் இருந்து தரிசனம் செய்யலாம். (குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது) ஆடி அமாவாசையன்று பக்தர்கள் தாமிரபரணியில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.  அகத்தியர் அருவியிலும் நீராடி தர்ப்பணம் செய்யலாம். 
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் சொரிமுத்தையனார் கோவில் 54 கி.மீ., 
தொலைபேசி: 04634- 250 209

சுருளிமலை தீர்த்தம்: சுருளிமலையில் முருகன் குடி கொண்டிருக்கிறார். ஆண்டிகோலத்தில் சுவாமி காட்சியளிப்பதால் சுருளியாண்டி எனப்படுகிறார். இந்த மலையிலுள்ள கைலாச புடவு குகையில் சிவன் கைலாசநாதர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். குகையின் மேல்பகுதியில் முருகன் உள்ளார். சனீஸ்வரரின் பிடியிலிருந்து விடுபட தேவர்கள் இங்கு வந்து தவமிருந்தனர். முருகன் அவர்களை சனியின் பிடியில் இருந்து காத்தார்.  ஆடி அமாவாசையன்று சுருளிதீர்த்தம் அருவியில் நீராடி பிதுர் 
தர்ப்பணம் அளிக்கின்றனர். இங்குள்ள பூதநாராயணப்பெருமாள் கோவிலில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. 
இருப்பிடம்: தேனியிலிருந்து 40 கி.மீ.,
அலைபேசி: 93452 61022.

அச்சிறுபாக்கம் ஆட்சிபுரீஸ்வரர்:  திரிபுர அ”ரர்களை அடக்க எண்ணிய சிவன் தேரில் புறப்பட்டார். அப்போது முதற்கடவுளான விநாயகரை வணங்க வேண்டும் என்ற நியதியை அவர் பின்பற்றவில்லை. எனவே,  விநாயகர் தேரின் அச்சை முறித்தார்.  தவறை உணர்ந்த சிவன் விநாயகரை மனதில் தியானிக்க தேர் சரியானது. சட்டத்தை தெய்வமும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வு அமைந்தது. தேரின் அச்சு முறிந்த இடத்தை அச்சு+இறு(முறிந்த)+பாக்கம் என்று அழைத்தனர். இதுவே அச்சிறுபாக்கம் ஆனது. இங்குள்ள சிவன் ஆட்சிபுரீஸ்வரர்  எனப்படுகிறார். இவரை அமாவாசையன்று வழிபட புதிய முயற்சி தடையின்றி நிறைவேறும்.
இருப்பிடம்: செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. 
அலைபேசி: 98423 09534, தொலைபேசி: 044 - 2752 3019.

No comments:

Post a Comment