Sunday, January 31, 2016

பிறவிப்பயன்

பிறவிப்பயன்


இறைவன் அளித்த இச்சிறந்த உடலின்
பிறவிப்பயன் என்ன என்று அறிவீரா?
மறைகள் புகழும் இறைவன் அவனை, இப்
பிறவியிலேயே அறிந்து கொள்வதே!

கயிலாயத்துறை காஞ்சன வண்ணனை
கணப்பொழுதேனும் காணாத கண்கள்,
மயில் தோகையில் மாண்புடன் விளங்கும்
பயனில்லாத கண்களைப் போன்றவே!

திருவுடன் கூடி உலகினைக் காக்கும்
திருமால் பெருமை கேளாத செவிகள்,
கம்மல், கடுக்கன், தோடு, ஜிமிக்கி என
கல் நகையணியும் வெறும் காதுகளே!

வனமாலை அணியும் மனம் கவர் கள்வன்
புனைந்த மாலையைப் பெற்று நுகராத,
இரு துவாரம் உடைய நாசியோ, காற்றை
இழுத்து விடுகின்ற இருமான் துருத்தியே.

கமல மலர் அமர்ந்து கருணை பொழியும்
கமலக் கண்ணியைப் பாடிப் பரவாத நாவு,
குவளை மலரிடை அமர்ந்து இரைச்சலிடும்
தவளையின் நீள் நாவுக்கு ஒப்பானதே!

எண் குணத்தானை மனத்தில் நினைத்து
எட்டு அங்கமும் நிலம்பட வணங்காத,
மண்டிய கர்வம் கொண்டவன் தலை
முண்டாசையே தாங்கும் மூளையை அல்ல!

கண் முன் அழகனாய் காட்சி அளிக்கும்
ஷண்முகன் திருவடி வணங்காத கைகள்,
இயக்கமும் இரத்தமும் இழந்து போன
குயவன் செய்த மண் கைகளை போன்றவே!

திருவருள் தேடி அவன் திருவடி நாடி
தீர்த்த யாத்திரை செல்லாத கால்கள்,
விண் முட்ட ஓங்கி வளர்ந்து நிற்கும்
மண்ணில் இருக்கும் மரத்தின் வேர்களே!

தாளாத காதலுடன் அவன் துதி கேட்டு
இளகாத நெஞ்சம் இரும்பு நெஞ்சமே!
கண்ணீர் மல்கி கனியாத மனங்கள்
மண்ணில் வாழ் விலங்குகள் மனமே!

பிறவிப்பயனை அறிந்தோம் இன்று,
பிறவிப் பயனுக்கு முயல்வோம் இன்றே!
“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்,”
அரிதிலும் அரிது விடுதலை அடைதல்!

No comments:

Post a Comment