Thursday, May 17, 2012

அபிராமி அந்தாதி

ஞானமும் நல்வித்தையும் பெற,பிரிந்தவர் ஒன்று சேர,குடும்பக் கவலையிலிருந்து விடுபட,உயர் பதவிகளை அடைய,மனக்கவலை தீர,மந்திர சித்தி பெற,மலையென வரும் துன்பம் பனியென நீங்க,பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட,அனைத்தும் வசமாக,மோட்ச சாதனம் பெற
  

கணபதி காப்பு

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

பொருள்: கொன்றைப்பூ மாலை அணியும் தில்லை வாழ் கூத்தபிரானுக்கும் சண்பகப்பூ மாலையணிந்து அவரின் இடப்பாகத்தில் அமைந்த உமையவளுக்கும் தோன்றிய மைந்தனே! கருநிறம் பொருந்திய கணபதியே! ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புமிக்க அன்னையின் பேரில் நான் தொடுக்கும் அபிராமி அந்தாதி என் நெஞ்சில் நிலைத்திருக்க அருளுவாயாக!

1. ஞானமும் நல்வித்தையும் பெற

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

பொருள்: உதிக்கின்ற செங்கதிரோனும் நெற்றியின் மையத்திலிடுகின்ற சிந்தூரத் திலகமும், ஞானம் கைவரப் பெற்றவர்களே மதிக்கின்ற மாணிக்கமும், மாதுளை மலரும், தாமரை மலரில் தோன்றிய இலக்குமி துதி செய்கின்ற மின்னற் கொடியும், மென்மணம் வீசும் குங்குமக் குழம்பும் ஆகிய அனைத்தையும் போன்றதென்று நூல்கள் யாவும் பாராட்டிக் கூறும் திருமேனியைக் கொண்ட அபிராமி அன்னையே எனக்கு மேலான துணையாவாள்.

2. பிரிந்தவர் ஒன்று சேர

துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

பொருள்: எங்களுக்கு உயிர்த்துணையும் நாங்கள் தொழுகின்ற தெய்வமும் எம்மையெல்லாம் ஈன்றெடுத்த அன்னையும், வேதமென்னும் விருட்சத்தின் கிளையும், அதன் முடிவிலுள்ள கொழுந்தும், கீழே பரவிப் பதிந்துள்ள அதன் வேரும் குளிர்ச்சி பொருந்தியவையான மலரம்புகள், கரும்பு வில், மென்மைமிகு பாசாங்குசம் ஆகியவற்றைத் திருக்கரத்தில் ஏந்தி நிற்கும் திரிபுரசுந்தரியே என்னும் உண்மையை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

பொருள்: அருட்செல்வம் மிக்க திருவே! வேறெவரும் அறிய முடியாத ரகசியத்தை நான் அறிந்து, அதன் காரணமாக உன் திருவடிகளை அடைந்தேன். உன் அடியவர்களின் பெருமையை உணரத்தவறிய நெஞ்சத்தின் காரணமாக நரகலோகத்தின் தொடர்பு கொண்ட மனிதரைக் கண்டு அஞ்சி விலகிக் கொண்டேன். இனி நீயே எனக்குத் துணை.

4. உயர் பதவிகளை அடைய

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

பொருள்: மனிதர்களும் தேவர்களும் பெருமைமிக்க முனிவர்களும் வந்து தலை தாழ்த்தி நின்று வணங்கிப் போற்றும் செம்மையாகிய திருவடிகளையும் மெல்லியல்பும் கொண்ட கோமளவல்லி அன்னையே! கொன்றைக் கண்ணியை அணிந்த சடா மகுடத்தின் மேல் பனியை உண்டாக்கும் சந்திரனையும், கங்கையையும் மற்றும் பாம்பையும் கொண்ட தூயோனாம் சிவபிரானும் நீயும் என் சிந்தையை விட்டு எந்நாளும் நீங்காமல் பொருந்தியிருப்பீர்களாக!

5. மனக்கவலை தீர

பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.

பொருள்: அடியவர்களாகிய எங்களுக்குத் திருவருள் புரியும் திரிபுரையும் தனங்களின் பாரம் தாங்காது வருந்தும் வஞ்சிக் கொடியைப் போன்ற மெல்லிடையைக் கொண்ட மனோன்மணியும், நீள்சடை கொண்ட சிவபிரான் உண்ட நஞ்சைக் கழுத்தளவில் நிறுத்தி அமுதமாக்கிய அம்பிகையும், அழகிய தாமரை மலரின்மேல் அமர்ந்தருளும் சுந்தரியும், அந்தரியும் ஆன அபிராமி அன்னையின் பொன்னடி என் தலையின் மீது பொருந்தியுள்ளது. அதை நான் வணங்குகிறேன்.

6. மந்திர சித்தி பெற

சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.

பொருள்: சிந்தூரத்தின் செந்நிறத்தையொத்த திருமேனியைக் கொண்ட அபிராமி அன்னையே! பொலிவுமிக்க பொன்னான உன் திருவடிகள் என்னும் அழகிய தாமரை மலர்கள் என் சிரசின் மேல் இருக்க, என் நெஞ்சினுள்ளே உன் அழகிய திருமந்திரச் சொல் நிலை பெற்றுள்ளது. உன்னையே வணங்கி நிற்கும் உன் அடியவர்களுடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் நான் பாராயணம் செய்து வருவது, உன் பெருமைகளைக் கூறும் மேலான நூல்களையேயாகும்.

7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

பொருள்: தாமரை மலரில் உறைகின்ற பிரமதேவனும், பிறைச்சந்திரனைச் சிரசில் தரித்த உன் பாதியாகிய சிவபிரானும், பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலும், வணங்கி எந்நாளும் துதித்து மகிழும் செம்மைமிக்க திருவடிகளையும் செந்தூரத் திலகமணிந்த திருமுகத்தையும் கொண்ட பேரழகுமிக்க அன்னையே! தயிர் கடையும் மத்தைப் போல, பிறவிக் கடலாம் சுழலில் சிக்கி அலையாமல், ஒப்பற்ற பேரின் நிலைலை நான் அடையும்படி திருவுள்ளம் கொண்டருள்வாயாக!

8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

பொருள்: என் தந்தையாம் ஈசனின் துணைவியான தேவியே! பேரழகு மிக்க அன்னையே! பாசமாம் தளைகளையெல்லாம் ஓடிவந்து அழிக்கும் சிந்தூர நிறம் கொண்டவள், மகிடன் என்னும் அசுரனின் சிரத்தின் மேல் நிற்கும் அந்தரி நீல நிறங்கொண்டவள், என்றும் அழிவில்லாத இளங்கன்னி, பிரமதேவனின் கபாலத்தைத் தாங்கும் திருக்கரத்தைக் கொண்டவள் ஆகிய அபிராமி அன்னையே! தாமரை மலரைப் போன்ற உன் அழகிய திருவடிகள் என் உள்ளத்தில் என்றென்றும் பொருந்தி நிற்கின்றன.

9. அனைத்தும் வசமாக

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.

பொருள்: அன்னையே! என் தந்தையாம் சிவபிரானின் சிந்தையில் நீங்காது நிற்பனவும், திருவிழிகளில் காட்சி தருவனவும், அழகிய பொன் மலையாம் மேருவைப் போன்று பருத்தனவும், அழுத பிள்ளையான ஞானசம்பந்தப் பெருமானுக்குப் பாலூட்டியதுமான திருத்தனங்களும், அவற்றின்மேல் புரளும் முத்துமாலையும், சிவந்த திருக்கரத்திலுள்ள கரும்பு வில், மலர் அம்புகள் ஆகியனவும், மயிலிறகின் அடிப்பாகம் போன்ற அழகிய புன்னகையும் காட்டி, உன் முழுமையான திருக்கோலக் காட்சியை எனக்குக் காட்டியருள்க.

10. மோட்ச சாதனம் பெற

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

பொருள்: எழுதாமல் கேட்கப்படுவது மட்டுமான வேதத்தில் பொருந்தக் கூடிய அரும் பொருளாயும், சிவபிரானின் திருவருள் வடிவமாயும் விளங்கும் உமையன்னையே! நான் நின்றவாறும், இருந்தவாறும் படுத்தவாறும், நடந்தவாறும், தியானம் செய்வதும் உன்னைத்தான்; என்றென்றும் மறவாமல் வழிபடுவதும் உன்னுடைய திருவடித் தாமரையையேதான்.



No comments:

Post a Comment