Thursday, August 16, 2012

சிவன் கோயில்களில் பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்!

நமது நாட்டின் சுதந்திர தினம் (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. அன்று சுதந்திர தினம், மாத சிவராத்திரி, பிரதோஷம் மூன்றும் ஒரே நாளில் வருவது தனி சிறப்பாகும். மாதந்தோறும் இரண்டு முறை பிரதோஷம் வருகிறது. பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் எந்தெந்த தெய்ங்களை எப்படி வலம் வந்து வணங்கி பலன் பெறுவது என்பது பற்றி பார்ப்போமே!. சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக உள்ளது. பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின் உணவு அருந்துகின்றனர். தியோத திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் ஆகும். தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலில் உள்ள அமிர்தத்தை பெற வேண்டி "வடவரை என்னும் மந்திர மலையை மத்தாகவும், "வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் வைத்து திருப்பாற்கடலை கடைந்தனர். இந்நிகழ்ச்சியை சிலப்பதிகாரமும், ஆய்ச்சியர் குரவை என்ற பகுதியில் ""வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி பண்டொரு நாள் கடல் வயறு கலக்கினையே என கூறுகிறது.

தேவர்களும், அசுரர்களும் திருபாற்கடலை கடைய துவங்கியதும் வேதனை தாளாத வாசுகி நாகம் விஷத்தை கக்கியதால் வெளியே வந்த ஆலகால விஷம் தேவர்கள், அசுரர்களை நெருங்க அதன் வெப்பம் தாங்காத அனைவரும் சிவபெருமானை தஞ்சம் அடைந்தனர். சிவபெருமான் சக்தியுடன் நந்தி பகவானின் இரண்டு கொண்டுகளில் நடுவே பிரன்னமாகி எங்கும் பரவியிருந்த விஷத்தை உளுந்து அளவாக்கி அனைவரையும் காப்பாற்றுவதற்காக ஆலகால விஷத்தை தான் உண்டார். அதுகண்டு பயந்து நின்ற பார்வதிதேவியும் இறைவனுக்கு விஷத்தால் ஏதும் இன்னல்கள் ஏற்பட்டு விடக்கூடாது என கருதி சிவபெருமானது கண்டத்தில் (கழுத்தில்) தன் கையை வைத்து அவ்விஷத்தை கழுத்திலேயே நிலைத்திருக்க செய்தார். இதனால் ஆலகால விஷம் சிவபெருமானின் கழுத்து பகுதியிலேயே தேங்கி நின்று நீலகண்டம் ஆயிற்று. நஞ்சுண்டு இருந்ததால் நஞ்சுண்டவன் என சிவன் அழைக்கப்படுகிறார். ""பெயர்தக்க நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் என வள்ளுவர் குறிப்பிட்டது போல நஞ்சுண்டு உலகத்தை காத்த அந்த நேரத்தை "பிரதோஷ காலம் என கூறுகிறோம். அக்காலத்தில் நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தால் சர்வ பாவமும் விலகும் என்றும், மகப்பேறு உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்கும் முறையை பற்றி கடண்பவன புராணம் தெரிவிப்பது யாதென்றால், நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திருப்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று வலமாக சென்று கோமுகி எனப்படும் சிவபெருனின் அபிஷேக நீர் வரும் துவார வழியே தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து வலமாக வரவேண்டும். திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து திரும்பி வரவேண்டும். நந்தியை தரிசனம் செய்த பின்னரே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். இப்படி பரிதட்சணம் செய்து வழிபடுவது "சோமசூத்திர பிரதட்சணம் என்று கூறப்படுகிறது. சோமசூத்திர பிரதட்சணம் செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு "ஆத்ம பிரதட்சணம் செய்ய வேண்டும். இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கோடி கிட்டும்.

No comments:

Post a Comment