Sunday, July 22, 2012

சேவல் கொக்கரக்கோ என்று கூவுவதன் பொருள் என்ன?

கஷ்யப முனிவரின் புத்திரனான சூரபத்மன் என்னும் அசுரன், விண்ணுலக தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். இறைவன், தன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு நெருப்புப்பொறிகளை உருவாக்கினார். அவை கங்கையில் தவழ்ந்து குழந்தைகளாக மாறின. ஆறுகுழந்தைகளும் இணைந்து "கந்தன் என்னும் மாபெரும் சக்தியாக வடிவெடுத்தது. அன்னை பராசக்தி, தன் சக்தியை ஒன்று திரட்டி அடக்கிய வேல் ஒன்றை மகன் கந்தனிடம் வழங்கினாள். சக்திவேலை ஏந்திய கந்தன் அழகில் மன்மதனையும் மிஞ்சியதால் "முருகன் எனப்பட்டான். "முருகன் என்றால் அழகன். அவன் சூரனுடன் போருக்குப் புறப்பட்டான். சிறுவா! பால் மணம் மாறாத பாலகனான நீயா என்னுடன் போருக்கு வந்தாய்! போய் விடப்பா! என்று ஆணவத்துடன் கருணையை குழைத்துப் பேசுவது போல சூரபத்மன் சிரித்தான். ஆனால், முருகனின் தாக்குதலில் நிலைகுலைந்து போனான். முருகன் வேலாயுதத்தை ஏவிவிட்டார்.

அக்னிமழையைப் பொழிந்தபடி வேல், சூரனை அழிக்கப் பாய்ந்தது. பயந்து போன சூரபத்மன், ஒரு கடலின் நடுவே பெரிய மாமரமாக உருவெடுத்து நின்றான். அம்மரத்தை முருகனின் வேல் இரண்டு கூறாக பிளந்தது. அதன் ஒருபாதியை சேவலாகவும், மறுபாதியை மயிலாகவும் மாற்றி அருள்புரிந்தார். முருகன். நீலமயிலை வாகனமாக்கிக் கொண்டார். சேவலை கொடியாக ஆக்கிக் கொண்டார். அதிகாலை விடியல் வேளையில் சேவல் "கொக்கரக்கோ என்று சொல்லி முருகப்பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும்." கொக்கு அறு கோ என்பதைத் தான் சேவல் "கொக்கரக்கோ என்று கூவி அழைக்கிறது. கொக்கு என்றால் "மாமரம், கொக்கரக்கோ என்பதற்கு "மாமரத்தை இருகூறாக்கிய மன்னவனே என்பது பொருளாகும். சேவலைக் காலையில் தரிசித்தால் முருகனின் அருள் கிடைக்கும்.

No comments:

Post a Comment