Sunday, December 28, 2014

சனிப்பெயர்ச்சியால் தோஷமா.. இனி கிடையவே கிடையாது!

தசரத மகாராஜா அயோத்தியை ஆண்ட வேளை அது. அப்போது, சனிபகவான் ரோகிணிநட்சத்திரத்தை கடக்க இருந்தார். இதனால், தேசத்துக்கு ஆபத்து வரும் என்று மந்திரிபிரதானிகளெல்லாம்,தசரதரிடம் முறையிட்டனர். என் தேசத்துக்கு ஒருகிரகத்தால் ஆபத்தா? அதைத் தடுத்து, என் மக்களைக் காப்பாற்ற அதற்காக என்ன விலையும் கொடுப்பேன்? என்று ஆர்த்தெழுந்தார் தசரதர். 

உடனே தன் பறக்கும் தேரை எடுத்தார். வில் அம்பு ஏந்தி சனியின் லோகத்திற்கே சென்று விட்டார். அதிர்ந்து போனார் சனீஸ்வரர்.என்னைப் பார்த்தாலே எல்லாரும் ஓடும் வேளையில், நீர் இங்கே வந்திருக்கிறீரே! யார் நீர்? எப்படி வந்தீர்! எதற்காக வந்தீர்? என்று கேள்விகளை அடுக்கினார் சனீஸ்வரர்.சனீஸ்வரரே! உம் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. உம்முடைய கிரக சஞ்சாரத்தால், எமது தேசத்துக்கு ஆபத்து என்று மந்திரிகள் உரைத்தார்கள். அதைத் தடுக்கவே, உம்மைத் தேடி வந்தேன், என்றார் தசரதர்.சனீஸ்வரர் மகிழ்ந்து போனார்.

தசரதரே! என் கிரக சஞ்சார காலத்தில், எவரொருவர் பொதுநலன் கருதி பணி செய்கிறாரோ, பிறருக்கு நன்மை செய்கிறாரோ, கடமையைக் கருத்துடன் செய்கிறாரோ... அவர்களை நான் அண்டவே மாட்டேன். மக்களுக்காக, இங்கே வந்து என்னுடன் போரிடவே துணிந்துவிட்ட உம்மை வாழ்த்துகிறேன். உம் தேசத்தை ஏதும் செய்யமாட்டேன், என்றார். தசரதர் மகிழ்ந்தார். தனக்கு அருள்செய்த சனீஸ்வரரை ஸ்லோகங்களால் அர்ச்சித்தார். அந்த ஸ்லோகங்களின் தமிழாக்கம் தந்துள்ளோம். இதைப் பக்தியுடன் படிப்பதுடன், பிறருக்கு நன்மையும் செய்தால், ஏழரை, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகச்சனியால் பீடிக்கப்படும் ராசியினரை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார்.  

ரவுத்திரன், இந்திரியத்தை அடக்குபவன், பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், சூரியபுத்திரன் என்னும் பலவித திருநாமங்களை கொண்ட சனீஸ்வரரே! 

சகல பீடைகளையும் போக்குபவரே! சூரிய புத்திரரே! உமக்கு நமஸ்காரம்.ஊ  கெட்ட ஸ்தானங்களில் இருக்கும் போது தேவர்கள், அசுரர்கள், கிங்கரர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், பன்னகர்கள் முதலியோரையும் துன்புறுத்தும் சூரியனின் மைந்தனே! உம்மை வணங்குகிறேன்.  

மனிதர், அரசர், பசுக்கள், சிங்கங்கள், காட்டிலுள்ள புழுக்கள், பறவைகள், வண்டுகள் முதலிய அனைத்துமே உம்மால் பீடிக்கப்படுகின்றன. அத்தகைய சக்தி படைத்த சனீஸ்வரரே! உமக்கு என் வணக்கம்.

நீங்கள் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் காலத்தில் நாடு, நகரம், காடு, படை என அனைத்தும் துன்பத்திற்கு ஆளாகின்றன. அத்தகைய ஆற்றல் மிக்க சக்தி படைத்தவரே! உம்மைப் போற்றுகிறேன்.  

சனிக்கிழமையில் எள், உளுந்து, சர்க்கரை அன்னம் இவற்றை தானம் அளிப்பதாலும், இரும்பு, கருப்பு வஸ்திரம் இவற்றை தர்மம் செய்வதாலும் மகிழ்ச்சி அடைபவரே! சூரிய குமாரனே! உம்மைத்தியானிக்கிறேன்.  

சூட்சும வடிவிலும், பிரயாகை என்னும் திருத்தலத்திலும், யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிக்கரைகளிலும், குகைகளிலும் இருக்கும் யோகிகளின் தியானத்திற்கு காரணமானவரே! உம்மை வணங்குகிறேன்.  

சனிக்கிழமையில் வெளி இடத்தில் இருந்து தன் வீட்டை அடைபவன் சுகம் அடைவான். சனியன்று வீட்டை விட்டுக் கிளம்ப முடிவெடுத்திருப்பவர், திரும்பவும் அந்த செயலுக்காக செல்லும் தேவை உண்டாகாது. (அதேநாளில் அந்தச் செயல் வெற்றிகரமாக முடிந்து விடும்) இத்தகைய சக்தியைத் தந்துள்ள சனீஸ்வரரே! உம்மைப் போற்றுகிறேன். 

படைப்புக் கடவுளான பிரம்மாவாகவும், காத்தல் கடவுளான விஷ்ணுவாகவும், சம்ஹாரம் செய்யும் சிவனாகவும், ரிக், யஜூர், சாம வேதங்களின் வடிவமாகவும்விளங்குபவரே! உம்மைவணங்குகிறேன். 

திருக்கோணத்தில் இருப்பவரே! பிரகாசம் மிக்கவரே! கருப்பு நிறம் உடையவரே! பயங்கரமானவரே! அழிவைச் செய்பவரே! அடக்குபவரே! சூரியனின் மகனே! ராசிகளில் தாமதமாக சஞ்சரிப்பவரே! மந்த கதி உள்ளவரே! பிப்பலாதரால் துதிக்கப்பட்டவரே! இந்ததிருநாமங்களால், காலையில் எழுந்ததும் சொல்லி உம்மை வணங்குபவர்க்கு தோஷம் நீங்குவதோடு சகலசவுபாக்கியமும் தர வேண்டும். சனீஸ்வரரே! 

தசரதனாகிய என்னால் பாடப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை தினமும்  மனத்தூய்மையுடன் சொல்பவர்களுக்கு, நல்ல குழந்தைகள், பசுக்கள்,  செல்வம், சொந்தபந்தம் என சகல சவுபாக்கியமும்  தர வேண்டும். வாழ்வுக்குப்  பின், மோட்சம் அளிக்க  வேண்டும்.