Sunday, November 17, 2013

திருவண்ணாமலை தீபத்திருநாளின் சிறப்பு!

திருவண்ணாமலை தீபத்திருநாள் மிகவும் பழமையானது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவில் கூடியதையும், அனைவருக்கும் உணவு, தங்குமிடம் அளிப்பதற்காக தர்ம சத்திரங்கள் இருந்ததையும் அண்ணாமலையார் கோயில் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. துறவிகள் நிறைந்த ஊராக இத்தலம் இருந்த தால், ஆண்டிகள் மிகுந்தது அண்ணாமலை என்ற பழமொழியும் உண்டானது. இங்கு வரும் சிவபக்தர்களை அண்ணாமலை திருக்கூட்டத்தார் என்றனர். இவ்வூரில் உள்ள கோயில்களில் பூஜை செய்வதும், நந்தவனங்களில் மலர் பறிப்பதும் இவர்களது பணியாக இருந்தன. இன்றும், திருவண்ணாமலை கோயிலில் சில அடியவர்கள் மாலை கட்டும் பணி செய்கின்றனர். பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார் என்று அருணாசல சிவன் பூமாலை விரும்புவதை போற்றுகிறார் ஞானசம்பந்தர்.

ஆறுதீபம் ஏற்றுங்க: திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மலை தீபம் சிவாம்சமாகும். யாராலும் அணுக முடியாத ஞான மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் இறைவன். ஆனால், நம் மீது கொண்ட கருணையினால் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு அருள்புரியும் நாளே திருக்கார்த்திகை. சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டபோது, ஈசனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார். அவரது நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறிகள் கிளம்பின. ஆறுதீப்பொறிகளும் சரவணப்பொய்கையில் சிறுகுழந்தைகளாக உருவெடுத்தன. அதுபோல,பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறுஅகல்களில் குட்டிக்குழந்தையாக முருகனாக ஒளிவீசுகிறது. வீடுகளில், கார்த்திகை தீபம் ஏற்றும்போது குறைந்த பட்சம் ஆறுதீபங்களை வாசலில் வைக்க வேண்டும். அண்ணாமலை தீபம் வேறு, நம் வீட்டு அகல்தீபம் வேறு என நினைக்க வேண்டாம். இரண்டும் ஒன்றே.

108 நாள் விரதம்: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று காலையில் ஏற்றப்படுவது பரணி தீபம். கோயிலுக்குள் இந்த தீபத்தை ஏற்றுவர். இந்த தீபம் ஏற்றும் சிவாச்சாரியார் 108 நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருப்பார். ஒவ்வொரு நாளும் அணையா தீபம் ஏற்றி அண்ணாமலையாரை வழிபடுவார். கார்த்திகைக்கு முன்னதாக 108 நாட்கள் விரதம் இருப்போர் அண்ணாமலையாரின் அருட்கடாட்சத்தை பெறுவர். அவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்.

பழமையான கார்த்திகை தீப விழா: கார்த்திகை தீப விழா மிகவும் பழமையானதாகும். தொல்காப்பியத்தில் "வேலினொக்கிய விளக்கு நிலையும் என்று இந்தத் திருவிழா பற்றி கூறப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று இந்த விளக்கு ஏற்றப்பட்டதாக நச்சினார்க்கினியர் என்னும் புலவர் உரை எழுதி இருக்கிறார். சமண மத நூல்களிலும் கார்த்திகை தீப விழா பற்றி கூறப்பட்டுள்ளது.  தமிழ் இலக்கியமான முத்தொள்ளாயிரத்தில் இந்தத் திருவிழா பற்றி கூறப்பட்டுள்ளதிலிருந்து இதன் பழமை தெரியவருகிறது.

உருண்டே கிரிவலம் வந்தவர்: திருண்ணாமலையை நடந்து வலம் வருவதற்குள்ளாகவே கால் வலிக்க ஆரம்பிக்கும். ஆனால், அண்ணாமலை சுவாமி என்பவர், அங்கப்பிரதட்சணம் செய்து மலையை வலம் வருவார். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இவர், சிவாயநம, ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை ஜெபித்தபடியே பிரதட்சணம் செய்வது வழக்கம். நாயன்மார் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். கார்த்திகைதிருவிழாவின் ஆறாம்நாள் நடக்கும் அறுபத்துமூவர் விழாவில், தான் கட்டிய மடாலயத்தில் அன்னதானமும் செய்தார்.

தமிழக தீபாவளி: நல்லக விளக்கது நமச்சிவாயவே என்று சிவனைத் தேவாரம் போற்றுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் வாசலில் விளக்கேற்றுவர். ஐப்பசியில் தீபாவளியை ஒளித்திருநாளாகக் கொண்டாடினாலும், தமிழகத்தின் தீபாவளியாக இருப்பது திருக்கார்த்திகை தான். பஞ்சபூதங்களில் அக்னி தத்துவமாகத் திகழும் தலம் திருவண்ணாமலை. நெருப்பைப் போல சிவந்த நிறம் கொண்டதால் இறைவனுக்கு சிவன் என்ற பெயர் ஏற்பட்டது. திருமாலும், நான்முகனும் அடிமுடி காண முடியாத நெருப்பாக இறைவன் காட்சியளித்ததும், உமையவளுக்கு இடப்பாகத்தை தந்ததும் இந்நாளில் தான். தாழ்த்திப் பிடித்தாலும்,மேல்நோக்கி எரிவது நெருப்பின் இயல்பு. அதுபோல, வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் மனதால் உயர்ந்த மாமனிதனாக வாழவேண்டும் என்பதே தீபத்திருவிழாவின் நோக்கம்.