Wednesday, June 5, 2013

கல்யாண யோகம் வந்தாச்சா!

ஒருவருக்கு திருமணம் நடப்பதை நிர்ணயிப்பவர் குரு. நீண்ட நாட்களாகத் திருமணம் தடைபடும் ஒருவரது ஜாதகத்தைப் பார்க்கும் ஜோதிடர், இவருக்கு வியாழ நோக்கம் வர இன்னும் இவ்வளவு காலம் இருக்கிறது. அதுவரை பொறுத்திருங்கள், என்பார். குரு இருக்கும் ராசியை விட, அவர் பார்க்கும் ராசிகளுக்கே பலன் அதிகம். இதனையே குரு பார்க்க கோடி நன்மை என்பர். நவக்கிரகங்களில் குரு மட்டுமே பரிபூரணமான சுபகிரகம் ஆகும். இந்த கிரகத்தின் 5,7,9 ஆகிய பார்வைகள் முக்கியமானவை. இந்த பெயர்ச்சி காலத்தில், மிதுனத்தில் இருந்து 5,7,9 பார்வையால் துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். இந்த ராசியினருக்கு ஓராண்டு காலத்தில் திருமண யோகம் உண்டு. திருமணம் மட்டுமின்றி குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம், நல்ல குடும்பம், சொத்து வாங்குதல், பொன்பொருள் சேர்க்கை, ஆன்மிக சிந்தனை ஆகிய நற்பலன்களையும் குரு பார்வை தரும்.

ஞான குரு: நவக்கிரக தலங்களில் குருவுக்குரியது திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில். இங்கு குரு, சிவனை வழிபட்டுள்ளார். இவருக்கு ஞான தெட்சிணாமூர்த்தி என்று பெயர் வந்தது. குரு பெயர்ச்சி விழா இங்கு விசேஷமாக நடக்கும். போன்: 04374 269 407

குருவித்துறை குரு: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சந்நிதியில் குருவும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். குருவுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார். குரு பெயர்ச்சியை ஒட்டி மே26ல் துவங்கி 3 நாட்கள் லட்சார்ச்சனை நடக்கிறது. போன்: 99656 70975, 97902 95795.

தென்குடித்திட்டை குரு: தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ள தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில், குருபகவான் தனி விமானத்துடன் கூடிய சந்நிதியில் காட்சி தருகிறார். ராஜயோகம் தருபவர் என்பதால் ராஜகுரு என்கின்றனர். தடைபட்ட திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, வாழ்க்கைக்குத் தேவையான பொருள் கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். போன்: 04362 252 858.

ஆமையில் அமர்ந்த குரு: குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது திருச்செந்தூர். அசுரர்களுடன் போரிட முருகப்பெருமான் இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள மேதா தட்சிணாமூர்த்தி, கூர்மம் (ஆமை), அஷ்டநாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். கல்லால மரத்தில் நான்கு வேதங்களும் கிளி வடிவில் உள்ளன.

சிவனுக்கு கொண்டைக்கடலை: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில், 17 கி.மீ., தூரத்திலுள்ள முறப்பநாட்டில் உள்ள கைலாசநாதர், வியாழனுக்குரிய அதிபதியாக அருளுகிறார். அகத்தியரின் சீடரான உரோமச முனிவருக்கு, சிவன் குரு அம்சமாக இருந்து காட்சி கொடுத்த தலம். இந்த சிவனுக்கு, மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுவர். கோயில் அருகில் ஓடும் தாமிரபரணி நதி, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. இதை தட்சிண கங்கை என்பர். இதனால், இது கிரகதோஷம் நீக்கும் தலமாக உள்ளது.போன்: 98424 04554.

மேற்கு நோக்கிய குரு: சென்னை பாடியில் (திருவலிதாயம்) உள்ள, வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்டதாகும்.குருபகவான், தான் செய்த ஒரு தவறால் தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சந்நிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும்விதமாக மேற்கு நோக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. போன்: 044 2654 0706.

ஒரே ஊரில் ஏழு குருக்கள்: குருவைப் பற்றிய ஸ்ரீகாண்டேயா என்ற ஸ்லோகம், தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்கிராச்சாரியார், ஞானகுரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மா, விஷ்ணு குரு வரதராஜர், சக்தி குரு சவுந்தர்யநாயகி, சிவகுரு தெட்சிணாமூர்த்தி என ஏழு குருக்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோயிலில் தரிசிக்கலாம். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தருகின்றனர். குருவின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பெயர்ச்சியால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும். போன்: 0431 259 1466.

பெருமாளுக்கு மஞ்சள் வஸ்திரம்: திருநெல்வேலி- திருச்செந்தூர் ரோட்டிலுள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதப்பெருமாள் கோயில் குருவிற்கு உரியது. இங்கு பெருமாள், வியாழன் கிரகத்திற்கு அதிபதியாக அருளுகிறார். பொதுவாக, தெட்சிணாமூர்த்திக்குத்தான் மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக்கடலை (சுண்டல்) மாலை அணிவித்து வழிபடுவர். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு வழிபாட்டைச் செய்கின்றனர். குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுவது விசேஷம். போன்: 04639 273 607.

தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை: தேனி வேதபுரியில் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி ஒன்பதடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்கள் கோயில் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சுவாமிக்கு சக்தி அதிகம். கருவறை விமானத்தில் நமசிவாய மந்திரத்தை குறிக்கும் வகையில் ஐந்து கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு வில்வமாலை அணிவிக்கிறார்கள். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.  போன்: 04546 253 908

No comments:

Post a Comment