Saturday, May 4, 2013

நல்லதை செய்ய நேரம் காலம் எதற்கு?

இறைவனை உணர்வதன் மூலமும், காண்பதன் மூலமும் அல்லது இரண்டின் மூலமாகவும் தெய்வ அருளைப் பெறலாம்.  மகத்தான ஓர் முடிவைக் காணும் போது, அங்கே மகத்தான செயலின் ஆரம்பமும் ஏற்பட போகிறது என்பதை உறுதியாக நம்பு. துன்பம் நிறைந்த அழிவு மனதை அச்சுறுத்தும் போது, ஒரு பெரிய மகத்தான செயல் நிச்சயமாக வரவிருக்கிறது என ஆறுதல் கொள்ள வேண்டும்.

நினைப்பில் உண்மையும், சொல்லில் உண்மையும் இருக்க வேண்டும். பொய் உனது ஜீவனின் இயல்பானதல்ல. அது வெளியிலிருந்து வருகிறது என்பதை உணரும் போது அதை மறுத்து ஒதுக்குவது எளிதாகும். உலகில் உள்ள எவற்றின் மீதும் நமக்கு ஆசை தேவையில்லை, குறிப்பாக செல்வம், வறுமை, மகிழ்ச்சி, துன்பம், வாழ்வு, சாவு, பெருமை, சிறுமை, அறம், நண்பன், மனைவி, குழந்தைகள், நாடு, நமது வேலை, சொர்க்கம், பூமி இவற்றில் உள்ள அல்லது இவற்றைக் கடந்த எதிலும் நமக்கு ஆசை வேண்டியதில்லை.

கடவுளை மட்டும் நேசிப்பதால், அவரும் பிறரை நேசிக்காமல் உன்னை மட்டும் நேசிக்க வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால், இது நேர்மையற்ற, இயற்கைக்குப் புறம்பான ஆசையாகும். காரணம் கடவுள் ஒருவர் தான், நீயோ பலரில் ஒருவன். இரவில் கண் விழிப்பது சரியான அணுகு முறையல்ல, தேவையான உறக்கத்தைத் தடுத்தால் உடம்பைத் தாமசமாக்கி, விழிப்பு நேரத்தில் செயல் திறனை குறைத்து தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.

நீ எதை வேண்டுகிறாய் என்பதைத் தூர வைத்துவிட்டு இறைவன் எதை வேண்டுகிறான் என்பதை நீ அறிய விரும்ப வேண்டும். உள்ளம், வேக உணர்ச்சிகள், வழக்கமான கருத்துக்கள் ஆகியவை சரியானது என்று நம்பக்கூடாது. கீதையில் அர்ஜூனன் செய்தது போல அவற்றைத் தாண்டிச் சென்று, சரியானவை, தேவையானவை என்று இறைவன் நிர்ணயித்துஇருப்பதைப் புரிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்.

ஆன்மிகத்தில் ஈடுபடுபவரின் உயிரையும், உடலையும் காமச் செயலில் இருந்து காக்க தவறினால், இறைவன் அருள் கிடைக்காமலும், ஆன்மிக இன்பம் பெற வழியில்லாமலும் போய்விடும். எனவே வாழ்க்கையில் தூய்மையான இன்பத்தை அறியும் போது இறைவனையும் அறிய வாய்ப்பு கிடைக்கும். -கேட்கிறார் அரவிந்தர்.

No comments:

Post a Comment