Monday, January 30, 2012

2012 ம் ஆண்டிற்கான உங்கள் நட்சத்திர பலனும் பரிகாரமும்!

அஸ்வினி
அசாத்திய திறமை கொண்ட அஸ்வினி நட்சத்திரக்காரர்களே!

சொல்லில் இனிமையும், செயலில் நிதானமும் இருந்தால் உங்கள் வாழ்க்கை பிரகாசமாகும். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேலை பார்க்கும் இடத்தில் சாதகமான சூழ்நிலை ஆரம்பமாகும். தேவையற்ற மனக்குழப்பங்களையும், பயத்தையும் தவிர்த்து விடுங்கள். அலுவலகப் பணி காரணமாக ஒரு சிலருக்கு வெளிநாடு சென்று வர வாய்ப்புள்ளது, தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் நிச்சயம் கிடைக்கும். உயரதிகாரிகள் பாராட்டு கிடைக்கும். உடன்பணிபுரிவோரின் ஒத்துழைப்பு கிடைக்க பேச்சில் நிதானம் அவசியம். இல்லத்தில் இனிய சூழல் நிலவும். பெற்றோரின் ஆதரவும், அரவணைப்பும் மனதிற்கு இதமளிக்கும். வாரிசுகளின் வாழ்க்கையில் வசந்தம் வீசும். வீடு, மனை வாங்க யோகம் கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் சுலபமாக கைகூடும். செய்யும் தொழிலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கூட்டுதொழிலில் லாபம் கிடைக்கும். சிலர் புது ஒப்பந்தம் செய்யவும் வாய்ப்புண்டு. அசாத்திய திறமை கொண்ட நீங்கள் எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கைகூடும். பதவி, பொறுப்பு உயர்வுகள் வரும்போது, கர்வமும், தலைக்கனமும் ஆகவே ஆகாது. பெண்களுக்கு திடீர் யோகத்தால் புகழும், செல்வமும் பெறலாம். தேவை இல்லாமல் யாருக்கும் கடன் தரவோ, வாங்கவோ வேண்டாம். சமையல் அறையில் கூடுதல் கவனமாக இருங்கள். மாணவர்கள் அவரவர் திறமைக்கு உரிய வெற்றியைப் பெறக்கூடிய காலம் இது. அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன் எழுந்து படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். வாகனத்தை ஓட்டும் போது கவனம் சிதறாமல் ஓட்டுங்கள். நரம்புப் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, கண் உபாதைகள், கழிவுப்பாதை உறுப்புகளில் அலட்சியம் கூடாது. தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கங்கள்.
இந்த புதுவருடத்தில் ஒருமுறை ஆந்திரா திருப்பதி பெருமாளையும், தாயாரையும் தரிசனம் செய்து விட்டால் வாழ்க்கை தித்திக்கும்.

பரணி
பளிச்சென்று தோற்றம் கொண்ட பரணி நட்சத்திரக்காரர்களே!

இந்த வருடத்தில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். பணியிடத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் உங்கள் மனம்போல் கிட்டும். பணவரவு அதிகரிக்கும். சகஊழியர்கள் ஆதரவும் அதனால் ஆதாயமும் ஏற்படும். பிறரைக் கேலியாகவோ, தரக்குறைவாகவோ பேசும் உங்க குணத்தை மாத்திக்கிறது முக்கியம். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி உங்களுக்குத்தான். இந்த சமயத்தில் உங்க வாக்குல நிதானமும், செயல்களில் முழு ஈடுபாடும் அவசியம். இல்லத்தில் இனிமை இரட்டிப்பாகும். வாழ்க்கைத் துணையால்  வசந்தம் உருவாகும். எதிர்பார்த்த சுபகாரியங்கள் நிகழும். பளிச்சென்று தோற்றம் கொண்டிருந்தாலும், பேச்சில் இனிமை இருந்தால் நிம்மதி நிலைக்கும். வாரிசுகளின் வாழ்வில் நன்மைகள் ஏற்படும். வரவு அதிகரிக்கும் போது சேமிப்பையும் அதிகரித்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் சேரும். உறவும் நட்பும் ஆதரவுக்கரம் நீட்டும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.
மாணவர்களின் திறமைக்கும், முயற்சிக்கும் உரிய பலன் கிடைக்கும். சோம்பலை விட்டு சுறுசுறுப்புடன் படிக்க வேண்டும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். மூன்றாவது நபரை நம்பி எதிலும் கையொழுத்தோ, ஒப்பந்தமோ செய்து கொள்ள வேண்டாம். முறையாக திட்டமிட்டு கவனத்துடன் செயல்பட்டால் உங்க முதலீடு பலமடங்கு லாபம் தரும். கூட்டுதொழிலில் புதிய ஒப்பந்தம் ஏற்படும்.
அரசுத்துறையினர் பதவி, புகழ் கிடைக்கப்பெறுவர். அரசியல் சார்ந்தவர்கள் புதிய நட்புகளால் ஆதாயமும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்துடன் ஒரே வாகனத்தில் துக்க காரியங்களுக்குச் செல்வதை தவிர்த்திடுங்கள். உடல்நலத்தில் கழுத்து, முதுகு, எலும்பு பாதிப்புகள், ரத்தத் தொற்றுநோய், அலர்ஜி, தோல்நிறமாற்றம், தலைசுற்றல் பிரச்சனைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாடு குடும்பத்தை ஒற்றுமையாக வாழவைக்கும்.
இந்த வருடத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தஞ்சாவூர் பட்டீஸ்வரம் சென்று துர்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபட்டால் துயரங்கள் நீங்கி இன்பம் செழிக்கும்.

கார்த்திகை
காரியத்தில் கருத்தான கார்த்திகை நட்சத்திரக்காரர்களே!

அமைதியாக செயல்பட்டால் ஆனந்தம் இரட்டிப்பாக கிடைக்கும். அலுவலகத்தில் அலட்சியமும், அவசரமும் கூடாது. எதிர்பாராத இடமாற்றம் வந்தால் ஏற்றுக்கொள்வது நல்லது. பிறரது குறையை பெரிதுபடுத்தி அதில் ஆதாயம் தேடினால் வீண்பழி உங்களைச் சேரும். பணிகளை திட்டமிட்டு நேரம் தவறாமல் செய்து முடியுங்கள். இல்லறத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்களை நிகழ்த்தும் போது ஆடம்பரம் செய்வதை தவிர்த்தால் கடன் சுமையிலிருந்து தப்பிக்கலாம். தாய்வழி உறவுகள் உடல்நலத்தில் அக்கறை அவசியம். வாழ்க்கைத் துணையோடு இருந்த சுணக்க நிலை மாறி சுமூகமான சூழல் உருவாகும். செய்யும் தொழிலில் லாபம் சீராக இருக்க கவனமான செயல்பாடு முக்கியம். அடுத்தவர் பேச்சை கேட்டு தெரியாத தொழில் முதலீடு செய்ய வேண்டாம். உங்களது ரகசியங்களை பரம ரகசியமாக வைத்துக் காரியத்தில் கருத்தாக செயல்படுங்கள்.
பெண்களுக்கு அதிஷ்டமான காலகட்டம் இது. வீண்பழி வராம இருக்க கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்க. ஆடை, ஆபரணம் வந்து சேரும். வாரிசுகளால் பெருமை கிடைக்கும். மாணவர்கள் தங்கள் முயற்சிக்கேற்ற பலனைப் பெறலாம். தினமும் அதிகாலையில் எழுந்து பாடங்களை படித்தால் சாதனைகள் படைக்கலாம். அரசுத்துறையினர் மேலதிகாரிகள் கிட்டே வாக்குவாதம் செய்யாதீங்க. தேவையற்ற நட்பை தவிர்த்து விடுங்கள். பயணப்பாதையில் ஏற்படும் நட்புகளிடம் எச்சரிக்கையாக இருங்க. உடல் நலத்தில் மனஅழுத்தம், காது, மூக்கு, தொண்டை உபாதைகள், ஒற்றைத் தலைவலி பிரச்சனைகளில் உடன் சிகிச்சை அவசியம்.
இந்த வருடத்தில் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிவகங்கை பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை மனதார வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் உண்டாகும்.

ரோகிணி
ராஜயோகம் கொண்ட ரோகிணி நட்சத்திரக்காரர்களே!

நிதானமாக செயல்பட்டால் நிம்மதியாக வாழலாம். அலுவலகத்தில் அமைதியான செயல்பாட்டால் அதிகம் சாதிக்கலாம். எதிர்பாராத இடமாற்றம் வரும். உங்களைப் பற்றி அவதூறு சொல்பவர்கள் நட்பை விலக்கிக் கொள்ளுங்கள். வீண்பழி வந்து சேராமல் இருக்கும். உங்க பொறுப்பில் ஒப்படைக்கப்படும் பணிகளை நேரடி கவனத்தோட செய்யறது அவசியம். மனையில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். வீண் சந்தேகத்தையும், சஞ்சலத்தையும் தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்கள் உடல்நலத்தில் அக்கறை அவசியம். வாழ்க்கைத் துணையோடு மனம் விட்டு பேசுங்கள்.
செய்யும் தொழிலில் லாபம் சீராக இருக்கும். யாரோட பேச்சையும் கேட்டு தெரியாத தொழிலில் ஈடுபட வேண்டாம். யாருக்காகவும் சட்டப்புறம்பு பொருளை வர்த்தகத்தில் ஈடுபடுத்தவும் சம்மதிக்க வேண்டாம். பெண்களுக்கு அதிர்ஷ்டமான காலகட்டம். குடும்ப உறவுகளிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மாணவர்கள் முயற்சிக்குறிய பலன் கிடைக்கும். இரவு நேரக் கேளிக்கை நிகழ்ச்சியில் ஆர்வம் காட்ட வேண்டாம். அரசுத்துறையினர் யாரையும் அலட்சியப்படுத்தக்கூடாது. மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். கூடா நட்பு கேடாய் முடியும். வாகனப்பாதையில் உடைமைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல்நலத்தில் விஷ ஜந்துக்கள் கடி, இதய படபடப்பு, ஒற்றைத் தலைவலி, தொற்றுநோய் ஏற்பட்டால் சிகிச்சை அவசியம்.
திங்கட்கிழமை சிவதரிசனம் சிறப்பு. இந்த வருடத்தில் ஒருமுறையாவது ராமநாதபுரம் ராமேஸ்வரம் சென்று சிவனுக்கு கங்காஜல அபிஷேகம் செய்து வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும்.

மிருகசீரிஷம்
மிடுக்கான தோற்றம் கொண்ட மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களே!

வாழ்க்கையில் ஏற்றமும், மாற்றமும் ஏற்படக்கூடிய வருடம் இது. அலுவலகத்தில் உங்கள் திறமையால் உயர் அதிகாரிகளின் பாராட்டும், பெருமையும் கூடும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வுகள் கைகூடும். நன்மைகள் அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில் உங்க எதிர்காலத்துக்கான அஸ்திவாரத்தை சரியாக அமைத்துக்கொள்வது நல்லது. இல்லத்தில் இன்பம் உருவாகும். விட்டுப் பிரிந்திருந்த உறவும் நட்பும் மீண்டும் வந்துசேரும். ஆடை, ஆபரணப்பொருள் சேரும். சுபகாரியங்கள் மனம்போல் கைகூடும். பெற்றோர் பெரியோர் ஆதரவும், ஆசிர்வாதமும் மகிழ்ச்சி தரும். பரம்பரை சொத்து வழக்குகள் சாதகமாகத் தீர்வாகும்.
செய்யும் தொழிலில் நேரடி கவனம் இருந்தால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் உங்களுக்கான பங்கு அதிகரிக்கும். எதிரிகள் பலம் குறையக்கூடிய காலகட்டம் இது. உங்களிடம் பணிபுரிவோரை உதாசீனப்படுத்தாதீர்கள். வெளிநாட்டு வர்த்தகத்தில் முறையான ஒப்பந்தங்கள் அவசியம். அரசியல் துறையினருக்கு ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புகள் ஏற்படும். யாரையும் குற்றம் குறை சொல்லாமல் இருப்பது அவசியம். அரசுத் துறையினருக்கு புதிய பதவி, பொறுப்பு வாய்ப்புகள் வரும். மிடுக்கான தோற்றம் கொண்ட நீங்கள் வீண் புகழ்ச்சிக்கு மயங்கி அதனை இழந்துவிட வேண்டாம்.
மாணவர்களுக்கு பாராட்டும், மதிப்பும் கூடும். தீய சகவாசத்தை விட்டுவிடுங்கள். பெண்களின் பெருமை உயரக்கூடிய காலகட்டம். குடும்பத்தில் மூத்தவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. வாகனப் பயணத்தில் வேகத்தை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் வயிறு, முதுகுத் தண்டுவடம், நரம்புப் பிரச்சனைகள், தோல்நிற மாற்றம், அலர்ஜி உபாதைகளை உடனே கவனியுங்கள். கர்ப்பிணிகள் அதிக கவனமாக இருக்கவேண்டும்.
இந்த வருடத்தில் முயன்ற போதெல்லாம் தஞ்சாவூர் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரரையும், ஏழவார்குழலியையும் வழிபட்ட பின், தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியையும் தரிசனம் செய்தால் உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

திருவாதிரை
திடகாத்திரமான மனம் கொண்ட திருவாதிரை நட்சத்திரக்காரர்களே!

கஷ்டங்கள் விலகி சந்தோஷம் உண்டாகப் போகிறது. பணியிடத்தில் கவனமும், நேரம் தவறாமையும் இருந்தால் மதிப்பும் மரியாதையும் கிட்டும். அடுத்தவர்களுக்காக நீங்கள் தலைகுனிந்த நிலைமாறும். எதிர்பாராத இடமாற்றம், பதவி உயர்வு வரக்கூடும். திடகாத்திரமான மனம் கொண்ட உங்கள் அந்தஸ்து உயரும் போது அகந்தையும் உயர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாழ்க்கைத்துணை, வாரிசுகளால் பெருமை சேரும். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சுபகாரியங்கள் கைகூடும். கடன்சுமை குறையும். வேண்டாத கேளிக்கை, சூதாட்டத்தில் பணம் செலவழிப்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினர் எதிர்பார்த்த உயர்வுகள் தேடிவரும். அதேசமயம் பிறரோட வார்த்தைகளை நம்பி ஏற்கனவே உள்ள நட்புகளை பகைச்சுக்க வேண்டாம்.
அரசுத்துறையினருக்கு மேலிடத்து ஆதரவும், பெரிய மனிதர்களால் ஆதாயமும் கிட்டும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களை படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. தெரியாத தொழிலை விட தெரிந்த தொழிலிலேயே முதலீடு செய்யுங்கள். பெண்களுக்கு பெருமை அந்தஸ்து அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் ஏற்பட்ட அவமானம் நீங்கும். மனம்போல் மகப்பேறு, மணப்பேறு கிட்டும். கூர்மையான உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்கள். மாணவர்கள் பாராட்டும் பெருமையும் அதிகரிக்கும். மூத்தோர் பேச்சைக் கேட்டு நடப்பதுதான் முன்னேற்றத்தை முழுமையாக்கும். இரவு நேரம் பயணம் செய்யும் போது குலதெய்வத்தை கும்பிட்டுவிட்டு பயணத்தை தொடங்குங்கள். உடல்நலத்தில் பற்கள், கழிவுப்பாதை, தொண்டை உபாதைகளை உடனே கவனிச்சு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த வருடத்தில் உங்களால் முடிந்தபோதெல்லாம் தூத்துக்குடி திருச்செந்தூர் செந்தில் வேலனை தரிசித்து விட்டு வாருங்கள். உங்கள் எண்ணம் ஈடேறும்.

புனர்பூசம்
புத்திசாலியான புனர்பூச நட்சத்திரக்காரர்களே!

கவனமாக செயல்பட்டால் கஷ்டங்கள் விலகிவிடும். தை மாதத்திற்கு பிறகு நன்மைகள் ஏற்படும் என்றாலும் உங்கள் புத்திசாலித்தனமான செயல்பாடுகளாலேயே அவை நிலைத்திருக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் புலம்பாமல் முகமலர்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணை உடல்நலத்தில் அக்கறையுடனும், வாரிசுகளிடம் பாசத்துடன் நடந்துகொள்ள வேண்டும். உறவுகளுடன் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். வீட்டில் பெரியவர்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பணவரவு அதிகரிக்கும் போது செலவில் கனமாக இருங்கள்.
செய்யும் தொழில் செழிப்பாக உழைப்பு முக்கியம். புதிய முதலீடுகளில் அவசரம் காட்ட வேண்டாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. அரசியல் சார்ந்தவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் தேடிவரும். புதிய நபர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. அரசுத்துறையினருக்கு ஆதரவு அதிகரிக்கும். மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றே முடித்தால் படிப்பில் உயரலாம். பெண்களுக்கு நன்மைகள் அணிவகுத்து வரும் காலகட்டம். வாரிசுகளை கண்டிக்கும்போதும், வாழ்க்கைத் துணையுடன் பேசும் போதும் வாக்கில் கடுமை வேண்டாம். உடல்நலத்தில் ஜீரணக் கோளாறு, சுவாச உபாதைகள் வரலாம். புது நட்புகளிடம் எச்சரிக்கையுடன் இருங்கள்.
இந்த வருடத்தில் ஒரு தடவையாவது ஆந்திரா காளஹஸ்தி திருத்தலம் சென்று, காளத்தியப்பரையும், ஞானபிரசுனாம்பிகையையும் தரிசனம் செய்தால் வாழ்க்கை இனிமையாக அமையும்.

பூசம்
பூரிப்பான செயலைச் செய்யும் பூச நட்சத்திரக்காரர்களே!

பொறுமையாக செயல்பட்டால் நன்மைகள் அதிகரிக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கூடவே கூடாது. பூரிப்பான செயல்களால் படிப்படியாக உயர்வுகள் வரும் போது சந்தோஷப்பட வேண்டும். உடனே அனைத்தும் நடந்துவிடவேண்டுமென்று கவலைப்படக்கூடாது. எதிர்பார்த்த இடமாற்றம், உயர்வுகள் கைகூடும். பொறுமையுடன் இருந்தால் நிச்சயம் முன்னேற்றப் பாதையில் செல்லலாம். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் அஷ்டலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். வாழ்க்கைத் துணையிடம் வீண் விவாதம் வேண்டாம்.
செய்யும் தொழில் எதுவானாலும் முன்னேற்றமும் லாபமும் நிச்சயம். தடைப்பட்ட வெளிநாட்டு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த அரசு அனுமதி, வங்கிக் கடன்கள் சுலபமாக கிடைக்கும். மாணவர்களுக்கு திறமைக்குரிய பாராட்டும், உயர்வும் தேடி வரும். பெற்றோர் பெரியோர் பேச்சை கேட்டு மதிப்பு நடப்பது சிறந்தது. பெண்களுக்கு அதிர்ஷ்டமான சூழ்நிலை உள்ளது. விலை உயர்ந்த ஆபரணங்கள் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். அரசுத்துறையினர் அமோக வளர்ச்சி காணலாம். அரசியல் சார்ந்தவர்களுக்கு திடீர் பெயர், புகழ் பெறலாம். இந்த சமயத்தில் வீண் ஆடம்பரமும், தற்புகழ்ச்சியும் வேண்டாம். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. கண்கள், நுரையீரல். ரத்தத் தொற்றுநோய்கள், நரம்பு உபாதைகளில் அலட்சியம் வேண்டாம்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் திருச்சி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு வந்தால் சுகமான வாழ்க்கை வாழலாம்.

ஆயில்யம்
ஆரோக்கியமாக வாழும் ஆயில்ய நட்சத்திரக்காரர்களே!

சோதனைகள் விலகி சாதனைகள் நிகழும் நேரம் இது. அலுவலகத்தில் இதுவரை நீங்க பட்ட அல்லல்கள் அகன்று நன்மைகள் கைகூட ஆரம்பிக்கும். சிலரது புறம் சொல்லும் குணத்தால் முடங்கிக் கிடந்த உங்கள் திறமைகள் வெளிச்சத்துக்கு வந்து சகஊழியர்கள் ஆதரவும் ஆதாயமும் ஏற்படும். இந்த சமயத்தில் முழுமையான கவனமும் திட்டமிடலும் முக்கியம். இல்லத்தில் சந்தோஷம் நிலவும். எதிர்பார்த்த சுபகாரியங்கள் சுமுகமாக கைகூடும். பெற்றோர், பெரியோர் மனம் நோகாமல் நடந்து கொண்டால் பெரும் அளவு நன்மைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையிடமும், வாரிசுகளிடமும் வாக்குவாதம் வேண்டாம். வரவு அதிகரிக்கும் போது தேவையற்ற செலவைக் குறைத்தால் சேமிப்பு உயரும்.
பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் ஆடை, ஆபரணங்கள் சேரும். சகோதர உறவுகளால் ஆதாயம் கிட்டும். பூர்விக சொத்து சம்பந்தமான வழக்குகள் சுமுகமாக தீர்வாகும். மாணவர்களின் திறமைக்கும், முயற்சிக்கும் உரிய பலன்கிட்டக்கூடிய காலகட்டம். பாடங்களை தினசரி படிப்பதில் சோம்பல் கூடாது. செய்யும் தொழிலில் லாபம் சீராகும். மூன்றாம் நபரை நம்பி முதலீடு செய்தால் சிக்கல் ஏற்படும். அரசுத் துறையினருக்கு அமோகமான நன்மைகள் ஏற்படும். கர்வம் இல்லாமல் செயல்பட வேண்டும். அரசியல் சார்ந்தவர்கள், புதிய பொறுப்புகளால் ஆதாயமும், பெரிய மனிதர்கள் ஆதரவும் பெறலாம். பழைய நட்புகளை உதறிடாமல் தக்கவைத்துக்கொள்வது நல்லது.
இரவு நேரப்பயணத்தின் போது போதுமான ஓய்வு அவசியம். வாகனத்தில் சிறு பழுது இருந்தாலும் உடனே சரிசெய்து விடுங்கள். எலும்பு முறிவு, தவறி விழுதல், நரம்பு பாதிப்பு, வயிறு பிரச்சனைகளுக்கு உடனடி சிகிச்சை செய்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
இந்த புத்தாண்டில் ஒருமுறையாவது கேரளா குருவாயூர் சென்று உங்களால் இயன்ற துலாபாரம் செலுத்தி வழிபட்டால் வாழ்க்கை வசந்தமாகும்.

மகம்
மகிழ்ச்சியுடன் வாழும் மக நட்சத்திரக்காரர்களே!

ஆனந்தம் அதிகரிக்கும் சமயத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். பணியிடத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வுகள் நிச்சயம் கைகூடும். அலுவலகப் பணி காரணமாக வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். உயரதிகாரிகள் பாராட்டு மனதுக்கு மகிழ்ச்சி தரும். உங்களிடம் குற்றம் கூறும் குணம் இல்லாது இருந்தால், உடன்பணிபுரிவோர் ஒத்துழைப்பு கிடைக்கும். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை உடல் நலம் சீராகும். வாரிசுகள் வாழ்க்கையில் தடைகள் விலகும். எதிர்பார்த்த சுபகாரியங்கள் கைகூடும். சுபசெலவுகள் அதிகரிக்கும் போது வீண் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரவழி உறவுகள் இடையே வீண் வாக்குவாதம் வேண்டாம்.
செய்யும் தொழில் செழிப்புடன் நடக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் சீராகும். நஷ்டத்தில் இருந்த சிலர் புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். அதேசமயம் சட்டபூர்வமாக மட்டுமே எதையும் செய்வது அவசியம். அரசியல் துறையினர் ஆதரவு அதிகரிக்கப் பெறலாம். அரசுத் துறையினர் எதிர்பார்த்த உயர்வுகள் வரும்போது, கர்வமும் உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் அவரவர் திறமைக்கு உரிய வெற்றியைப் பெறக்கூடிய காலகட்டம். தினமும் அதிகாலை எழுந்து படித்தால் அதிக நன்மை தரும்.
பெண்கள் திடீர் யோகத்தால் பெரும் புகழும் செல்வமும் பெறலாம். கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. கூர்மையான உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்கள். இயன்றவரை இரவு நேரப் பயணத்தைத் தவிர்த்துடுங்கள். வாகனம் ஓட்டும் போது வேகம் வேண்டாம். உடல்நலத்தில் அதிக அக்கறை தேவைப்படும். இடதுபாக உறுப்பு உபாதைகள், எலும்புத் தேய்மான பிரச்னைகள், பார்வைக் குறைபாடுகளில் அலட்சியம் கூடவே கூடாது. தினமும் தியானம், உடற்பயிற்சி அவசியம். இந்த வருடத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் திருச்சி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்து பெருமாள் துதிகளைப் பாட செழிப்பும், செல்வமும் கிட்டும்.

பூரம்
புதுமலர்ச்சி கொண்ட பூர நட்சத்திரக்காரர்களே!

முயற்சிகளால் முன்னேற்றம் காணலாம். அலுவலகத்தில் அலட்சியமும், அவசரமும் கூடாது. புதிய பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், உயர்வுகள் கைகூடும். நன்மைகள் தொடர்ந்து வரும்போது தன்னடக்கம் அவசியம். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். விட்டுக்கொடுத்துப் போனால், விசேஷங்கள் வீடுதேடி வரும். நன்மைகள் நிலைக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். வாழ்க்கைத் துணையிடம் வாக்குவாதாம் வேண்டாம்.
புதுமலர்ச்சியுடன் செயல்பட்டால் தொழிலில் லாபம் கிட்டும். வெளிநாட்டு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த அரசு அனுமதி, வங்கிக் கடன்கள் சுலபமா கைகூடும். மாணவர்களுக்கு திறமைக்குரிய பாராட்டும், உயர்வும் தேடி வரும். பெற்றோர், பெரியோர் அறிவுரை கேட்டு நடந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டு இது. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. ஆடை, ஆபரணப் பொருள் சேரும். வீட்டு வேலைகளில் கவனமுடன் செயல்படுங்கள். அரசுத்துறையினர் கூடாநட்பை நீக்கினால் அமோகமான வளர்ச்சி காணலாம். யாருக்காகவும் வாக்கு தர்றதும், கையெத்திடவும் வேண்டாம். அரசியல் சார்ந்தவர்கள் பெயர், புகழ் பெறலாம். யாரோட கட்டாயத்தாலும் மேலிடத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம்.
பயணத்தில் கவனம் சிதறாமல் வண்டி ஓட்டுங்கள். வயிறு உபாதைகளால் அலட்சியம் வேண்டாம். பெண்கள் மாதாந்திர பிரச்சனை நாட்களில் கவனமாக இருக்க வேண்டும். தொற்றுநோய் பாதிப்பு வராலம். குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
இந்த வருடத்தில் விழுப்புரம் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வந்தால் கவலைகள் நீங்கி சந்தோஷம் நிலவும்.

உத்திரம்
உறுதியான எண்ணம் கொண்ட உத்திர நட்சத்திரக்காரர்களே!

வாக்கில் இனிமை இருந்தால் வாழ்வில் வசந்தம் உண்டாகும். பணியிடத்தில் திட்டமிட்டு சோம்பல் இல்லாமல் உழைத்தால் குறைவில்லாத நன்மை தேடி வரும். யாரோட தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். பிறரை குறை கூறாமல் செயல்பட்டால், சகஊழியர்கள் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும். இல்லத்தில் இனிமை நிலவும். வெளியூர், உறுதியான எண்ணம் கொண்ட நீங்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் சார்ந்தவர்கள் திடீர் புகழால் உச்சத்திற்கு போகலாம். பிறரோட புகழ்ச்சிக்கு மயங்கினால் உங்களுக்கு இகழ்ச்சி தான் ஏற்படும். அரசுத் துறை சார்ந்தவர்கள் யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
செய்யும் தொழிலில் சீரான லாபம் கிடைக்க முயற்சிகள் அவசியம். ஒப்பந்தங்களில் நேரடி கவனம் முக்கியம். எதிர்பார்த்த வங்கிக்கடன்கள் முயற்சிகளால் மட்டுமே கிட்டும். வங்கி தொடர்பான செயல்களில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். பெண்களுக்குப் பணவரவு சீராக இருக்கும். சுபகாரியத்தடைகள் விலகும். வீடு, மனை யோகம் சிலருக்கு உண்டு. அக்கம் பக்கத்து உறவுகளுடன் எச்சரிக்கையாக பழகுங்கள். மாணவர்களுக்கு சோதனைகள் விலகும் காலகட்டம். பெற்றோர், பெரியோர் ஆலோசனைகளை கேட்டால் சாதனைகள் விலகிடும்.
வாகனப் பாதையில் சஞ்சலமும், சபலமும் உடன்வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். கண்கள், காது, மூக்கு, தொண்டை உபாதைகள் ரத்த அழுத்த மாறுபாடு, ஒற்றைத் தலைவலி பிரச்னைகள் வரலாம். உடன் சிகிச்சை உத்தமம்.
இந்த வருடத்தில் இயன்ற போதெல்லாம் மதுரை மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் கும்பிட்டு வந்தால் வாழ்வில் வசந்தம் வீசும்.

ஹஸ்தம்
அறிவில் சிறந்த ஹஸ்த நட்சத்திரக்காரர்களே!

நிதானமாக செயல்பட்டால் நிம்மதியாக வாழலாம். அலுவலகத்தில் பணிவுடன் செயல்படுங்கள். அறிவில் சிறந்த உங்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் வந்தால் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். தவறான வழிகாட்டுதலால் வீண்பழி சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாரையும் வீணாக பழிவாங்க நினைக்க வேண்டாம். திட்டமிட்டு நேரம் தவறாமல் செயல்பட்டால் முன்னேற்றத்தைக் காணலாம். வீட்டில் விசேஷங்கள் அடுத்தடுத்து நடக்கும். அதேசமயம் சுபகாரியக் கடனும் சுலபமாக அடைந்துவிடும். வீட்டில் மூத்த உறுப்பினர்கள் ஆலோசனையைக் கேட்பது அவசியம். வாரிசுகள் உடல்நலத்தில் அக்கறை அவசியம். செய்யும் தொழிலிலில் லாபம் சீராக கவனமாக செயல்பட வேண்டும். யாரோட பேச்சையும் நம்பி தெரியாத தொழிலில் ஈடுபடாதீர்கள். யாருக்காகவும் சட்டப்புறம்பு பொருளை வர்த்தகத்தில் ஈடுபடுத்த சம்மதிக்க வேண்டாம்.
பெண்களுக்கு யோகம் கூடி வரும். அதேசமயம் வீண்பழி வராமல் இருக்க, எதிர்பால் நட்புகளிடம் எச்சரிக்கையாக பழகுங்கள். ஆடை, ஆபரணப் பொருள் சேரும். வாரிசுகளால் பெருமை ஏற்படும். மாணவர்கள் முயற்சிக்குரிய பலனைப் பெறுவர். சோம்பலை விரட்டிட்டு பாடங்களைப் படித்தால் சாதனைகள் தொடரும். அரசுத் துறையினர் அகலக்கால் வைக்க வேண்டாம். மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். பயணப்பாதையில் புதிய நட்புகளிடம் எச்சரிக்கை தேவை.
பெண்கள் உடல்நலத்தில் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்பட்டால் கவனமாக இருங்கள். ரத்த அழுத்த மாறுபாடு, ஒவ்வாமை, தோல்நிறமாற்றம் போன்ற உபாதைகள் ஏற்பட்டால் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த புத்தாண்டில் முயன்ற போதெல்லாம் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசனம் செய்யுங்கள். வாழ்வு சுபிட்சமாக இருக்கும்.

சித்திரை
சிந்தனையுடன் செயலாற்றும் சித்திரை நட்சத்திரக்காரர்களே!

சிந்தனையுடன் செயலாற்றும் உங்களுக்கு கஷ்டங்கள் விலகி சந்தோஷம் ஏற்படப் போகிறது. அலுவலகத்தில் மற்றவர்களால் அலைக்கழிக்கப்பட்ட நிலை மாறும். எதிரிகளால் தொந்தரவுகள் ஏற்படலாம் கவனமாக செயல்பட வேண்டும். பொறுப்புகள் அதிகரிக்கும் போது மறுக்காமல் ஏற்று திட்டமிட்டு செயல்பட்டால் பாராட்டுப் பெறலாம். இல்லத்தில் இனிமை உண்டாகும். பெற்றோர், பெரியோரிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். சிறு சிறு பிரச்சனைகள் வரும் போது விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். விசேஷங்கள் வீடு தேடி வரும். பணவரவு அதிகரிக்கும் போது வீணாக செலவு செய்ய வேண்டாம்.
செய்யும் தொழில் வளர்ச்சி பெற சோம்பலுக்கு இடம்தராமல் உழைப்பது அவசியம். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். அரசுத்துறையினர் எதிர்பார்த்த உயர்வுகள் தேடிவரும். உங்கள் பொறுப்புகளை அடுத்தவரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு மகத்தான நன்மைகள் கிட்டும். அன்றைய பாடங்களை அன்றே படிப்பது கூடுதல் நன்மை தரும். பெண்களுக்கு நன்மைகள் வீடுதேடி வரும். பலகாலம் தடைப்பட்ட சுபகாரியங்கள் சுலபமாகக் கைகூடும். எதிர்பால் நட்புகளிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள். உடல்நலத்தில் அடிவயிறு முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளில் சிறு பிரச்சனை ஏற்பட்டால் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். சுகாதாரமற்ற உணவை தவிர்த்திடுங்கள். பயணப்பாதையில் எச்சரிக்கையாக இருங்கள்.
இந்த வருடத்தில் உங்களால் இயன்ற பொழுதெல்லாம் திருவாரூர் திருக்கொள்ளிக்காடு சென்று பொங்கு சனிபகவானை வழிபடுங்கள். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

சுவாதி
சுலபமான மனநிலை கொண்ட சுவாதி நட்சத்திரக்காரர்களே!

எச்சரிக்கையாக செயல்பட்டால் வாழ்வில் ஏற்றம் பெறலாம். பணியிடத்தில் பரபரப்பும், பதட்டமும் வேண்டாம். நேரம் தவறாமையும் திட்டமிடலும் இருந்தால் நிச்சயம் நன்மை ஏற்படும். அடுத்தவர்கள் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். அலுவலக ரகசியங்கள் உங்களுக்குள்ளே இருக்கட்டும். எதிர்பாராத இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பமான சூழ்நிலை விலகும். நிம்மதி நிலைக்க வீண் விவாதத்தை விடுங்கள். விட்டுப் போன உறவும், நட்பும் திரும்பி வரும்போது சுலபமான மனநிலையுடன் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். சுபகாரியத் தடைகள் படிப்படியாக விலகும். வாரிசுகளால் பெருமையும், புகழும் சேரும். நீங்கள் அன்பு, பாசத்துடன் இருப்பது அவசியம்.
செய்யும் தொழில் லாபம் சீராக, நேர்மையுடன் செயல்படுங்கள். மூன்றாம் நபர் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். கூட்டுத் தொழிலில் புதிய மாற்றம் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். பரம்பரைத் தொழில் செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருங்கள். அரசியல் துறையினர் அடக்கமான செயல்களால் ஆதரவும், ஆதாயமும் அதிகரிக்கும். அரசுத் துறையினர் எந்த ஆவணத்தையும் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட வேண்டாம். பெண்கள் அக்கம் பக்கத்து நட்புகளிடம் அளவோடு பழகுங்கள். வீண் வாக்குவாதம், சண்டை வேண்டாம். சுபகாரியங்கள் சுலபமாக இருக்கும். பெரியவர்கள் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள்.
மாணவர்கள் திறமைக்கு உரிய மதிப்பெண்கள் கிடைக்கும். தினமும் அதிகாலை எழுந்து இஷ்ட தெய்வத்தின் முன்னால் அகல் தீபம் ஏற்றி விட்டு படிக்க ஆரம்பியுங்கள். வாழ்வு வளமாகும். வாகனப்பாதையில் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். சளித்தொல்லை, மூட்டு உபாதை, நரம்புப் பிரச்சனைகளில் அலட்சியம் கூடவே கூடாது.
இந்த வருடத்தில் இயன்ற பொழுது கடலூர் சிங்கர்குடி நரசிம்மரை தரிசனம் செய்தால் வாழ்வில் நன்மையே நடக்கும்.

விசாகம்
விசாலமான பார்வை கொண்ட விசாக நட்சத்திரக்காரர்களே!

அமைதியாக செயல்பட்டு ஆனந்தத்தை அடையும் காலம் இது. அலுவலகத்தில் சோம்பல் இன்றி நேரம் தவறாமல் செயல்பட்டால் நிச்சயம் நன்மையே ஏற்படும். யாரோட தனிப்பட்ட விஷயத்தையும் பெரிதுப்படுத்தி பேச வேண்டாம். எதிர்பாராத இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லத்தில் இனிமை நிலவும். விசாலமான பார்வை கொண்ட நீங்கள் அனைவரிடமும் விட்டுக்கொடுத்து போக வேண்டும். பெரியவர்கள் ஆலோசனை கேட்டு செயல்பட்டால் சுபகாரியத் தடைகள் விலகும். நீங்க சோர்ந்து நிற்கும் போது சுற்றமும் நட்பும் உதவிக்கரம் நீட்டும்.
செய்யும் தொழிலில் சேதாரம் தவிர்க்க முயற்சிகள் முக்கியம். அயல்நாட்டு ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படும் போது அலட்சியம் வேண்டாம். கூட்டுத் தொழிலில் புதிய மாற்றங்கள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். கடல் கடந்த வாணிபத்தில் கவனம் தேவை. அரசுத்துறையினர் தன் பணியை மட்டும் சரியாக செய்வது நலம். அலுவலக ரகசியங்கள் உங்களுக்குள்ளே இருக்கட்டும். அரசியல் சார்ந்தவர்கள், தற்புகழ்ச்சியை தவிர்த்தால் நிம்மதியாக வாழலாம். மாணவர்கள் சோம்பலை விரட்டி படித்தால் திறமைக்கு பலன் கிடைக்கும். அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுங்கள்.
பெண்கள் குடும்பத்துப் பெரியவர்கள் ஆலோசனைப்படி நடந்தால் சுபகாரிய தடைகள் விலகும். வாழ்க்கைத் துணை ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இரவுப் பயணத்தில், உடன் பயணம் செய்பவரிடம் எச்சரிக்கை அவசியம். உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. இயன்றால் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இந்த புத்தாண்டில் இஷ்டப்பட்ட மகான் தலத்துக்கு சென்று வணங்கி வந்தால் வாழ்வு மணக்கும்.

அனுஷம்
அன்புக்கு பாத்திரமான அனுஷ நட்சத்திரக்காரர்களே!

தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய வருடம் இது. பணியிடத்தில் பதவி, பெருமை கூடும். அதேசமயம் எதிலும் அவசரமும் அலட்சியமும் வேண்டாம். மேலதிகாரிகள் ஆதரவும், சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் சந்தோஷம் தரும். வீட்டில் விசேஷங்கள் படிப்படியாக வர ஆரம்பிக்கும். விட்டுப் பிரிந்த உறவும், நட்பும் வந்து சேரும் போது அவர்களது அன்புக்குப் பாத்திரமாவீர்கள். பெரியோரை மதிக்கக் கற்றுக்கொண்டால் மணப்பேறும், மகப்பேறும் மனம்போல் கைகூடும். ரத்த சம்பந்த உறவுகளின் ஆதரவும், ஆதாயமும் கிட்டும்.
செய்யும் தொழில் எதுவானாலும் நேர்மையும் நேரடி கவனமும் இருந்தால் லாபம் சீராகும். அயல்நாட்டு வாணிபத்தில் இருந்த தடைகள் விலகும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் உயரும். உங்களிடம் பணிபுரிவோர் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புகள் அதிகரிக்கலாம். பழைய உறுப்பினர்கள் யாரையும் அலட்சியப்படுத்தாமல் இருப்பது அவசியம். அரசுத் துறையினருக்கு முன்னேற்றத்துக்கான வாய்ப்பு வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் வீணாக தலையிட்டு உங்க பெருமைகளை நீங்களே குறைத்துக்கொள்ள வேண்டாம்.
மாணவர்களுக்கு பாராட்டும், பெருமையும் கிட்டக்கூடிய காலகட்டம் இது. தீய சகவாசங்களை தவிர்த்து விடுங்கள். பெண்கள் பொருளாதார உயர்வு பெறலாம். வீடு, வாகன வசதிகள் அதிகரிக்கும். மணப்பேறும், மகப்பேறும் மனம்போல கைகூடும். பயணத்தில் கவனச் சிதறல் வேண்டாம். ஒரே வாகனத்தில் குடும்பத்துடன் பயணிப்பதை இயன்றவரை தவிர்த்திடுங்கள். உடல்நலத்தில் கண்கள், எலும்புத் தேய்மானம், பற்கள், ரத்த அழுத்த மாறுபாடு உபாதைகளை உடனே கவனியுங்கள். அடி வயிறுமுதல் பாதம் வரை நல்லெண்ணெய் விட்டு தினமும் குளியுங்கள்.
இந்த வருடத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் விழுப்புரம் பஞ்சவடி திருத்தலம் சென்று பஞ்சமுக அனுமனை வழிபடுங்கள். உங்கள் மனம் குளிரும் படி நன்மைகள் நடக்கும்.

கேட்டை
கேட்டதை கொடுக்கும் கேட்டை நட்சத்திரக்காரர்களே!

கவனமாக செயல்பட்டால் கஷ்டங்கள் விலகும். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் என்கிற நினைப்பும், ஆணவமும் கூடாது. யாரோட தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். உங்கள் விஷயத்தில் யாரும் தலையிட அனுமதிக்காதீர்கள். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்பட்டால் உயர்வுகள் சீராக இருக்கும். இல்லத்தில் சந்தோஷம் நிலவும். சுபகாரியத்தடைகள் விலகும். கேட்டதை கொடுக்கும் உங்களுக்கு சுற்றமும், நட்பும் தேடிவந்து உதவும். மனம்போல வரும் புது உறவுகளால் மகிழ்ச்சி நிறையும்.
செய்யும் தொழிலில் லாபம் சீராகும். முதலீடுகள் முடங்காமல் இருக்க அடுத்தவர் தலையீட்டை தவிர்த்திடுங்கள். அயல்நாட்டு வர்த்தகத்தில் நேரடி கவனம் அவசியம். கூட்டுத் தொழிலில் புதிய மாற்றம் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். கனரகத் தொழில் செய்யும் போது கூடுதல் கவனம் தேவை. அரசுத்துறையினர் நேர்மையான செயல்களால் நிம்மதியாக இருக்கலாம். எந்த சமயத்திலும் எதையும் முழுமையாகப் படித்துப் பார்க்காமல் எதிலும் கையெழுத்திட வேண்டாம். அரசியல் சர்ந்தவர்கள் அடக்கமாக செயல்பட வேண்டும். அனுபவம் உள்ளவர்களை அவமதிக்கக் கூடாது. மாணவர்கள் திறமைக்கு உரிய மதிப்பெண்களைப் பெறலாம். தினமும் அதிகாலை எழுந்து இஷ்டதெய்வத்தின் முன்னால் ஒரு அகல் தீபம் ஏற்றி வழிபட்டுவிட்டு படிக்க ஆரம்பியுங்கள்.
பெண்கள் உறவுகள், நட்புகளிடம் அளவோடு பழகுவது நல்லது. சுபகாரியத் தடைகள் விலகும்போது சிலரது சூழ்ச்சியால் தடைபடலாம். எதையும் பெரியவங்க ஆசி, அனுமதியுடன் செய்வது நல்லது. வாகனப் பாதையில் வேகம் கூடினால், வாழ்க்கைப் பாதையோட தூரம் குறையும். ரத்த அழுத்த மாறுபாடு, சர்க்கரை, ஒற்றைத் தலைவலி, சளி, சுவாச உபாதைகளில் அலட்சியம் வேண்டாம்.
இந்த வருடத்தில் ஒரு முறையாவது கேரளா குருவாயூர் சென்று துலாபாரம் செலுத்தி வழிபட்டால் வாழ்க்கை சீரும், சிறப்புமாக அமையும்.

மூலம்
மூளையாக செயல்படும் மூல நட்சத்திரக்காரர்களே!

நிதானமாக செயல்பட்டால் நிம்மதியாக வாழலாம். அலுவலகத்தில் மூளையாக செயல்படுவதால் எதிர்பார்த்த உயர்வுகள் கைகூடும். எதிலும் முழுமையான திட்டமிடலும் சோம்பலில்லாத முயற்சியும் அவசியம். உங்கள் குறைகளை சரிசெய்து கொண்டு உழைத்தால் நிறைவான நன்மை தேடி வரும். அலுவலக ரகசியம் காக்கப்படவேண்டும். குடும்பத்தில் குதூகலம் குடிபுகும். குடும்பத்தில் அடுத்தவர் தலையீட்டை தவிர்த்திடுங்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும் போது சந்தேகமும், சஞ்சலமும் தவிர்க்க வேண்டும். அநாவசியக் கடன்கள் வாங்குவதைக் குறைத்திடுங்கள். அவசியமென்றால் மட்டும் வாங்கலாம். அரசியல் சார்ந்தவர்கள் பொறுப்பு, பதவி பெறலாம். அதேசமயம் வஞ்சப் புகழ்ச்சிக்கு மயங்கினால் இகழ்ச்சி தான் கிடைக்கும். அரசுத் துறையினர் யாரிடமும் பேசும் போதும் கவனமாக பேசுங்கள். உங்கள் எதிரியே உங்கள் நாக்குதான்.
செய்யும் தொழில் சீராக முழுமையான முயற்சிகள் அவசியம். எதிர்பார்த்த அரசுவழி கடன்கள், அனுமதிகள் நிச்சயம் கிட்டும். அதேசமயம் குறுகிய காலத்து லாபத்தை எதிர்பார்த்து, குறுக்கு வழி ஆலோசனை எதையும் செய்ய வேண்டாம். பெண்களுக்கு யோகமான வருடம். சுபகாரியத்தடைகள் விலகும். பொருளாதாரம் சீராக இருக்கும். அக்கம் பக்கத்து உறவுகள், நட்புகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். மாணவர்களுக்கு சோதனைகள் விலகும் காலகட்டம். சோம்பலுக்கு இடம் தராமல் படித்தால் சாதனைகள் செய்யலாம். பயணத்தில் வேகத்தை குறையுங்கள். உடல்நலத்தில் கண்கள், நரம்பு உபாதைகளை உடனே கவனியுங்கள். பரம்பரை நோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனடி சிகிச்சை அவசியம்.
இந்த வருடத்தில் முயன்ற போதெல்லாம் தஞ்சாவூர் கதிராமங்கலம் வனதுர்கையை வணங்கி எலுமிச்சை பழங்களால் அர்ச்சனை செய்து வழிபட சோகங்கள் விலகி சந்தோஷம் பிறக்கும்.

பூராடம்
பூக்களைப் போன்ற பொலிவான பூராட நட்சத்திரக்காரர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் தடைகள் நீங்கும். அலுவலகத்தில் அலட்சியமும், அவசரமும் கூடாது. திட்டமிட்டு செயல்பட்டால் எதிர்பார்த்த உயர்வுகள் நிச்சயம் கிடைக்கும். உங்களது திறமைகள் வெளிப்பட்டு பாராட்டும், மதிப்பும் கூடும். இல்லத்தில் இனிமை நிலவும். வாழ்க்கைத் துணையால் வசந்தம் பிறக்கும். எதிர்பார்த்த சுபகாரியங்கள் சுமுகமாக கைகூடும். பெற்றோர் பெரியோர் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்தால் உங்க வாழ்க்கையில் பெரும் அளவு நன்மைகள் வர ஆரம்பிக்கும். பூக்களைப் போன்ற பொலிவான பெண்களுக்கு யோகமான காலகட்டம். ஆடை, ஆபரணப் பொருள்கள் சேரும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிட்டும். பழைய கடன்கள் தீரும்.
மாணவர்கள் திறமைக்கும், முயற்சிக்கும் உரிய பலன் கிட்டும். சோம்பலை விட்டு சுறுசுறுப்புடன் படியுங்கள். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். அடுத்தவரை நம்பி தெரியாத தொழிலில் ஈடுபட வேண்டாம். முறையான திட்டமிடல் இருந்தால் முதலீடு பலமடங்கு லாபம் தரும். அயல்நாட்டு வாணிபத்தில் நேரடி கவனம் அவசியம். அரசியல் சார்ந்தவர்கள், பெரிய மனிதர்களால் ஆதாயம் கிடைக்கும். அரசுத்துறையினருக்கு அமோக நன்மைகள் ஏற்படும். பொறுப்புகள் எதையும் உதறிடாமல் தக்கவைத்துக்கொள்வது அவசியம்.
இரவுநேரப் பயணத்துக்கு முன் போதுமான ஓய்வு அவசியம். வாகனத்தில் சிறு பழுதானாலும் உடனே சரிசெய்து விடுங்கள். உடல்நலத்தில் கழிவுப்பாதை உறுப்பு, தொண்டை, கல்லீரல் உபாதைகள் தெரிந்தால் உடன் சிகிச்சை அவசியம். இந்த வருடத்தில் ஒருமுறையாவது ஆந்திரா திருப்பதிக்குப் போய் கோவிந்தராஜப் பெருமாளையும், அலர்மேல் மங்கைத் தாயாரையும் வணங்கினால் சந்தோஷம், உற்சாகம் நிலைக்கும்.
உத்திராடம்
உயர்வான எண்ணம் கொண்ட உத்திராட நட்சத்திரக்காரர்களே!
அன்பான வார்த்தைகளால் நல்லனவற்றைப் பெறக்கூடிய வருடம் இது. என்பேச்சைத் தான் எல்லாரும் கேட்கணும், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற எண்ணம் கூடாது. பணியிடத்தில் திறமைகள் வெளிப்படும் நேரம். எதிர்பார்த்த இடமாற்றம், உயர்வுகள் கைகூடும். திட்டமிடலும் அடக்கமான செயல்பாடும் அவசியம். வீட்டில் விசேஷங்கள் அணிவகுத்து வரும். உயர்வான எண்ணம் கொண்ட நீங்கள் வீண்கோபத்தை தவிர்த்தால் அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். வாழ்க்கைத் துணையிடம் வாக்குவாதம் வேண்டாம். குடும்பப் பிரச்சனையில் உறவு, நட்பு என யாரின் தலையீட்டையும் அனுமதிக்க வேண்டாம்.
செய்யும் தொழிலில் செழிப்பு உருவாகும். அயல்நாட்டு வர்த்தகத்தில் முழுமையான முயற்சிகளால் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த அரசு அனுமதி, வங்கிக் கடன்கள் சுலபமாக கைகூடும். கூட்டுத்தொழிலில் யாரிடமும் வீண்தகராறு வேண்டாம். மாணவர்கள் அவரவர் திறமைக்குரிய பாராட்டும், உயர்வுகளும் பெறலாம். பெற்றோர் பெரியோர் பேச்சுக்கு மதிப்புத் தர்றது பெருமைக்கு வழிவகுக்கும். பெண்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டு இது. இரவல் நகை வாங்கவோ, தரவோ வேண்டாம். ஆடை, ஆபரணப் பொருள் சேரும். பூர்வீக சொத்து லாபம் தரும்.
அரசுத்துறையினர் அமோகமான வளர்ச்சி காணலாம். அரசியல் சார்ந்தவர்கள் பெயர், புகழ் பெறலாம். மேலிடத்துக்கு எதிரான விளையாட்டுப் பேச்சுகூட விபரீதமாகிவிடும். கவனமாக பேசுங்கள். வாகனப் பயணத்தின் போது போதைக்கு இடம்தர வேண்டாம். சாலைவிதிகளை மீறாதீர்கள். உடல்நலத்தில் வயிறு, கண், எலும்பு உபாதைகளில் அலட்சியம் வேண்டாம். பெண்கள் மாதாந்திர பிரச்சனை நாட்களில் கூடுதல் கவனமாக இருங்கள்.
இந்த வருடத்தில் உங்களால் முடியும் போதெல்லாம் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசியுங்கள். வாழ்க்கை பசுமையாகும்.

திருவோணம்
திறமையாக செயல்படும் திருவோண நட்சத்திரக்காரர்களே!

அமைதியாக செயல்பட்டால் ஆனந்தமாக வாழலாம். திறமையாக செயல்பட்டால் அலுவலகச் சுமைகள் படிப்படியாகக் குறையும். பிறருடைய குறைகளைப் பலர் முன் சுட்டிக்காட்டாதீர்கள். தனியே அழைத்துக் கூறினால் அவர்கள் ஆதரவும் உங்களுக்கே கிடைக்கும். யாருடைய வற்புறுத்தலாலும் அலுவலக ரகசியங்களை கூறிவிடாதீர்கள். மேலதிகாரிகள் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுங்கள். வாரிசுகளிடம் கண்டிப்புடன் இல்லாமல் கனிவாக நடந்து கொள்ளுங்கள். வீடு, மனை வாங்கும் போது வில்லங்கம் எதுவும் இல்லாமல் பார்த்து வாங்குங்கள். அரசியல் சார்ந்தவர்கள் திடீர் புகழால் உச்சத்திற்கு போகலாம். அரசுத்துறையினர் மனம்போல உயர்வுகள் பெறலாம். அதேசமயம் வாக்கில் நிதானம் தேவை.
செய்யும் தொழில் சீராக இருக்கும். முதலீடுகள் எதிலும் முழுமையான கவனம் முக்கியம். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் நிச்சயம் கிட்டும். அரசு வழி அனுமதி இல்லாமல் தொழிலில் மாற்றம் எதையும் செய்ய வேண்டாம். கையெழுத்திட்ட காசோலையை யாருக்கும் தரவேண்டாம். பெண்களுக்கு சுபகாரியத்தடைகள் விலகும். பொருளாதாரம் சீராகும். ஆடை, ஆபரணப் பொருள் சேரும். எதிர்பால் நட்புகளுடன் கவனமாக பழக வேண்டும். மாணவர்கள் சோம்பலை விடுத்து படித்தால் சோதனைகள் விலகும். வீண் கேளிக்கைகளில் மனம் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பயணப்பாதையில் உடன்வரும் நட்பிடம் ரகசியம் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அஜீரணம், கழிப்பாதை உறுப்பு உபாதை, முதுகுத்தண்டுவடப் பாதிப்புகள், நரம்புத் தளர்ச்சி, மனஅழுத்தப் பிரச்சனைகள் வரலாம். உடனடி சிகிச்சை அவசியம்.
இந்த வருடத்தில் இயன்ற பொழுது விழுப்புரம் பரிக்கல் திருத்தலத்துக்குச் சென்று லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்.

அவிட்டம்
அளவில்லாத ஆற்றல்பெற்ற அவிட்ட நட்சத்திரக்காரர்களே!

வாழ்வில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய காலம் இது. அளவில்லாத ஆற்றலால் பணியிடத்தில் நீங்க பட்ட கஷ்டங்கள் விலகி நன்மைகள் ஒளிரும். இடமாற்றம், பதவி உயர்வுகள் மனம்போல் கைகூடும். மேலதிகாரிகள் ஆதரவும், சகஊழியர்கள் ஒத்துழைப்பும் சந்தோஷம் தரும். உங்கள் திறமைகள் வெளிப்பட்டு முன்னேற்றம் உறுதியாகும். வீட்டில் விசேஷங்கள் படிப்படியாக அணிவகுத்து வர ஆரம்பிக்கும். விட்டுப் பிரிந்த உறவும், நட்பும் வந்து சேரும். வாரிசுகளுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். சுபகாரியங்கள் கைகூடும். பெற்றோர், பெரியோர் ஆதரவும், ஆசியும் மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.
தொழிலில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தக தடைகள் முழுமையான முயற்சிகளால் விலகும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் ஆதாயம் உயரும். கூட்டுத்தொழிலில் உங்களுக்கான பங்கு அதிகரிக்கும். அரசுத் துறையினருக்கு ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புகள் வரலாம். வீண் புகழ்ச்சிக்கு மயங்க வேண்டாம். அரசியல் சார்ந்தவர்களுக்கு மேலிடத்து ஆதரவு வரும் போது அதை அலட்சியப்படுத்தாதீர்கள். மாணவர்களுக்கு திறமைக்குரிய பாராட்டும், பெருமையும் கிட்டும். தீயசகவாசம் வேண்டாம். பெண்கள் பெருமை, புகழ் பெறக்கூடிய காலகட்டம் இது. வாழ்க்கைத் துணை ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் வேண்டும். வாகனப்பயணத்தில் வேகத்தை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் அலர்ஜி, ரத்தஅழுத்த மாறுபாடு, சர்க்கரை, பாதங்களில் வரும் உபாதைகளை உடனே கவனியுங்கள்.
இந்த வருடத்தில் உங்களால் முடியும் போதெல்லாம் சிவகங்கை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட்டு வந்தால் நன்மையே நடக்கும்.

சதயம்
சகலமும் அறிந்த சதய நட்சத்திரக்காரர்களே!

தீமைகள் விலகி நன்மைகள் நடைபெறப் போகும் காலம் இது. அதேசமயம் எந்த செயலிலும் நேரம் தவறாமையும், முழு கவனமும் முக்கியம். உயரதிகாரிகள் ஆதரவும், உடன் பணிபுரிவோர் பாராட்டும் கிட்டும். மற்றவர் செய்த தவறுக்கு நீங்கள் தலைகுனிந்த நிலை மாறும். எதிர்பாராத பதவி உயர்வு, இடமாற்றம் வரும். தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லத்தில் இனிமையான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணை, வாரிசுகளால் பெருமை சேரும். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்ற சந்தர்ப்பம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். சுபகாரியங்கள் கைகூடும். கடந்தகால கசப்புகள் மறையும். புதுவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி மலரும். அரசியல் சார்ந்தவர்களுக்கு மேலிடத்து ஆதரவும், பெரிய மனிதர்களால் ஆதாயமும் கிட்டும். சகலமும் அறிந்த நீங்கள் பிறரோட வார்த்தைகளை நம்பி ஏற்கனவே உள்ள நட்புகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். யாருக்கும் ஜாமீன் தரவேண்டாம்.
அரசுத்துறையினர் எதிர்பார்த்த உயர்வுகள் தேடிவரும். இந்த சமயத்தில் யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். செய்யும் தொழில் சீரான வளர்ச்சி ஏற்படும். சிலருக்கு கடல் கடந்து செல்லும் வாய்ப்பு வரும். அயல்நாட்டு வர்த்தகத்தில் ஒப்பந்தம் எதுவும் முழுமையாக படித்துப் பார்த்தபின் கையெழுத்திட வேண்டும். பெண்களுக்கு ஆனந்தமான ஆண்டு இது. திடீர் யோகத்தால் பணவரவு அதிகரிக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் ஏற்பட்டிருந்த பழிகள் நீங்கும். மனம்போல் மகப்பேறும், மணப்பேறும் கைகூடும். நெருப்பு, மின்சார உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்கள். மாணவர்கள் பாராட்டும் பெருமையும் பெறும் வருடம். பெற்றோர் பேச்சைக் கேட்டு நடப்பதுதான் முன்னேற்றத்தை முழுமையாக்கும்.
இரவுநேரப் பயணத்தை தவிர்த்திடுங்கள். உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தில் சுவாசப் பிரச்சனை, ரத்தசோகை, பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு பிரச்சனைகள் வரலாம். உபாதைகளை உடனே கவனித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த வருடத்தில் தஞ்சாவூர் திருநாகேஸ்வரம் சென்று நாகநாதரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்க்கை ரம்மியமாகும்.

பூரட்டாதி
புன்னகையுடன் செயலாற்றும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் தடைகள் எல்லாம் நீங்கும். அலுவலகப் பணியில் பரபரப்பு, பதட்டமின்றி செயல்பட வேண்டும். உங்கள் வாக்கில் இனிமையும், புன்னகையுடன் செயலாற்றினால், உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பு கிட்டும். எதையும் முழு கவனத்துடன் செய்ய வேண்டும். யாரோ செய்த தவறுக்கு நீங்கள் தலைகுனிந்து நின்ற நிலைமாறும். எதிர்பாராத இடமாற்றம், பதவி உயர்வுடன் வரக்கூடும். அந்த சமயத்தில் ஆணவத்தை அனுமதிக்க வேண்டாம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை, வாரிசுகளால் பெருமை சேரும். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்ற சந்தர்ப்பம் வரும். பெற்றோர், பெரியோர் வார்த்தைகளுக்கு மதிப்பளித்தால், சுபகாரியங்கள் கைகூடும். சுபக்கடன்கள் ஏற்பட்டாலும் சுலபமாக அடைபடும்.
அரசுத்துறையினர் சோம்பல் இல்லாமல் செயல்பட்டால் நன்மைகளைப் பெறலாம். யாரையும் நம்பி அலுவலக ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அரசியல் சார்ந்தவர்கள் மேலிடத்து ஆதரவும், பெரிய மனிதர்களால் ஆதாயமும் பெறலாம். செய்யும் தொழிலில் முறையான திட்டமிடல் இருந்தால் லாபம் சீராகும். புதிய ஒப்பந்தங்கள் எதையும் படிக்காமல் கையெழுத்திட வேண்டாம். குடும்பத்தினர் ஆலோசனை இல்லாமல் எந்தவித முதலீடுகளையும் செய்ய வேண்டாம். பெண்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மனம்போல் மகப்பேறும், மணப்பேறும் கிட்டும். கூர்மையான உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்கள்.
மாணவர்கள் பாராட்டும், பெருமையும் பெறும் வருடம் இது. பெற்றோர், பெரியோர் வார்த்தைகளை மதித்து நடந்தால் மதிப்பும், மதிப்பெண்ணும் உயரும். அநாவசியப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் சிறுஉபாதையும் பெரும் பாதிப்பு தரலாம். இயன்றால் முழு உடல் பரிசோதனை செய்வது உத்தமம்.
இந்த வருடத்தில்  இஷ்டப்பட்ட மகான் திருத்தலத்துக்கு சென்று வணங்கி வந்தால் வாழ்வு சிறப்பாகும்.

உத்திரட்டாதி
உழைக்கவே பிறந்த உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களே!

தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கக்கூடிய ஆண்டு. பணியிடத்தில் பதவி உயர்வு, இடமாற்றம் எதிர்பார்த்தபடியே கைகூடும். அதே சமயம் உழைக்கவே பிறந்த நீங்கள் அலுவலகப் பணி காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்லவேண்டிய அவசியம் வரலாம். முடிந்தஅளவு ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களது தனித் திறமைகள் வெளிப்பட்டு உயரதிகாரிகளுடைய ஆதரவு கிட்டும். இல்லத்தில் இனிமை குடிபுகும். எதிர்பார்த்த சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடிவரும். வாழ்க்கைத்துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்க்கையில் வசந்தம் வீசும். சுபச் செலவுகள் அதிகரிக்கும் போது ஆடம்பரம் தவிர்த்தால் கடன் சுமை இருக்காது. தாய்வழி உறவுகள் இடையே ஒற்றுமை நிலைக்கும். வீண் கேளிக்கை, வேண்டாத பந்தயம் தவிர்ப்பது அவசியம். பலகாலம் தடைபட்டுக் கிடந்த வர்த்தக சக்கரம் இப்போது சீராக சுழல ஆரம்பிக்கும். சோம்பல் இல்லாமல் செயல்பட்டால் செழிப்பு மலரும். கூட்டுத் தொழிலில் லாபம் சீராகும். சிலர் புதுத்தொழில் தொடங்கவும் வாய்ப்பு உண்டு. எந்த சமயத்திலும் வீண் கோபமும், வேண்டாத சந்தேகமும் வராமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
அரசுத்துறையினர் எதிர்பார்த்த உயர்வுகள் வரும்போது, கர்வமும் கூடவே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். அரசியல் சார்ந்தவங்க, அடக்கமாக செயல்பட்டால் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் சோம்பலை உதறினால் அவரவர் திறமைக்கு உரிய வெற்றியைப் பெறலாம். தினமும் அதிகாலை எழுந்து படிப்பது அதிக நன்மை தரும். பெண்கள் பொறுமையாக இருந்தால் புகழும் செல்வமும் பெறலாம். வாரிசுகளால் புகழ் சேரும். இயன்றவரை இரவுநேரப் பயணத்தைத் தவிர்த்துடுங்கள். உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. சுவாச உறுப்புகள், கழிவுப்பாதை உறுப்பு பிரச்சனைகளில் அலட்சியம் கூடவே கூடாது.
இந்த வருடத்தில் உங்களால் இயன்ற பொழுது திருவாரூர் திருக்கொள்ளிக்காடு திருத்தலம் சென்று அக்னீஸ்வரர், மிருதுபாதநாயகியையும், பொங்கு சனிபகவானையும் வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.

ரேவதி
ரெத்தினமாக ஜொலிக்கும் ரேவதி நட்சத்திரக்காரர்களே!

பொறுமையாக செயல்பட்டால் பெருமைகளைப் பெறலாம். உங்கள் செயல்களால்தான் ஆனந்தம் நிலைக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். அதைப் புலம்பாமல் ஏற்றுக்கொண்டால் நன்மைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் குடிபுகும். அதேசமயம் வீண் சஞ்சலமும், வேண்டாத சந்தேகமும் வாழ்க்கைத் துணையை விட்டுப் பிரிய செய்துவிடும். வாரிசுகள் உடல்நலத்தில் அக்கறை அவசியம். சின்ன சின்ன பிரச்சனைகள் வரும்போது விட்டுக்கொடுத்து போய்விட்டால் விசேஷங்கள் வீடு தேடி வரும். வாக்கில் இனிமை இருந்தால் வாழ்க்கை இனிமையாகும். பணவரவு உயரும் போது சேமிப்பில் கவனம் தேவை.
முயற்சிகள் முழுமையாக இருந்தால் செய்யும் தொழில் செழிப்பு பெறும். பரம்பரை தொழிலில் சோம்பலுக்கு இடம் தராமல் உழைப்பது முக்கியம். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருங்கள். அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். யாருக்காகவும் ஜாமீன் தர வேண்டாம்.  அரசுத்துறையினர் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். செயல்களில் நேரடி கவனமும் நேர்மையும் இருந்தால் நன்மைகள் நிலைக்கும். மாணவர்களுக்கு மகத்தான நன்மைகள் கிட்டும். அன்றைய பாடங்களை அன்றன்றே படிக்கிறது அவசியம். பெண்களுக்கு நன்மைகள் வரும் காலம் இது. வாரிசுகளுடன் மிக கண்டிப்பாக நடந்து கொள்ளாதீர்கள். விலைஉயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். உடல்நலத்தில் அதிக கவனம் அவசியம். சளி, அலர்ஜி, வயிறு, கழிவுப்பாதை, உறுப்புகளில் உபாதைகள் ஏற்படலாம். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. பயணப்பாதையில் புதுநட்புகள் கிட்ட எச்சரிக்கையாக இருங்கள். இந்த வருடத்தில் நேரம் கிடைக்கும்போது நாகப்பட்டினம் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதரை வழிபட்டால் வாழ்க்கையில் ரத்தினமாக ஜொலிக்கலாம்.