Wednesday, November 6, 2013

கந்தசஷ்டி தோன்றிய கதை தெரியுமா?

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)

அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன்  சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க... அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார்.  முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில்  சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர்.  சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.

Sunday, November 3, 2013

கண்களில் நீரைப் பெருகச் செய்யும் ஹோமத்தால் நன்மை தானா?

ஹோமத்தில் எழும் புகை விசேஷமானது. வழக்கமாக எரிக்கும் புகையோடு இதை ஒப்பிடக் கூடாது. அரசங்குச்சி என்னும் சமித்தினால், மந்திரப் பூர்வமாக எழுவது ஹோமப்புகை. இப்புகையை சுவாசிப்பதால் நன்மை உண்டாகும். போபால் விஷவாயு சம்பவத்தின்போது, தினமும் ஹோமம் செய்யும் வீட்டில் இருந்த அனைவரும் உயிர் தப்பிய செய்தியை நீங்கள் கேள்விப்படவில்லையா?.

அரசமரத்தில் உள்ள தெய்வங்கள் யாவை?

அரசமரத்தில் எல்லா தேவதைகளும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். அஸ்வத்த நாராயணர் என இதை விஷ்ணுவின் அம்சமாகப் போற்றுவர். பகல் நேரத்தில் இதை வலம் வந்து வணங்கினால், நமது கிரகதோஷம் நீங்கி விடும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அரசமரத்தைச் சுற்றுவது கூடாது. அமாவாசையும், திங்கட்கிழமையும் சேர்ந்துவரும் நாளில் அரசமரத்தை வலம்வருவது இன்னும் சிறப்பு. மனோபலம் அதிகரிக்கும்.

திருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க!

ஜாதகத்தில் ராகுதோஷம் இருந்தால் திருமணத்தடை, கணவன்-மனைவி இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. இதனைப் போக்க துர்க்கைக்கு வளர்பிறை அஷ்டமி திதி, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பூஜை செய்வது நன்மை யளிக்கும். இந்த மூன்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் கூட போதும். இந்த விரதநாளில், பகலில் எதுவும் சாப்பிடாமல், ராகு காலத்தில் துர்க்கை பூஜை செய்ய வேண்டும். இரவில் எளிய  உணவு சாப்பிடலாம். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டில் திருவிளக்கின் முன், 2 வெள்ளி அல்லது அகல் விளக்கு ஏற்றி இந்த வழிபாட்டை செய்யலாம். 16 வாரம் தீபமிட, திருமணத் தடை நீங்கும். தம்பதி யரிடையே கருத்து வேறுபாடு நீங்கும்.

பிரதோஷ விரதம் இருப்பவரா? தெரிஞ்சுக்கிடுங்க இதை!

பிரதோஷ விரதம் இருப்பவர்கள், சிவன் கோயிலில் வலம் வரும் போது, சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கும் கோமுகம் வரை வந்து திரும்பி விடுவார்கள். இந்த கோமுகத்தை சோமசூத்ரம் என்பர். இதனால், இப்படி வலம் வருவதை சோமசூத்ர பிரதட்சணம் என்பர். சோம என்றால் வடக்கு. சிவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருட்கள், சந்நிதியின் வடக்கே இருக்கும் கோமுகத்தின் வழியாக வெளியேறும். சிவனுக்கு அபிஷேகம் செய்யும் அத்தனை பொருளும் சண்டிகேஸ்வரருக்கு உரியது என்பதால், கோமுகம் அருகில் சண்டிகேஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். அவர் ஆழ்ந்த சிவ தியானத்தில் இருப்பார் என்பதால், அவருக்கு இடையூறில்லாமல், பிரதோஷ வேளையில் அவருக்கு இடைஞ்சலின்றி, அவரை வணங்கி விட்டு திரும்பி விட வேண்டும்.

லக்னம் தெரியுமா கடவுளை தெரிஞ்சுக்குங்க!

உங்கள் ஜாதகத்தில் உள்ள கட்டத்தில் உங்களுக்குரிய லக்னம் (ல/) குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த கட்டத்திற்குள் ஒரு கிரகத்தின் பெயரும் இருக்கும் (சிலருக்கு இல்லாமல் இருக்கலாம்). அந்த  கிரகம் எதுவோ, அதற்கேற்ப நீங்கள் மந்திரங்களைச் சொல்லி, அந்தந்த கிரக தெய்வங்களை தினமும் வணங்கினால் தோஷங் களின் தாக்கம் வெகுவாகக் குறையும்.

கிரகம்        தெய்வம்                 மந்திரம்
சூரியன்    சூரிய நாராயணர்,    ஓம் சூர்ய நாராயணரே
    காயத்ரி        சரணம், காயத்ரி மந்திரம்
சந்திரன்,    மகாலட்சுமி,        ஓம் மகாலட்சுமியே நமஹ,
சுக்கிரன்    அம்பாள்        ஓம் சக்தி
செவ்வாய்    முருகன்        ஓம் சரவணபவ
புதன்    ராமர்        ராம ராம ராம, ஓம் நமோ
            பகவதே வாசுதேவாய
குரு    நாராயணர், சிவன்,    ஓம் நமோ நாராயணாய,
    தட்சிணாமூர்த்தி,        ஓம் நமசிவாய
சனி    வெங்கடாஜலபதி,     கோவிந்தா, ராமதாச ஆஞ்சநேய,
    அனுமன், நரசிம்மர்,    யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே,
    சாஸ்தா        ஓம் தர்மசாஸ்தாவே சரணம்
ராகு    காளி, துர்க்கை        ஓம் காளி
கேது    விநாயகர்        ஓம் சக்தி விநாயக நமஹ

Saturday, November 2, 2013

கேதார கௌரி விரத முறைகள்!

உமா தேவி, ஈஸ்வரனின் உடலில் இடப்பக்கத்தைப் பெற மேற்கொண்ட கேதார கௌரி விரதத்தை, தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கடைபிடிக்கின்றனர். அவரவர் குடும்ப வழக்கப்படி கேதார கௌரி விரதத்தை கடைபிடிக்கலாம். பொதுவாக இந்த கேதார கௌரி விரதத்துக்கு 21 என்பது மிகவும் உகந்ததாக உள்ளது. உமா தேவி, ஈஸ்வரனை நினைத்து 21 நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த பூஜையின் போது 21 எண்ணிக்கையில் அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, அதிரசம் என பூஜை பொருட்களை வைத்து, கலசம் நிறுத்தி பூஜிப்பார்கள். இந்த பூஜையை இருபத்தோரு நாட்கள் செய்ய வேண்டும். ஆனால், எல்லா பெண்களாலும் 21 நாட்கள் பூஜை செய்ய முடியாததால், இவ்வாறு 21 பொருட்களை வைத்து பூஜிக்கப்படுகிறது. எனவே அவரவர் வசதிக்கேற்ப 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட்களோ, 3 நாட்களோ அல்லது ஐப்பசி அமாவாசையான்றோ கேதார கௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபட வேண்டும்.

ஆண்களும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம். முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் “பாரணம்” செய்து விரதத்தை முடித்தல் வேண்டும். தீபாவளி அன்று நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து "ஓம் நமசிவாய சிவாய நம ஓம்" என்ற மந்திரம் ஜெபித்து, மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும். பூஜைக்காக முதலில் மஞ்சள், பிள்ளையாரை செய்வித்து சந்தனம், குங்குமம், புஷ்பம், அறுகு சார்த்தி விநாயகரை பதினாறு நாமம் சொல்லி அர்ச்சனை செய்து, பின்னர் தூப தீபம் காட்டி தாம்பூலம், நைவேத்தியம் செய்து தீபாராதனையான பிறகு, கேதாரீஸ்வரரை ஆவாகனஞ் செய்வர். பூஜையில், முனை முறியாத விரலி மஞ்சள், வெற்றிலை, கொட்டைப் பாக்கு, அரளிப்பூ, அரளி மொட்டு, இலை, வாழைப்பழம், அதிரசம், வகைக்கு நாளைக்கு ஒன்றாக 21 சமர்ப்பணம் செய்து, எலுமிச்சம் பழம் இரண்டு, நோன்புக் கயிறு சார்த்தி, தேங்காய் இரண்டு (ஒன்று குல தெய்வத்திற்கு) கருகுமணி, காதோலை, சீப்பு, கண்ணாடி சமர்ப்பித்து, பிரசாதமாக 21 அதிரசம், அப்பம் அல்லது சொய்யம், வடை முதலியன நைவேத்தியமாக சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து புஷ்ப அர்ச்சனை செய்து, தூப தீபம் காட்டி நைவேத்தியம தாம்பூலம் சமர்ப்பித்து கற்பூர தீபாரதனை காண்பித்து நோன்புக் கயிறை கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.

சிலர் வீடுகளிலேயே கலசம் நிறுத்தி இந்த பூஜையை மேற்கொள்வர். சிலர் பூஜைக்கான எல்லா வேலைகளையும் செய்துவிட்டு பூஜை பொருட்கள் மற்றும் நோம்பு கயிறை கோயிலுக்கு எடுத்துச் சென்று அங்கு பூஜித்து வீட்டுக்குக் கொண்டு வருவதும் வழக்கம். கணவன் - மனைவி ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்படும் இந்த விரதத்தை இயன்ற வரை விடாது அனுஷ்டிப்பது உத்தமம். குறிப்பாக தீபாவளி அன்றோ, அல்லது  தீபாவளிக்கு மறுநாளோ இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி தீபாவளி பண்டிகையும், 3ம் தேதி கேதார கௌரி விரதமும் கடைபிடிக்கப்பட உள்ளது. விரத நாள் அன்று ஈஸ்வரனை வழிபட்டு சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் இந்த கேதார கௌரி விரதத்தை மேற்கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் எந்த வயதினரும், ஆண்களும், பெண்களும் ஈஸ்வரனை நினைத்து இந்த விரதத்தை மேற்கொண்டு வேண்டிய அருளைப் பெறலாம் என்பது ஐதீகம்.