Saturday, November 2, 2013

கேதார கௌரி விரத முறைகள்!

உமா தேவி, ஈஸ்வரனின் உடலில் இடப்பக்கத்தைப் பெற மேற்கொண்ட கேதார கௌரி விரதத்தை, தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கடைபிடிக்கின்றனர். அவரவர் குடும்ப வழக்கப்படி கேதார கௌரி விரதத்தை கடைபிடிக்கலாம். பொதுவாக இந்த கேதார கௌரி விரதத்துக்கு 21 என்பது மிகவும் உகந்ததாக உள்ளது. உமா தேவி, ஈஸ்வரனை நினைத்து 21 நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த பூஜையின் போது 21 எண்ணிக்கையில் அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, அதிரசம் என பூஜை பொருட்களை வைத்து, கலசம் நிறுத்தி பூஜிப்பார்கள். இந்த பூஜையை இருபத்தோரு நாட்கள் செய்ய வேண்டும். ஆனால், எல்லா பெண்களாலும் 21 நாட்கள் பூஜை செய்ய முடியாததால், இவ்வாறு 21 பொருட்களை வைத்து பூஜிக்கப்படுகிறது. எனவே அவரவர் வசதிக்கேற்ப 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட்களோ, 3 நாட்களோ அல்லது ஐப்பசி அமாவாசையான்றோ கேதார கௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபட வேண்டும்.

ஆண்களும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம். முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் “பாரணம்” செய்து விரதத்தை முடித்தல் வேண்டும். தீபாவளி அன்று நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து "ஓம் நமசிவாய சிவாய நம ஓம்" என்ற மந்திரம் ஜெபித்து, மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும். பூஜைக்காக முதலில் மஞ்சள், பிள்ளையாரை செய்வித்து சந்தனம், குங்குமம், புஷ்பம், அறுகு சார்த்தி விநாயகரை பதினாறு நாமம் சொல்லி அர்ச்சனை செய்து, பின்னர் தூப தீபம் காட்டி தாம்பூலம், நைவேத்தியம் செய்து தீபாராதனையான பிறகு, கேதாரீஸ்வரரை ஆவாகனஞ் செய்வர். பூஜையில், முனை முறியாத விரலி மஞ்சள், வெற்றிலை, கொட்டைப் பாக்கு, அரளிப்பூ, அரளி மொட்டு, இலை, வாழைப்பழம், அதிரசம், வகைக்கு நாளைக்கு ஒன்றாக 21 சமர்ப்பணம் செய்து, எலுமிச்சம் பழம் இரண்டு, நோன்புக் கயிறு சார்த்தி, தேங்காய் இரண்டு (ஒன்று குல தெய்வத்திற்கு) கருகுமணி, காதோலை, சீப்பு, கண்ணாடி சமர்ப்பித்து, பிரசாதமாக 21 அதிரசம், அப்பம் அல்லது சொய்யம், வடை முதலியன நைவேத்தியமாக சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து புஷ்ப அர்ச்சனை செய்து, தூப தீபம் காட்டி நைவேத்தியம தாம்பூலம் சமர்ப்பித்து கற்பூர தீபாரதனை காண்பித்து நோன்புக் கயிறை கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.

சிலர் வீடுகளிலேயே கலசம் நிறுத்தி இந்த பூஜையை மேற்கொள்வர். சிலர் பூஜைக்கான எல்லா வேலைகளையும் செய்துவிட்டு பூஜை பொருட்கள் மற்றும் நோம்பு கயிறை கோயிலுக்கு எடுத்துச் சென்று அங்கு பூஜித்து வீட்டுக்குக் கொண்டு வருவதும் வழக்கம். கணவன் - மனைவி ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்படும் இந்த விரதத்தை இயன்ற வரை விடாது அனுஷ்டிப்பது உத்தமம். குறிப்பாக தீபாவளி அன்றோ, அல்லது  தீபாவளிக்கு மறுநாளோ இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி தீபாவளி பண்டிகையும், 3ம் தேதி கேதார கௌரி விரதமும் கடைபிடிக்கப்பட உள்ளது. விரத நாள் அன்று ஈஸ்வரனை வழிபட்டு சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் இந்த கேதார கௌரி விரதத்தை மேற்கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் எந்த வயதினரும், ஆண்களும், பெண்களும் ஈஸ்வரனை நினைத்து இந்த விரதத்தை மேற்கொண்டு வேண்டிய அருளைப் பெறலாம் என்பது ஐதீகம்.

Sunday, October 13, 2013

மது போதையா! காதல் போதையா! படியுங்க! நிம்மதி கிடைக்கும்!

என் கணவர் ஒரு குடிகாரர், சூதாடி, கெட்ட பெண்களுடன் சகவாசம், என் மகனும் குடிக்கிறான், தொழிலில், படிப்பில் கவனம் இல்லை, மனைவியை அடிக்கிறான். குழந்தைகள் மீது பாசமில்லை... இப்படி ஒரு புறம். சில வீடுகளில் பெண்கள் வழிதவறி காதல்... அது இதுவென மயக்கத்தில் அலைகிறார்கள். இப்படி இக்காலத்தில் பலரும் நிம்மதியின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு இதோ ஒரு நல்ல செய்தி. ஒரு கணவன் பிற பெண்களை விரும்புபவன், மனைவியும் அதே போல...அழகான ஆண்களை விரும்புவாள். தன் நடத்தைக்கு கணவன் தடையாக இருப்பான் எனக்கருதிய மனைவி அவனைக் கொன்று விட்டு தகாத செயல்களைத் தடையின்றி நடத்தினாள். ஒரு கட்டத்தில் அவளும் இறந்தாள். மறுபிறப்பில் கணவன் பருந்தாகவும், மனைவி கிளியாகவும் பிறந்தனர். ஒருமுறை கிளியைப் பார்த்தது பருந்து. அப்போது முற்பிறவி நினைவுக்கு வர, தன்னைக் கொன்ற கிளியைக் கடித்து குதறியது. கிளி, அங்கு தலைகீழாக கவிழ்ந்து கிடந்த ஒரு மண்டை ஓட்டில் இருந்த நீரில் போய் விழுந்து இறந்தது. அதே சமயம், ஒரு வேடன் பருந்தின் மீது அம்பு எய்ய, அதுவும் அதே மண்டை ஓட்டில் விழ, அதிலிருந்த தண்ணீர் அதன் மேல் தெறித்தது. அந்த ஜீவன்கள் எமதர்மனால் வைகுண்டம் அனுப்பப்பட்டனர். தாங்கள் தகாத செயல் செய்தும், தங்களை வைகுண்டம் அனுப்பக் காரணம் என்ன என்று எமனிடம் அந்த ஜீவன்கள் கேட்டன. குழந்தைகளே! நீங்கள் விழுந்தது சாதாரண மண்டை ஓடு அல்ல. வடர் என்ற ரிஷியினுடையது. அவர் கண்ணன் சொன்ன கீதை ஸ்லோகங்களைத் தவறாமல் படிப்பவர். அந்த ஸ்லோகங்களில் ஒன்றைச் சொன்னால் கூட, பாவச்செயல் செய்வோரும் திருந்தி விடுவார்கள். அது மட்டுமல்ல, கெட்ட வழக்கங்களும் அவர்களை அண்டாது, என்றார் எமதர்மன். அந்த ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது தான். தவறாமல் படியுங்கள். உங்கள் வீட்டிற்கும் விமோசனம் கிடைக்கும். உடம்பையே வெற்றி கொள்வோன் மனத்தாலும் துறவியாகி திடமுற எதையும் செய்யாது அமைகுவன் பிறரைச் செய்ய விட அவன் முயலான் ஒன்பான் வாசலை உடைய தேகப்  படலம் தன்னில் நல்ல சுகமுடன் வாழுவானே!

Saturday, October 12, 2013

திருமணத் தடை அகல...

தர்மபுரி காமாட்சி மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயிலிலுள்ள துர்க்கையை ராஜதுர்க்கை என்றும் அழைக்கிறார்கள். அவளுக்கு சாற்றிய மாலையை திருமணத்தடை உள்ளவர்களுக்கு அணிவிப்பார்கள். அவர்கள் அந்த மாலையுடன் மூன்று முறை கோயிலை வலம் வந்த பிறகு, வடகிழக்கு மூலையில் நாக கன்னியர் அருகே அம்மாலையை ஒன்பது துண்டுகளாக்கிப் போட்டுவிடுவார்கள். பிறகு ராஜதுர்க்கையை மீண்டும் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். இதனால் விரைவில் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்!

சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?


மற்ற தேவியர் வண்ண ஆடை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் உண்டு. சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே அடக்கம் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் சபாரி உடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைக் கண்டதும் அவையே கைகூப்புகிறது. மரியாதை செலுத்துகிறது. கற்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான அந்த தேவியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும், மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.

சரஸ்வதி அணிந்துள்ள புடவையின் நிறம் வெள்ளை. வானவில்லின் ஏழு வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது, தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்துஇருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது. வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும். இதனால் தான், சரஸ்வதிதேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள்.
லட்சுமி, பார்வதி தேவியர் பல்வேறு வண்ணங்களில் புடவை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெண்ணிற ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் ஏன் தெரியுமா?சரஸ்வதி ஞானத்தின் சொரூபம். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே பணிவும் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் படாடோபமாய் ஆடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைப் பார்த்ததும் இருப்பவர் அனைவரும் வரவேற்று மரியாதை செய்வர். கல்வி கற்றவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் என்பதை உணர்த்தவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள்.

Saturday, October 5, 2013

கொலுமேடைக்கு பூஜை செய்வது எப்படி?



நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.

எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?

கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர். ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும்
என்பதைக் குறிக்கிறது.

இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று, சிலந்தி வலை, களிமண்ணில் செய்த எறும்பு, வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பு போல் சுறுசுறுப்பு, கரையான் புற்றையும், சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.

நான்காம் படியில் நண்டு,வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.

ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு, பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.

ஆறாம் படியில்
மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.

ஏழாம் படியில்
மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது . வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.

எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள்,பெரியாழ்வார்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.

ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும். தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?

நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும் பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் இந்தப் பண்டிகை.. முழுக்க முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை. மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன், கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன் குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள். அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள் வீட்டுக்கு வருவதாக எண்ணி மகிழ்வார்கள்.