ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்திலே உருவானது. அதன் மனதில் பெருமாள் மறைந்து
உட்கார்ந்திருப்பதைக் கண்டது. உடனே ஓவென்று அழுதபடியே,பெருமாளே! ரங்கா! ஏன்
என்னை மீண்டும் பூமியில் பிறக்கச்செய்யப் போகிறாய்? இதுவரை எடுத்த
பிறவிகளில் நான் பட்டது போதாதா? என்றது.பட்டேன்.. பட்டேன் என்கிறாயே? அந்த
பாடுகளை எல்லாம் நானா தந்தேன்! நீயே இழுத்துக்கொண்டது தானே! போபோ! நீ
துவங்கியதை நீதான் முடித்து வைக்க வேண்டும்! என்று பெருமாள் பதில்
சொல்லவும், தாய்க்கு பிரசவவலி ஏற்பட குழந்தை பூமிக்கு வந்து விட்டது.
அதுவரை, அதன் கண்களுக்கு தெரிந்த பெருமாள் இப்போது தெரியவில்லை. க்வா க்வா
என்று அழ ஆரம்பித்து விட்டது. க்வா க்வா என்றால், எங்கே எங்கே என்று
அர்த்தம். இவ்வளவு நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தவனை எங்கே? என்று அழ
ஆரம்பித்து விட்டதாம் குழந்தை. க்வா க்வா என்பது தான் இப்போது குவா குவா
ஆகியிருக்கிறது. மீண்டும் க்வா க்வா போடாமல், பரமபதத்திலேயே தங்க
வேண்டுமானால், நம் கண்களில் நல்லது மட்டுமே படட்டும். சரி தானே!
Thursday, December 27, 2012
இறைவனை நேருக்குநேர் நின்று வணங்கலாமா?
இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்த
பார்வை நன்மை அளிக்காது. மற்றைய இரு கண்கள் சூரியசந்திர வடிவமானவை. இவை
நன்மை பயக்கக்கூடியவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும்.
இதைத் தான் கடாக்ஷம் என்பர். கட என்றால் கடைசி. அக்ஷம் என்றால் கண்.
அதாவது, கடைக்கண் பார்வை. இது கருணையே வடிவமானது. சகல ஐஸ்வர்யங்களையும் தர
வல்லது. அதற்காகத்தான் நேருக்குநேர் நின்று தரிசிக்காமல் பக்கமாக நின்று
வழிபட வேண்டும்.
கண்திருஷ்டி உண்மையா?
உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் உறுப்பு கண். அகத்தின் அழகு முகத்தில்
தெரியும் என்று சொல்லக் காரணம் கண்கள் தான். நேர்மையானவர்கள் மற்றவர்
கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவர். ஆனால், பொய் சொல்பவர்கள்
நேருக்கு நேர் பேசத் தயங்குவர். அன்பு, கருணை, பாசம், காதல், ஆசை,
வெறுப்பு, பொறாமை, கோபம் என்று அனைத்து உணர்ச்சிகளும் ஒருவரின் கண் வழியே
மற்றவருக்குப் பரவுகின்றன. இதில் மற்றவரைப் பெரிதும் பாதிப்பது பொறாமை.
அதையே கண்திருஷ்டி என்கிறார்கள்.
Monday, December 24, 2012
விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது என்பது ஏன்?
மாலை நேரம் வழிபாட்டுக்குரிய நேரம். விளக்கேற்றும் வேளையில் திருமகள்
இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். அந்த சமயத்தில் பெண்கள் கூந்தலை
விரித்தபடி நிற்பது நல்லதல்ல. எனவே விளக்கு வைப்பதற்கு முன்பாக மாலை 5.30
மணிக்குள் பெண்கள் தலைவாரி, பூ முடித்து, நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது
சிறப்பைத்தரும் என கூறுகின்றனர் சான்றோர்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் மொட்டை கோபுரத்தின் ரகசியம்!
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலின் ஒவ்வொரு கோபுரத்திற்கும் தனிச்சிறப்பு
உண்டு. இதில், 152 அடி உயரம் உள்ள வடக்கு கோபுரம் மொட்டை கோபுரம்
என்றழைக்கப்படுகிறது என்றால் ஆச்சரியம் தானே. இதன் பின்னணி இன்னும்
சுவராஸ்யம்... ஒன்பது நிலைகளை கொண்ட இக்கோபுரத்தை, 1564-72ல், கிருஷ்ண
வீரப்ப நாயக்கர் கட்டினார். ஆனால், என்ன காரணத்தினாலோ, மேற்பூச்சுஇன்றி,
முழுமை பெறாமல் நின்று விட்டது. பின், 1623ல், இக்கோபுரம் முழுமை பெற்றது.
நீண்ட நாட்கள் மேற்பூச்சின்றி இருந்ததால், மொட்டைக்கோபுரம்
என்றழைக்கப்பட்டது. இன்றும், இச்சொல் வழக்கில் உள்ளது. கோபுர வாசலில்
அமைந்துள்ள முனியாண்டி கோயிலும் மொட்டைக் கோபுரம் அடைமொழியுடன்
அழைக்கப்படுகிறது. வடக்கு கோபுரத்தின் அகலம் 66 அடி. 404 சுதைகளே உள்ளன.
மற்ற கோபுரங்களைவிட, சுதைகள் குறைவாக உள்ளதாலும் மொட்டைக்கோபுரம்
என்றுஅழைப்பதாக கூறுகின்றனர். 1960-63ல் நடந்த திருப்பணியின் போது,
கடைசியாக இக்கோபுரத்தில் தான் திருப்பணி முடிக்கப்பட்டது. இக்கோபுர வாசல்
வழியாக, இடது புறம் சென்றால், இசைத்தூண்கள் நம்மை வரவேற்கும் என்பதால்,
வேறு எந்த கோபுரத்திற்கும் இல்லாத பெருமை இக்கோபுரத்திற்கு உண்டு என்றால்
அது மிகையில்லை
மார்கழி வழிபாடும் அதன் சிறப்பும்!
மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி. சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள். பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். பக்தி மட்டுமின்றி பொதுநலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.
Subscribe to:
Posts (Atom)






