Monday, September 18, 2023

பிள்ளையாருக்கு ஏன் தோப்புக்கரணம் போடுகிறோம்?



பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம்! எதற்காக போடுகிறோம் என்ற காரணங்கள் நமக்கு தெரிவதில்லை? அதில் உள்ள காரணங்கள் மறைபொருளாக வைக்கப்பட்டுள்ள ரகசியங்கள் என்னவென்று பார்ப்போம்:

இடகலை என்னும் நாடி வலதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது. அதேபோல் பிங்கலை என்னும் நாடி இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது.

இந்த இரு நாடிகளும் மேலேறி வரும் பொழுது மூலாதாரத்தில் ஒரு பின்னல் போட்டும், இதயத்தில் ஒரு பின்னல் போட்டும், புருவமத்தியில் ஒரு பின்னல் போட்டும் இருக்கிறது. வலது கால் பெருவிரலில் இருந்து வரும் இடகலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி இடது பக்கமாகவும், இடது கால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு வரும் பிங்கலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி வலது பக்கமாகவும், புருவமத்தியில் மாறி மாறி நெற்றிப் பொட்டு வழியாக மூளைப் பகுதிக்குச் செல்கிறது.

சுழுமுனை என்னும் நாடியானது மூலாதாரத்திலிருந்து ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாக இருக்கும் நடு துவாரத்தில் உட்புறமாக சஞ்சாரம் செய்து மேல் நோக்கிச் சென்று இரு புருவமத்தியிலுள்ள ஆக்கினை பகுதியைப் பற்றி நிற்கும்.

நெற்றிப் பொட்டில் நாம் இரு கைகளையும் மடக்கி விரல்களால் குட்டிக் கொள்ளும் போது அந்த இடங்களில் உள்ள பின்னல் நரம்புகளில் அந்த அதிர்வு பரவி சரீரத்தில் பின்னி வரும் நரம்புகளில் ஒரு துடிதுடிப்பை உண்டாக்குகிறது. அந்த துடிதுடிப்பு மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியில் இந்த அசைவு பதிகிறது.

அதற்கு பிறகு இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடும் போது குண்டலினி சக்தியில் அசைவை ஏற்படுத்துகிறது. பல தடவை தொடர்ந்து தோப்புக் கரணம் போடும் பொழுது குண்டலினி சக்தியை தூண்டி மேலே எழ வைக்கிறது.



தோப்புக் கரணம் போடும் பொழுது குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து எழுந்து சுழுமுனை நாடி வழியாக புருவமத்தியில் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது. ஜப்பானில் ஜென் புத்த மதத்துறவிகள் இந்த தோப்புக் கரணத்தை குண்டலினி சக்தியை கிளப்புவதற்கு உபயோகப்படுத்துகிறார்கள்.

நம்முள் உறங்கிக் கிடக்கும் சக்தியை எழுப்ப தோப்புக்கரணம் போடுகிறோம். இந்த தோப்புக் கரணத்தை பிள்ளையாருக்கு மட்டும் ஏன் போட வேண்டும்? பிள்ளையார் சிலை முன் ஏன் போட வேண்டும் என்பதை பார்ப்போம்:



மனிதர்களுடைய உடலில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆதாரத்திற்கும் ஒரு தெய்வசக்தி உண்டு. ஒவ்வொரு ஆதாரத்திலும் உள்ள தெய்வ சக்தியின் அருள் நமக்குக் கிடைத்தால் அந்த ஆதாரத்தை விழிப்படையச் செய்து அதன் சக்தியை நாம் பெற முடியும்.

ஆதாரம் தெய்வ சக்திகள்

மூலாதாரம் விநாயகர்

சுவாதிட்டானம் பிரம்மா

மணிபூரகம் விஷ்ணு

அநாகதம் ருத்திரன்

விசுக்தி மகேஸ்வரன்

ஆக்கினை சதாசிவன்

இந்த ஆறு ஆதார தெய்வ சக்திகளின் அருளால் கிடைப்பது தான் சகஸ்ரார சித்தி ஆகும். மேற்கண்ட காரணங்களால் தான் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம்!

தோப்புக்கரணம் போடும் முறை தோப்புக்கரணத்தை முறையாகப் போடுவது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

முதலில் நம்முடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை பிரித்துவைத்து நிற்க வேண்டும்.

இடது கையால் வலது காது மடலையும், வலது கையால் இடது காது மடலையும் பிடிக்க வேண்டும்.

கட்டைவிரல் வெளியேயும், ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்க வேண்டும்.

வலது கை, இடது கையின் மேல் இருக்க வேண்டும்.

தலையை நேராக வைத்து, மூச்சுக் காற்றை உள்ளிழுக்க வேண்டும்.

நம்மால் எந்த அளவு சிரமம் இல்லாமல், உட்கார முடியுமோ அந்த அளவு உட்கார வேண்டும்.

பின்பு மூச்சுக் காற்றை வெளியிட்டவாறே, அப்படியே எழுந்து நிற்கவேண்டும்.

இதன் மூலம் நமது தண்டுவடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகும்.

No comments:

Post a Comment