Monday, September 18, 2023
ஆன்மிக ஒழுக்க நெறிமுறை பண்புகள் மட்டுமே இளைய தலைமுறையை பாதுகாக்கும்
செல்வத்தை மட்டுமே குறியாகத் தேடும் கலாசாரத்தை ஏற்று உலகமே வேகமாக மாறிவரும் நிலையில் வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள ஒழுக்க நெறிமுறை பண்புகள் இந்த நவீன காலத்துக்கு எப்படி பொருந்தும்? என்று என்னைக் கேட்டார் ஒரு இளம் நண்பர். தொடர்ந்து, ‘இது தற்போது இளைய தலைமுறையினர் எழுப்பும் கேள்வி’ என்றார்.
முக்கியமான கேள்வி. பதில் சொல்கிறேன், கவனமாகக் கேள், என்றேன். காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி பயனடைந்து வந்த வேத சாஸ்திரங்களுக்கு, இந்த பாரம்பரிய கலாசார வழிகாட்டிகளுக்கு, ‘இக்கால நடைமுறைக்கு ஒவ்வாத ஒழுக்க நெறிமுறைகள்’ என்று முத்திரை குத்தி, அவைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது பின்பற்றவோ நம் இளையத் தலைமுறையினர் தயங்குகிறார்கள். அனைத்து கலாசாரங்களும் சங்கமித்து ‘உலகமயமாகி’ வரும் இந்தக் காலத்தில் வேதமாவது, பண்டைய கலாசாரமாவது! என்று அவர்கள் எள்ளிநாகையாடுவது நம் கண்கூடாகக் காணும் ஒரு சோக நிகழ்வு.
உலகத்துக்கே ஆன்மிக வாழ்வியல் தத்துவத்தை பறைசாட்டிய இந்த மண்ணில், வேகத்தையும் சுயநலத்தையும் பொருளாதார உயர்வை மட்டுமே மையமாகக் கொண்டும், தனிமனித-சமுதாய தர்ம ஒழுக்கநெறிமுறைகளுக்குப் புறம்பாக இயங்கும் இந்த நவீன வாழ்வியல் மாய தத்துவத்தை, நம் இளைய தலைமுறையினர் ஏற்றுக்கொண்டது துரதிருஷ்டம். இந்த நிலைக்கு நாம் அனைவரும் ஒருவகையில் காரணம் என்று நினைக்கிறேன். உண்மையான ஆன்மிகக் கல்வியையும், வாழ்வியல் பண்புகளையும் அவைகளுக்குள்ள நெறிமுறை மேம்பாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லித்தரும் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர தவறிவிட்டோம். பெற்றோர்கள் என்ற வகையில் நாமும் தெரிந்து கொள்ளும் வாய்பை இழந்து விட்டோம். இப்போதாவது இந்தத் தவறை உணர்ந்து இந்த நிலைமையை சரி செய்ய முயல்வது நாம் அனைவரின் சமுதாயக் கடமையாகும்.
முதலில் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். வேதங்கள் சூத்திரங்களாலும், பாடல்களாலும், செய்யுள் நடைகளாலும் ஆனவை. காலங்களைக் கடந்தது. இந்த உலகைப் படைத்த பரம்பொருள் அருளியது. தனிமனித, சமுதாய வாழ்வியல் தத்துவக் களஞ்சியம் இவை. எப்போது அருளினார்? உயிரினங்கள் தோன்றியபோது!
அது எப்போது? விவரிக்கமுடியாத ஒரு காலத்தில்! மனிதன் யோசிக்கத்தொடங்கும் முன்!! பல ‘யுகங்களுக்கு’ முன்னால் என்று சொல்லலாம். அக்காலத்தில் வந்த ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்கள் வேதங்களுக்கு விளக்கம் அளிக்க எளிய நடையில் பாசுரங்களை (உபநிஷத்துக்கள்) எழுதினர். அவைகளில் ஒரு பகுதி குருகுல (குரு-சிஷ்ய பாரம்பரிய) வழியில் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இன்றும் நம்மிடையே வலம் வந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலானவை பாதுகாக்கப்பட முடியவில்லை. காலப்போக்கில் அழிந்துபோனது.
வேதங்களின் சாராம்சம் வேதாந்தம். இது என்ன? நாம் அனைவரும் தெய்வத்தால் படைக்கப்பட்டவர்கள். தெய்வீகமானவர்கள். ‘நம் வாழ்வின் பயனே இந்த தெய்வீகத்தை உணர்வதுதான்’. அதே போல மற்ற உயிர்களில் உள்ள அதே தெய்வீகத்தையும் உணர்வது. நம்மை உணர்ந்தால், உலகையும் அதன் பின்னணி உண்மையையும் உணரலாம். நம்மைப் படைத்த பரமனை உணரலாம். பிறவிப் பயனை அடையலாம். இந்த உன்னத நிலையை உணர்வதற்கான வழிமுறைகளைத்தான் வேதாந்தம் சொல்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment