Wednesday, October 31, 2012

சித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா?

தெய்வப்படங்களை வீட்டில் வைத்து வழிபடுகிறோம். காரணம் தெய்வத்திடம் வரம் பெற்று நலமாய் வாழவேண்டும் என்பது. மகான்களின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுகிறோம். காரணம் ஏதாவது சூழ்நிலையில் நாம் தவறு செய்ய முற்படும்போது அவர்களின் அருளுரைகள் நம்மைத் தடுத்து நிறுத்துவதற்காக. 18 சித்தர்களும் மனிதநேயமே உருவாக வாழ்ந்தவர்கள். கண்ணுக்குத் தெரியாமல் இன்னும் வாழ்வதாகக் கூறுகிறார்கள். தமக்கென எதுவுமே செய்து கொள்ளாமல் பிறருக்குத் தொண்டு செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள். அவர்களது கொள்கையைக் கடைபிடிக்க விரும்பினால் தாராளமாக சித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள். ஜோதிடம், வாஸ்து, பரிகாரம் என்று கூறி அவர்களைத் தாழ்த்தி விடாதீர்கள்.

Monday, October 29, 2012

திருமணத்தின் போது செய்யப்படும் சடங்கு முறைகளும் அவற்றின் சிறப்பும்! மாங்கல்ய தாரணம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இத்தகைய திருமணத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு அவற்றில் முக்கியமான சில...

காசி யாத்திரை: மணமகன் துறவு பூண எண்ணி எளிய ஆடை உடுத்தி, விசிறி, குடை ஏந்தி, மரப்பாதுகை அணிந்து காசியை நோக்கிச் செல்லத் துவங்குகின்றான். அப்போது மணப்பெண்ணின் தந்தை அவன் முன் வந்து இல்லறவாழ்வின் சிறப்பையும், அதன் அவசியத்தையும் விரிவாகச் சொல்லி, அவன் இல்லறத்தை மேற்கொள்ள, தன் மகளையும் துணைநலமாக, தருவதாக வாக்களித்து, மணமகனை அழைத்து வருவது காசி யாத்திரையாகும்.

மாலை மாற்றல்: மணப்பெண்ணும் மணமகனும் தம்தம் தாய்மாமன் தோள்களில் அமர்ந்து, ஒருவர் கழுத்தில் ஒருவர் மாலை மாற்றும் நிகழ்ச்சி இது. கணவன் மனைவி என்கிற உறவு, ஈருடல் ஓர் உயிர் என்று இரண்டறக் கலக்கும் நிலையில், ஒருவர் அணிந்த மாலையை மற்றவர் அணிய வைப்பது மாலை மாற்றல்.

ஊஞ்சல் அமர்த்தி லாலி பாடுதல்:  இந்நிகழ்ச்சியில் ஊஞ்சல் சங்கிலி, இல்வாழ்க்கைக்கு, இறைவனிடத்தில் ஏற்படுத்திய தொடர்பாகவும், ஆடும் ஊஞ்சல், மேடு பள்ளம், சலனம் நிறைந்த வாழ்க்கைப்பாதையை இருவரும் இணையாக அமைதியாக உறுதியாகக் கடக்க வேண்டிய முறையையும் உருவகப்படுத்துவதாகும்.

மாங்கல்ய தாரணம்: தேர்ந்து எடுக்கப்பட்ட புனித நேரத்தில், மங்கள நாதஸ்வரமும் மேளமும் முழங்க கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள மணப் பெண்ணை நேராக நோக்கி அவள் கழுத்தில் மங்கள தாலியைக் கட்டுகின்றான். முதல் முடிச்சை மணமகனும் மற்ற இரண்டை அவன் சகோதரியும் போட மாங்கல்ய தாரணம் நடைபெறுகின்றது.

கைப்பிடித்தல் (பாணிகிரஹணம்): மணமகன், விரல்கள் மேல் குவிந்த பெண்ணின் வலது கையை தனது வலது கையால் எல்லா விரல்களும் சேர்ந்திருக்கும் வண்ணம் பிடிப்பதே பாணிகிரஹணம் ஆகும் நான் முதுமையடைந்த பின்னும் உன்னை கைவிடமாட்டேன் என மணமகன் மணமகளிடம் கூறுவதாகும்.

ஸப்தபதி (ஏழடி வைத்தல்): ஏழடி எடுத்து வைக்கும் பெண்ணே, உனக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் உன் முதலடியில் அன்னமும், இரண்டாவதில் தேஹபுஷ்டியும் மூன்றாவதில்  விரத அனுஷ்டானமும், நாலாவதில் சுகமும், ஐந்தாவதில் பசுக்கள் விருத்தியும், ஆறாவதில் ருதுக்களால் அனுகூலமும், ஏழாவதடியில் ஹோமம்  செய்யும் ஆற்றலையும் அளிக்க உன்னை பின் தொடர்வாராக.

நலுங்கிடல்: திருமண தினத்தின் மாலை, மணமக்கள் மனசாந்தியும் சுகமும் பெறும் வகையில் கேளிக்கையும் குதூகலமும் பொங்கும் நிகழ்ச்சியே நலுங்கிடலாகும். மணமகள் மணமகனை, தன்இனிய பாட்டினால் நலுங்கிட அழைக்கின்றாள். சுற்றமும் நண்பரும் சூழ சிரிப்பும் கேலியும் நிறைந்து எல்லோரையும் மகிழ்விக்கும் நிகழ்ச்சி நலுங்கிடல் ஆகும்.

Saturday, October 27, 2012

இனிய இல்லறம் அமைய என்ன செய்ய வேண்டும்? நல்ல மனைவி அமைய!

இல்லறமல்லது நல்லறமன்று என்பது  அவ்வையின் வாக்கு. உலகில் எந்த நாட்டிற்கும் இல்லாத பெருமை நமக்கு உண்டு. அது தான் குடும்பம் என்ற அமைப்பு. சுனாமியின் போது உதவி செய்வதற்காக வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனுடன் மனைவி ஹிலாரியும் வந்திருந்தார். அப்போது ஹிலாரியிடம், இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்க, இந்தியா கோயில்கள் நிறைந்த நாடு என்பதை அறிவேன். ஆனால், இங்கு குடும்பங்களே கோயில்களாக உள்ளன. அதில் மனைவியே தெய்வமாகத் திகழ்கிறாள் என்பது இங்கு வந்தபின்பு தான் தெரிகிறது, என்றார். நம்நாட்டைப் பொறுத்தவரை குடும்பவாழ்வு தொடங்குவதே திருமணத்தின் மூலம் தான். பத்து பொருத்தம் பார்த்து, பஞ்சபூதங்கள் சாட்சியாக, நான்கு வேதம் முழங்க, மூன்றுமுடிச்சு போட்டு, இருமனங்கள் ஒன்றாக இணைவது தான் திருமணம். நல்ல சமையல் ஒருநாள் இன்பம், நல்ல அறுவடை ஓராண்டு இன்பம். நல்ல திருமணமோ காலமெல்லாம் இன்பம்.

தெய்வீகத்திருமணத்தைக் கூட வள்ளி திருமணம் என்று சொல்வார்களே தவிர, முருகன் திருமணம் என்று சொல்வதில்லை. இதைப்போலவே சீதாகல்யாணம், மீனாட்சி திருக்கல்யாணம் என்று சொல்வது மரபு. பெண்மையைப் போற்றுவது தான் இதன் அடிப்படை. மலரின் நறுமணம் போல, பெண்களும் அன்பு என்னும் மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். பெண்ணுக்கு கண் அவர் என்பதே கணவரானது. கண்ணை இமை காப்பது போல குடும்பத்தைக் காப்பவள் மனைவி.(கீழ் இமை அசையாது). இரண்டு கண்களும் ஒரே பொருளையே காண்பது போல, கணவனும் மனைவியும் கருத்து ஒன்றி நற்செயல்களைச் செய்யவேண்டும், என நன்னெறி வெண்பா நாற்பது என்னும் நூலில் சிவப்பிரகாசசுவாமிகள் குறிப்பிடுகிறார்.

சிவகுரு- ஆர்யாம்பாள் தெய்வீகத் தம்பதிகள் திருச்சூர் விருஷாசலம் கோயிலில் குழந்தை வரம் வேண்டி விரதமிருந்தனர். அன்றிரவு கோயிலில் உறங்கும்போது ஆர்யாம்பாளின் கனவில் தோன்றிய சிவன், அற்பாயுள் வாழும் நல்ல பிள்ளை வேண்டுமா? தீர்க்காயுள் உள்ள கெட்டபிள்ளை வேண்டுமா? என்று கேட்டார். சிவனிடம் ஆர்யாம்பாள்,என் கணவரைக் கேட்டு முடிவு சொல்கிறேன், என்றாள். கண் விழித்துப் பார்த்தால், கணவரும் ஆச்சர்யத்துடன் ஏதோ சொல்ல முயன்றார். இருந்தாலும், நீ எதையோ சொல்ல எழுந்தாய்! நீயே முதலில் சொல் என்று சிவகுரு சொல்ல அவள் தன் கனவை எடுத்துச் சொன்னாள். சிவகுரு தனக்கும் இதே அனுபவம் உண்டானதைக் கூறினார். நானும் சிவனிடம் உன்னைப் போலவே மனைவியிடம் கேட்டு முடிவு சொல்வதாகக் கூறிவிட்டேன், என்றார். இத்தம்பதிக்கு பிறந்த நல்ல பிள்ளை தான் ஆதிசங்கரர். உண்மையான மனைவி, கணவனின் இல்லத்தில் அடிமை. இதயத்தில் அரசி, என்ற ரஸ்கினின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது!  அன்பு, பொறுமை, தியாகம், அருள், சகிப்புத்தன்மை, அறம் சார்ந்த பண்புகளை குடும்பத்தில் வளர்க்க வேண்டியது பெண்ணின் கடமை. அறம் செய்தால் அன்பு விளையும் அன்பினால் அருள் தோன்றும் அருளால் தவம் விளையும் தவத்தால் சிவம் தோன்றும் சிவனும் ஜீவனும் ஒன்றாகும் பெற்ற சிற்றின்பமே பேரின்பமாகும், என்பதை உணர்ந்து இறைநம்பிக்கையோடு இல்லறத்தை தொடர்வோம். வாழ்வுக்குப் பொருள் (பணம்) தேவை. ஆனால், வாழ்வதற்கும் ஒரு பொருள் (அர்த்தம்) தேவை அல்லவா?

Wednesday, October 24, 2012

குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பவர் பைரவர்!

திங்கட்கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு மஞ்சள் நிற பூக்களாலான மலர்மாலை அணிவித்து ஜவ்வரிசி பாயசம், அன்னம் படையல் இட்டு அர்ச்சிக்க தாயாரின் உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய்க்கிழமை ராகு வேளையில் (மாலை 3-4.30) பைரவருக்குச் செவ்வரளி மாலை சாத்தி, துவரம்பருப்புப் பொடி சாதம், செம்மாதுளம்பழம் படையலிட்டால் சகோதரப் பகை நீங்கி ஒற்றுமை நிலைக்கும். புதன் கிழமை மாலை, பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை சாத்தி புனுகுபூசி பாசிப்பருப்புப் பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்புப் பாயசம் படையல் செய்ய மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவர். கிரகிப்புத் திறன் அதிகரித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவர். புதன்கிழமை காலை 10.30- 12க்குள் பைரவருக்குச் சந்தனக்காப்பு செய்து மரிக்கொழுந்து மாலை சூட்டி, பாசிப்பயறு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்புப் பொடி சாதம் படைக்க வியாபாரத்தில் அமோகவளர்ச்சி உண்டாகும். வெள்ளிக்கிழமை ராகு வேளையில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, தாமரை மலர் மாலை சூட்டி, அவல் கேசரி, பானகம், சர்க்கரைப்பொங்கல் படைத்து அர்ச்சனை செய்தால் மனதிற்குப் பிடித்த வகையிலும், தடையின்றியும் திருமணம் கைகூடும்.

படித்தவர்களுக்கும் சாஸ்திரம் தேவை!

சாஸ்திர நூல்களை ஸ்மிருதி என்பர். இதற்கு நினைவில் வைத்துக் கொள்ளுதல் எனப்பொருள். சாஸ்திரங்களை நினைவில் வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும். இதனால் காலம் காலமாக சாஸ்திர அறிவு தொடரும். மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமைகளும், பொறுப்புகளும் சாஸ்திரத்தில் அடங்கும். இன்ஜினியர், டாக்டர், கம்ப்யூட்டர் வல்லுநர் என என்ன தான் கல்விஞானம் இருந்தாலும், எல்லாருக்குமே சாஸ்திர அறிவு தேவைப்படுகிறது. இன்று என்ன கிழமை, என்ன திதி, என்ன நட்சத்திரம்...இதற்கேற்ப அன்றையக் கடமைகளை எப்படி செய்து முடிப்பது என்ற சாஸ்திர ஞானம் எல்லாருக்கும் தேவைப்படுகிறது. படித்தவர்களும் நல்லநாள் பார்த்து திருமணம் செய்வது, கிரகப்பிரவேசம் செய்வது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள். பகவத்கீதையில் நம் அன்றாடக்கடமைகள் பற்றி சிறப்பாக சொல்லியுள்ளார் கிருஷ்ணர்.

Monday, October 22, 2012

வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

சரஸ்வதி பூஜை நடத்த நல்ல நேரம்: காலை 10.45 - 11.45 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம் புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும்.  படத்தின் முன் இலைவிரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். கற்பூரம் அல்லது நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், படிப்புச் செலவிற்கு பணஉதவி ஆகியவற்றை வசதிக்கு தக்கபடி கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் படத்தை எடுத்து விட வேண்டும். முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும்.

சரஸ்வதிபூஜை - அர்த்த்ம்: பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.

சாமுண்டிதேவி: நவராத்திரியில் ஒன்பதாவது நாள் தேவியானவள் சாமுண்டி மாதா என அழைக்கப்படுகிறாள். இந்த நாள் தேவிக்கு மிகவும் சிறப்பு தரும் நாளாகும். சப்தமாதர்களுள் ஒருத்திதான் சாமுண்டி. துர்க்கா தேவி மகிஷனை வதம் செய்யப் போகும் போது அவளை எதிர்த்து சண்டையிட மகிஷனின் அமைச்சர்களாகிய சண்டன், முண்டன் வந்தனர். துர்க்காதேவி தன் அம்சமான சாமுண்டி தேவியை அனுப்பி சண்டனையும் முண்டனையும் அழிக்குமாறு பணித்தாள். அசுரனின் அமைச்சர்கள் இருவரையும் வீழ்த்தியதால் அதாவது சண்ட முண்ட வதம் செய்ததால் சாமுண்டி என அவள் அழைக்கப்பட்டாள். சாமுண்டி தேவியை வழிபடுவது பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் வழக்கம். நாகை மாவட்டத்தில் பூவனுர் என்ற ஊரில் சாமுண்டிக்கு தனிச் சன்னதி உண்டு. சில சிவாலயங்களில் சப்தமாதர்கள் வரிசையில் சாமுண்டியின் திருவுருவம் இருக்கும். நான்கு கைகளும், மூன்று கண்களும், கோரைப் பற்களும், உக்ரமான திருமுகமும் உடைய நிலையில் இவள் உருவம் இருக்கும். புலித்தோலை ஆடையாக அணிந்திருப்பாள். கத்தி, சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியிருக்கும் இவளுடைய மற்றொரு கை அபய ஹஸ்தமாக இருக்கும். சிறிய மணிகளால் ஆகிய மாலை தாங்கியிருப்பாள். சாமுண்டி தேவியை வழிபடுவதால் ஏவல், பின்னி, சூன்யம் வைப்பு முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும். பகை, அர்த்தமற்ற அச்சம் விலகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நவராத்திரி ஒன்பதாம் ஆலயங்களில் உள்ள சப்தமாதர் வரிசையில் கொலுவிருக்கும் சாமுண்டி தேவியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் தேடி வரும்.

Sunday, October 21, 2012

கர்ப்பிணிகள் கோயில் கருவறையை வலம் வந்து வணங்கலாமா?

திடீர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் கர்ப்பிணியின் மனத்தை பாதிக்கும், மனமானது குழந்தையிடமும் தன்னைக் குறித்தும் மாறி மாறிச் செயல்படும் தருணத்தில், குழந்தையின் மனத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. தேரோட்டத்தைப் பார்க்கக் கூடாது என்பார்கள். அசைந்து ஆடிவரும் தேரைப் பார்க்கும்போது... விழுந்துவிடுமோ? சாயுமோ? என்பன போன்ற எண்ணங்கள் மனத்தில் தோன்றினால், பயம் மனத்தைப் பற்றிக்கொள்ளும். அல்லது, ஆச்சரியமான காட்சியில் அளவுக்கு அதிகமாக மனம் விரிவடையும்போது, விரும்பத்தகாத பாதிப்புக்கு இடமளித்துவிடும். அளவுக்கு மீறிய துயரத்தையும் அவள் மனம் சந்திக்கக்கூடாது. இந்தக் கண்ணோட்டத்திலேயே 8 மாதம் தாண்டிய கர்ப்பிணிகள் வெளி வட்டாரங்களில் நிகழும் உத்ஸவங்களைத் தவிர்ப்பது உண்டு. ஆறு மாதம் தாண்டிய கர்ப்பிணிகள் கோயிலுக்கு வந்து வலம் வருவதைத் தவிர்க்கலாம். அவளது சுகாதாரம், குழந்தையின் சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தவிர்க்க வேண்டும். நல்ல மன உறுதியும், அதிர்ச்சி, ஆச்சரியம், துயரம் ஆகியவற்றின் தாக்கத்தால் மாறுபடாத மனம் இருந்தாலும்கூட, வயிற்றில் இருக்கும் குழந்தையை மனத்தில் கொண்டு தவிர்க்கவேண்டும். ஆரம்பத்திலேயே குழந்தையை பாதிக்கும் விளைவுகளுக்கு மருத்துவம் பயனளிக்காது.