Tuesday, February 7, 2012

சித்தர்கள் கூறும் எளிய மருத்துவ முறைகள்!


பண்டைச் சித்தர்கள் தங்களது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க எளிய முறையை உருவாக்கித் தந்துள்ளார்கள். இந்த மருத்துவ முறை பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது. அதில் வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மூலம் எளிதாக செய்யும் சில மருத்துவ முறைகளையும் குறிபிட்டுள்ளனர் அவை ..

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும். நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும். மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும். பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும். வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும். 

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும். கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும். எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.




ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணெய் சார்த்துவது ஏன்?

நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.

வெண்ணெய் சாத்துதல்: ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,

Wednesday, February 1, 2012

மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)


திருமணம் ஆகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகள் நடத்த வேண்டிய ஹோமம் மங்கள சமஸ்கரண ஹோமம் ஆகும். குழந்தை பாக்கியம் பெறவும், நம் அனைத்து செயல்களிலும் வெற்றிபெறவும், குடும்பச் சூழலிலிருந்து தப்பி பரிபூரண விடுதலை பெறவும் இந்த ஹோமத்தை நடத்தலாம்.



பூஜா முறைகள்






உஷத்கால பூஜை : சிவாச்சாரியார், சூர்ய உதயத்துக்குக் குறைந்தது 5 நாழிகைகள் (2 மணி நேரம்) முன்பு எழுந்து வாக்கினால் தோத்திரமும் மனத்தினால் இறைவனது தியானமும் செய்துகொண்டு, இரண்டு நாழிகைக்குள் காலைக்கடன்களை முடித்துக்கொள்ளவேண்டும். பின்னர், ஸ்நானம் செய்து, வெண்மையான வேஷ்டி அங்கவஸ்த்ரம் உடுத்தி, விபூதி, ருத்ராக்ஷம் போன்ற சிவச் சின்னங்களை அணிந்து, ஆசமனம், அனுஷ்டானங்களை செய்துவிட்டு, ஆலயம் செல்ல வேண்டும். கோயில் வாயிலில் கைகால்களைக் கழுவிக்கொண்டு எதிர்ப்படும் நந்தி தேவரையும் துவாரபாலகர்களையும் ப்ரார்த்தித்து அவர்தம் அனுமதி வேண்டி, திருக்கோவில் வளாகம் புக வேண்டும். அங்கே சகளீகரணம் செய்து, சாமான்யார்க்யம் கூட்டி, அந்த அர்க்ய நீரினால் தன் மீதும் புறத்தே உள்ள பொருள்கள் மீதும் தெளித்து, அனைத்தையும் தூய்மையாக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஆத்மார்த்த பூஜையாக கரந்யாஸம், ப்ராணாயாமம் செய்து, பூதசுத்தி, அந்தர்யாகம், சிவோகம்பாவனை ஆகிய மூன்று கிரியைகளைச் செய்ய வேண்டும். இவற்றால் அருச்சகர் சிவபூஜைக்குத் தகுதி வாய்ந்தவர் ஆகிறார். பின்னர், திருக்கோயில் வளாகம் காவல் காக்கும் பொறுப்புள்ளவரிடம் இருந்து பைரவர் ஸந்நிதியின் திறவுகோலைப் பெற்று, பைரவரின் நடையைத் திறக்க வேண்டும். ÷க்ஷத்திரபாலகரை (பைரவரை) பூஜித்து, பொறி நைவேத்யம் செய்து, முதல் நாள் இரவு ஒப்புவிக்கப்பட்டு இதுகாறும் அவர் வயம் இருக்கும் பள்ளியறைத் திறவுகோல் மற்றும் முத்திரா தண்டம் (சாவிக்கொத்து) ஆகியவற்றை அங்குச் முத்திரையால் எடுக்க வேண்டும். பின்னர், அனைத்து ஸந்நிதிகளையும் திறக்கச் செய்து அவற்றின் ஸாந்நித்யம் கலைக்கப்படாமல் வாத்தியங்கள், தோத்திரப் பாடல்கள் இசைக்க, பள்ளியறை சென்று, வெளியே இருந்து திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் இசைக்க வேண்டும். பின்னர் துவார பூஜை செய்து, கதவுகளைத் திறப்பதற்குக் காலகாலனது அனுமதியை வேண்டி, கதவில் திறவுகோல் நுழைவதற்குரிய துவாரத்தை பிந்து வடிவினாகத் தியானித்து, பின் அருச்சித்து, திறவுகோலை நாத வடிவினதாகத் தியானித்து பிந்துவினுள் செலுத்தி, சக்தி-சிவ மந்திரங்களை உச்சரித்த வண்ணம் பள்ளியறைக் கதவினைத் திறந்திடல் வேண்டும். பவித்ரமான அர்க்ய நீரினால் உட்புறம் முழுதும் தெளித்து, நிர்மால்யம் களைந்து, பாவனையால் ஸ்நானம் முதலானவை செய்வித்து, ஆசமநீயம் ஆகியவற்றை முறைப்படி அளித்து, அவரை வெளியே எழுந்தருளும் வண்ணம் வேண்டி நிற்றல் வேண்டும். பின்னர் சக்தியை (மனோன்மணியை) அங்கேயே விடுத்து, இறைவனை (பாதுகையை) மட்டும் சிவிகையில் (பல்லக்கில்) எழுந்தருளுச் செய்து, வலமாக எடுத்து வந்து, கருவறை சேர்ப்பிக்க வேண்டும். அங்கு மூல மூர்த்திக்கு முன் பூவைக் கையில் எடுத்துக் கொண்டு, மூலலிங்கத்தில் சேர்த்திடல் வேண்டும். பிறகு உஷத்கால பூஜையாக ஸ்தான சுத்தி செய்து, பூதேவியை வழிபட்டு, திரவ்ய சுத்தி செய்து, கணபதியை பூஜிக்க வேண்டும். பிறகு, ஸ்வாமி, ஸோமாஸ்கந்தர், மகேச்வராதிகள், அம்பாள் ஆகியோரை விதிப்படி பூஜிக்க வேண்டும். பூஜையின் முடிவில் சூர்யோதயம் ஆக வேண்டும்.

தீர்த்த ஸங்க்ரஹணம், காலசந்தி பூஜை : சிவபெருமான் அர்த்தயாம பூஜையின் முடிவில், சிவிகை மீதமர்ந்து கீதம், நர்த்தனம், வாத்ய கோஷங்களுடன் சயனாலயத்திற்குச் சென்றதும், பரமசிவனுடைய ஜடையிலுள்ள கங்கை, அங்கு பள்ளி அறையிலுள்ள மனோன்மணியம்மையை வணங்கி, வெகு வேகமாக அங்கிருந்து நீங்குவாள். மீண்டும் கங்கா தேவியை பரமசிவனுடைய ஜடாமகுடத்தில் சேர்க்கும் பொருட்டு செய்யப்படும் கிரியையே கங்காஹரணம் அல்லது தீர்த்த ஸங்க்ரஹணம் எனப்படும். தன்னை நன்றாகச் சுத்தி செய்து கொண்ட சிவாச்சாரியார், சுவர்ணம் முதலிய ஏதாவதொரு குடத்தில் நதியிலிருந்து நீரை நிரப்பி, மாவிலை தேங்காய் முதலியவற்றால் அலங்கரித்து, பரிசாரகரின் தலை மீது அந்தக் குடத்தை ஏற்றி, வாத்ய கோஷங்களுடன் உபசாரங்களுடனும் எடுத்து வந்து, சிவலிங்கத்தின்மீது விசர்ஜனம் செய்ய வேண்டும். இதன் பிறகே காலசந்தி பூஜை தொடங்கும். முதலில் சூர்ய பூஜையும், கணேச பூஜையும். பின்னர், பஞ்சகவ்யம், ஸ்நபன திரவியங்கள் செய்து வைத்துக்கொண்டு, த்வாரபூஜை, வ்ருஷபதேவர் பூஜை, வாஸ்துபூஜை, லிங்கசுத்தி ஆகியன செய்து, போகாங்க பூஜை செய்து, நைவேத்யம் முதலிய உபசாரங்கள் செய்ய வேண்டும். பின்னர் தேவி பூஜையும், பரிவார பூஜையும், தொடர்ந்து நித்யாக்னி கார்யம், ஸ்ரீபலி, நித்யோத்ஸவ நிகழ்ச்சிகள். நிறைவாக சண்டிகேச்வரர் பூஜை.



உச்சிகால பூஜை : விக்நேச்வர பூஜை, புண்ணியாகம் (புண்ணியாஹவாசனம்) பூதசுத்தி, அந்தர்யஜனம், தியானம், ஸ்தானசுத்தி, விசேஷார்க்யம், த்ரவ்யசோதனை, மந்திரசோதனை, சிவாகம்பாவனை ஆகிய பூர்வாங்கக் கிரியைகள் முதலில், பின்னர், ஸ்நபன பூஜை செய்து, துவாரபாலகரை வணங்கி, உட்புகுந்து, ஆதாரசக்தி முதல் மானசாபிஷேகம் வரை முறையாக மூலவரை அர்ச்சிக்க வேண்டும். பிறகு அபிஷேகம், அலங்காரம்,  ஆவரண பூஜை, பிறகு, தூப தீப நைவேத்யங்கள். பிறகு நடேசர், சோமாஸ்கந்தர் முதலிய மூர்த்திகளுக்கும், தேவிக்கும் பூஜை, சில திருக்கோவில் சம்ப்ரதாயங்களில், தொடர்ந்து நித்யாக்னி கார்யம், ஸ்ரீபலி, நித்யோத்ஸவ நிகழ்ச்சிகள் உண்டு. பூஜையின் நிறைவாக, சிவ நிர்மால்யத்தைச் சிவசண்டேச்வரரிடம் சமர்ப்பித்தல்.

சாயங்காலத்தில் செய்யப்படும் பூஜை : ஸூர்யன் சாயும் காலத்தில் செய்யப்படுவது சாயுங்கால அல்லது சாயங்கால பூஜை. இதுவே நித்திய ப்ரதோஷ பூஜை எனவும் கூறப்படும். (நித்திய-நைமித்திக ப்ரதோஷ பூஜை என்பது க்ருஷ்ண-சுக்ல பக்ஷ த்ரயோதசி நாட்களில் சாயுங்காலத்தில் செய்யப்படும் சிறப்ப பூஜையாகும்). முதலில் கணேசருக்கும், நடராஜருக்கும் பூஜை. பின்னர் மூல லிங்கத்திற்கு தூப தீப நைவேத்யம் உள்ளிட்ட பூஜை. பிறகு சோமாஸ்கந்தர் முதலிய மூர்த்திகளுக்கும், தேவிக்கும் பூஜை.

இரண்டாங்கால பூஜை (இரவு முதல் யாம மகாசந்தி பூஜை) : முதலில் விக்நேச்வர பூஜை செய்து, பின்னர் ஸ்வாமி ஸந்நிதியில் துவார பூஜை; சிவோகம்பாவனை செய்து, ஐந்து ஆவரணங்களுடன் இறைவனைப் பூஜித்து, வ்யோமவ்யாபி மந்திரத்தினால் எண்ணெய் முதல் ஸ்நபனம் வரை அபிஷேகம்; அலங்காரம்; தூப தீப நைவேத்யம், ராஜோபசாரம்; தேவி பூஜை; பரிவாரங்களுக்கு பூஜை; தொடர்ந்து நித்ய அக்கினி காரியம், நித்யோத்ஸவம், ஸ்ரீபலி; நிறைவாக சண்டிகேச்வரர் பூஜை.

இரவு அர்த்தயாம பூஜை: த்வாரபூஜை கிடையாது; ஸ்நாபனம்; மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம்; பஞ்சாவரண பூஜை; அப்பம் ஈறாஜ நைவேத்யம்; தேவி பூஜை; போகசக்தி பூஜை; பின் ஸ்வாமி ஆலயத்தில் சந்த்ரசேகரர், ஸோமாஸ்கந்தர், நடேசர், மூல மூர்த்தி இப்படி ஒடுக்கக் கிரமமாய் பூஜித்துத் திரையிட்டு, பாதுகாராதன பிம்பத்தில் மூர்த்தியை ரஹஸ்யமாய் சம்யோஜித்து பூஜித்து, சிவிகையில் ஏற்றி, சகல உபசாரங்களுடன் பள்ளி அறையில் சேர்த்தல். பின் அம்பாள் ஆலயத்தில், திரையிட்டு, அங்குள்ள சயனாலய பிம்பத்தில் அல்லது பீடத்ரிகோணத்தில் சக்தியை ரஹஸ்ய பூஜையுடன் சம்யோஜித்து ஆராதனையை முடித்தல். பின்னர் சயனாலயத்தில் சுவாமி பாதுகையில் இடப்பக்கத்தில் சக்தி பிம்பத்தை எழுந்தருளச் செய்து, பள்ளியறை பூஜை; பால், பால் பாயஸம், வடை நைவேத்யம்; வாசனைப் பொருட்களுடன் கூடிய தாம்பூலம் சமர்ப்பணம்; திரை இட்டு, இறைவனைப் பள்ளி கொண்டருளும்படி தோத்திரப் பாடல்கள் இசைத்தல்; பள்ளியறை நடைஅடைத்தல். சண்டேச்வரர் பூஜை; பிறகு, . ÷க்ஷத்ரபாலகருக்கு (பைரவருக்கு) பூஜை செய்து, அவரிடம் முத்திரா தண்டத்தை (திருக்கோவில் சாவிக்கொத்து) ஒப்படைத்தல். பின்னர் பைரவர் ஸந்நிதி நடை அடைத்து அந்தச் சாவியை திருக்கோயில் வளாகம் காவல் காக்கும் பொறுப்புள்ளவரிடம் அளித்தல்.

பூஜா கால அளவு : ஒவ்வொரு காலத்திலும் செய்யப்படும் பூஜைக்கு ஆகக்கூடிய நேரம் : அபிஷேகத்திற்கு - 2 நாழிகை; அர்ச்சனைக்கு - 1 நாழிகை; நைவேத்யத்திற்கு - அரை நாழிகை; நித்யாக்னி கார்யம் - அரை நாழிகை; நித்யோத்ஸவம் - அரை நாழிகை; நர்த்தனம் முதலிய கலா உபசாரங்கள் - 1 நாழிகை.

நித்யாக்கினி காரியம் : இதற்காக ஸ்வாமி ஸந்நிதியில் குண்டம் அமைக்கப்பட்டிருக்கும். நிரீக்ஷணம், ப்ரோக்ஷணம், தாடனம், அப்யுக்ஷணம் ஆகிய நான்கு வகை கிரியைகளைச் செய்து புனிதமாக்கப்பெற்ற நீரினால் குண்டத்தை ப்ரோக்ஷணம் செய்து கலாமயமாகக் கற்பித்து, எண்வகை மலர்களால் அருச்சித்து, அவிச்சின்னமான (தடைப்படாது இருந்து வருகின்ற) அக்நியைத் தியானித்து, பரிதிகளையும் விஷ்டரங்களையும் (குண்டத்தில் படிகள்) உரிய இடத்தில் வைத்து, பரிதிகளில் ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈமானன் ஆகியோரையும். விஷ்டரங்களில் இந்திரன் முதலிய திக்பாலகர்களையும் ஆவாஹனம் செய்து அருச்சித்து, அர்க்யம் கொடுத்து, சிருக்சுருவ ஸம்ஸ்காரங்களையும் ஆஜ்ய (நெய்) ஸமஸ்காரங்களையும் செய்தல் வேண்டும். கனன்று எழும் அக்கினியைச் சிவாக்கினியாகப் பாவித்து, அதன் நடுவேயுள்ள இதயத் தாமரை மலரில் சிவபிரானை ஆவரணங்களுடன் அருச்சித்து, மூலமந்திரம் மற்றும் பஞ்சப்ரஹ்ம மந்திரங்களால் ஆகுதி செய்து பூர்ணாஹுதி செய்திடல் வேண்டும். பின்னர், பரிதி விஷ்டரங்களில் அன்னத்தால் பலி; அங்கிருந்து புஷ்பங்களை அஞ்சலி முத்திரையால் எடுத்து, மூலவரிடம் கொண்டு சென்று, க்ஷமாபராத மந்திரம் கூறி, உற்பவ முத்திரையால் வணங்கி வரத ஹஸ்தத்தில் மலர்களை சமர்ப்பித்தல் வேண்டும்.

ஸ்ரீபலி : தினமும் மூன்று வேளைகள் இல்லாவிடினும், காலை - மாலை இரு வேளைகளிலுமாவது (அல்லது மிகக் குறைந்தபக்ஷமாக ஒரு வேளையாவது) நித்திய பலி இடுதல் வேண்டும். நாமாவளியின் இறுதியில் நம: என்று கூறி அருச்சித்தல் முறை; அவ்வாறே, நாமாவளியின் இறுதியில் ஸ்வாஹா என்று கூறி ஸ்ரீபலி இடுவது முறை. மற்றொருவர் பலி நாயகரைச் சுமந்து வர, பரிசாரகர் அன்னம் எடுத்து வர, சிவாச்சாரியார் ஒரு கையில் அர்க்ய பாத்திர நீரும், மற்றொன்றில் மணியும் எடுத்துச் செல்வார். இறைவன் ஸந்நிதி முன்னுள்ள துவாரபாலகரிடமிருந்து தொடங்கி, பலி பீடங்கள், திருநந்திதேவர் ப்ரதிஷ்டையாகியுள்ள இடங்கள், த்வஜஸ்தம்பதத்தின் அருகிலுள்ள பத்ரலிங்கம் என்றழைக்கப்பெறும் மஹாபலிபீடம். திக் பாலகர்கள். அனைத்துப் பரிவார தெய்வங்களுக்குமான பலிபீடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் பூமியில் நீர் தெளித்துப் புனிதமாக்கி, பரிசாரகர் தரும் சுத்த அன்ன உருண்டைகளை வைத்து சிவாச்சாரியார் பலி இடுவதே ஸ்ரீபலி.






Tuesday, January 31, 2012

அபிஷேகம்

7.1 அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன.
7.2 அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நபனம்
7.3 அபிஷேக திரவியங்கள் தரும் பலன் : சுத்த நீர் - விருப்பங்கள் நிறைவேறும், மணம் உள்ள தைலம் - சுகம் தரும், பஞ்சகவ்யம் - பாவத்தைப் போக்கும், பஞ்சாமிர்தம் - செழிப்பினைத் தரும், நெய் - மோக்ஷம் அளிக்கும், பால் - வாழ்நாள் வளர்ச்சி, தயிர் - மக்கட் செல்வம் தரும், மாப்பொடி - கடன் ஆரோக்கியம் அளிக்கும், தேன் - சுகம் தரும், பழபஞ்சாமிர்தம் - செல்வங்கள் பெருகும், வாழைப்பழம் - பயிர் செழிக்கும், பல்லவம் - உலகை வயப்படுத்தும், மாம்பழம் - மகனுக்குச் சீர் சேர்க்கும், மாதுளை - கோபத்தை நீக்கும், கொளஞ்சி நாரத்தை - சோகத்தைப் போக்கும், நாரத்தை - ஒழுங்கு ஏற்படுத்தித் தரும், எலுமிச்சை - மரணபயம் நீக்கும், சர்க்கரை - பகை களையும், இளநீர் - இன்பங்கள் நல்கும், அன்னாபிஷேகம் - நாடாளும் வாய்ப்பு அளிக்கும், சந்தனக் குழம்பு - தொலையா நிதியம் (லலக்ஷ்மி கடாக்ஷம்) சேர்க்கும்.
7.4 பஞ்சகவ்யம் : கோமயம் (பசுஞ்சாணம்), கோஜலம், நெய், தயிர், பால், இவைகளைக் கலந்து, பஞ்சப் பிரம்மத்தினால் பூஜித்து, பிறகு அபிஷேகத்துக்கு உபயோகிக்க வேண்டும்.
7.5 பஞ்சாமிர்தம் இரு வகை : (1) ரஸ பஞ்சாமிர்தம் - ஏலக்காய் முதலிய வாசனைப் பொருட்கள் சேர்த்த நீருடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்துச் செய்யப்படுவது. (2) பல (பழ) பஞ்சாமிருதம் - மேற்குறிப்பிட்ட பொருட்களுடன், முக்கனியும் (வாழை, பலா, மா) மற்றுமுள்ள பழங்களையும் கூட்டிச் செய்வது
7.6 நாகப்பழம் : மாதுளை, எலுமிச்சை, புளி, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மா, பலா - ஆகிய பழங்கள் பூஜைக்குச் சிறந்தவை.

Monday, January 30, 2012

ரதசப்தமியன்று சூரியனை எவ்வாறு வழிபட வேண்டும்?




சூரியனுக்குரிய வடதிசைப்பயணம் துவங்கும் மாதம் தை. இம்மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமியன்று ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சூரியனின் தேர் மேற்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். சூரியன் வலம்வரும் பொன்மயமான தேரின் குதிரைகள் ஏழு என்பதால், சூரியனிடமிருந்து ஏழு பிராணங்களும், ஏழு ஜ்வாலைகளும், ஏழு சமித்துகளும், ஏழு ஹோமங்களும் தோன்றி இதயக்குகையில் ஒடுங்குகின்றன என்று வேதங்கள் சொல்கின்றன. பொதுவாக, தேருக்கு எட்டு குதிரைகள் பூட்டுவார்கள். ஆனால் சூரியனின் தேருக்கு ஏழு குதிரை மட்டுமே உள்ளது. ஒளியின் வண்ணங்கள் ஏழு. அதுவே ஏழு குதிரைகள் என்று கூறப்படுகிறது. அவை: காயத்ரி, பிரகுஹதி, உஷ்ணிக், ஜகதி, திரிஷ்டுப், அனுஷ்டுப் மற்றும் பங்கி என்பனவாகும். ரத சப்தமி அன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி பிறப்பதால், அன்று விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

ரதசப்தமி குளியல்: சூரிய உதயத்துக்குமுன் எழுந்து சூரியனுக்குப் பிடித்த எருக்க இலைகளில் ஏழு எடுத்து, அத்துடன் அட்சதையும்(பச்சை அரிசி சிறிதளவு), சிறிதளவு விபூதியும் தலையின்மீது வைத்துக்கொண்டு கிழக்குத் திசை நோக்கி நீராட வேண்டும். சுமங்கலிகள் குளிக்கும்போது, ஏழு எருக்க இலைகளை அடுக்கி, மேல் இலையில் சிறிது மஞ்சள் தூளும், அட்சதையும் வைத்து, உச்சந்தலையில் வைத்து நீராட வேண்டும். ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் தேர்க்கோலமிட்டு, சுற்றிலும் செங்காவிப்பட்டை இட்டு சூரியபகவானுக்கு சர்க்கரைப் பொங்கலும் வடையும் படைத்து வழிபட வேண்டும். இந்த வழி பாட்டால் ஆரோக்கியமும், மாங்கல்ய பாக்கியமும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?






அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.  உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.  வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.  இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.  உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.