எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான் யாதினும் அரிது அரிது காண் என தாயுமானவர் போற்றும் இந்த மானிடப் பிறவி ஏன் சிறந்தது என்று பார்த்தால், ஆறறிவு படைத்தனால்தான் என்பர் பெரியோர். இறைவன் எங்குமுளன்; அவன் தன்னுள்ளும் உளன். அவனைக் காண வேண்டும் என்ற முதிர்ந்த அறிவு (ஞானம்) ஏற்பட, இந்த மனிதப் பிறவியில்தான் முடியுமாதலால், மனிதன் சிறந்தவனாகிறான். அப்படி இறைவனைக் காண விழையும்போது அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் பல; உத்திகள் அநேகம். அகண்டாகாரமான உருவமற்ற ஒரு பெரும்பொருளை தன் மனதுக்குகந்த உருவில் வழிபட்டு, முடிவில் அப்பரம்பொருளில் கலப்பதே அவன் நோக்கம். இதையே தெய்வ உபாசனை என்று கூறுகிறோம்.இந்த வழியில் தன்னிலும் அந்நியமாக எண்ணி பாவனையினால் வழிபட்டு வரும் ஆரம்ப தசையிலே, அச் சக்தியினால் மனதுக்கு பலமும் வீரியமும் ஏறி, அந்தத் தெய்வத்தின் சக்தியைப் பிரயோகித்து, உலகோபகாரமாக தீமை, நோய், பைசாச உபாதை முதலியவற்றுக்குப் பரிகாரமும் காண்கின்றனர் சிலர். முக்திக்கு வித்தான மூர்த்தி, ஸித்திக்கும் உதவ முன்வருவதுதான் உபாஸனா மார்க்கத்தின் விந்தை. அத்தகைய ஞான மார்க்கத்தின் நடுவே, இகத்துக்கு மட்டும் விரைவில் பலனளிக்கும் நிலையில் உள்ள உபாஸனை தெய்வங்களில் ஸ்ரீசுதர்சனர் முக்கியமானவர். சூரியன் ஒன்றுதான். ஆனாலும் அதிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்களுக்குப் பல வண்ணங்கள். அதைப் போலவே பரம்பொரும் ஒன்றுதான். ஆனாலும், தத்துவ சொரூபமான அநேக வடிவங்களில் பல குண இயல்புகள் கொண்டு விளங்குகிறது. அப்பரம்பொருளை அணுகும் முறையிலும் உபாஸனையிலும் பல துறைகள்- நெறிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சுதர்சன உபாஸனை.மகாவிஷ்ணுவின் கரங்கள் ஒன்றில் காணப்படும் சக்கர ஆயுதத்தில் உறையும் தேவனே சுதர்சன எனப்படுகிறார். அந்தச் சக்கரம் சுதர்சன சக்கரம் எனப்படுகிறது. காத்தல், படைத்தல், அழித்தல் என்ற முத்தொழிலில் காக்கும் தொழில் கொண்ட விஷ்ணுவுக்கு, துஷ்ட நிக்ரஹத்துக்கு பொறுப்பு இருப்பதால் ஆயுதப்படை அவசியம். அத்தகைய ஆயுதங்களில் ராஜனாக இருப்பது சுதர்சனம். அதனால் அவரை ஹேதிராஜன் என்றும் கூறுவர். திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கரத்துக்கு உரிய தெய்வம் என்பதால், சுதர்சனர் உக்கிர வடிவினர். வைணவர்கள் விஷ்ணுவின் சக்கர சக்தியை சக்கரத்தாழ்வார் என்று கூறுவர். சுதர்சனருக்கு சக்கரராயர் என்றும் ஒரு பெயர் உண்டு.சுதர்சனர் பிரத்யட்சமான தெய்வம். நெறிமுறைகளுக்கு ஏற்ப தீவிரமாக உபாஸிப்பவர்களுக்கு, உக்கிர வடிவம் கொண்ட சக்கரத்தாழ்வார் மங்கலம் நல்குவதாக பல நூல்களும் கூறுகின்றன.ஸ்நானே, தானே, ஜபாதௌசச்ராத்தே சைவ விஷேத:சிந்ததீய: சக்ரபாணி: ஸர்வாகௌக விநாசந: ஸர்வ கர்மஸுபூர்ணம் ஸ்யாத் ஸத்யம் ஸத்யம் ஹி நாரதஎன்று பிரம்மன் நாரதருக்கு, ஸ்ரீ சுதர்சனர் ஸ்நானம், தானம், தவம், ஜபம் முதலியவற்றை எடுத்துக்காட்டி, எக்காலத்திலும் த்யானிக்கத் தக்கவர் என்று ஸத்யம் செய்து கூறுகிறார் என்கிறது புராணம்.தீவிரமாக யோக மார்க்கத்தில் வழிபடும் எந்த உபாஸனையிலும், உபாஸனைக்கு உரிய தேவனை யந்திர வடிவில் அமர்த்தி வழிபடுவது உண்டு. சுதர்சன வழிபாட்டில் யந்திர உபாஸனை மிக முக்கியமானது. சுதர்சன சக்கர யந்திர அமைப்பு இரு வகையானது. செப்புத் தகட்டில் வரி வடிவிலேயே முக்கோணம், ஷட்கோணம் போன்ற கோண அமைப்பில் பரம்பொருளின் வடிவைக் கண்டு வழிபடுவது ஒருமுறை. சக்கரத்தில் சுதர்சனின் வடிவை உள்ளடக்கிய விக்கிரக ஆராதனை மற்றொரு வகை. வார்த்தைகளே இல்லாமல் வெறும் ஒலி ஆலாபனையால் மட்டும் இனிய இசையை எழுப்பி மகிழ்வூட்டுவதைப் போல, உருவம் இல்லாத வரிவடிவ யந்திர வழிபாடு மனதுக்கு சாந்தி அளிக்கவல்லது.சுதர்சனரின் வீரம் கிளர்ந்தெழும் வடிவத்தையும், மங்கல இயல்பு களையும், சுதர்சன வழிபாட்டில் ஏற்படும் அருள் நலன்களையும் கீழ்க்காணும் சுலோகம் வர்ணிக்கிறது:சங்கம் சக்கரம்ச சாபம் பரதம் அஸிகதாகுந்தம் அத்யுக்ர தம்ஷ்ட்ரம் ஜ்வாலாகேசம் த்ரிநேத்ரம்ஜ்வல லலனனிடம் ஹார கேயூர வக்த்ரம்வந்தே ஷட்கோண சக்ரம் சகல ரிபுஜனப்ராண ஸம்ஹார சக்ரம்சுதர்சன உபாசனை வீரம் அளிக்கவல்லது. தீர்க்கவொண்ணா நோய்களும் சுதர்சனரின் கடாட்சத்தால் நீங்கப் பெறும் என்பது சுதர்சன உபாஸகர்களின் அனுபவம். போர் முனையில் வெற்றித் திருமகளின் கடாட்சத்தைப் பெறுவதையே லட்சியமாகக் கொண்டு வீர வாழ்வு வாழ்ந்த பல மன்னர்கள் சுதர்சன உபாஸிகளாக இருந்திருக்கின்றனர். சுதர்சன சதகம் எனும் நூறு பாசுரங்கள் கொண்ட அருள் மாலையை நெறி தவறாது முறைப்படிப் பாராயணம் செய்வதனால், எத்தகைய ஆபத்திலிருந்தும் விடுபெறலாம் என்பது சுதர்சன உபாஸிகளின் நம்பிக்கை. சுதர்சன உபாஸனையின் பெருமைச் சிறப்புகளை நாடறியச் செய்தவர்களாள் ஸ்ரீநிகமாந்த மகாதேசிகரின் பணி ஒப்பற்றது. ஸ்ரீ தேசிகர் சிறந்த சுதர்சன உபாஸியாக விளங்கியதுடன் ஸ்ரீ சுதர்சன அஷ்டகம் என்ற பாமாலையையும் சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார். சுதர்சன வடிவங்கள்: சில்ப ரத்தினம் சுதர்சனரின் பல்வேறு வடிவங்களை வருணிக்கிறது. திருமாலின் சக்கரத்துக்கு உரிய தேவனை அந்நூல் சக்கர ரூபி விஷ்ணு என்று குறிப்பிடுவதுடன், சுதர்சனர் விஷ்ணுவின் அம்சமே என்பதையும் வலியுறுத்துகிறது. வேலாயுதத்தையே முருகனாக வழிபடுவதுபோல் சுதர்சனரையும் விஷ்ணுவாகவே பாவித்து வழிபடுவது மரபு. எண் கரங்கள் கொண்ட சுதர்சனரையும், பதினாறு கரங்கள் கொண்ட வடிவையும், முப்பத்திரண்டு கரங்கள் கொண்ட வடிவையும், சில்பரத்தினம் குறிப்பிடுகிறது. சாதாரணமாக கோயில்களில் சுதர்சனர் எட்டு அல்லது பதினாறு கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் வடிவைக் கல்லிலும் செம்பிலும் காணலாம். ப்ரயொக அவசரத்தில் போர்க்கெழும் கோலத்துடன் பாய்வது போல் பதினாறு கரங்களுடன் காணப்படுகிறார். காஞ்சியில் உள்ள அஷ்டபுஜர், எண் கரங்கள் கொண்ட பெருமான், திருமாலின் சுதர்சன சக்தி எனப்படுகிறார். குடந்தையில் திருக்கோயில் கொண்டுள்ள சக்கரபாணி, சுதர்சனரின் வடிவமே ஆகும். சக்கரத்தை கரத்தில் கொண்டு சக்கரபாணி என்றே பெயர் பெற்றிருக்கம் அப்பெருமான் சுதர்சனராகவே காட்சி தருகிறார். சுதர்சன வழிபாடு பேராபத்துக்களிலிருந்தும், தீரா நோயிலிருந்தும், எடுத்த காரியத்தில் ஏற்படும் இடையூறுகளிலிருந்தும் காக்க வல்லது என்பதால், குரு முகமாக உபதேசம் பெற்று, ஜப, தவ, ஹோம, மஹா மந்திரங்களைச் செய்து பயனடையலாம்.
அறுகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை லட்சுமி சொரூபமாக பாவிக்கவேண்டுமென்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையைப் புகழும் வகையில் வேதத்தில் பல மந்திரங்கள் உள்ளன. அறுகம்புல்லை தினமும் பகவானுக்கு அர்ப்பணித்தபிறகு தலையில் வைத்துக்கொள்வதால், கெட்ட கனவுகள் விலகி, நன்கு உறக்கம் வரும். துர்க்கையைத் தவிர மற்ற எல்லா தேவதைகளுக்கும் தூர்வையால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது. துர்க்கையை அறுகம்புல்லினால் அர்ச்சனை செய்யலாகாது. உலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. அவ்வகையில் தூர்வையை ஆராதிக்கும் தினம் பாத்ரபத (ஆவணி) மாதத்தின் சுக்லபட்ச அஷ்டமி. இதற்கு தூர்வாஷ்டமி என்று பெயர். இந்த தூர்வாஷ்டமி விரதத்தை எல்லாரும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாக பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விரதம் பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதமாகும்.இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் சகல சவுபாக்கியங்களும் ஏற்படும். நமது பாரத தேசத்தை வளமாக வைத்துக்கொள்வதற்கும்; எல்லா இடத்திலும் உணவு, நீர், ஆடை நிறைவாகக் கிடைப்பதற்கும்; நீண்ட ஆயுளுடைய புத்திமான்களான- வீரர்களான புத்திரர்களைப் பெறுவதற்கும்; நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும். இந்த தூர்வாஷ்டமி விரத பூஜாவிதி பவிஷ்ய புராணத்திலும், மதனரத்னத்திலும் கூறப்பட்டுள்ளது. தூர்வாஷ்டமி அன்று காலை நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு, நித்ய பூஜையையும் செய்தபிறகு இவ்விரதத்தைச் செய்யவேண்டும். பூஜையறையை சுத்தம்செய்து கோலமிட்டு விளக்கேற்றி, சுத்தம் செய்யப்பட்ட பலகையின்மேல் கோலமிட்டு, சுத்தமான இடத்தில் விளைந்த அறுகம்புல்லைப் பறித்துவந்து அப்பலகையின்மேல் பரப்பி, அதன்மேல் சிவலிங்கம் (இருந்தால் விசேஷம்) அல்லது படம் ஏதாவது ஒன்றை வைத்துப் பூஜிக்க வேண்டும். பூஜைக்கு எல்லாவிதமான இலைகளையும் மலர்களையும் எடுத்துக் கொள்ளலாம். அவைகளில் அறுகு, வன்னி இலை இரண்டும் அவசியம் இருக்கவேண்டும். பலகையில் பரப்பப்பட்ட அறுகம்புல்லின் நுனிபாகம் நம்மைநோக்கி இருக்கவேண்டும். புல்லைப் பறிக்கும்போது கணுக்கணுவாகத்தான் பறிக்கவேண்டும். ஆரம்பத்திலிருக்கும் முனை மட்டும்தான் நுனி என்கிற அர்த்தமில்லை. இது கணுக்கணுவாக வளர்வதால், நுனியைப் பறித்தாலும் அடுத்த கணுவே நுனி என்கிற கணக்குதான். ஆகையால் எல்லாக் கணுவையும் பறித்து அர்ச்சனை செய்யலாம். பகவானை அபிஷேகம் செய்து, ஷோடசோபசாரப் பூஜைகளைச் செய்து, 108 நாமங்களால் (சிவ அஷ்டோத்திரம், தேவி அஷ்டோத்திரம்) வணங்கி, அறுகு மற்றும் வன்னி இலைகளால் அர்ச்சிக்க வேண்டும்.சக்திக்குத் தகுந்தாற்போல் நைவேத்தியங்கள் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு பரமேஸ்வரனுக்கு அட்சதை, சந்தனம் கலந்த தயிரால் அர்க்யம் தர வேண்டும். பிறகு அறுகம்புலை நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யவேண்டும். அதற்கான மந்திரம்-த்வம் தூர்வேஸ்ம்ருத ஜன்மாஸி வந்திதாஸி ஸுராஸுரை:ஸௌபாக்ய ஸந்ததிம் தேஹி ஸர்வகார்ய கரீபவயதாசாகாப்ரசாகாபி: விஸ்த்ரு தாஸி மஹுதலேததா மமாபி ஸந்தானம் தேஹி த்வம் அஜராமரம்பூஜைக்குப் பிறகு அந்தணர்களுக்கும், சுவாசினிகளுக்கும் மங்கள திரவியங்கள் மற்றும் தட்சிணையளித்து விருந்தளிக்க வேண்டும். அன்றைய தினம் பூஜை முடிந்த பிறகு பத்தியமில்லாமல் ஒரு வேளை மட்டும் உணவருந்தலாம்.
தூர்வையை தினமும் தலையில் வைத்துக்கொள்வதற்கான மந்திரம்: ஆயுள் தீர்க்கம் அரோகஞ்ச வபு: ஸ்யாத் வஜ்ர ஸன்னிபம். இதன் பொருள், தீர்க்காயுள் கிடைக்க வேண்டும். சரீரமானது நோயற்றதாகவும் வஜ்ரம்போல் பலமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பது. அறுகம்புல்லானது பற்பல ஹோமங்களில் விதிக்கப்பட்டுள்ளது. ஹோமம் செய்த அறுகின் புகையை நுகர்ந்தால் பாசம், அபஸ்மாரம் முதலிய தீராத நோய்கள் குணமடையும். அப்புகையை நுகர்வதால் நன்கு பசியெடுக்கும். பல்வேறு நோய்களைத் தீர்க்கும் வல்லமை அறுகுக்கு உண்டு. அறுகம் புல்லானது ஐஸ்வர்யத்தை அளிக்கவல்லது. இந்த தூர்வாஷ்டமி விரதத்தை அனுஷ்டித்தால் சகலசவுபாக்கியங்களையும் பெற்று, சிறந்த பிள்ளை பாக்கியத்தை அடைந்து, நினைத்த காரியங்களிலும் வெற்றியடையலாம்.தூர்வையைப் போற்றும் மந்தரிம்: தூர்ஸ்வப்னங்களை நாசம் செய்யும் தூர்வாதேவியே, உன்னை வணங்குகிறேன். உன்னைத் தொடுவதாலும் பகவானுக்கு உன்னை அர்ப்பணம் செய்வதாலும் எனது எல்லாப் பாவங்களும் நீங்கவேண்டும். நீ எவ்வாறு கணுக்கணுவாக வளர்கிறாயோ, அவ்விதமே நானும் படிப்படியாக வளர்ந்து சகல ச்ரேயஸ்களையும் அடைய வேண்டும். ஹே தேவியே! நீ நன்கு படர்ந்து வளர்வாயாக. உன்னை நான் பூஜிக்கிறேன். உன்னை என் தலையால் தாங்கிக் கொள்கிறேன். நீ என்னை எப்பொழுதும் காப்பாற்றுவாயாக.
சிவநாமமான ‘ஹர ஹர’ என்பதையே ‘அரோகரோ! வேல் முருகனுக்கு அரோகரா!’ என்று சொல்கிறார்கள். ஏன் தெரியுமா? சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். சிவன் நெற்றிக் கண்ணில் ஆறு தீப்பொறிகளை வெளியிட, அவை சரவணப் பொய்கையை அடைந்து ஆறு குழந்தைகளானது. அவர்களைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதிதேவி ஒரே உருவமாக்கி ‘கந்தன்’ என்று பெயரிட்டாள். தன் சக்தியை ஒன்று திரட்டி வேலாகக் கொடுத்தாள். வேலினால் கந்தன் சூரனை வதம் செய்தார். இதனால் முருகன் ‘அறுமுகச் சிவனார்’ எனப் போற்றப்பட்டார். முருகனுக்கும், ‘ஹர ஹர’ (சிவனே சிவனே) என்ற பதம் உண்டாயிற்று. இதுவே திரிந்து ‘அரோகரா’ ஆயிற்று.
சித்ரா பவுர்ணமி
ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா பவுர்ணமிக்கு உண்டு. அனைத்து மாதங்களி லும் பவுர்ணமியில் முழுநிலவு அழகாகப் பிரகாசித்தாலும் அதில் உள்ள களங்கங்கள் மிக மெலிதாகக் காணக்கிடைக்கும் ஆனால் சித்ராபவுர்ணமி அன்று நிலவு தனது கிரணங்களை பூரணமாகப் பொழிந்து. கொஞ்சம்கூட களங்கமே காணப்படாமல் காட்சி அளிக்கும் அதனால் தான் சித்ரா பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதோடு தமிழ்ப்புத்தாண்டில் முதன்முதலாக வரும் முழுநிலவு நாள் என்பதாலும் இதற்குச் சிறப்பு சேர்கிறது.சித்திரையின் வருகை வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கிறது. குளிர்க்காலம் முழுமையாக முடிந்து இதமான இளம் வெயில் தொடங்கும். மாம் பூக்கள் மலர்ந்து எங்கும் மணம் பரப்பும் அதோடு வேப்பம் பூக்களும் பூத்திருக்கும். இது வாழ்வில் இனிமையும் கசப்பும் இணைந்தேகாணப்படும். என்ற தத்துவத்தை விளக்குவதாக உள்ளது. அதனால்தான் சித்திரை முதல் தேதி அன்று அறுசுவையும் சேர்த்த உணவை சமைத்து உண்டார்கள் நம் முன்னோர்கள். இனிமைக்கு வெல்லம், புளிப்புக்கு மாங்காய் அல்லது புளி, கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு வாழைப்பூ அல்லது நெல்லிக்காய் கரிப்புக்கு உப்பு எரிவு எனப்படும் காரத்துக்கு மிளகு என சமைத்தார்கள். நம்முன்னோர் சொல்லி வைத்த இந்த உணவு முறை சரிவிகித உணவு என உலகின் மற்ற நாட்டினர் பலராலும் போற்றப்படுகிறது. இளவேனில் காலத்தில் தொற்றிடக்கூடிய வெம்மை நோயில் இருந்து வேப்பம்பூவும் நெல்லி க்காயும் நம்மைப் பாதுகாக்கும் மிளகு உடலில் உள்ள விஷப் பொருட்களை வெளியேற்றும் அதனால்தான் அறுசுவை உணவு எனச் சிறப்பித்து அந்த நாளில் செய்யச் சொன்னார்கள்.சித்திரையும் சித்திர குப்தரும்: சித்திரை மாதப் பவுர்ணமி சித்திர குப்தருக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. அன்றுதான் அவரது அவதார தினம். மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை மிகத் துல்லியமாக எழுதும் பணியை வெகு சிறப்பாகச் செய்து வருபவர் சித்திர குப்தர்.சித்திர குப்தரின் பிறப்பு: ஒரு முறை அனைத்துதிக்குப் பாலர்களும் கைலாயத்திற்குச் சென்று ஈசனையும் உமையம்மையையும் வணங்கினார்கள். அனைவரது முகமும் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது. ஆனால் யமனின் முகம் மட்டும் சற்றே வாட்டமாக இருந்தது. காரணம் கேட்டார் மாதொரு பாகன். இறைவா பூமியில் மக்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் நானோ ஒருவன் அனைவரது பிறப்பு இறப்புக் கணக்குகளையும் அவர்களது பாவ புண்ணிய கணக்குகளையும் என் ஒருவனால் சமாளிக்க முடியவில்லை. எனக்குத் துணையாக கணக்கு வழக்குகளை மிகக் கவனமாகப் பாதுகாத்து எழுதி வைக்கும் நம்பிக்கையான உதவியாளன் ஒருவன் கிடைத்தால் என் பாரம் குறையும் என்று ÷ வண்டுகோள் வைத்தான் காலன்.சிவனும், உன் கோரிக்கை நியாயமானதுதான். உரிய நேரம் வரும் போது உனக்கு அந்த உதவியாளன் கிடைப்பான்! என்று அருளினார் அகமகிழ்ந்த யமன் தன் உலகம் சென்றான். பிரம்ம தேவர் குழம்பிப் போனார். ஏனெனில், உதவியாளனைப் படைக்கும் பொறுப்பை அவரிடம் விட்டு விட்டார் ஈசன் சிந்தித்தார் பிரம்மா, சூரியன் ஒருவனால்தான் இத்தகைய ஒருவனைப் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார். பிரம்ம தேவர் சூரியன் மனதில் ஆசையைத் தோற்றுவித்தார். அதனால் அவன் மனதில் காதல் உண்டானது. வானவில்லை அழகான பெண்ணாக மாற்றி, நீளாதேவி என்று பெயரிட்டு, அவளைத் திருமணம் செய்துகொண்டார் சூரிய பகவான் அவர்களுக்கு சித்திரா பவுர்ணமியன்று பிறந்தவர் தான் சித்திரகுப்தர்.இன்னொரு புராண வரலாற்றின்படி, கைலாயத்தில் அழகான தங்கத் தகட்டில் சித்திரம் ஒன்றை வரைந்தாள், பார்வதி, சிவபெருமான், அதற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்திலிருந்து தோன்றியதால் சித்திர குப்தர் எனப்பட்டார். சித்திர புத்திரன் எனவும் சொல்வார்கள்.சித்திர குப்தரின் சிறப்புகள்: சித்திர குப்தருக்கு உரிய வயது வந்தவுடன் கல்வி கற்பித்தார் சூரிய பகவான். கல்வி, கணிதம், இலக்கணம் என அனைத்திலும் சிறந்து விளங்கினார். அவர். தந்தையின் யோசனைப்படி ஈசனை நோக்கித் தவமிருந்தார். சிவபெருமான் அவரது தவத்திற்கு மெச்சி ÷ நரில் தோன்றி, இனி நீ நினைத்தது அனைத்தும் நடக்கும். என்று வரமளித்தார். அதை சோதித்துப் பார்க்க படைப்புத் தொழிலில் இறங்கினார் சித்திரகு ப்தர். கவலைக்கு உள்ளன பிரம்மா, சூரியனை அழைத்து விஷயத்தைக் கூறினார். உடனே சூரியன், மகனை அழைத்தார். மகனே! படைப்புத்தொழில் பிரம்மனுக்கு உரியது என்று மகேஸ்வரனால் முன்பே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் அதில் நீ தலையிடக்கூடாது. நீ பிறந்ததே யமனின் உதவி யாளனாக இருந்து, மக்களின் பாவ புண்ணியக் கணக்குகளை கவனித்துக் கொள்ளத்தான். எனவே நீ அங்கு சென்று உயிர்களின் கணக்குகளை ய மனுக்கு எடுத்துக் கூறு! அவர் அதற்குத் தகுந்தபடி தண்டனை அளிப்பார். என்று சொல்லி ஆசிர்வதித்தார். அதோடு என்றும் தீரவே தீராத கணக்கு எழுதும் புத்தகத்தையும் அளித்தார்.அதைச் சிரமேற்கொண்ட சித்திர குப்தர். யமலோகம் சென்று விவரங்களைக் கூறினார். தன் நம்பிக்கைக்குரிய உதவியாளன் கிடைத்து விட்டான் என்று உடனே சம்மதித்தார் யமதர்ம ராஜன். இறையனார்க்கு நன்றியும் தெரிவித்தார். அன்று முதல் இன்று வரை மக்களின் மனதில் ஒளிந்திருக்கும் எண்ணங்களையும் அவர்கள் செய்யும் நல்வினை, தீவினைகளையும் சாரணர்கள் என்ற ஒற்றர்களின் உதவியால் கண்டறிந்து எழுதி வருகிறார் அவர். அனைத்தையும் மிக மிக ரகசியமாகப் பாதுகாப்பதால் சித்திர குப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. குப்தர் என்றால் ரகசியம் காப்பவர் என்று பொருள். இவர் வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்து சுகாசன நிலையில் வீற்றிருப்பார். வலது கையில் எழுத்தாணியும் இடக்கையில் சுவடியும் இருக்கும் மயன் மகள் பிரபாவதி மனுவின் மகள் நீலாவதி, விஸ்வ கர்மாவின் மகள் கர்ணிகி ஆகியோர் இவரது மனைவியர் அக்கிர சந்தானி என்பது இவரது கணக்குப் புத்தகத்தின் பெயர்.சித்திர புத்திர நயினார் நோன்புக் கதை: பண்டைத் தமிழகத்தில் சித்திர புத்திர நயினார் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று அன்று விரதமிருந்து கோயில் சென்று அங்கே கூட்டமாகவோ, தனியாவோ அமர்ந்து இவரது கதையைப் படிப்பார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும் உடல் நலம் சீராக இருக்கும். புண்ணியம் கூடும். வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதிகம்.இந்த நோன்பு தோன்ற காரணமாகவும் ஒரு புராணக் கதை உண்டு.பல காலம் முன்பாக முக்திபுரி என்ற ஊரில் கலாவதி என்ற இளம்பெண் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழியரோடு வனத்தின் அழகைக் காணச் சென்றாள். காட்டின் நடுவில் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கு சில தேவ கன்னியர் பூஜை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி சி த்திரகுப்த நயினாரின் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். அதிசயமும் ஆச்சரியமும் அடைந்த கலாவதி வெளியில் காத்து நின்றாள். பூஜை முடிந் ததும் தேவகன்னியர் வந்தனர். அவர்களில் ஒருத்தி கலாவதியைப் பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தாள்.தேவி! நீங்கள் அனைவரும் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? தேவ கன்னியர்களான நீங்கள் யாரை வழிபட்டீர்கள்? என்று பணிவாகக் கேட்டாள். அதற்கு அக்கன்னி, பெண்ணே! இன்று சித்திரா பவுர்ணமி. சித்திர குப்தனின் நாளான இன்று அவரது அவதாரக் கதையைப் படித்து விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு வாழ்வில் செல்வம் செழித்தோங்கும்; நல்ல கணவன், நல்ல குழந்தை என அரிய வாழ்க்கைக் கிடைக்கும். ஆண்கள் இதைச் செய் தால் எண்ணிய காரியங்களில் வெற்றியும், இனிமையான இல்லறமும் வாய்க்கும் என்றாள்.உடனே கலாவதி அந்த பூஜை முறையை எங்களுக்கும் கற்றுத் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அந்த தேவகன்னியும் அவ்வாறே செய்தாள். அது முதல் கலாவதி சித்திர புத்திர நயினார் நோன்பைக் கடைப்பிடித்தாள். அதன் பலனாக ஆகமபுரியின் அரசன் வீரசேனனின் மனைவியாகும் பலனைப் பெற்றாள். சித்திரகுப்த நயினார் நோன்பு கடைப்பிடித்ததால் தான் தனக்கு செல்வச் செழிப்பும், புகழும் மிக்க வாழ்வு கிடைத்தது எனக் கருதி அந்த நோன்பை தரணியெங்கும் பரப்பினாள் கலாவதி. இந்த வருடம் சித்திரா பவுர்ணமி மே மாதம் 3ம் தேதி வருகிறது. அன்று சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால்பூஜித்து வணங்கலாம். பானகம், நீர் மோர் போன்றவற்றை நிவேதனமாகப் படைத்து அருந்தலாம். மோரிலும் பசும்பாலில் எடுத்த மோர் கூடாது. மற்றொரு புராணத்தின்படி சித்திரகுப்தர் பசுவின் வயிற்றில் இருந்து அவதரித்தவர் என்பதால் சித்ராபவுர்ணமி அன்று எந்த வகையிலும் பசும்பால், பசுந்தயிர், பசுவெண்ணெய், பசுநெய் என்று எந்தப் பொருளையும் பூஜைக்கு எடுக்கவோ, உண்ணவோ கூடாது. அதேபோல அன்றைய தினம் உப்பையும் தவிர்ப்பது அவசியம். சித்திர குப்தரின் கதையையும், கலாவதி அந்த நோன்பை அனுசரித்துப் பயன் பெற்ற கதையையும் வீட்டில் உள்ள பெரியவர்கள் வாசிக்க மற்றவர்கள் கேட்க வேண்டும். சைவ உணவே உட்கொண்டு விரதத்தைக் கடைப்பிடித்தால் சித்திர குப்தரின் அருள் பூரணமாகக் கிட்டும் சீரான உடல்நலமும் செல்வச் செழிப்பும், நிறைந்த புகழ் மிக்க வாழ்வை சித்திர குப்தர் நிச்சயம் தந்தருள்வார். தென்னிந்தியாவில் மொத்தம் 11 இடங்களில் சித்திர குப்தருக்கு சன்னிதி இருந்தாலும் காஞ்சி புரத்தில் மட்டுமே தனியான கோயில் உள்ளது.
அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகம். இதன் அடியில் அமர்ந்தாலேயே மனம் தெளிவடையும். இதன் அடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்தாலோ, தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தாலோ, நிறைவான பலனை அடையலாம். அகிம்சையை போதித்த புத்தர். இந்த அரச (போதி) மரத்தடியில் அமர்ந்து, தவம் செய்துதான் ஞானியாக ஆனார். வ்ருக்ஷாணாமஹம் அஸ்வத்த: மரங்களுக்குள் நான் அரச மரமாக இருக்கிறேன் என்கிறார் கண்ணபிரான் கீதையில். மேலும், அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மதேவனும், நடுப்பகுதியில் மஹாவிஷ்ணுவும், நுனிப்பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள். ஆகவேதான். மும்மூர்த்தி வடிவமான அரச மரத்தை பூஜைகள் செய்வதும், பிரதட்சணம் செய்வதும் வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாபங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும் என்கிறது சாஸ்திரம்.சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.40 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று நமக்கு, நமது உடலுக்கும் நன்மையைத் தரும். ஆகவே, காலை சுமார் 10.40 மணிக்குள் அரச மரத்தை பூஜைகள், பிரதட்சணம், நமஸ்காரம் போன்ற வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். மற்ற நாட்களைவிட, சனிக்கிழமையன்று காலை நேரத்தில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதால் சனிக்கிழமைகளில், அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும். குறிப்பாக, பல நாட்களாக குழந்தை பாக்கியமில்லாதவர்களின் (கர்ப்பப்பையில் ஏற்பட்ட) தோஷத்தைப் போக்கி குழந்தை பாக்கியத்தைத் தர, இந்த வழிபாடு மிகவும் சுலபமானது. கடுமையான-நாட்பட்ட, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் காலை சுமார் 8.20 மணிக்குள், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன்- பக்தியுடன்- அரச மரத்தை 108, 54 அல்லது 12 முதற பிரதட்சணம் செய்ய (வலம் வர) வேண்டும். அத்துடன் அரச மரத்தில் தனது உடலின் அனைத்து அங்கங்களும் படுமாறு, இரண்டு கைகளாலும் இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும். இதனால் தீராத நோய் தீரும். உடல் மற்றும் உள்ளம், வைரம்போல் நல்ல வலிமை பெறும். இது ஒரு சிறந்த பரிகாரமாகும். ஆனால், சனிக்கிழமையைத் தவிர, மற்ற நாட்களில் அரச மரத்தை பூஜைகள் பிரதக்ஷிணம், நமஸ்காரம் செய்யலாமே தவிர, அரச மரத்தை கையால் தொடக்கூடாது. நடுப்பகல், மாலை, இரவு போன்ற நேரங்களைத் தவிர்த்து, காலை சுமார் 10.40 மணிக்கு முன்பாக, அரச மரத்தை பூஜைகள், பிரதக்ஷிணம் போன்ற வகையில் வழிபாடு செய்வதே சிறந்தது.
நவக்கிரகங்களில் தலைமை வகிப்பவர் சூரியன். இவருக்குரிய ஞாயிறு, சப்தமி திதியில் சூரியமந்திரம் சொல்லி வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும். வியாசரால் இயற்றப்பட்ட இந்த மந்திரம் பாவத்தைப் போக்கும் சக்தி மிக்கது. தினமும் நீராடியபின், கிழக்கு நோக்கி நின்று இதை 12 முறை ஜெபித்து வர எல்லா நன்மையும் உண்டாகும். ஜபாகு சும சங்காஸம்காஸ்ய பேயம் மகாத்யுதிம்தமோரிம் சர்வ பாபக்னம்ப்ரண தோஸ்மி திவாகரம்பொருள்: காஸ்யப முனிவரின் மகனாக அவதரித்தவரே! செம்பருத்தி மலர் போல சிவந்த மேனி கொண்டவரே! பேரொளி உடையவரே! தரிசிப்பவரின் பாவச்சுமையை ”ட்டெரிப்பவரே! இருளின் பகைவரே! சூரியதேவரே! உம்மைப் போற்றுகிறேன்.
குழந்தை, குருநாதர், தெய்வம் இந்த மூன்றையும் வெறும்கையுடன் செல்வது, தரிசிப்பது கூடாது. இயன்ற வரையில்பழங்களையாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். எனவே, சுவாமி தரிசனத்திற்குச் செல்லும் போது குறைந்த பட்சம் விளக்கேற்ற கொஞ்சம் எண்ணெய், கதம்பம், உதிரிப்பூ, ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்லவேண்டும்.