Tuesday, May 20, 2014

சனி தோஷம் விலகும்!

திருநெல்வேலி-திருச்செந்தூர் பாதையில் ஸ்ரீவைகுண்டத்தில் கைலாச நாதர் கோயிலில் சனி பகவானின் அம்சமாக ஈசன் விளங்குகிறார். இவரை வழிபட சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள், தடைகள் நீங்கி, திருமணம் நடைபெறும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம்.

நவகிரக நைவேத்யம்!

சூரியன்- கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல், சந்திரன்- பச்சரிசி பால்பாயசம், செவ்வாய்- பொங்கல், துவரை சேர்த்த வடை சாதம், புதன்- பச்சைப்பயறு சுண்டல் அல்லது புளியோதரை, குரு- கடலை சுண்டல், தயிர்சாதம், சுக்ரன்- மொச்சை சுண்டல், நெய்ப் பொங்கல், சனி- எள் சாதம், ராகு- உளுந்தம் பருப்பு சாதம், கேது- கொள்ளு சாதம் அல்லது சித்ரான்னம்.

ஐஸ்வர்யம் பெருக ..

திருவான்மியூர் தலத்தில் மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தல ஈசனை தரிசிக்க அப்பைய தீட்சிதர் வந்தபேதது பெருமழை பொழிந்தது. தீட்சிதரால் சுவாமியின் முதுகுப் புறத்தையே தரிசிக்க முடிந்தது. ஈசனிடம்  திருமுக தரிசனம் வேண்டி முறையிட ஈசன் மேற்கு நோக்கி திரும்பிக் காட்சி தந்தார். ஈசன் மேற்கே திரும்பியதால் அம்பாள் சுவாமிக்குப் பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகனும், விநாயகரும் கிழக்கு நோக்கியும் காட்சி தருகிறார்கள். இங்கு அன்னையின் மண்டப விதானத்தில் அஷ்டலட்சுமி சக்கரம் உள்ளது. இங்கு நின்று வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.

Monday, May 5, 2014

தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அணிந்திருக்கும் துணிகளை அங்கேயே விட்டு வருவது ஏன்?

அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி போன்றவற்றால் சிரமப்படுபவர்கள் சிலரது வழிகாட்டுதலால் இந்த தவறைச் செய்கிறார்கள். உடுத்தியிருக்கும் துணிமணியில் சனிபகவான் இருப்பது போல தவறாக நினைக்கிறார்கள். நளதீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரர் சந்நிதியில் எள்தீபம் ஏற்றி வைத்து ""நீலாஞ்சன ஸமா பாஸம் ரவிபுத்ரம் யமாக் ரஜம் சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம் என்ற ஸ்லோகத்தை 16 முறை சொன்னாலே போதும். வியாசர் அருளிய இந்த ஸ்லோகத்தை, சனி தோஷம் உள்ளவர்கள் தினமும் சொல்லி வரலாம். துணிகளைக் கழற்றிப்போட்டு நீர் நிலைகளை நாசமாக்குவதே ஒருவகையில் பாவம் தான்!

முதலில் குணம்.. அப்புறம் பணம்!

எந்த தெய்வத்திற்குரிய ஸ்தோத்திரத்தைப்படித்தாலும், அதன் இறுதிப் பகுதியில் அதைப் படிப்பதால் உண்டாகும் பலன்கள் பலச்ருதி என்னும்ஸ்லோகமாக இருக்கும். சவுந்தர்யலஹரி ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா என்னும்ஸ்லோகத்தில் அம்பிகையை வணங்குவோருக்குஉண்டாகும் பலன்பட்டியலாக இடம் பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள், சரஸ்வதி கடாட்சத்தால் உயர்ந்த அறிவும், நல்ல குணமும், லட்சுமி கடாட்சத்தால் செல்வ வளமும், நல்ல அழகும் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. புத்தி இல்லாதவனிடம் பணம் சேர்ந்தால் தீமையேஉண்டாகும். அதனால்,அம்பிகை, தன்னைவழிபடுவோருக்குமுதலில் நல்ல புத்தியைக் கொடுத்து, அதன்பின் செல்வவளம் அருள்கிறாள். 

Thursday, May 1, 2014

கண்களை மூடி இறைவனை வணங்கலாமா?

சிலர் கோயிலுக்கு செல்கிறார்கள். வரிசையில் நிற்கிறார்கள். கருவறையில் மூலவரைக்கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்கிறார்கள். சூட தீபாரதனை காட்டினால் கூட தெரியாத அளவிற்கு கண்களை மூடி  நின்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்யலாமா? இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது. கோயிலில் உள்ள மூலவரைக்கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள். இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள். இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள். அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள்.

ஏனென்றால், நீங்கள் மூலவர் முன் செல்லும் போது சில சமயம் திடீரென அபிஷேகத்திற்காக திரை போட்டு விடலாம். அல்லது அர்ச்சகர் மூலவரை மறைத்து விடலாம். எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே இறைவா! உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய். நான் உன்னை தரிசிக்க முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய். உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே இறைவனை காண செல்லுங்கள். இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை. நம்மைப்படைத்த இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பதும் தெரியும். எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு, கண்திறந்து பார்த்து தரிசியுங்கள். அழகில் மயங்குங்கள். அத்துடன் இறைவா! என்னை நீ தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய். எனக்கு எது தேவையோ அதைக்கொடு. எது தேவையில்லையோ அதை நீக்கிவிடு என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள். மேலும் இறைவா! நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என வேண்டி இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்யுங்கள். பின்னர் தினசரி பூஜையின் போது, கோயிலில் தரிசித்த இறைவனின் திருவுருவத்தை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்வது தான் உண்மையான வழிபாடு ஆகும்.

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர்மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்சபூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும் காமக்கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்து கொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள். 

பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப் பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.