Sunday, February 16, 2014

பொறாமையால் ஏற்படும் தீங்கு என்ன?

கை, கால், காது, கண், நாக்கு, என, அனைத்து உறுப்புகளும் நன்றாக இருப்போர், அங்கஹீனம், காது கேளாமை, பேச்சு இழந்தோர், பார்வையற்றோர் ஆகியோரைப் பார்க்கும் போது, ஆண்டவா... எந்தக் குறையும் இல்லாமல் என்னைப் படைத்தாயே... என்று, இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்து விடுகிறோம். அதே சமயம், தெருவில், யாராவது சிரித்து பேசி செல்வதைப் பார்த்தால், சிரிப்பைப் பார்... சிரிப்பை! என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு... என்று, சிலருக்கு மனம் வெம்முகிறது.

அடுத்தவர்கள் சற்று மகிழ்ச்சியாக இருந்தால் கூட, இவர்களால் பொறுக்க முடிவதில்லை. இந்த பொறாமை குணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்கு, அரண்மனை வாழ்வு, ஆள், அம்பு, சேனை, ராஜபோகம், பணிப்பெண்கள் என, அனைத்து வசதிகளும் இருந்தன. திருதராஷ்டிரன் தம்பியான பாண்டுவின் மனைவி குந்தியோ, காட்டில் ஒரு வசதியும் இல்லாத சூழலில் வசித்து வந்தாள். இந்நிலையில், குந்திதேவிக்கு, காந்தாரிக்கு முன்னரே, குழந்தை பிறந்து விட்டது. இச்செய்தி, நாட்டில் வாழ்ந்த காந்தாரிக்கு தெரிந்ததும், அவளுக்கு பொறுக்க முடியவில்லை. அவள் உள்ளத்தில் பொறாமைத் தீ, எரிமலை குழம்பாய் வெடித்து, வழிந்தது. அதன் விளைவாக, காந்தாரி, ஒரு அம்மி குழவியைக் எடுத்து, தன் வயிற்றில் இடித்துக் கொண்டாள். அவள் கரு சிதைந்து, ரத்தம் கலந்த சதை கூறுகளாக சிதறின.

வியாசர் அந்தச் சதை கூறுகளை, நூற்றியொரு குடங்களில் இட, துரியோதனன் முதலான நூறு பேர்களும், துச்சலை என்ற ஒரு பெண்ணும் உருவாயினர். காந்தாரியின் இத்தகைய பொறாமை குணத்தின் காரணமாகவே, கவுரவர்களும் இயல்பிலேயே பொறாமை குணம் படைத்தோராக விளங்கி, பாண்டவர்களின் மேல் கொண்ட பொறாமையால் அழிந்தனர். நாம் யாரைக் கண்டு பொறாமைப்படுகிறோமோ, அவர்களுக்கு ஒன்றும் நேராது; பொறாமைப்பட்ட நமக்குத்தான் கேடு விளையும். எனவே, பொறாமையை மனதிலிருந்து துரத்தி, நற்சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். நடப்பவை, நல்லனதாகவே அமையும்

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கணும்மா?

அதிகாலையில் எழுந்ததும் கொல்லைப்புற வாசலைத் திறந்த பின்னரே, தலைவாசலைத் திறக்க வேண்டும். பசுவின் முகத்தில் விழிக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அவசியம் குத்துவிளக்கு ஏற்றி லட்சுமியை வழிபட வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும். பொருள் வளமும், சந்தோஷமும் பெருகும். பவுர்ணமியன்று மாலையில், பால் பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்.

Wednesday, February 12, 2014

சாஸ்திரபடி வாழ்க்கை நடத்துவதன் நன்மை?

முன்னோர்களின் அனுபவ வார்த்தைகளே, சாஸ்திரங்கள். அந்த சாஸ்திரபடி, வாழ்க்கையை நடத்துவோருக்கு, ஒரு குறைவும் உண்டாகாது. சாஸ்திரங்களின்படி வாழ்க்கை நடத்திய, பீஷ்மரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது...

சிராத்தம் என்பதே சரி. சிரார்த்தம் என்பது தவறு. சிரத்தையுடன் செய்ய வேண்டியது என்பதினாலேயே இது, சிராத்தம் எனப்பட்டது. மற்ற கர்மாக்களை செய்யும் போது இருப்பதை விட, சிராத்தம் செய்யும் போது, மிகுந்த சிரத்தையுடன் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் பித்ருக்களின் ஆசி முழுமையாக கிடைக்கும். ஒரு சமயம், பீஷ்மர், பித்ரு சிராத்தம் செய்யத் துவங்கினார். அதனால் பீஷ்மர் மிகுந்த சிரத்தையுடன், சிராத்தம் செய்து கொண்டிருந்த போது, பீஷ்மருடைய தகப்பனாரான சந்தனுவிற்கு, ஒரு எண்ணம் தோன்றியது. நம் மகன், நமக்காக சிராத்தம் செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய சாஸ்திர நம்பிக்கையை, நாம் சோதனை செய்து பார்க்கலாம்... என, நினைத்து, பிண்டப் பிரதானம் நேரத்தில் கொடுக்கும் பூமியை பிளந்து, கையை நீட்டி, மகனே பீஷ்மா... பிண்டத்தை என் கையில் கொடு... எனக் கேட்டார் சந்தனு. பீஷ்மரோ, தந்தையே... பிண்டத்தை, தரையில் பரப்பப்பட்ட தர்ப்பைகளின் மீது வைக்கச் சொல்லித் தான், சாஸ்திரங்கள் கூறுகின்றன. தந்தையின் கையில் கொடுக்கும்படி, அவை சொல்ல வில்லை... என்று சொல்லி, தந்தையின் கைகளை விலக்கி, தரையில் பரப்பப்பட்ட தர்ப்பைகளின் மீது வைத்தார். சந்தனு மகிழ்ந்து; பீஷ்மருக்கு ஆசி கூறி, அகன்றார். எனவே, சாஸ்திரங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை சிரத்தையுடன் கடைபிடித்து நடந்தாலே வாழ்வில் ஏற்படும் பாதி துன்பங்கள் மறையும்!

தர்மம் செய்ய முடியலையா?

சிலருக்கு கொடுக்கும் மனம் இருக்கும்; ஆனால், பணமிருக்காது. அப்போது, உதவ முடியாமல் போயிற்றே... என்ற, ஆதங்கம் ஏற்படும். கூடவே, தர்மம் செய்ய வழி இல்லாமல் போனதே... இதனால், நமக்கு சொர்க்கம் கிடைக்காதோ... என்ற, சந்தேகமும் எழும். இப்படி ஏங்குபவர்களுக்கென்றே ஏற்பட்ட விரதம் தான் ரத சப்தமி; இது சூரியனுக்குரிய விரதம். சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில், பவனி வருகிறான். இந்த ஏழு குதிரைகள் என்பது, வாரத்தின் ஏழு நாட்களை குறிக்கும். ரதம் என்பது காலச்சக்கரம்; காலையையும், மாலையையும் அடையாளம் காட்டி, காலம் கடந்து கொண்டிருக்கிறதே... எப்போது தர்ம காரியங்களைச் செய்யப் போகிறாய்... என்று கேட்டு, உலக மக்களுக்கு நினைவூட்டியும், தர்ம காரியங்களைச் செய்ய இயலாத ஏழைகளை, எளிய விரதத்தின் மூலமாக, தன் உலகத்திற்கு, சூரியன் அழைத்துக் கொள்பவதாக ஐதீகம்.

ரத சப்தமி விரதம் மிக எளிமையானது; ஆண்களும், பெண்களும் இதை அனுஷ்டிக்கலாம். சப்தமியன்று, காலையில், பெண்கள் தங்கள் தலையில், ஏழு எருக்க இலைகளும், அதன் மேல் சிறிது அட்சதையும் வைத்து நீராட வேண்டும். புனிதத்தலங்களுக்கு சென்று நீராடுவது இன்னும் நல்லது. அவ்வாறு செல்ல முடியாவிட்டால், கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட புனித தீர்த்தங்களை மனதால் நினைத்து, அவை தாங்கள் நீராடும் நீரில் கலந்திருப்பதாகக் கருதி, நீராட வேண்டும். சூரிய பகவானுக்கு பழம் நைவேத்யம் செய்து, பூக்களை மேல் நோக்கி தூவி, வணங்குவதுடன், உபவாசம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் கஞ்சி, பால் எடுத்துக் கொள்ளலாம். இந்த விரதத்தை கடைபிடிப்போருக்கு, தர்மம் செய்யாததால் ஏற்படும் குறை நீங்குவதுடன், அவர்களது வம்சத்தில், ஊனமில்லாத குழந்தைகள் பிறப்பர்; சந்ததியினர் ஏழ்மையில் இருந்து விடுபடுவர். மறுபிறவியில், உத்தம குடும்பத்தில் பிறப்பர். இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் திருமணம் ஆகாதவருக்கு, அழகான வாழ்க்கைத்துணை அமையும்; வாகன வசதி கிடைக்கும்; புத்திசாலியான குழந்தைகள் பிறப்பர்.

கல்வி, இசை, விளையாட்டு, இன்னும் அவரவருக்கு விருப்பமான துறையில் சிறந்து விளங்க, இவ்விரதத்தை, வளர்பிறை சப்தமிகளில் அனுஷ்டிக்கலாம். ரதசப்தமியன்று செய்யும் தானத்திற்கு மிகுந்த பலன் உண்டு. அன்று தானம் செய்வோருக்கு, செல்வவளம் கிடைக்கும். குறிப்பாக, குடை மற்றும் செருப்பு தானம் வழங்கினால், சூரியனின் அருள் பூரணமாகக் கிடைக்கும். இவ்விரதம் குறித்து அறிந்தோர், மற்றவர்களுக்கு சொல்லித் தரலாம். அவ்வாறு சொல்வோருக்கு, தேவலோகம் மற்றும் பிரம்மலோகத்தில் இடம் ஒதுக்கி வைக்கப்படும் என்கிறது சூரிய புராணம். எளிமையான இவ்விரதத்தை மேற்கொண்டு, உங்களால் முடிந்த தானத்தை செய்தால், வாழும் காலத்தில் செல்வ வளமும், வாழ்வுக்குப் பின் தேவலோகம் கிடைக்க வாய்ப்புண்டு. மறக்காமல் விரதமிருங்களேன்!

Wednesday, January 29, 2014

தை அமாவாசையில் அன்னாபிஷேகம் நடக்கும் பதஞ்சலி மனோகரர் கோயில்!

திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயிலில், தை அமாவாசையன்று அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு பதஞ்சலி மனோகரர், கிழக்கு நோக்கியும், அம்மன் மதுரபாஷினி தெற்கு நோக்கியும், அருள்பாலிக்கின்றனர். இக்கோயில்திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தஞ்சாவூர் ரோட்டில் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை காணலாம். பொதுவாக சிவன் கோயில்களில் ஐ ப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வர். இங்கு எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. பித் ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் தை அமாவாசை யன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், இங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர். விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். தொடர்புக்கு: 94894 79896

வழிபாட்டில் காகத்திற்கு சாதம் வைப்பது ஏன்?

காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்குச் சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பர் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்துபோன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாகக் கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்தப் பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடம் உள்ள பொருளை பிறருக்குப் பகுத்துண்டு வாழவேண்டும் என்று வள்ளுவர் நமக்கு போதித்திருக்கிறார். அப்பாடத்தை தவறாமல் பின்பற்றும் குணம் காகத்திற்கு இருக்கிறது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்தபின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப் பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுவது சரிதானே!

பிதுர் வழிபாட்டிற்கு உகந்த தை அமாவாசையின் சிறப்பு தெரியுமா?

ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. இருந்தாலும், தை அமாவாசை தினத்தில் பிதுர் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு. எனவேதான் உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது. அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ஆகியவை பிதுர் பூஜைக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவையன்றியும் பல தலங்கள் உள்ளன.

தமிழகத்தில் பிதுர் பூஜைக்குரிய இடங்கள் பல இருப்பதுபோல், வட நாட்டில் காசி, பத்ரிநாத், கயா போன்ற இடங்களில் எப்பொழுதும் எந்நாளிலும் பிதுர் பூஜை செய்யலாம். அந்த வகையில் காசியில் மணிகர்ணிகா கட்டம் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதேபோல் கேரளாவில் ஐவர் மடம் என்னும் தலம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள மயானத்தில் தினமும் அறுபதிலிருந்து எழுபத்தைந்து சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன. இந்த இடம் காசி கங்கைக்கரையோரம் உள்ள மணிகர்ணிகா காட் என்ற இடத்தை நினைவூட்டுகிறது. ஐவர் மடத்தின் அருகில் பாரதப் புழா என்னும் நதி ஓடுகிறது. இந்த நதியில் ஐந்து நதிகள் கலந்து வருவதால் மேன்மேலும் சிறப்புப் பெறுகிறது. இந்த நதிக்கரை அருகில்தான் மயானம் உள்ளது. காசி மணிகர்ணிகா காட் என்னுமிடத்தில் உள்ள மயானத்தில் சடலங்கள் தகனமாகிக் கொண்டேயிருக்கும். வெகுதூரத்திலிருந்து சடலங்களைக் கொண்டு வந்து தகனம் செய்வார்கள். இங்கு சிவன் ஏற்றி வைத்த நெருப்பு இன்றும் கனன்று கொண்டிருக்கிறது. அதிலிருந்து நெருப்பு எடுத்துதான் தகனத்திற்குத் தீமூட்டுவர்.

அதேபோல, ஐவர் மடம் மயானம் பஞ்சபாண்டவர்கள் மோட்சமடைந்த இடம் என்று கருதப்படுவதால், அவர்களது சடலங்கள் இங்கு எரியூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. (இது குறித்து வேறு கருத்துகளும் உள்ளன) விடியற்காலையிலேயே இந்த மயானம் சுறுசுறுப்படைகிறது. இங்கு காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை மட்டுமே சடலங்கள் எரியூட்டப்பட வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளதால், வெகுதூரத்திலிருந்தும் வாகனங்களில் குறித்த நேரத்திற்குள் வந்து, சடலத்திற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படி செய்து எரியூட்டுகிறார்கள். இங்கு மின்சார தகனம் என்பது கிடையாது. (காசியில் மின்சாரத் தகனம் செய்ய வசதி உள்ளது. தொடர்மழையால் விறகுக் கட்டைகளைப் பயன்படுத்த முடியாதபோது மின்சாரத் தகனத்தை மேற்கொள்கிறார்கள்.)

ஒவ்வொரு அமாவாசையிலும் ஐவர் மடத்தில் தர்ப்பணம், நீத்தார் வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக தை, ஆடி, ஐப்பசி, புரட்டாசி அமாவாசை நாட்களில் இங்கு முன்னோர்களுக்கான வழிபாடுகள் செய்ய கூட்டம் நிரம்பி வழியும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு இங்கு சிறப்புப்பூஜை, சடங்குகள் செய்தால், அவர்கள் ஆவியாக அலையாமல் சொர்க்கம் செல்லுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த மயானத்தின் அருகேயுள்ள ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் அதற்குரிய பூஜைகள், ஹோமங்கள் செய்து, அந்த ஆத்மாவைச் சாந்தப்படுத்தி மேலுலகத்திற்குச் செல்ல வழிசெய்கிறார்கள். பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கான வழிபாட்டினைச் செய்வதுடன், அன்னதானமும் செய்தால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும். அதில் தை அமாவாசை மேலும் சிறப்புமிக்கது!