Sunday, October 14, 2012

சுவாமி எதிரே நிற்காதீர்!

கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று சிலர் வழிபடுவதுண்டு. சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி என்கிறார் காஞ்சிப்பெரியவர். கருவறையில் சுவாமியின் இருபுறமும் நின்று தான் வணங்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். அப்போது தான் கடவுளின் கடைக்கண் படும். கடைக்கண்பார்வைக்கு தான் குளிர்ச்சியும், கருணையும் உண்டு. அபிராமியன்னையின் கடைக்கண்பார்வை நம் மீது பட்டால் கல்வி, செல்வவளம், ஒருநாளும் தளராத மனம், தெய்வீக வடிவம், வஞ்சமில்லாத நண்பர்கள் ஆகிய எல்லா நன்மைகளும் உண்டாகும் என அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார்.

Friday, October 12, 2012

துளசி வழிபாடு

ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா
வெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே
செவ்வாய்க் கிழமை செழிக்க வந்த செந்திருவே
தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன்
பச்சைப் பசுமை உள்ள துளஸி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே
ஹரியுடைய தேவி அழகீ நமஸ்தே
அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே
வனமாலை என்னும் மருவே நமஸ்தே
வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே
அன்புடனே நல்ல அருந்துளசி கொண்டுவந்து
மண்ணில் மேல்நட்டு மகிழ்ந்து நல்ல நீருற்றி
முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு
செங்காவிச் சுற்றமிட்டுத் திருவிளக்கும் ஏற்றிவைத்து
பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து
புஷ்பங்களைச் சொரிந்து பூஜித்த பேர்களுக்கு
என்ன பலனென்று ஹ்ருஷீகேசர்தான் கேட்க
மங்களமான துளசி மகிழ்ந்துரைப்பாள்
மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்
தீவினையைப் போக்கிச் சிறந்தபலன் நான் அளிப்பேன்
அரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்
தரித்திரத்தை நீக்கிச் செல்வத்தை நான் கொடுப்பேன்
புத்திரன் இல்லாதவர்க்குப் புத்திரபாக்கியம் அளிப்பேன்
கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்
முழுக்ஷúக்கள் பூஜை செய்யாதல் மோக்ஷபதம் கொடுப்பேன்
கோடீ காராம்பசுவைக் கன்றுடனே கொண்டு வந்து
கொம்புக்குப் பொன்னமைத்துக்குளம்புக்கு வெள்ளிகட்டி
கங்கைக் கரைதனிலே கிரஹண புண்யகாலத்தில்
வாலுருவி அந்தணர்க்கு மகாதானம் செய்த பலன்
நான் அளிப்பேன் சத்யம் என்றுநாயகியுமே சொல்லலுமே
அப்படியேயாக என்று திருமால் அறிக்கையிட்டார்
இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள்
அற்புதமாய் வாழ்ந்திடுவார் பரதேவி தன்னருளால்.

Thursday, October 11, 2012

இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?

உணவும், உடையும், இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய். வங்கியில் உனக்குப் பணமிருந்தால் உலகின் முதல் 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன். நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இறந்த பலரைவிட நீ பாக்கியவான். போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு. கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ. உன் பெற்றோர் பிரியாமலும் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள். உன்னால் தலைநிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன். இந்தச் செய்தியைப் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 200 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். எனவே இறைவன் நமக்கு அளித்த ஆசிகளை நினைவு கூர்ந்து முன்னேற வேண்டும் சோர்வடைய கூடாது.

Saturday, October 6, 2012

திருமணத்தடை நீங்க வழி

வெள்ளிக்கிழமை சூரியோதய வேளையில் நீராடி, துளசிச் செடிக்கு தண்ணீர் விட்டு மூன்று முறை வலம் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யுங்கள். தொடர்ந்து 12 வாரம் இதனைச் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வளர்பிறையில் இவ்வழிபாட்டைத் தொடங்குங்கள்.

Thursday, October 4, 2012

கந்தர் அனுபூதி - கடவுளைக் காண,கல்வியில் மெச்ச,குடிகளை தன்வசமாக்க,பெண்ணாசை ஒழிக்க,கற்பழியாதிருக்க

காப்பு

கடவுளைக் காண,கல்வியில் மெச்ச,குடிகளை தன்வசமாக்க,பெண்ணாசை ஒழிக்க,கற்பழியாதிருக்க

விபூதி தியானம்

நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்தருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற்புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

நூல்

1.  மதயானையை வெல்ல

ஆடும் பரிவேல் அணி சேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே.

2. வணங்காரை தண்டிக்க

உல்லாச நிராகுலயோ கவிதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூபதியே.

3. கல்வியில் மெச்ச

வானோ புனல் பார்கனன் மாருதமோ
ஞானோதயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனைஆண்ட இடந்
தானோ பொருளாவது சண்முகனே.

4. துறவு பெற

வளைபட்ட கைமாதொடு மக்களெனும்
தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ
கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும்
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.

5. மாயை ஒழிக்க

மகமாயை களைந்திட வல்லபிரான்
முகம்ஆ றும் மொழிந்தும் ஒழிந்திலனே
அகம் மாடை மடந்தையர் என் று அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.

6. மாதரைத் தழுவ

திணியா னமனோ சிலைமீ துஉனதாள்
அணியார் அரவிந் தம்அரும் புமதோ
பணியா எனவள் ளிபதம் பணியும்
தணியா அதிமோ கதயா பரனே.

7. தீராப்பணி தீர

கெடுவாய் மனனே கதிகேள் கரவாது
இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
கடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே.

8. குடிகளை தன்வசமாக்க

அமரும் பதிகேள் அகம்ஆம் எனும் இப்
பிமரம் கெடமெய்ப்பொருள் பேசியஆ
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொருதான வநாசகனே.

9. பெண்ணாசை ஒழிக்க

மட்டூர் குழல் மங்கையர்மை யல்வலைப்
பட்டு ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்
தட்டூடறவேல் சைலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.

10. நமனை விலக்க

கார்மா மிசைக்கா லன்வரிற் கலபத்
தேர்மா மிசைவந் துஎதிரப் படுவாய்
தார்மார் ப வலா ரிதலா ரிஎனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.

11. தணிகை சேர்க்க

கூகா எனஎன் கிளைகூ டியழப்
போகா வகை மெய்ப்பொருள் பேசிய வா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகாசுரலோக சிகாமணியே.

12. களவு வெல்ல

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இருசொல் அறஎன்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

13. இருள் வழி நடக்க

முருகன் தனிவேல் முனிநங்குரு என்று
அருள்கொண்டு அறியார் அறியுந்தரமோ
<உருஅன்று அருஅன்று உளதுஅன்று இலதுஅன்று
இருள்அன்று ஒளிஅன்று எனநின்றதுவே.

14. பாரி தரிசனம் செய்ய

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழிநாசியொடும் செவிஆம்
ஐவாய் வழிசெல்லும் அவா வினையே.

15. அஷ்டாவதானம் செய்ய

முருகன் குமரன் குகன்என்று மொழிந்து
உருகுஞ்செய் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண் குணபஞ்சரனே.

16. பேராசை விலக்க

பேராசை எனும் பிணியிற் பிணிபட்டு
ஓரா வினையேன் <உழலத் தகுமோ
வீரா முதுசூர் படவேல் எறியும்
சூரா சுரலோக துரந்தரனே.

17. தன்னடத்தை மேன்மையாக்க

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாம் ஏன் நடவீர் நடவீர் இனியே.

18. கற்பழியாதிருக்க

உதியா மரியா வுணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதிகா வலசூர பயங்கரனே.

19. இல்வாழ்க்கை நீக்க

வடிவுந் தனமும் மனமும் குணமும்
குடியுங் குலமும் குடிபோகிய ஆ
அடிஅந்தம் இலா அயில்வேல் அரசே
மிடியென்றொரு பாவிவெளிப் படினே.

20. அனுக்கிரகம் பெற

அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியஆ
விரிதாரண விக்ரமவேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே.

21. திருவடி வணங்க

கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தரஎன்று இசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூர விபாடணனே.

22. தவம் பெற

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியஆ
பாளைக் குழல் வள்ளிபதம் பணியும்
வேளைச் சுரபூ பதிமே ருவையே.

23. சலிகை சொல்ல

அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடி விக்ரமவேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங்குண பூதரனே.

24. மாதர் வலையில் அகப்படாதிருக்க

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள்சேரவும் எண்ணுமதோ
சூர்வேரொடு குன்று தொலைத்த நெடும்
போர்வேல புரந்தர பூபதியே.

25. மகாவினை ஒழிக்க

மெய்யே எனவெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே நியசே வகனே.

26. யாருமற்ற பேருக்கு ஆதாரமாக

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒருசற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத மனோ
தீதா சுரலோக சிகாமணியே.

27. பாக்கியத்தை விதிவழி அனுபவிக்க

மின்னே நிகர்வாழ்வை விரும்பியயான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயில் ஏறியவானவனே.

28. தான் அவனாக

ஆனா அமுதே அயில்வே அரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றதுதற் பரமே.

29. கடவுள் முன் கோபம் மாற்ற

இல்லே எனும் மாயையில் இட்டனைநீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லே புரிபன்னிருவா குவில்என்
சொல்லே புனையுஞ் சுடர் வேலவனே.

30. வழக்கு பேச

செவ்வான் உருவின் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

31. கடவுள் முன்னிலையில் ஞானம் பெற

பாழ்வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னைவிதித் தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனிநீ மயில்வாகனனே.

32. கொலை மறக்க

கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ
கொலையே புரிவேடர் குலப் பிடிதோய்
மலையே மலைகூ றிடுவா கையனே.

33. வியாகூலம் ஒழிக்க

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்றுவிடப் பெறுவேன்
மந்தாகினி தந்தவரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே.

34. பெண்களைத் தாயாக நினைக்க

சிங்கார மடந்தையர் தீ நெறிபோய்
மங்காமல் எனக்குவரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்கா நதிபா லக்ருபா கரனே.

35. சரீர வாஞ்சை ஒழிக்க

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதி காணமலர்க் கழல்என்று அருள்வாய்
மதிவாள் நுதல்வள்ளியை அல்லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே,

36. கடவுளைக் காண

நாதா குமரா நமஎன்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின்பத சேகரனே.

37. தனது அகந்தையை ஒழிக்க

கிரிவாய் விடுவிக்ரமவேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம்மே வலையே
புரிவாய் மனனே பொறைஆம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.

38. பிசாசம் ஒழிக்க

ஆதாளியை ஒன்றறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாளகிரா தகுலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.

39. ஜனனம் எட்டாதிருக்க

மாவேழ் சனனம் கெட மாயை விடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங்கரதே சிகனே.

40. மாயை தெளிய

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசும்
தினையோடு இதணோடு திரிந்தவனே.

41. நித்திய தேகம் பெற

சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
சாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே.

42. நின்ற நிலை நிற்க

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த் திடலும்
செறிவற்று உலகோடு உரைசிந்தையும்அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே.

43. ஆசானாகி அனுக்கிரகிக்க

தூசாம் அணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதுஅன்பு அருளால்
ஆசா நிகளம் துகள் ஆயினபின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.

44. குரு மந்திரம் பெற

சாடுந் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர்மா முடிவே தமும்வெம்
காடும் புனமும் கமழுங் கழலே.

45. கல்வியிற் சம்பாவிக்க

கரவாகிய கல்வியுளார் கடைசென்று
இரவா வகை மெய்பொருள் ஈ குவையோ
குரவா குமரா குலிசாயுதகுஞ்
சரவா சிவயோ கதயா பரனே.

46. மனவருத்தம் தீர

எந்தாயும் எனக்கருள் தந்தையும்நீ
சிந்தாகும் ஆனவை தீர்த்தெனைஆள்
கந்தா கதிர்வே லவனே உமையாள்
மைந்தா குமரா மறைநாயகனே.

47. ஆனந்த நடனம் காண

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறும்ஆறு உளதோ
சீறா வருசூர் சிதைவித்து இமையோர்
கூறுஆ உலகம் குளிர்வித்தவனே.

48. தற்சொரூபம் காண

அறிவுஒன்று அறநின்று அறிவார் அறிவில்
பிறவுஒன்று அறநின்ற பிரான் அலையோ
செறிவுஒன்று அறவந்து இருளே சிதைய
வெறிவென்றவரோடு உறும் வேலவனே.

49. தன்னை அறிந்து கொள்ள

தன்னந்தனி நின்றது தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னம் களையும் க்ருபைசூழ் சுடரே.

50. அவா அறுக்க

மதிகெட் டுஅறவாடி மயங்கி அறக்
கதிகெட் டுஅவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞானசுகாதிப அத்
திதிபுத்திரர் வீறு அடு சேவகனே.

51. நினைத்தபடி தரிசனம் கொடுக்க

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

வேலும் மயிலும் துணை!

Wednesday, October 3, 2012

இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்?

ஒரு ஆசிரமத்தில் சீடன் ஒருவன் மரக்கன்று ஒன்றை நட்டுவிட்டு, ஆண்டவனே இம்மரக்கன்று சீக்கிரம் வளரவேண்டும்... எனவே நிறைய மழை பெய்யட்டும் என்று வேண்டினான். அவ்வாறே மழை அதிகம் பெய்தது. ஊறிப் போன மரக்கன்று அழுகிவிடுமோ என பயந்தான் சீடன். இறைவா, மழையை நிறுத்தி நல்ல வெயில் அடிக்கும்படி செய்..! என்று வேண்டினான். அப்படியே வெயில் அடித்ததில் செடி வாட ஆரம்பித்தது. பதறிப்போன சீடன், வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம், பனி பொழியட்டும்! என்று பிரார்த்தித்தான். தட்பவெப்பம் அடிக்கடி மாறியதில் தாக்குப் பிடிக்காமல் செடி பட்டுப் போனது. இறைவனுக்கு கருணையே இல்லை என குருவிடம் முறையிட்டான் சீடன். எல்லாம் கேட்டபின் குரு சொன்னார், தன் படைப்பில் எதற்கு எப்போது என்ன தேவை என்பது இறைவனுக்குத் தெரியும். சுயநலத்திற்காக அதனை மாற்ற நினைத்து வேண்டினால் இப்படித்தான் ஆகும்! உணர்ந்த சீடன், மற்றொரு மரக்கன்றை நட்டுவிட்டு, இறைவா, இதை நீயே பார்த்துக் கொள்! என வேண்ட ஆரம்பித்தான். எனவே சுயநலம் இன்றி இறைவனை வழிபடுவதே சிறப்பைத்தரும்.

Tuesday, October 2, 2012

வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை தெரியுமா?

கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி, தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம், தனித்த காளியும், கால கண்டன் படமும் ஆகாது, சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது, நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது, சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது, ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும் கோபவேசமாக தவ நிலையிலுள்ளதும், தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது.