Tuesday, August 7, 2012

மரணத்தின் பின்.. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது?

மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது.  யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை..
பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது. இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன.  நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.

Monday, August 6, 2012

ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவதும் வழக்கம், இது ஏன் தெரியுமா? ..  ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்-இவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிடவேண்டும். அதன்பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற வேண்டும். இந்த முறையை எல்லாரும் பின்பற்றுவது நல்லது.

Sunday, August 5, 2012

கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா?

கடவுளின் திருவுருவம் கண் முன்னே  இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

காற்றடித்து கற்பூரம், விளக்கு அணைந்துவிட்டால் மனம் வருந்துகிறதா?

காற்றடிப்பதை நிறுத்த இயலாது. இது இயற்கையாக நிகழ்வது. இதுபோன்ற இடங்களில் நாம் தான் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். கனத்த திரியாகப் போட்டு விளக்கேற்றலாம். கற்பூரத்தை கட்டியாக வைக்காமல் நொறுக்கி தூளாக நிறைய வைத்து ஏற்றலாம். இவையும் மீறி காற்றில் அணைந்தாலும் வருத்தப்படத் தேவையில்லை. மீண்டும் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?

செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

Thursday, August 2, 2012

காமாட்சி ஸ்தோத்திரம்(மந்திரங்கள் சித்திக்க)

மந்திரங்கள் சித்திக்க

காஞ்சீ நூபுர ரத்ன கங்கண லஸத்
கேயூர ஹாரோஜ்வலாம்
காச்மீராருண கஞ்சுகாஞ்சித குசாம்
கஸ்தூரிகா சர்ச்சிதாம் னு
கல்ஹாராஞ்சித கல்பகோ ஜ்வலமுகீம்
காருண்ய கல்லோலினீம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

காமாராதி மன: ப்ரியாம் கமலபூ
ஸேவ்யாம் ரமாராதிதாம்
கந்தர்பாதிக தர்பகான விலஸத்
ஸெளந்தர்ய தீபாங்குராம்
கீராலாப வினோதினீம் பகவதீம்
காம்ய ப்ரதான வ்ரதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

காதம்ப ப்ரமதாம் விலாஸ கமனாம்
கல்யாண காஞ்சீ ரவாம்
கல்யாணாசல பாத பத்ம யுகளாம்
காந்த்யா ஸ்மரந்தீம் சுபாம்
கல்யாணாசல கார்முகப்ரியதமாம்
காதம்ப மாலாச்ரியாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

கந்தர்வாமர ஸித்தசாரண வதூம்
த்யாயேத்பதா காஞ்சிதாம்
கௌரீம் குங்கும பங்க பங்கித ருசாம்
த்வந்த்வாபி ராமாம் சுபாம்
கம்பீரஸ்மித விப்ரமாங்கித முகீம்
கங்காதராலிங்கிதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

விஷ்ணு ப்ரஹ்ம முகாமரேந்த்ர பரிஷத்
கோடீர பீடஸ்த்தலாம்
லாக்ஷõ ரஞ்ஜித பாத பத்மயுகளாம்
ராகேந்து பிம்பானனாம்
வேதாந்தாகம வேத்ய சிந்த்ய சரிதாம்
வித்வஜ்ஜனைராவ்ருதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

மாகந்த த்ரும மூலதேச மஹிதே
மாணிக்ய ஸிம்ஹாஸனே
திவ்யாம் தீபித ஹேமகாந்தி நிவஹா
வஸ்த்ரா வ்ருதாம் தாம் சுபாம்
திவ்யா கல்பித திவ்யதேஹ பரிதாம்
த்ருஷ்டி ப்ரமோதார்பிதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

ஆதாராதி ஸமஸ்த சக்ரநிலயாம்
ஆத்யந்த சூன்யாமுமாம்
ஆகாசாதி ஸமஸ்தபூத நிவஹா
காராம் அசேஷாத் மிகாம்
யோகீந்த்ரைரபி யோகினீ சதகணை
ராராதிதா மம்பிகாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

ஹ்ரீங்கார ப்ரணவாத்மிகாம் ப்ரணமதாம்
ஸ்ரீ வித்யவித்யாமயீம்
ஐம் க்லீம் ஸெளம் ருசி மந்த்ர மூர்த்தி
நிவஹா காரா மசேஷாத்மிகாம்
ப்ரஹ்மானந்த ரஸானுபூத மஹிதாம்
ப்ரஹ்மப்ரியம்வாதினீம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

ஸித்தானந்த ஜனஸ்ய சின்மய ஸூகா
காரா மஹோயோகிபி
மாயா விச்வ விமோஹினீம் மதுமதீம்
த்யாயேத் சுபாம்ப்ராஹ்மணீம்
த்யேயாம் கின்னர ஸித்தசாரண வதூ
த்யேயாம் ஸதா யோகிபி
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

காமாரிகாமாம் கமலாஸனஸ்த்தாம்
காம்யப்ரதாம் கங்கண சூடஹஸ்தாம்
காஞ்சீ நிவாஸாம் கனக ப்ரபாஸாம்
காமாக்ஷீ தேவீம் கலயாமி சித்தே

Wednesday, August 1, 2012

பழங்களின் ஆன்மீக மற்றும் மருத்துவ குணங்கள்!

இறைவழிபாட்டில்  பழ வகைகளும் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. பொதுவாக மா, பலா, வாழை போன்ற கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுகிறோம். புராதன காலம் முதலாக முனிவர், ரிஷிகள் சமைத்த உணவைத் துறந்து பெரும்பாலும் பால், பழம், ஆகியவற்றை உண்டார்கள். இதனால் நீண்ட காலம் திடகாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள். இதை புராண இதிகாசக் கதைகளும் எடுத்து கூறியுள்ளன. நாரதர் கொடுத்த மாங்கனிக்காக விநாயகரும் முருகனும் போட்டியிட்ட கதையை நாம் அறிவோம், அதேபோல் அதியமான் கொடுத்த நெல்லிக்கனியை உண்டதால் அவ்வைப் பிராட்டி நீண்டகாலம் வாழ்ந்த வரலாறும் உண்டு. பழங்களில் உள்ள சத்துக்கள் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இத்தகைய காரணங்களினால் இறைவழிபாட்டில் பழங்கள் ஒரு முக்கிய இடம் பெறுகிறது.

பழங்களின் மருத்துவ குணங்கள்:
ஆப்பிள் வயிற்றுப்போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரக கோளாறுகள், சிறுநீரகத்தில் கல், இதய நோய்கள் ஆகியவைகளுக்கு நல்லது. நாவல் பழம் நீரிழிவை நீக்கும். வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும். திராட்சை ஒரு வயது குழந்தையின் மலக்கட்டு, சளி ஆகியவற்றை நீக்கும். காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் கொடுத்து வந்தால் நீங்கும். கொய்யாப்பழத்தால் உடல் வளர்ச்சியும், எலும்புகளும் பலம் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படும். சிவப்பு திராட்சை, தோல் வியாதியை போக்கும். திராட்சை, ஆப்பிள், எலுமிச்சை - மலச்சிக்கலைப் போக்கும். பப்பாளி, ஆரஞ்சு - மூல வியாதிக்காரர்களுக்கு நல்ல பயன் தரும். திராட்சை, சாத்துக்குடி - ரத்த அழுத்தத்திற்கு