Thursday, May 10, 2012

நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வருகிறேன். இதை என் ஆயுள் முழுவதும் கடைபிடிப்பது சரிதானா?

நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வருகிறேன். இதை என் ஆயுள் முழுவதும் கடைபிடிப்பது சரிதானா?
ஏன் இந்த சந்தேகம் உங்களுக்கு? தினமும் கோயிலுக்குச் சென்று மனநிறைவோடு வலம் வாருங்கள். ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் நடத்துங்கள்

Wednesday, May 9, 2012

அசைவம் சாப்பிடுவது பாவமா?

அஹிம்சா பரமோ தர்ம என்கிறது சாஸ்திரம். பிற உயிர்களைத் துன்புறுத்தாமையே மேலான தர்மம். எந்த உயிரையும் கொல்லாமல் வாழ்வதைத் தம் வாழ்நாள் தவமாக ஞானிகள் ஏற்று வாழ்ந்தனர். இந்து தர்மத்தின் அடிப்படையான கொள்கையே அகிம்சை என்னும் தர்மம் தான். அசைவம் சாப்பிட்டால் அஞ்ஞானம் உண்டாகும். மருத்துவ உலகம் உடல்நலனுக்கு சைவ உண்வையே சிபாரிசு செய்கிறது. மாமிசம் உண்பதைப் பாவமா? என்று கேட்டிருக்கிறீர்கள். மகா மகா பாவம் என்ற உண்மையை உணருங்கள். மரக்கறி உணவே ஆன்மிக வாழ்விற்கு உகந்தது.

உண்மை பேசினால் என்ன நன்மை?

உண்மையை மட்டுமே பேச வேண்டும், சத்தியநெறியை மட்டும் கடைபிடிக்க வேண்டும். என்ன வந்தாலும், எது நடந்தாலும் இதயத்து மாளிகையில் சத்தியத்தை மட்டுமே குடியமர்த்த வேண்டும். இதனால், என்ன லாபம் என்பதற்கு உதாரணகர்த்தா திருக்கடையூர் அபிராமி பட்டர். இவர் மீது பொறாமை கொண்ட சிலர், சரபோஜி ராஜாவிடம் சென்று, நமது ஊர் அபிராமி கோயிலில் ஒரு பைத்தியம் வேலை செய்கிறது. அம்பாள் முன்னால் கண்ணை மூடிக்கொண்டு ஏதேதோ பிதற்றுகிறது. இவரது பிதற்றலைக் கேட்டு அம்பாளுக்கும் கஷ்டம், பக்தர்களுக்கும் கஷ்டம், என்றனர். ஆனால், அம்பாள் எல்லாம் அறிந்தவள் அல்லவா! அபிராமிபட்டர் சத்தியநெறி தவறாதவர், தன் முன்னால் அமர்ந்து சத்தியத்தை மட்டுமே பேசுபவர் என்பதை ஊருக்கு உணர்த்த முடிவெடுத்தாள். ஒருநாள் சரபோஜி கோயிலுக்கு வந்தார். இன்று என்ன திதி? என பட்டரிடம் கேட்டார். அவர்  அம்பாளின் முகத்தை பூரணசந்திரனாகக் கற்பனை செய்து லயித்திருந்த வேளை அது. பவுர்ணமி என்றார். இன்று அமாவாசையல்லவா! பவுர்ணமி என்கிறானே, நிச்சயம் இவன் பைத்தியம் தான், என்று நினைத்த சரபோஜி, இதுதான் பவுர்ணமி வானமா? என்று கேலியாக சிரித்தபடியே தலையைத் தூக்கினார். நிஜமாகவே வானில் சந்திரன் இருந்தான். அதாவது, சத்தியம் பேசுபவர்கள், தவறாகவே ஏதும் சொன்னாலும் கூட அது சத்தியமாகி விடுகிறது. அதனால் தான் சத்தியத்தைக் கடைபிடிக்கும் மகான்கள் சொல்வதெல்லாம் பலித்து விடுகிறது. சத்தியத்தின் மதிப்பை அறிந்து சத்தியத்தின் பக்கம் திரும்புங்கள். கலியுகத்தில் இது சாத்தியமா என்றெல்லாம் சாக்குப்போக்கு சொல்லாமல் சத்தியத்தின் பக்கம் போனால் நன்மை நமக்குத்தான்!

தலையெழுத்தை மாற்றும் பரிகாரம்

ஒருமனிதனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அவனவன் தலையெழுத்துப்படி நடக்கும் என்று குறிப்பிடுவர். பிறந்த நட்சத்திரம், திதி, வாரம், கரணம், யோகம் ஆகிய ஐந்தும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஐந்தும் சேர்ந்ததை பஞ்சாங்கம் என்று குறிப்பிடுவர். தலையெழுத்தை படைப்புக்கடவுளான பிரம்மாவே தன் கையால் நம் தலையில் எழுதுவதாக ஐதீகம். அதனால் இதற்கு பிரம்ம லிபி என்றும் பெயருண்டு. இதன்படி நவக்கிரகங்களும் மனித வாழ்வில் நன்மையோ, தீமையோ ஏற்படுத்துகின்றன. இறைபக்தியால் மட்டுமே பிரம்மலிபியை மாற்ற முடியும். அருணகிரிநாதர் முருகப்பெருமானைப் போற்றும்போது, நின் கால்பட்டு அழிந்தது அயன்(பிரம்மா) கையெழுத்தே என்று குறிப்பிடுகிறார். இதனால் தான், பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை என்று சொல்லுவர்.

Monday, May 7, 2012

நிவேதனத்தை சுவாமி சாப்பிடுவாரா?

தீபாவளி வந்தால் பலகாரங்களை சுவாமியின் முன் படைக்கிறோம். பொங்கல் வந்தால் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்கிறோம். கிருஷ்ணஜெயந்தி வந்தால் சீடை, முறுக்கு என வைக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் சிலர் கேலியாக, சுவாமியா சாப்பிடுகிறார், அவர் பெயரைச் சொல்லி நீங்கள் சாப்பிடுகிறீர்கள், என கேலி செய்வர். இவ்வாறு கேலி செய்பவர்களிடம் சற்றும் கோபப்பட நமக்கு உரிமையில்லை. ஏனெனில், அவர்கள் உண்மையைத் தான் சொல்கிறார்கள். நிவேதனம் என்பதன் பொருளை அறியாமல் அவர்கள் பேசினாலும் நிஜம் அது தான். நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட வைத்தல் என்பது பொருள் அல்ல. அறிவித்தல் என்று அர்த்தம். இறைவா! இந்த சமயத்தில் எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு நன்றி தெரிவிக்கிறேன், என்று அறிவிப்பதே நிவேதனமாகும். சுவாமியின் முன்னால் இலைபோட்டு விழாநாட்களில் மட்டுமே நிவேதனம் செய்கிறோம். இதை தினமும் செய்யலாம். நம் வீட்டில் அன்றாடம் சமைக்கும் வெள்ளை அன்னத்தை சுவாமிக்கு  நிவேதனம் செய்துவிட்டு, அவரது நினைவோடு சாப்பிட்டால் உடலும் சுத்தமாகும், உள்ளமும் சுத்தமாகும். நோயில்லா வாழ்வு அமையும்.

Friday, May 4, 2012

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பம்: புராணம் கூறும் அக்னி நட்சத்திரத்தின் பிறப்பு!

மதுரை: இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. சூரியன் மேஷராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் உச்சபலத்தைப் பெறுகிறார். அதனால், சூரியனின் கிரணங்கள் மிகுந்த ஆற்றலோடு பூமியை வந்தடைகின்றன. இதை அக்னி நட்சத்திர காலம் என்று பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன. கிராமப்புறங்களில் "முன்னேழு பின்னேழு நாட்களான சித்திரையின் கடைசி ஏழு நாட்களும், வைகாசியின் முதல் ஏழுநாட்களுமாக, 14 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாகும் என்று சொல்வர். மே 4 காலை 6.59 மணிக்கு துவங்கும் அக்னி நட்சத்திரம், 28 இரவு1.50க்கு முடிகிறது. இக்காலகட்டத்தில் அம்மை, வேனல்கட்டி போன்ற உஷ்ண வியாதிகள், தோல்நோய்கள் தலைகாட்டும் அபாயம் உண்டு. நீர்மோர், இளநீர், பானகம், நுங்கு, வெள்ளரி ஆகிய குளிர்ச்சி தரும் உணவு வகைகளையும், பழங்களையும் சாப்பிடுவது நன்மை தரும்.


புராணக்கதை: முன்னொரு காலத்தில் சுவேதகி யாகத்தில் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய் ஊற்றி யாகம் செய்தனர். தொடர்ந்து அக்னி தேவன் அந்த யாக நெய்யை உண்டதால் உடலில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருந்து காண்டவ காட்டை அழித்து உண்பதுதான் என்று ஆலோசனை கூறப்பட, காண்டவ வனத்தை நோக்கிச் சென்றான் அக்னிதேவன். அதனை அறிந்து அக்காட்டில் வசித்த உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் வருணனிடம் உதவி வேண்டின. எனவே வருணன் இடைவிடாது மழை பெய்தான். அதனால் அக்னியால் காட்டை அழிக்க முடியவில்லை. எனவே அக்னி தேவன் திருமாலிடம் உதவி வேண்டினான். திருமால், அர்ச்சுனனிடம்  அக்னிக்கு உதவச் சொன்னார். அர்ச்சுனன் தன் கணைகளால் அந்தக் காட்டை மறைத்து சரக்கூடுகட்டி தீ அணையாது எரிய உதவினான். அப்போது திருமால் அக்னிக்கு ஒரு நிபந்தனை விதித்தார். உனக்கு இருபத்தோரு நாட்கள் அவகாசம் தருகிறேன். அதன்பின் நீ காட்டை அழிக்கக் கூடாது என்றார். எனவே அக்னி 7 நாட்கள் மெதுவாக எரிந்து பின் 7 நாட்கள் வேகமாக எரிந்து கடைசி 7 நாட்கள் வேகம் குறைந்து உண்டபின் திரும்பினான். அதுவே அக்னி நட்சத்திர காலம் என புராணக்கதை கூறுகிறது.  

Tuesday, May 1, 2012

ஜோதிடர் சொல்லும் பரிகாரப்படி குறிப்பிட்ட கோயிலில் தான் வழிபட வேண்டுமா?

ஒவ்வொரு கோயிலுக்கு ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கிறது. இன்ன தோஷத்திற்கு இன்ன தலத்தில் பரிகாரம் கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினால் நம்பிக்கையோடு அதனைச் செய்யுங்கள். கண்டிப்பாக பயன் கிடைக்கும். நளதமயந்தி சரித்திரத்தில், திருநள்ளாறு சென்று வழிபட்ட பிறகு தான் அவர்கள் வாழ்க்கை மீண்டும் இன்பமயமானதாக தகவல் இருக்கிறது. எல்லா கோயில்களிலும் சனீஸ்வரன் இருந்தாலும், சனிக்கே தோஷம் ஏற்பட்டு அது விலகிய தலமாக திருநள்ளாறு விளங்குவதால் தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது. இதேபோன்று தான் ஒவ்வொருபரிகாரத் தலமும்.