Wednesday, March 23, 2011

விரதங்களும் அவற்றின் பலனும்!




நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.


சோமவார விரதம்


நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
சிறப்பு தகவல் :  கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.



பிரதோஷம்


நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.
சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.


சித்ரா பவுர்ணமி விரதம்


நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
தெய்வம் : சித்திரகுப்தர்
விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.
தை அமாவாசை விரதம்
நாள் : தை அமாவாசை
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
பலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி
சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
கந்தசஷ்டி விரதம்
நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.
பலன் :  குழந்தைப்பேறு


மங்களவார விரதம்


நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்
தெய்வம் : பைரவர், வீரபத்திரர்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்
பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்
உமா மகேஸ்வர விரதம்
நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி
தெய்வம் : பார்வதி, பரமசிவன்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.


விநாயக சுக்ரவார விரதம்


நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்
தெய்வம் : விநாயகர்
விரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.
பலன் : கல்வி அபிவிருத்தி


கல்யாணசுந்தர விரதம்


நாள் : பங்குனி உத்திரம்
தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)
விரதமுறை : இரவில் சாப்பிடலாம்
பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்


சூல விரதம்


நாள் : தை அமாவாசை
தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்
விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்
பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்
இடப விரதம்
நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி
தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.
பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு


சுக்ரவார விரதம்


நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்
தெய்வம் : பார்வதி தேவி
விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்
பலன் : மாங்கல்ய பாக்கியம்


தைப்பூச விரதம்


நாள் : தை மாத பூச நட்சத்திரம்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : திருமண யோகம்


சிவராத்திரி விரதம் 




நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
தெய்வம் : சிவன்
விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
பலன் : நிம்மதியான இறுதிக்காலம்


திருவாதிரை விரதம்


நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்
தெய்வம் : நடராஜர்
விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.
பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்
சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.
கேதார விரதம்


நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.
தெய்வம் : கேதாரநாதர்
விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.
பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்


விநாயகர் சஷ்டி விரதம்


நாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்
தெய்வம் : விநாயகர்
விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.
பலன் : சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.


முருகன் சுக்ரவார விரதம்


நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்ரமணியர்
விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.
கிருத்திகை விரதம்


நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்
பலன் : 16 செல்வமும் கிடைத்தல்


நவராத்திரி விரதம்


நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை
தெய்வம் : பார்வதிதேவி
விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம். 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை) முழுமையாக சாப்பிடக் கூடாது.
பலன் : கல்வி, செல்வம், ஆற்றல்

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!






1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.

2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.

3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.

4. முருகன்: முருகு  அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.

5. குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.

6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.

7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.

8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.

9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.

10. சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.

11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.

12. சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.

13. செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.

14. சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.

15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.

16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.

17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.

18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.

19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.

20. சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.

21. வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.

23. மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
24. தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின்  12 தோள்களை குறிக்கும்.  18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும்.  ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.


பாம்பன் சுவாமிகள் விளக்கம்
ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.

Friday, March 18, 2011

ஆன்மீக வகுப்பறை! - II

காலங்களுக்குரிய சிவ தரிசனப் பலன்!
 
காலை - பிணி போக்கும்
நண்பகல் - தனம் பெருகும்
சந்தியாகாலம் (மாலை) - பாவம் அகற்றும்
அர்த்த சாமம் - வீடுபேறு அளிக்கும்.
 
 
 

ஆன்மீக வகுப்பறை! - விநாயகரின் ஐந்து கரங்கள்

1. துதிக்கையில் நீர்க்குடம்
2. பின் இரண்டு கைகளில் பாசம், அங்குசம்
3. முன் கைகளில் ஒடிந்த கொம்பு (தந்தம்) இடக்கையில் மோதகம் அமுத கலசம் என்றும் கூறப்படும்.

அஷ்ட ஐசுவரியம்!

தனம், தான்யம், நிதி, பசு,
புத்திரர், வாகனம், இசை, தைர்யம்.


அஷ்ட பரிமளம்


சந்தனம், புனுகு, கோரோசனை, கஸ்தூரி, ஜவ்வாது, அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ இவைகளின் அபிஷேகம் சிவனுக்கு உகந்தது.
செல்வம், சுற்றம், புகழ், நற்செயல், கல்வி இவை வரிசைப்படி ஒன்றைக் காட்டிலும் ஒன்று சிறந்தது.

Friday, March 4, 2011

கோலோகத்தை அடைய கோமாதா வழிபாடு!




                              கோலோகத்தை அடைய கோமாதா வழிபாடு!


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றில் இருந்துவரும் கோமயம்(சாணம்), கோமூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது. இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். வைகுண்டத்திற்கும்  ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது விளங்குவது கோலோகம்.








அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்!

அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கோயில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோயில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம். புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோயில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து செல்வாராம். இக்கோயில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார். மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன் வாசுகி சிலைகள் உள்ளன. ஒவ்வொர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோயிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோயில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோயிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.



மயிலம் முருகன் கோயிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள். அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோயில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரமாக இருக்கிறது. இக்கோயில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முற்பட்ட கோயிலாகும். நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தக் கோயிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சன்னதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப் பெருமாள் கோயில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோயிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல் மரப் பொந்திலிருந்து வருகிறது. கோயிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.


1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.


2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.


3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.


4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.


5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால்  30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.


6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.


7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.



8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.


9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான்
காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.


10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.


11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.


12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.


13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.


14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.


15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.


16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.


17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.


18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.


19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும்  மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.


20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது. எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.


21. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார்