Tuesday, December 24, 2013

சென்னையில் நவக்கிரகங்கள் நேரில் வந்து தங்கி வழிபட்ட சிவாலயங்கள்



சென்னையில் நவக்கிரகங்கள் நேரில் வந்து தங்கி வழிபட்ட சிவாலயங்கள் இருக்கின்றன.இவைகளில் நமக்கு எந்தக் கிரகம் பலவீனமாக இருக்கின்றனவோ,அந்த சிவாலயம் சென்று வழிபட கிரகபலம் உண்டாகும்.


சூரியன் வழிபட்ட சென்னை சிவாலயம் சிவமிகு.அகத்தீசுவரர்+ஆனந்தவல்லி திருக்கோவில் கொளப்பாக்கத்தில் இருக்கிறது.எம்.54பி என்ற பேருந்தில் பயணித்து,கொளப்பாக்கம் அண்ணாசிலை(வாட்டர்டேங்க்) பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால்,கோவிலுக்குச் செல்ல முடியும்.குன்றத்தூர் ரோட்டில் பாய்க்கடையிலிருந்து 1.5 கி.மீ.கொளப்பாக்கம் அண்ணாசிலையிலிருந்து சிறிது தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
கி.பி.878 இல் ஆதித்ய சோழன் மற்றும் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கி.பி.1152 இல் திருப்பணி செய்யப்பட்ட இத்திருக்கோவில் நன்கு பராமரிக்கப்பட்டு தினசரி வழிபாடு நடைபெற்று வருகிறது.இங்கே ருணவிமோசன லிங்கம் ஒன்றும் இருக்கிறது.


சந்திரன் வழிபட்ட சென்னை சிவாலயம் சிவமிகு:சோமநாத ஈசுவரர்+காமாட்சி திருக்கோவில் சோமமங்களம்,சென்னை-69 இல் உள்ளது.88M,89M,157 என்ற எண்ணுள்ள பேருந்தில் பயணித்து சோமங்களம் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.குன்றத்தூரில் இருந்து திருபெரும்மத்தூர் செல்லும் வழியில் சோமங்களம் பிரியும் அவ்வழி சென்று ஊருக்குள் இந்த ஆலயம் இருக்கிறது.விருச்சிகராசியினர் அவசியம் வழிபட வேண்டிய தலம் இது.ஏனெனில்,அவர்களுக்குத் தான் சந்திரன் நீசமாகி இருக்கிறது.
இத்திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்த மன்னனின் பகைவரை அழிக்க இறைவனின் ஆணைப்படி நந்தியெம்பெருமான்,திரும்பியபடி இருக்கிறார்.நடராஜப் பெருமான் சதுர நாட்டியம் ஆடியபடி இருக்கிறார்.எனவே,முற்காலத்தில்(முதலாம் குலோத்துங்கன் காலத்தில்) இந்தப் பகுதியானது சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது.


செவ்வாய் வழிபட்ட சென்னை சிவாலயம்:சிவநிறை:வைத்தியநாதசுவாமி+தையல்நாயகி அம்மன் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருக்கிறது.சுந்தர் மருத்துவமனை செல்லும் வழியில்,சுந்தர் மருத்துவமனை எதிர்ச்சாலையில் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.
14000 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது;செவ்வாய் பகவானும்,இந்திரனும் இங்கே வந்து தங்கி தொடர்ந்து வழிபட்டதால் அவர்களுடைய நோய்கள் நீங்கின.கி.பி.1178 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தப்பகுதி உலகுய்யக்கொண்ட சோழபுரம் என்று வழங்கப்பட்டிருக்கிறது.சுவமியின் பழைய திருநாமம் தீராதவினை தீர்த்த நாயனார் என்பது ஆகும்.தீராத நோய்கள்,தீராத பகைகள்,தோல் நோயை நீங்கிடவும்,செவ்வாய் தோஷம் நீக்கவும் இவரை முறைப்படி வழிபட வேண்டும்.


புதன் வழிபட்ட சென்னை சிவாலயம்:சிவநிறை(திருமேனீசுவரர்)சுந்தரேசுவரர்+சவுந்தராம்பிகை அம்மன் திருக்கோவில்,கோவூர்,சென்னை=122 இல் அமைந்திருக்கிறது.போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் பாதையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.88K,88L,88K,88C பேருந்துகளில் பயணித்து கோவூர் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.மீனராசியில் ரேவதி நட்சத்திரத்தில் புதன் நிற்கப்பிறந்தவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வழிபட புதனின் பலவீனம் நீங்கும்;கி.பி.965 ஆம் ஆண்டில் சுந்தரச் சோழன் கட்டியதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன.மகாவில்வம் 9,16,27 இவைகளைக்கொண்டு தினமும் மூலவருக்கு வழிபாடு நடைபெற்றுக்  கொண்டிருக்கிறது.இந்த ஆலயத்தில் காமதேனு இறைவனை வழிபட்டதால் இப்பகுதி கோவூர் என்று அழைக்கப்படுகிறது.மகாவில்வம் இந்த ஆலயத்தின் தலமரமாக அமைந்திருக்கிறது.


சுக்கிரன் வழிபட்ட சென்னை சிவாலயம்:சிவநிறை:வெள்ளீசுவரர் என்ற திருவல்லீசுவரர் ஆலயம் மாங்காடு பகுதியில் அமைந்திருக்கிறது.
மிகப்பெரிய பாணலிங்கம் அனைவரையும் கவரும் அற்புதவடிவில் வில்வமரத்தின் அடியில் அமைந்திருக்கிறது.ஆதி காமாட்சி இங்கு நின்று வழிபட்டதாக கூறப்படுகிறது.கண் சார்ந்த நோய்களை இவர் நிவர்த்தி செய்து வருகிறார்.இந்த ஆலயத்தின் தலவிருட்சம் மஹாவில்வம் ஆகும்.66M,566,17B,53,266என்ற பேருந்தில் பயணித்து மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.மாங்காடு காமாட்சி அம்மன் தெற்கு வாசல் தெரு வழியே சென்று வலப்புறம் திரும்ப கடைசியில் வெள்ளீசுவரர் கோவில் தெரு சென்று இத்திருக்கோவிலை அடையலாம்.


குரு வழிபட்ட சென்னை சிவாலயம்:சிவநிறை:இராமநாதேசுவரர்+சிவகாமசுந்தரி திருக்கோவில் போரூரில் அமைந்திருக்கிறது.முகவரி:ஆர்..நகர்,சிவன் கோவில் தெரு,போரூர்,சென்னை=122.88,54,17M,37G,17B பேருந்துகளில் பயணித்து போரூர் பவர் ஹவுஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.போரூர் நான்கு சந்திப்பிலிருந்து குன்றத்தூர் ரோடு வழியாக சிறிது தொலைவில் இடதுபுறம் திரும்ப இந்த ஆலயத்தை அடையலாம்.
குருபகவான் வழிபட்ட இத் திருக்கோவிலுக்கு,இராமாயண காலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும் வந்து வழிபட்டிருக்கிறார்.இராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆகின்றன என்று அறியும் போது இந்த ஆலயத்தின் வயதும் அதே அளவு இருக்கும் என்று யூகிக்கலாம்;இதனாலேயே இதை ஆதி இராமேஸ்வரம் என்றும்,இங்கே இருக்கும் தீர்த்தம் ராம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.2400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தண்ட சண்டேசர் அருள்புரிந்து வருகிறார்.


சனி வழிபட்ட சென்னை சிவாலயம்: சிவநிறை:அகத்தீசுவரர்+ஆனந்தவல்லி திருக்கோவில்,பொழிச்சலூரில் அமைந்திருக்கிறது.52,60G,M52,M52H  என்ற எண்ணுடைய பேருந்தில் பயணித்து பொழிச்சலூர் அகத்தீசுவரர் கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
தொண்டை மண்டல ஆதீன நிர்வாக பரம்பரையினர் இத்திருக்கோவிலை பராமரித்துவருகின்றனர்.சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயம் வடநள்ளாறு என்று அழைக்கப்படுகிறது.


இராகு வழிபட்ட சென்னை சிவாலயம்:சிவநிறை:நாகேசுவரர்+காமாட்சி அம்மன் திருக்கோவில்,குன்றத்தூரில் அமைந்திருக்கிறது.குன்றத்தூர் பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ஊரில் சேக்கிழார் பெருமான் பிறந்தார்.மூலவரின் பழைய பெயர்  சடையாண்டீஸ்வரர்.இத்திருக்கோவிலுக்கு வடநாகேஸ்வரம் என்றொரு பெயர் உண்டு.
சேக்கிழார் தனது முன்னோர்கள் வாழ்ந்த கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் கோவிலை நினைவு கூரும் வகையில் சேக்கிழார்பிரான் கர்ப்பக்கிரகத்தை மட்டும் கட்டியுள்ளார்.பனிரெண்டாம் திருமுறையான அறுபத்துமூவர் வரலாறான பெரிய புராணத்தை எழுதியவர் சேக்கிழார் பெருமான்!!!


கேது வழிபட்ட சென்னை சிவாலயம்:சிவநிறை:நீலகண்டேசுவரர்+ஆதிகாமாட்சி அம்பாள் திருக்கோவில் கெரும்பாக்கத்தில் அமைந்திருக்கிறது.M54B என்ற எண்ணுடைய பேருந்தில் பயணித்து கெரும்பாக்கம் கற்பக விநாயகர் கோவில் என்ற நிறுத்ததில் இறங்க வேண்டும்.குன்றத்தூர் டூ போரூர் பாதையில் கெரும்பாக்கம் அமைந்திருக்கிறது.
இந்த கோவிலின் பழைய பெயர் அழகிய சோழ நல்லூர் ஆகும்,கேது வழிபட்டதால் கேது மஹாதிசை நடைபெறுபவர்கள் இந்த ஆலயத்துக்குச் சென்று வழிபட கேதுவினால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் தீமைகள் விலகும்;

No comments:

Post a Comment