Wednesday, November 6, 2013

கந்தசஷ்டியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்?

அதிகாலை4.30-6 மணிக்குள் நீராடவேண்டும். நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், பால்,பழம் மட்டும் சாப்பிடலாம். ஓரளவு தாக்கு பிடிப்பவர்கள் ஒருவேளை உணவும், மற்ற நேரங்களில் பால், பழமும் சாப்பிடலாம். உடல்நிலை காரணமாக சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம். ஒரு காலத்தில் வெறும் தண்ணீருடன் விரதம் இருந்தவர்கள் உண்டு.

* முருகனுக்குரிய மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும்.
* திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.
* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.
* கோயிலுக்கு குழுவாகச் சென்று, ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் அரோகரா கோஷமிடலாம். உ.ம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.
* மலைக்கோயில்களில் மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது. பணி காரணம் உள்ளவர்கள் அவரவர் இருப்பிடத்திலேயே விரதமிருக்கலாம்.

மளிகைக்கடை முருகன்: 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த சொக்கநாதப்புலவர், சுவாமிமலை முருகனை மளிகைக்கடை வியாபாரியாக சித்தரித்துப் பாடியுள்ளார். அந்தப்பாடலில், ஏரகத்துச் செட்டியாரே! (சுவாமிமலையின் புராணப்பெயர் திருஏரகம்) என்னிடம் குழம்புக்காக வாங்கிய வெங்காயம், பெருங்காயம், வெந்தயம் ஆகியவை உள்ளன. இப்போது அஜீரணத்தால் அவதிப்படுகிறேன். இந்தப் பொருட்களை சாப்பிட்டால் அது நீங்கி விடும். ஆனால், வெங்காயம் வாடி வதங்கி விட்டது. அதனால் மற்ற பொருள்கள் இருந்தும் பயனில்லை. அதனால், இனி சீரகத்தை மட்டும் கொடு. பெருங்காயம் இனி தேவைப்படாது, என்கிறார்.  இதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா? வெங்காயம் என்பது முன்வினைப்பயனால் ஏற்பட்ட உடம்பு.  பெருங்காயம் என்பது பெரிய உடம்பு. சீரகம் என்பது மோட்சம். சுவாமிநாதனே! எனக்கு மோட்சத்தைக் கொடுத்து விட்டால், இனி பிறவியில் சிக்கி பெரிய உடம்பை எடுக்கும் வேலை இருக்காது.

மொட்டைத்தலையில் குடுமி: முருகப்பெருமான் தாயின் சம்பந்தம் இல்லாமல், தந்தை சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். இதை விளக்கும் விதத்தில் பழநியில் தண்டாயுதபாணி என்னும் பெயரில் சிவாம்சத்துடன் அபிஷேகப்பிரியனாக விளங்குகிறார். இவருக்கு பால்,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருநீறு அபிஷேகம் சிறப்பானது. இவர் மொட்டைத் தலையுடன் காட்சியளிக்கிறார். ஆனால், அபிஷேகத்தின் போது ஒரு குடுமி இருப்பதைக் காணமுடியும். ஸ்தல புராணத்தில் முருகனின் குடுமியழகு பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

கேரள மக்கள் குவிவது ஏன்?

போகர், புலிப்பாணி சித்தர்களால் வழிபாடு செய்யப்பட்ட பழநி முருகன் கோயிலில், சேரமன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். மூலவர் தண்டாயுதபாணி, சேரநாடான கேரளாவை நோக்கி மேற்குமுகமாக வீற்றிருக்கிறார். இதனால், கேரளமக்கள் இக்கோயிலுக்கு அதிகம் வருகின்றனர்.

No comments:

Post a Comment