பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார்.
முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும, நனவிலும்
ஆறுமுகப்பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது.
சுவாமிகள் உலகம் உய்ய
பல அருள் நூல்களை அருளிச் செய்துள்ளார். சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றினை
இங்கு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அனைவரும் படித்து பயன் பெறுவோமாக.
பிறப்பு
பாம்பன் என்னும் ஊரில் பாம்பன் சுவாமிகள் பிறந்தார். அடிகளாரது தந்தையார்
சாத்தப்ப பிள்ளை, தாயார் செங்கமல அம்மையார். அடிகளாரது பிள்ளை திருநாமம்
அப்பாவு. சுவாமிகள் பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்படவில்லை. 1850 முதல் 1852
ஆண்டுக்குள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
தமிழ் ஞானம்
அடிகளார் சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் விளங்கினார்.
திருமுருகன்பால் மிகுந்த பக்தி கொண்டார். கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் 36
முறை ஓதினார். கந்த சஷ்டி கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் போல் தாமும்
முருகன் பால் தமிழில் கவி பாட வேண்டும் என வேட்கை கொண்டார். ஒவ்வொரு
பாடலின் முடிவிலும் அருணகிரிநாதரின் பெயரை வைத்தே முடிக்க வேண்டும் என
முடிவு செய்தார். முதன் முதலாக முருகனை போற்றி "கங்கையை சடையிற் பரித்து"
என தொடங்கும் பாடலை இயற்றினார். தினமும் உண்பதற்கு முன் ஒரு பாடல் வீதமாக
நூறு பாடல்கள் இயற்ற வேண்டும் என்ற நியதியை மேற்கொண்டார். அவ்வாறே நூறு
பாடல்களை இயற்றினார். பின்னர் சேது மாதவ ஐயர் என்பவரிடம் சடக்ஷர மந்திர
உபதேசம் பெற்றார்.
திருமணம்
சுவாமிகள் திருமண பருவம் அடைந்தும் திருமணஞ் செய்து கொள்ள விருப்பமில்லாமல்
இருந்தார். சேது மாதவ ஐயரின் வற்புறுத்தலின் பேரில் 1872ஆம் ஆண்டு
காளிமுத்தம்மையார் என்பவரை மணம் புரிந்தார். மூன்று ஆண்டுகள் கழிந்தன.
முருகாண்டியாபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என்று மூன்று
குழந்தைகள் பிறந்தனர். சிவஞானாம்பாளுக்கு ஒராண்டு நிரம்பிய போது ஒரு நாள்
நள்ளிரவில் ஓயாது அழுது கொண்டே இருந்தது. அம்மையார் சுவாமிகளிடம் குழந்தை
அழுவதை கூறி திருநீறளிக்குமாறு வேண்டினார். சுவாமிகள் இப்பொழுது எவருக்கும்
திருநீறு அளிப்பதில்லை என்றும், முருகனிடம் வேண்டுமாறும் கூறினார்.
அவ்வாறே அம்மையார் முருகனிடம் வேண்டி குழந்தையின் அருகில் படுத்தார்.
அப்போது, காவி உடை உடுத்திய ஒருவர் அங்கு வந்து குழந்தையை அம்மையாரிடம்
வாங்கி திருநீறு பூசி குழந்தை இனி அழாது என கூறி தாயிடம் தந்து விட்டு
மறைந்தருளினார். அம்மையார் நடந்தவற்றை சுவாமிகளிடம் கூறினார். சுவாமிகள்
முருகனின் திருவருளை நினைத்து வியந்தார்.
பொய் பகரல்
சுவாமிகளின் பெருமையை உணர்ந்து பல அடியார்கள் சீடர்கள் ஆயினர்.
இந்நிலையில், சுவாமிகளின் தந்தையார் சிவபதம் அடைந்தார். சுவாமிகள் துறவறம்
மேற்கொள்ளும் எண்ணத்தில் இருந்தார். ஒரு சமயம் அங்கமுத்துப்பிள்ளை
என்பவரிடம் தாம் பழனி செல்ல இருப்பதாக சுவாமிகள் கூறினார்.
அங்கமுத்துப்பிள்ளை தற்போது செல்ல வேண்டாம் என சுவாமிகளிடம் கூறினார்.
அதற்கு சுவாமிகள், இது முருகப்பெருமான் ஆணை என பொய் பகன்றார். அன்று மாலை,
சுவாமிகள் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது, சுவாமிகள்
கண்களுக்கு தென் திசையில் இறை உருவம் தென்பட்டது. அந்த உருவம்
அச்சுறுத்தும் வகையில் பயங்கரமாக இருந்தது. "எனது கட்டளை என பொய் கூறினாயே,
இது முறையாகுமா?" எனக்கூறி அச்சுறுத்தியது. சுவாமிகள், இறைவனது சினத்தை
கண்டு அஞ்சி, "தம் தவறுக்கு மன்னித்தருளுமாறு" வேண்டினார். அதற்கு, இறைவன்,
"இனி பழனிக்கு வரக்கூடாது" என உறுதி அளிக்குமாறு கூறினார். சுவாமிகளும்
அவ்வாறே உறுதி அளித்ததும் அந்த உருவம் மறைந்து போனது. ஒரு பொய் கூறிய
காரணத்தினால் சுவாமிகள் இறுதி வரை பழனி செல்ல முடியாமல் போனது.
சண்முக கவசம்
அடிகளாரின் தந்தையார் இறந்ததால், சுவாமிகளுக்கு குடும்ப சுமை அதிகரித்தது.
சுவாமிகள் குத்தகை தொழில் புரிந்து வந்தார். 1891ம் ஆண்டு தமக்கு வந்த
இன்னல் நீங்கும் பொருட்டு அ முதல் ன முடிய (உயிர் எழுத்து - 12, மெய்
எழுத்து - 18) 30 பாடல்களால்
சண்முக கவசம்
இயற்றினார். இதனால் அவரது இன்னல் நீங்கியது. சண்முக கவசம் மிகவும் சக்தி
வாய்ந்தது. இதனை பாராயணம் செய்து பலனடைந்தார் பலர். சிறிது நாள் கழித்து,
பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் எனும் செய்யுளை பாடியருளினார். இந்த பாடல் முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது.
வழக்குகளில் வெற்றி
அடிகளார் தொழில் நிமித்தமான பல்வேறு வழக்குகளை சந்திக்க நேர்ந்தது. முருகன் அருளால் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெற்றார்.
குமர கோட்ட தரிசனம்
சுவாமிகள் பல திருத்தலங்களை தரிசிக்க வேண்டி தல யாத்திரை மேற்கொண்டார்.
மதுரை, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி எனும் திருத்தலங்களை
தரிசித்து விட்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அங்கு உள்ள பல
திருக்கோயில்களை தரிசித்து விட்டு ஊர் திரும்ப எண்ணினார். அப்போது, ஒரு
சிவந்த மேனியுடைய இளைஞர் அடிகளாரை அணுகி, "இங்கு வந்த காரியம் யாது" என
வினவினார். அதற்கு சுவாமிகள், "ஆலய தரிசனத்துக்காக" என்றார். "குமரகோட்டம்
தரிசித்ததுண்டா?" என இளைஞர் கேட்டார். அதற்கு அடிகளார், "அது எங்குள்ளது"
என்றார். அதற்கு இளைஞர் "என் பின்னே வருக" என கூறி அழைத்து சென்றார்.
குமரகோட்டம் திருக்கோயிலை காண்பித்து விட்டு மறைந்து போனார். இது
ஆறுமுகப்பெருமானின் திருவிளையாடல் என்று உணர்ந்த சுவாமிகள், கண்ணீர்
பெருக்குடன் குமரகோட்ட முருகப்பெருமானை வழிபட்டார். பின் பாம்பன்
வந்தடைந்தார்.
தவம் புரிதல்
அடிகளார் முருகப்பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என பேராவல்
கொண்டார். 1894ம் ஆண்டு பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார். அங்கு உள்ள மயான
பூமியில் தமது சீடர்களின் உதவியால் ஒரு சதுரக் குழி வெட்ட செய்தார். அதை
சுற்றி முள் வேலி, கொட்டகை அமைக்கச் செய்தார். அக்கொட்டகையின் உள் ஒரு கை
செல்லுமாறு சிறிய சந்து அமைக்க செய்து, நாள் தோறும் ஒரு வேளை உப்பிலாத
அன்னம் வைக்குமாறு சீடர்களுக்கு கூறினார். வைத்த உணவை தாம்
எடுக்கவில்லையானால் அது முதல் வைக்க வேண்டாம் என கட்டளையிட்டார். பின்னர்
அக்குழியில் அமர்ந்து தியான யோகத்தில் ஈடுபட்டார். முதல் ஐந்து நாள்,
பேய்கள் அவரை சூழ்ந்து தவத்திற்கு இடையூறு செய்தன. பின்னர் ஒரு ஆவி, அவரை
தூக்க முயன்றது. சுவாமிகள் ஷடக்ஷர மந்திரத்தை ஓங்கி கூறினார். அந்த பேய்கள்
அவரை விட்டு நீங்கி மறைந்து போனது. அடிகளார் தவத்தை தொடர்ந்து புரிந்து
வந்தார். எழாவது நாள் இரவில் இரு முனிவர்களுடன், முருகப்பெருமான் இளைய
அடிகளார் உருவில் காட்சி அளித்தார். அவரிடம் ஒரு ரகசியமான சொல்லை
உபதேசித்து விட்டு, அம்முனிவர்களுடன் மேற்கு திசை நோக்கி சென்று மறைந்து
போனார். அச்சொல்லை சிந்தித்த வண்ணம் முப்பது நாள் தவ யோகத்தில் இருந்தார்.
முப்பத்தைந்தாம் நாள், "தவத்திலிருந்து எழுக" என்ற ஒலி கேட்டது. "முருகன்
கூறினால் மட்டுமே எழுவேன்" என சுவாமிகள் கூறினார். "முருகன் கட்டளை! எழுக"
என்று பதில் வந்தது. சுவாமிகள், அவ்விடத்தை வணங்கி விட்டு அங்கிருந்து
நீங்கினார். பின் பாம்பன் வந்து சேர்ந்தார். அது முதல் வெள்ளை அங்கி
அணியலானார்.
துறவு பூணுதல்
1895ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஒரு நாள் தமது சீடர் ஒருவரிடம் தாம் துறவு
பூண்டு செல்லும் முடிவை கூறினார். பின்னர், பாம்பனை விட்டு நீங்கி ஒரு படகு
மூலம் வடகரை அடைந்தார். பின்னர் சென்னை செல்லும் எண்ணம் அவர் மனதில்
உதித்தது. அவ்வாறே சென்னை வந்தடைந்தார். அங்கு ஒருவர் அடிகளாரை அணுகி அவரை
வைத்தியநாத முதலித் தெருவில் உள்ள ஒரு இல்லத்தில் சேர்ப்பித்தார். அந்த
இல்லத்தின் உரிமையாளரான ஒரு அம்மையார், தமது கனவில் அடிகளாரை உபசரிக்குமாறு
கட்டளை பிறந்ததாக சுவாமிகளிடம் கூறி, அடிகளாருக்கு அன்னம் படைத்து
உபசரித்தனர். சுவாமிகள் முருகப்பெருமானின் அருட்செயலை எண்ணி உவந்து
இருந்தார். சென்னையில் அடிகளாருக்கு பல சீடர்கள் சேர்ந்தனர். பின்னர்,
சென்னையில் உள்ள திருத்தலங்களை தரிசித்து மகிழ்ந்தார். முருகன் பால் பல
திருப்பாக்களை பாடி அருளினார்.
காவியுடை தரித்தல்
சுவாமிகள் காசி செல்ல பெருவிருப்பங்கொண்டு ஆடித்திங்கள் தொடக்கத்தில் காசி
யாத்திரை மேற்கொண்டார். பெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம்,
கல்கத்தா, கயா முதலிய இடங்களுக்கு சென்று அங்குள்ள மூர்த்திகளை ஆறுமுக
மூர்த்தியாகவே எண்ணி வழிபட்டார். பின்னர் காசி மாநகரம் சேர்ந்து அங்கு உள்ள
குமரகுருபரர் திருமடத்தில் தங்கினார். அங்கிருந்த ஒரு வயோதிக அடியார்
ஒருவர், சுவாமிகளுக்கு காவியுடை அளித்து, அதனை ஏற்றுக் கொள்ளுமாறு
வேண்டினார். இது குமரகுருபரருடைய ஆணை என்று அடிகளார் உட்கொண்டு அவரை வணங்கி
அவர் அளித்த காவி உடையை ஏற்றுக் கொண்டார். அன்று முதல், சுவாமிகள்
காவியுடையை மட்டுமே அணியலானார். பின்னர் சென்னை வந்தடைந்தார். அடிகளார்
எந்நேரமும் ஆறுமுகப்பெருமானை தியானிப்பதும், அப்பரமனை போற்றி பாடல்கள்
பாடுவதும், மற்ற நேரங்களில் திருத்தல யாத்திரை புரிவதுமாகவே வாழ்ந்து
வந்தார்.
பின்னத்தூர் அடைதல்
சென்னையை சுற்றியுள்ள திருவொற்றியூர், பழவேற்காடு, ஆண்டார்குப்பம் போன்ற
திருத்தலங்களை தரிசித்து விட்டு சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் என்ற ஊரை
அடைந்தார். அங்குள்ள அடியார்கள் சுவாமிகளை வணங்கி உபசரித்தனர். அங்கு சிவ
நிந்தனையில் ஈடுபட்டு வந்த சில வைணவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வெற்றி
பெற்றார். வழக்கில் தோற்ற சிலர், ஒரு மந்திரவாதியின் மூலம் சுவாமிகளை
கொல்லும் பொருட்டு ஒரு துர்த்தேவதையை ஏவினர். ஆனால், சுவாமிகளின் அருள்த்
தன்மையினால், அத்தேவதை சுவாமிகளை கண்டு அஞ்சி தன்னை ஏவிய மந்திரவாதியை
தாக்கி கொன்றது. சுவாமிகளை கொல்ல பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால்,
முருகன் அருளால் அடிகளார்க்கு எந்த தீங்கும் நேரவில்லை. பின்னர் பல
ஆண்டுகள் கழித்து 1914ம் ஆண்டு மீண்டும் சென்னை சேர்ந்தார்.
குமாரஸ்தவம் இயற்றல்
1918ம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட வெப்பு நோய் விலகும் பொருட்டு
குமாரஸ்தவம்
எனும் அர்ச்சனை நூலை சுவாமிகள் இயற்றினார். அந்நோயும் நீங்கியது.
சுவாமிகள் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் சுவாமிகட்கு குரு பூஜை
நடத்தப்படாமை குறித்து வருந்தினார். தியான யோகத்தில் அமர்ந்து,
அருணகிரிநாதர் முக்தி பெற்ற தினம் உத்தராயணம் கழிந்த ஆறாவது பௌர்ணமி என்று
உணர்ந்தார். தமது சீடர்களுக்கு இது குறித்து அறிவித்து குரு பூஜை
நடைபெறுமாறு செய்தார்.
மயூர வாகன சேவனம்
1923ம் ஆண்டு டிசம்பர் 27ம் நாள், சுவாமிகள் சென்னை தம்பு செட்டி தெரு
வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு குதிரை வண்டியின்
சக்கரம் அடிகளாரது இடது கணை காலின் மீது ஏற, கால் முறிவடைந்தது. அங்கிருந்த
அன்பர்கள் சுவாமிகளை சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர். இதை அறிந்த
சுவாமிகளின் சீடர்கள் ஓடி வந்து பரிவுற்று வருந்தி அழுதனர். தலைமை
மருத்துவரான ஆங்கிலேயர், சுவாமிகளின் கால் குணப்படாது என்று கூறினார். அது
கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர். பதினோராவது நாள் இரவு அடிகளார்,
படுக்கையில் படுத்த வண்ணம் முருகனை வேண்டினார். அப்போது முருகனின்
வாகனமாகிய மயில்கள் வானத்தில் நடனம் புரிந்து வருவதை கண்டார். அப்பொழுது,
முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை
சுவாமிகள் கண்டு களித்தார். மறுநாள் இரவு அடிகளார் அருகில் முருகன் குழந்தை
உருவில் படுத்திருப்பதை கண்டார். "முருகா" என்று அழைத்தவுடன் இறைவன்
மறைந்து போனார். முருகனின் திருநாமத்தை பன்னிரு முறை கூறி வணங்கினார். உடனே
கால் கூடி விட்டது. பெரிய மருத்துவரான ஆங்கிலேயர், இவரை சோதித்து இது
தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில்
சுவாமிகள் முழுமையாக குணமடைந்து புதுப்பாக்கத்தில் உள்ள அன்பர் ஒருவர்
வீட்டில் தங்கினார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, அடியார்கள் ஒவ்வொரு
ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றார்கள்.
குமாரசுவாமியம்
சுவாமிகள் 1192 செய்யுள்கள் கொண்ட குமாரசுவாமியம் என்னும் நூலை இயற்றினார்.
ஆறுமுருகப்பெருமானை போற்றும் பாடல்களின் தொகை ஆறு என்ற எண்ணுடையாதாக
இருக்க வேண்டும் என்று எண்ணிய அடிகளார் பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை
6666.
- குமரகுருதாச சுவாமிகள் பாடல் - 1266
- ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) - 1192
- திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) - 1135
- திருப்பா (திட்ப உரை) - 1101
- காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம்) - 608
- சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) - 258
- சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம் - புலால் மறுப்பு) - 235
- பரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை) - 230
- செக்கர் வேள் செம்மாப்பு - 198
- செக்கர் வேள் இறுமாப்பு - 64
- தகராலய ரகசியம் (சதானந்த சாகர உரை) - 117
- குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி - 100
- சேந்தன் செந்தமிழ் (வடமொழி கலவாத் தனித் தமிழ்) - 50
- குமாரஸ்தவம் - 44
- தென்னாட்டுத் திருத்தலதரிசனம் (கட்டளைக் கலித்துறை) - 35
- பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) - 30
- ஆனந்தக்களிப்பு - 30
- சமாதான சங்கீதம் - 1
- சண்முக சகச்சிர நாமார்ச்சனை - 2
ஆகப் பாடல்கள் 6666
உரைநடை நூல்கள்
சுவாமிகள் பாடல்கள் இயற்றுவதோடு மட்டுமல்லாமல், பல உரை நடை நூல்களையும்
இயற்றினார். வேத வியாசம், சுப்ரமண்ய வியாசம், குரு சீட சம்பவ வரலாற்று
வியாசம், செவியறிவுறூவு போன்ற நூல்களை எழுதினார்.
முக்தியடைதல்
தாம் முக்தி அடையும் காலம் வந்துவிட்டதை உணர்ந்த சுவாமிகள்,
தமது
சீடர்களிடம் திருவான்மியூரில் நிலம் வாங்குமாறு கூறினார்.
அவ்வாறே நிலம் வாங்கப்பட்டது. 1929ம் ஆண்டு, ஒரு நாள் சுவாமிகள் தமது
சீடர்களை அழைத்து, "மயூர வாகன சேவன விழாவை தொடர்ந்து நடத்தி வாருங்கள்.
நான் சமாதி அடைந்ததும் என்னுடைய உடலை திருவான்மியூரில் சேர்த்து விடுங்கள்"
என்று கட்டளையிட்டார்.
30-5-1929 வியாழக்கிழமை காலை 7.15 மணிக்கு, சுவாமிகள் பிராண வாயுவை
உள்ளிழுத்து மகாசமாதியில் ஆழ்ந்தனர். இதை அறிந்த அனபர்கள் பலர் சுவாமிகளை
வந்து தரிசித்து சென்றனர். மறுநாள் (31-5-1929), சுவாமிகளின் திருமேனியை
திருவான்மியூரில் சேர்த்து சமாதிக்கோவில் அமைத்தனர்.
சுவாமிகளின் சமாதிக்கோவில் மிகவும் மகிமை வாய்ந்தது. அங்கு சென்று வாழ்வில்
வளம் பெற்றோர் பலர். திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ
தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். அனைவரும் தரிசித்து திருவருள்
பெறுவோமாக.
No comments:
Post a Comment