Tuesday, July 17, 2012

அன்பில்லாத வாழ்க்கை நிலையற்றது!

அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. தனக்கென்று பொருள் சேர்ப்பதில், புகழ் சேர்ப்பதில், அலங்காரம் செய்து கொள்வதில் தற்காலிக இன்பம் கிட்டலாம். ஆனால், இவற்றால் உள்ளம் நிறைவு பெறுவதில்லை. உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது. அன்பு
இல்லாமல், வெறும் மரம், மட்டை, கல் மாதிரி ஜடமாக இருப்பதில் பிரயோஜனம் இல்லை. அன்பில்லாத வாழ்வில் ருசியே இல்லை. அன்பு செலுத்தும்போது நமக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், தேக சிரமம் வந்தாலும், பணச் செலவானாலும் தெரிவதில்லை. அன்பு செலுத்தாத வாழ்க்கை வியர்த்தமே. ஆனால், அன்புக்குரிய ஒருவரை விட்டுப் பிரியும்போது துக்கம் உண்டாகிறது. அன்புக்குரிய வஸ்து நம்மை விட்டு என்றும் பிரிந்து போகாததாக இருக்கவேண்டும். என்றும் மாறாத வஸ்துவாக இருப்பவர் பரமாத்மா மட்டுமே. அவர் மீது பூரணமான அன்பைச் செலுத்த வேண்டும். நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும் அவரை விட்டு நாம் பிரிவதில்லை. இதுவே சாஸ்வதமான  அன்பாகும். ஈஸ்வரனிடம் இந்த அன்பை அப்பியாசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் (உலக உயிர்கள்) விஸ்தரிக்க வேண்டும். இதுவே ஜென்மம் எடுத்ததன் பயன்.

-எச்சரிக்கிறார் காஞ்சிபெரியவர்

No comments:

Post a Comment