Monday, June 27, 2022
பஞ்சமியில் வாராஹியை வழிபாடு செய்தால் சிறப்பு...
சப்த கன்னியர்களில் ஒருவரான வராஹி தேவியை பஞ்சமியில் வழிபடுவது மிகச் சிறப்பு.
சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வாராஹி தேவி. மகா சக்தியாகத் திகழும் பராசக்தி, தன்னில் இருந்து ஒவ்வொரு சக்தியாக வெளிப்படுத்தினாள் என்றும் அவர்களைக் கொண்டு அசுரக் கூட்டங்களையும் தீய சக்திகளையும் அழித்தாள் என்றும் விவரிக்கிறது புராணம்.
இந்த சக்திகள் ஏழு என்றும் இவர்களை சப்தமார்கள் என்றும் விவரிக்கிறார்கள் ஸாக்த வழிபாடு செய்பவர்கள். சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வாராஹிதேவி. சப்தமாதர்களுக்கு சந்நிதி என்பது சோழர்கள் காலத்தில் பல ஆலயங்களில் அமைக்கப்பட்டன. யுத்தம் முதலான முக்கிய நிகழ்வுகளின் போது, சப்த மாதர்களுக்கு படையல் போடப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன.
சப்தமாதர்களில், கெளமாரி, மகேஸ்வரி என தெய்வங்களுக்கு தனித்தனியே ஆலயங்கள் எழுப்பப்பட்டன. பின்னாளில், அடுத்தடுத்த கட்டங்களில், வாராஹிக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு, பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் பெரியகோயிலில் வாராஹியை தரிசிக்கலாம்.
இவள் ஆதி பரமேஸ்வரி அல்லது ஆதி பராசக்தியின் சக்தி ஸ்வரூபம். மகிஷனை அழித்த மகிஷாசுர மர்த்தினியின் குதிரைப் படை தலைவி எனவும் கூட சிலர் இவளைச் சொல்வதுண்டு. கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே அன்னைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இந்த தெய்வத்திற்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்களை மிக விரைவில் தரக்கூடியவள். அப்படியான அந்த காயத்ரி மந்திரம் பின்வருமாறு...
மேலும் படிக்க... ஏழரைச் சனி என்றால் என்ன? யாருக்கு பாதிப்பு வரும்?
வராஹி காயத்ரி மந்திரம்
"ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்"
இம்மந்திரத்தை சொல்லி வர கிடைக்கும் சிறப்புக்கள் என்ன?
வாராஹியை முறையே வழிபடும் பக்தர்களிடம் தோல்வி கூட தோற்றே விடும். குறிப்பாக, பஞ்சமி திதி, அமாவாசை திதி மற்றும் சொந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு குரு 6 ஆம் இடத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று பிறந்தவர்கள் மேற்கண்ட வாராஹியின் காயத்திரி மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் முறைப்படி ஜபித்து வந்தால் மந்திர சித்துக்கள் கூட வசப்பட இடம் உண்டு.
குறிப்பாக இந்தத் தேவியை பஞ்சமியில் வழிபடுவது மேலும் பல சிறப்புக்களை வழிபடுபவர்களுக்குத் தரும். ஏன் பஞ்சமி திதியில் வராஹி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
சிறப்பான திதிகளில் ஒன்று பஞ்சமி. "பஞ்சம்" என்றால் சமஸ்க்ருதத்தில் "ஐந்து" என்று பொருள் படும். ஐந்து என்றாலே விசேஷம் தான்.
1. பஞ்சாங்கம் – திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.
2. பஞ்சபுராணம் : தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்.
3. பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்.
4. பஞ்ச ஆரண்யம் – உஷத் காலம், கால சாந்தி, உச்சி காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்.
5. பஞ்சலோகங்கள்: செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead).
6. பஞ்ச சபைகள் – ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.
7. இறைவனின் ஐந்தொழில்கள் - ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
8. பஞ்சபாண்டவர்கள் – தர்மன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன்.
9. பஞ்சாமிர்தம் - பால். தயிர், சர்க்கரை, நெய், தேன்.
10. பஞ்சமுகங்கள் (சிவன்)- தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானனம்.
மேற்கண்டவற்றின் மூலமாக நமக்கும் கூட புரிந்து இருக்கும் ஐந்தாம் எண் எவ்வளவு சிறப்புக்கு உரியது என்று. காரணம், இதன் அடிப்படையில் தான் பஞ்சமி திதியும் வருகிறது. அதாவது அமாவாசை அல்லது பெளர்ணமி கழிந்து வரும் ஐந்தாவது நாளே பஞ்சமி எனப்படும். அதேபோல, சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள் வராஹி. அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர். அவர்கள் முறையே, ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி ஆவார்கள்.
அதனால் தான் பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபட்டு வர வெற்றி வீட்டின் வாசலை அழைக்காமலேயே வந்தடையும் என்பர்.
மேலும் படிக்க... கந்த சஷ்டி கவசத்தின் பாடல் வரிகள்...
வாராஹியை எப்படி முறைப்படி வழிபடுவது?
நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வாசனை மலர்கள் சாற்றி வாசனை தூபங்கள் ஏற்றி ஐம்புலன்களும் ஆன்மீகத்தில் ஒடுங்க மேற்கண்ட வராஹி தேவியின் காயத்திரி மந்திரத்தை பஞ்சமி திதி பிரம்ம முகூர்த்தத்தில் ஆரம்பித்து தொடர்ந்து ஜபித்து வர வேண்டும். பசும்பால் அல்லது இனிப்புகளை நிவேதனமாகப் படைக்கலாம். கண்டிப்பாக புளிப்பு இருக்கக்கூடாது. புளிப்பு அந்த அம்பாளுக்கு ஆகாது.
1. வழக்குகள் சாதகம் ஆகி... எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். உடன், வெற்றி உங்கள் வாகை சூடும்.
2. கல்வி, தொழில் அல்லது உத்யோகம் மேம்படும்.
3. கண்திருஷ்டி, செய்வினை கோளாறுகள் அகலும்.
4. புத்தி நல்ல விதத்தில் வேலை செய்யும். இதனால் ஞானம் சித்திக்கும்.
5. பயம் தெளிந்து மனதில் துணிச்சல் - தைரியம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment