சூரியன் வடபுறத்தில் இருந்து தென்புறம் நோக்கித் தனது பயணத்தைத் துவக்கும் தட்சினாயண காலமாகும். ஆடி மாதத்தில் சூரியனின் பயணம் தெற்கு நோக்கி தொடங்குகிறது. தமிழ் காலண்டரில் ஆடி மாதம் 4வது மாதமாகும். தேவர்களுக்கு அந்தி சாய்ந்து இரவு துவங்கும் நேரமிது. நாம் தினந்தோறும் அந்தி சாய்ந்தவுடன் நம் இல்லங்களில் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து வழிபடுவதைப் போல் தேவர்களும் அம்மனை நினைத்து பூஜை செய்கின்றனர் எனவேதான் ஆடி மாதம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் திருவிழா களைகட்டுகிறது. கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆடிக்கு கடக மாதம் என்று பெயர். அதாவது, தகப்பனைக் குறிக்கும் கிரகமான சூரியன், தாயாரைக் குறிக்கும் கிரகமான சந்திரனின் சொந்த வீடான கடகத்தில் வந்து இணையும் மாதம் ஆடிமாதமாகும். இது கடகமாதமாகும்.
ஆடி அமாவாசை ஆடி அமாவாசை, முன்னோர்களை ஆராதிக்க உகந்த நாளாகும். ஜோதிட ரீதியாக தந்தையான சூரியனும் தாயான சந்திரனும் தாய் வீடான கடகத்தில் ஒன்றாக இணையும் நாளே ஆடி அமாவாசை. பித்ரு சாபம் நீங்கும் ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் முன்னோர்களுக்குரிய தர்ப்பண காரியங்களைச் செய்து வழிபட வேண்டும். இதனால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும். பித்ரு சாபம் நீங்கி பிள்ளைகளின் வாழ்வு சிறக்கும். ஆடிப்பெருக்கு ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. காவிரி முதலான நதிக்கரைகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இந்த நாளில் ஆறுகளில் கூடும் பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி புதிதாக திருமாங்கல்யச் சரடினை மாற்றி நதி அன்னையை வணங்குகின்றனர். ஆடி மாதத்தில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்று கூறுகின்றனர். ஆடி மாதத்தில் விதை விதைத்து தை மாதத் துவக்கத்தில் அறுவடை செய்வார்கள். ஆடிக்கூழ் உடல்சூட்டினைத் தணித்து நமக்கு ஆரோக்கியத்தைத் தருவது கூழ். எனவேதான் ஆடி மாதத்தில் வேப்பிலையும், கூழும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு சிறப்பான நாட்களாகும். இந்த நாட்களில் அம்மன் ஆலயங்களில் கூழ் ஊற்றி கொண்டாடுவார்கள். ஆடி விஷேச தினங்கள் ஆடி மாதம் கிருத்திகை, ஆடிபூரம், ஆடி பௌர்ணமி, ஆடி அமாவாசை ஆகிய தினங்கள் விஷேச தினங்களாகும். பெண்களுக்குரிய விரதங்களில் முக்கியமானது வரலட்சுமி விரதம். ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. அன்று சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு அன்னமிட்டு புடவை ரவிக்கை சேர்த்து தாம்பூலம் அளிப்பதன் மூலம் சகல சௌபாக்யங்களும் வந்து சேரும்.
No comments:
Post a Comment