இறைவன் அனைத்து இடங்களிலும், நீக்கமற நிறைந்திருப்பவன் என்று சொன்னால், நாத்திகவாதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாத்திகர்கள் சொல்வதை, ஆன்மிகவாதிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதேசமயம், ஆன்மிகவாதியோ, நாத்திகவாதியோ யாராக இருந்தாலும், அனைவரையுமே கோப உணர்ச்சி ஆட்டிப் படைக்கிறது என்ற உண்மையை, ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். கோபத்திற்கு, இன, மொழி, நாடு, வயது, ஆண், பெண், ஊர்வன, பறப்பன, நடப்பன என்று, எந்த பேதமும் இல்லை அரை விநாடியில் கோபப்பட்டு, ஆயுள் முழுவதும் துயரப்படுவோர் நம்மில் அநேகர் உண்டு. கோபத்தின் கொடுமையை விளக்கும் கதை இது: கலியுகம் துவங்கும் நேரம். காமன், கோபன் எனும் இருவர் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தனர். அப்போது கட்டியங்காரன், காமனின் குணாதிசயங்களை விவரித்துக் கொண்டு வந்தான். காமனுக்கு அடிபணியாத உயிர்கள் இல்லை; அவன், பெரும் பெரும் முனிவர்களைக் கூட, வசப்படுத்தி இருக்கிறான். அப்பேற்பட்ட சக்தி படைத்தவன்... என்று, காமனின் ஆற்றலை கூறினான். அப்போது கட்டியங்காரனின் அருகில் இருந்த கோபன், கட்டியங்காரனின் பேச்சை யாரும் நம்பாதீர்கள். சின்னஞ்சிறு குழந்தைகளிடம், காமனின் ஆட்டம் செல்லாது. நோயாளிகள் மற்றும் முதியவர்கள், ஆகியோரிடமும் காமனின் ஆற்றல் அடிபட்டு போய் விடும். ஆனால், கோபனான என் சக்தி தான் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும். ஆண், பெண், படித்தவன், படிக்காதவன், பெரியவன் - சிறியவன், ஏழை - பணக்காரன், நோயாளி- ஆரோக்கியசாலி என, அனைவரையும் ஆட்டிப் படைப்பேன். மா முனிவர்களை கூட ஆட்டிப் படைத்து, அவர்களின் தவ ஆற்றலை தள்ளாட வைத்திருக்கிறேன். எனக்கு கால நேரம், இடம், பொருள் என்பதெல்லாம் கிடையாது. தாய் - தாரம், தகப்பன் - பிள்ளை, குரு - சிஷ்யன் என, எல்லா பேதங்களையும் அடித்து நொறுக்கி, அனைவரையும் குப்பையாக்குபவன் நான். சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி எரிந்து போனவன் காமன். ஆகையால், காமனை விட கோபனான நான் தான் பெரியவன்... என்று, சொல்லி முடித்தான். உண்மை தானே... கோபத்தை விட, கொடுமை உண்டா? சற்று அமைதியாக இருக்கும் போது, கோபத்தின் கொடுமையை, அதனால், ஏற்படும் விளைவை யோசித்தால், கோபம் கொள்வது சரியா, தவறா என்பது நமக்கே புரியும்.
No comments:
Post a Comment