நம் முன்னோர்கள் ஒரு வருடத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். தை மாதம் முதல் தேதியிலிருந்து ஆனி மாதம் வரை உத்தரானப் புண்ணிய காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் கூறுவர். தட்சிணாயனம் மழைக்காலத்தின் தொடக்கத்தையும் உத்தரா யனம் கோடைக்காலத்தின் ஆரம்பத்தையும் குறிக்கிறது. உத்தாரயனக் காலத்தில் சூரியன் வடக்கிலிருந்து தெற்காகவும். ஆடி முதல் மார்கழி வரை தெற்கிலிருந்து வடக்காகவும் பயணிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் சூரியன் அவ்வாறு பயணிப்பதில்லை. நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவரும் பூமியால் ஏற்படுவதே அது. பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு சூரியன் நகர்வதாகத் தோற்றமளிக்கிறது. இது காட்சிப்பிழை அல்லது பூமியின் இடமாறு தோற்றப்பிழை. பூமி தெற்கு-வடக்காகச் செல்வதே உண்மை. டிசம்பர் 21-ல் நீள்வட்டப் பாதையில் ஆறுமாதப் பெயர்ச்சியை முடித்து. சூரியனுக்கு மறுபுறம் திரும்பி சுழன்று பெயர்ச்சி அடையும். அப்போது பூமி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும். ஆனால் நமக்கு சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லுவதைப்போல் தெரியும். தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனிடமிருந்து ஒருவிதமான சூட்கம சக்திகள் வெளிப்படுவதாகவும், பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும் என்றும், உயிர்களுக்குத் தேவையான ஆதாரசக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவென்றும் வேதங்கள் கூறுகின்றன. ஆடி மாதம் பி றந்ததும் நீர் நிலைகளில் நீராடுவது போற்றப்படுகிறது. ஆனால் முதல் மூன்று நாட்கள் ஆறுகளுக்கு தோஷமான நாளாகக் கருதப்படுவதால், அதன் பிறகு நீராடுவது நல்லதென்பர். ஆறுகளில் நீராடும்போது, ஆறு எந்த திசையிலிருந்து ஓடி வருகிறதோ அந்த திசையைப் பார்த்து நீராட வேண்டும். கோவிலில் உள்ள குளத்தில் நீராடும்போது வடக்கு திசை நோக்கி நீராட வேண்டும்.
ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சி வபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள், பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து. தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது. அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச் சுடையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார். ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய் கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டது; குளிர்ச்சியானது. அதன் காற்று உடல்நலத்தினைக் காக்கும். அதன் கசப்புத்தன்மை நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து வளமான உடல் ஆரோக்கியம் தரும். வேப்ப இலையின் கொழுந்தில் நம் உடலுக்குத் தேவையான சக்தி(புரோட்டின்) இருப் பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தினமும் காலை வேளையில் மூன்று, நான்கு வேப்பங் கொழுந்துகளை வெறும் வயிற்றில் மென்று சுவைத்தால் மருத்தவரிடம் செல்லு<ம் நிலை ஏற்படாது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. அதேசமயம், கசப்புச் சுவையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் ரத்தத்தின் வீரியம் குறைந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சித்த மருத்துவர் ஆலோசனைப்படி வேப்பங் கொழுந் தினைப் பயன்படுத்த வேண்டும்.அம்மை நோய்க்கு அருமருந்தாக வேம்பு திகழ்கிறது. காய்ச்சலை குணப்படுத்தும் வேம்பு கஷாயம் இன்றும் மருத்துவ உலகில் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதனால்தான் கிராமப்புறங்களில் வீட்டின் வாசல் முன்பு வேப்ப மரங்களை வளர்க்கிறார்கள். நகர்ப்புறங்களிலும் வேப்ப மரங்கள் வளக்கப்பட்டால் தூய்மையான காற்று கிடைக்கும்.
ஆடிப் பட்டம் தேடி விதை– இது முதுமொழி. ஆடி மாதத்தில் விவசாயப் பணியை துவக்கினால் ஆண்டு முழுவதும் விளைச்சல், விவசாயிகள் வாழ்க்கை சிறப்புறும் என்பது நம்பிக்கை. காலப்போக்கில் பருவமழை தவறியதால், ஆடியில் விதைப்பது புரட்டாசி, ஐப்பசி என தள்ளிப்போகிறது. ஆடியில் சுப காரியங்கள் நடத்துவதில்லை. புதுமணத் தம்பதியை ஆடி முதல் தேதியில் (தலை ஆடி) அழைத்து பெண் வீட்டார் விருந்து கொடுப்பர். ஆடி நடுப்பகுதியிலும் விருந்துதான். ஆடி பதினெட்டாம் பெருக்கன்று புதுமணப் பெண்ணிற்கு தாலி பெருக்கி போடும் நிகழ்வு இன்றும் தொடர்கிறது. சில கிராமங்களில் ஆடியில் காடுகளில் பாரி வேட்டை என்ற பெயரில் முயல், குருவிகளை வேட்டையாடுவர்.