உலகில் பிறந்த பலருக்கும் பலவிதமான சங்கடங்கள்-துன்பங்கள்-தோன்றுவது இயற்கை. இந்தச் சங்கடங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்று புரியாமல் பலர் குழம்புகின்றனர். குடும்பத்தில் ஏற்படும் தர்ம சங்கடத்தைத் தீர்க்க அவசரமாகக் கடன் வாங்குவர். பணம் வந்ததும், திரும்பத் தந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வட்டிக்கு வாங்குவார்கள். இந்த அவசரத் தன்மையை அறிந்த கடன் கொடுப்பவர்கள் இரண்டு வட்டி, ஐந்து வட்டி, பத்து வட்டி, மீட்டர் வட்டி என்று ஏதேதோ பெயர்களில் தாராளமாகத் தருவார்கள்! இதற்கு கந்து வட்டி என்ற பெயரும் உண்டு.இப்படி வட்டிக்குக் கடன் வாங்குபவர்கள் சில மாதங்கள் வட்டியைத் தவறாமல் கட்டுவார்கள். பிறகு மெல்ல மெல்ல தர முடியாத சூழல் ஏற்படும். வட்டி குட்டிமேல் குட்டிப் போட்டு அது வாங்கியதற்கு மேல் விஸ்வரூபம் எடுத்து விடும். இப்படிப்பட்டவர்களின் நிலைமையைப் பார்த்துத்தான் கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பர் பாடினார். இப்படித் தாங்க முடியாத சங்கடங்களில் மாட்டிக் கொண்டு முழிப்போரும், ருணத்தால் விழி பிதுங்குவோரும் எல்லா நலமும் பெற வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி. இவருக்கு நான்கு தலைகள்! கடன்களையும், சங்கடங்களையும் தீர்க்கும் சுபாவம் கொண்டவர். இவரைக் குளிரக் குளிர அபிஷேகம் செய்து அவருக்கே உரிய ஸ்லோகத்தை, குறைந்தது பதினாறு தடவை சொன்னால் சங்கடங்கள் விலகும். ருணம் (கடன்) தீரும்.அவருக்குரிய ஸ்லோகம்:ஓம் நமோ ஹேரம்பமத மோதித மம சங்கடம்சமஹா சங்கடம்சநிவாரய ஸ்வாஹா!ஓம் நமோ ஹேரம்பமத மோதித மம ருணம்அதி ஸீக்ரமேவநிவாரய ஸ்வாஹா! சங்கடத்தில் தவிப்பவர்கள் முதல் ஸ்லோகத்தையும், ருண (கடன்)த்தால் தவிப்பவர்கள் இரண்டாவது ஸ்லோகத்தையும் கூறவேண்டும். கூடியவரை அபிஷேகத்தை சங்கடஹர சதுர்த்தியில் செய்வது நலம்.
ஒருவரது ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். அதில் ல/ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ராசிக்கட்டம் தான் லக்னம். உதாரணத்துக்கு இந்த படத்தைப் பாருங்கள். ல/ என்று குறிப்பிடப்பட்டுள்ள கட்டத்தில் புதன் இருக்கிறது. அதாவது, கன்னியில் புதன் உள்ளது. இவர் கன்னி லக்னக்காரர். இவருக்குரிய தெய்வங்கள் பெருமாள், ராமன், கிருஷ்ணர். லக்னத்தில் சூரியன் இருந்தால், சூரிய நாராயணர், சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தால் மகாலட்சுமி, பாலா, திரிபுரசுந்தரி உள்ளிட்ட அம்பிகையர், செவ்வாய் இருந்தால் முருகன், லட்சுமி நரசிம்மர், துர்க்கை, குரு இருந்தால் சிவன், தட்சிணாமூர்த்தி, பெருமாள், சனி இருந்தால் வெங்கடாஜலபதி, சாஸ்தா (ஐயப்பன்), யோக நரசிம்மர், ஆஞ்சநேயர், கேது இருந்தால் விநாயகர் அல்லது ராமானுஜர் போன்ற ஆச்சாரியர்களைத் தரிசிக்க வேண்டும். இந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களைத் தினமும் ஜபிப்பது பலனை அதிகரிக்கும்.
கை, கால், காது, கண், நாக்கு, என, அனைத்து உறுப்புகளும் நன்றாக இருப்போர், அங்கஹீனம், காது கேளாமை, பேச்சு இழந்தோர், பார்வையற்றோர் ஆகியோரைப் பார்க்கும் போது, ஆண்டவா... எந்தக் குறையும் இல்லாமல் என்னைப் படைத்தாயே... என்று, இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்து விடுகிறோம். அதே சமயம், தெருவில், யாராவது சிரித்து பேசி செல்வதைப் பார்த்தால், சிரிப்பைப் பார்... சிரிப்பை! என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு... என்று, சிலருக்கு மனம் வெம்முகிறது.அடுத்தவர்கள் சற்று மகிழ்ச்சியாக இருந்தால் கூட, இவர்களால் பொறுக்க முடிவதில்லை. இந்த பொறாமை குணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்கு, அரண்மனை வாழ்வு, ஆள், அம்பு, சேனை, ராஜபோகம், பணிப்பெண்கள் என, அனைத்து வசதிகளும் இருந்தன. திருதராஷ்டிரன் தம்பியான பாண்டுவின் மனைவி குந்தியோ, காட்டில் ஒரு வசதியும் இல்லாத சூழலில் வசித்து வந்தாள். இந்நிலையில், குந்திதேவிக்கு, காந்தாரிக்கு முன்னரே, குழந்தை பிறந்து விட்டது. இச்செய்தி, நாட்டில் வாழ்ந்த காந்தாரிக்கு தெரிந்ததும், அவளுக்கு பொறுக்க முடியவில்லை. அவள் உள்ளத்தில் பொறாமைத் தீ, எரிமலை குழம்பாய் வெடித்து, வழிந்தது. அதன் விளைவாக, காந்தாரி, ஒரு அம்மி குழவியைக் எடுத்து, தன் வயிற்றில் இடித்துக் கொண்டாள். அவள் கரு சிதைந்து, ரத்தம் கலந்த சதை கூறுகளாக சிதறின.வியாசர் அந்தச் சதை கூறுகளை, நூற்றியொரு குடங்களில் இட, துரியோதனன் முதலான நூறு பேர்களும், துச்சலை என்ற ஒரு பெண்ணும் உருவாயினர். காந்தாரியின் இத்தகைய பொறாமை குணத்தின் காரணமாகவே, கவுரவர்களும் இயல்பிலேயே பொறாமை குணம் படைத்தோராக விளங்கி, பாண்டவர்களின் மேல் கொண்ட பொறாமையால் அழிந்தனர். நாம் யாரைக் கண்டு பொறாமைப்படுகிறோமோ, அவர்களுக்கு ஒன்றும் நேராது; பொறாமைப்பட்ட நமக்குத்தான் கேடு விளையும். எனவே, பொறாமையை மனதிலிருந்து துரத்தி, நற்சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். நடப்பவை, நல்லனதாகவே அமையும்
அதிகாலையில் எழுந்ததும் கொல்லைப்புற வாசலைத் திறந்த பின்னரே, தலைவாசலைத் திறக்க வேண்டும். பசுவின் முகத்தில் விழிக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அவசியம் குத்துவிளக்கு ஏற்றி லட்சுமியை வழிபட வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும். பொருள் வளமும், சந்தோஷமும் பெருகும். பவுர்ணமியன்று மாலையில், பால் பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்.
முன்னோர்களின் அனுபவ வார்த்தைகளே, சாஸ்திரங்கள். அந்த சாஸ்திரபடி, வாழ்க்கையை நடத்துவோருக்கு, ஒரு குறைவும் உண்டாகாது. சாஸ்திரங்களின்படி வாழ்க்கை நடத்திய, பீஷ்மரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது...சிராத்தம் என்பதே சரி. சிரார்த்தம் என்பது தவறு. சிரத்தையுடன் செய்ய வேண்டியது என்பதினாலேயே இது, சிராத்தம் எனப்பட்டது. மற்ற கர்மாக்களை செய்யும் போது இருப்பதை விட, சிராத்தம் செய்யும் போது, மிகுந்த சிரத்தையுடன் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் பித்ருக்களின் ஆசி முழுமையாக கிடைக்கும். ஒரு சமயம், பீஷ்மர், பித்ரு சிராத்தம் செய்யத் துவங்கினார். அதனால் பீஷ்மர் மிகுந்த சிரத்தையுடன், சிராத்தம் செய்து கொண்டிருந்த போது, பீஷ்மருடைய தகப்பனாரான சந்தனுவிற்கு, ஒரு எண்ணம் தோன்றியது. நம் மகன், நமக்காக சிராத்தம் செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய சாஸ்திர நம்பிக்கையை, நாம் சோதனை செய்து பார்க்கலாம்... என, நினைத்து, பிண்டப் பிரதானம் நேரத்தில் கொடுக்கும் பூமியை பிளந்து, கையை நீட்டி, மகனே பீஷ்மா... பிண்டத்தை என் கையில் கொடு... எனக் கேட்டார் சந்தனு. பீஷ்மரோ, தந்தையே... பிண்டத்தை, தரையில் பரப்பப்பட்ட தர்ப்பைகளின் மீது வைக்கச் சொல்லித் தான், சாஸ்திரங்கள் கூறுகின்றன. தந்தையின் கையில் கொடுக்கும்படி, அவை சொல்ல வில்லை... என்று சொல்லி, தந்தையின் கைகளை விலக்கி, தரையில் பரப்பப்பட்ட தர்ப்பைகளின் மீது வைத்தார். சந்தனு மகிழ்ந்து; பீஷ்மருக்கு ஆசி கூறி, அகன்றார். எனவே, சாஸ்திரங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை சிரத்தையுடன் கடைபிடித்து நடந்தாலே வாழ்வில் ஏற்படும் பாதி துன்பங்கள் மறையும்!
சிலருக்கு கொடுக்கும் மனம் இருக்கும்; ஆனால், பணமிருக்காது. அப்போது, உதவ முடியாமல் போயிற்றே... என்ற, ஆதங்கம் ஏற்படும். கூடவே, தர்மம் செய்ய வழி இல்லாமல் போனதே... இதனால், நமக்கு சொர்க்கம் கிடைக்காதோ... என்ற, சந்தேகமும் எழும். இப்படி ஏங்குபவர்களுக்கென்றே ஏற்பட்ட விரதம் தான் ரத சப்தமி; இது சூரியனுக்குரிய விரதம். சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில், பவனி வருகிறான். இந்த ஏழு குதிரைகள் என்பது, வாரத்தின் ஏழு நாட்களை குறிக்கும். ரதம் என்பது காலச்சக்கரம்; காலையையும், மாலையையும் அடையாளம் காட்டி, காலம் கடந்து கொண்டிருக்கிறதே... எப்போது தர்ம காரியங்களைச் செய்யப் போகிறாய்... என்று கேட்டு, உலக மக்களுக்கு நினைவூட்டியும், தர்ம காரியங்களைச் செய்ய இயலாத ஏழைகளை, எளிய விரதத்தின் மூலமாக, தன் உலகத்திற்கு, சூரியன் அழைத்துக் கொள்பவதாக ஐதீகம்.ரத சப்தமி விரதம் மிக எளிமையானது; ஆண்களும், பெண்களும் இதை அனுஷ்டிக்கலாம். சப்தமியன்று, காலையில், பெண்கள் தங்கள் தலையில், ஏழு எருக்க இலைகளும், அதன் மேல் சிறிது அட்சதையும் வைத்து நீராட வேண்டும். புனிதத்தலங்களுக்கு சென்று நீராடுவது இன்னும் நல்லது. அவ்வாறு செல்ல முடியாவிட்டால், கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட புனித தீர்த்தங்களை மனதால் நினைத்து, அவை தாங்கள் நீராடும் நீரில் கலந்திருப்பதாகக் கருதி, நீராட வேண்டும். சூரிய பகவானுக்கு பழம் நைவேத்யம் செய்து, பூக்களை மேல் நோக்கி தூவி, வணங்குவதுடன், உபவாசம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் கஞ்சி, பால் எடுத்துக் கொள்ளலாம். இந்த விரதத்தை கடைபிடிப்போருக்கு, தர்மம் செய்யாததால் ஏற்படும் குறை நீங்குவதுடன், அவர்களது வம்சத்தில், ஊனமில்லாத குழந்தைகள் பிறப்பர்; சந்ததியினர் ஏழ்மையில் இருந்து விடுபடுவர். மறுபிறவியில், உத்தம குடும்பத்தில் பிறப்பர். இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் திருமணம் ஆகாதவருக்கு, அழகான வாழ்க்கைத்துணை அமையும்; வாகன வசதி கிடைக்கும்; புத்திசாலியான குழந்தைகள் பிறப்பர்.கல்வி, இசை, விளையாட்டு, இன்னும் அவரவருக்கு விருப்பமான துறையில் சிறந்து விளங்க, இவ்விரதத்தை, வளர்பிறை சப்தமிகளில் அனுஷ்டிக்கலாம். ரதசப்தமியன்று செய்யும் தானத்திற்கு மிகுந்த பலன் உண்டு. அன்று தானம் செய்வோருக்கு, செல்வவளம் கிடைக்கும். குறிப்பாக, குடை மற்றும் செருப்பு தானம் வழங்கினால், சூரியனின் அருள் பூரணமாகக் கிடைக்கும். இவ்விரதம் குறித்து அறிந்தோர், மற்றவர்களுக்கு சொல்லித் தரலாம். அவ்வாறு சொல்வோருக்கு, தேவலோகம் மற்றும் பிரம்மலோகத்தில் இடம் ஒதுக்கி வைக்கப்படும் என்கிறது சூரிய புராணம். எளிமையான இவ்விரதத்தை மேற்கொண்டு, உங்களால் முடிந்த தானத்தை செய்தால், வாழும் காலத்தில் செல்வ வளமும், வாழ்வுக்குப் பின் தேவலோகம் கிடைக்க வாய்ப்புண்டு. மறக்காமல் விரதமிருங்களேன்!