Saturday, November 19, 2011

தெய்வத்திற்கும் தண்ணீருக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமா?


தாயைக் கழித்தாலும் தண்ணீரைக் கழிக்காதே என்று கூறுவார்கள். தண்ணீரை வீணாக்குபவர்கள் பெரிய சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பது பெரியோர்கள் கண்ட உண்மை. தண்ணீர் தெய்வத்திற்கு சமமானது என்பததை இப்படி விளக்குகிறார்கள். தண்ணீர் உயரமான இடத்திலிருந்து தாழ்வான இடத்தை நோக்கியே வரும். அதே போல் கடவுளும் உயரமான இடத்திலிருந்து அவதாரம் என்று சொல்லி கீழ் நோக்கி வருகிறார். தண்ணீர் எந்த நிறத்தில்கலக்கிறதோ அதே நிறத்தைப் பெறுகிறது. அதே போல் கடவுளும் எந்த அவதாரத்தை எடுக்கிறாரோ அந்த நிறத்தைக் காட்டுவார்.

தண்ணீருக்கு நிறம், மணம், குணம் கிடையாது. அதேபோல அருவமான கடவுளுக்கும் நிறம்,மணம், குணம் கிடையாது. உணவுப் பொருளை உற்பத்தி செய்ய உதவுவது தண்ணீர்தான். அது தானும் உணவாவது போல இறைவன் பக்தியின் விளை நிலமாகவும், பக்திப் பொருளாகவும் ஆகிறான். தண்ணீர் நாம் எடுக்கும் பாத்திரத்தின் அளவுக்கே நிறைவது போல இறைவனும் பக்தியின் அளவுக்கே பலன் தருகிறான். தண்ணீருக்கு ஏழை,பணக்காரன், ஆண், பெண், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றபேதம் கிடையாது. கடவுளுக்கும் இந்தவிதமான பேதங்கள் கிடையாது என்பதை நாம் அறிவோம். தண்ணீரை சர்வதேவதா ஸ்வரூபம் என்கிறது வேதம்.

தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்?


தாய்க்குப் பின் மனைவி என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் தாரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தாரம் என்றால் மகிழ்ச்சி. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள்.  ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தாரம் என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.
பிரணவம் என்பதற்கு புதியது என்று அர்த்தம். ஓம் ஓம் ஓம் என முழங்காத நாட்களே ஒரு பக்தனின் வாழ்க்கையில் இல்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்னால் ஓம் சக்தி விநாயகா, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் முருகா, ஓம் காளி, ஓம் சக்தி என்றெல்லாம் மந்திரம் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனாலும், அந்த தெய்வங்களை அவர்களால் பார்க்க முடிகிறதா? அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறதா? தெய்வங்களைப் பற்றி பேசப் பேச, படிக்க படிக்க, வணங்க வணங்க புதுப்புது சந்தேகங்களும், கேள்விகளும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. என்றும் புதிதாகவே இருக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் மூலம் இறைவன் நமக்களிக்கும் தகவல்.

சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?







பா எனில் வெளிச்சம். ப்ரபாதம் எனில் காலைப்பொழுது. சுப்ரபாதம் எனில் இனிய காலைப் பொழுது என்று அர்த்தம். வடமொழியில் சு எனும் எழுத்து ஒரு சொல்லுக்கு முன்னர் சேர்க்கப்பட்டால் உயர்ந்பொருளை நல்கும். பாக்ஷிதம்-வார்த்தைகள், சுபாக்ஷிதம்-நல்வார்த்தைகள். கன்யா-பெண், சுகன்யா-நல்லப் பெண். இதுபோன்று சுப்ரபாதம் என்பது நல்ல இனிய காலைப் பொழுது. காலையில் கடவுளை இந்துதிகளால் வழிபடுவதன் மூலம் நாம் கடவுளுக்கு காலை வணக்கம் சொல்வதாகவும், இவை கடவுளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் எழுப்பும் விதமாகவும் இதனால் நாமும் புத்துணர்ச்சி பெறுவதும் அனுபவ உண்மை.இவை அனைத்து கடவுளுக்கும் பல மகான்கள் அருளியிருக்கிறார்கள். இவற்றைகாலையில் கேட்பதே உயர்ந்தது. எனினும், மற்ற காலங்களில் கடவுளின் நாமாவளிகளின் தொகுப்பு என்ற மட்டில் கேட்கலாம் தவறில்லை. எனினும், விடியற்காலையில் கேட்பதே பொருத்தமானது.